கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 அக்டோபர், 2023

ஆரியர் - திராவிடர்பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம்

சென்னை,அக்.25 - ஆரியர் - திராவிடர்பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்! ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ. பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். ‘தமிழ்நாடு' என்று சொல்லாதீர்கள், ‘தமிழகம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்கவில்லையா? வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தைத் தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித் திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகி களின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்து விட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வர லாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து - ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த திரு.ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை? சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவது தி.மு.க. அரசு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண் டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது ‘திராவிட மாடல்' அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி யேற்றியபோது மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார். விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதோ ஒரு நீண்ட பட்டியல்! விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்! பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை! மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது! பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்! மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்! தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்! வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி! வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது! விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்! தியாகிகளுக்கு, மணிமண்டபம்! விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போசுக்குச் சிலை! தியாகி கக்கனுக்குச் சிலை! சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்! - இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று - இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம். இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம். மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம். செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப் பட்டுள்ளது. காந்தியாரிடம் மாற்றம் தந்தது மதுரை! விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச் சென்னை அருங் காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம். விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் - விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இப்படி பட்டியல்கள் ‘திராவிட மாடல்' அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை ஆளுநர் திரு.ரவி புரிந்து கொள்ள வேண்டும். ‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும்'' என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றினார்கள். முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும். இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது. அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்கா தவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித் தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல் வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந் தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கம்பற்றி முனைவர் பட்டங்கள்! தமிழ்நாட்டில் பி.எச்.டி ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப் பட்ட தலைப்புகள்- குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட் டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பிஎச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங் களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன.அது போலவே, திராவிட இயக்கப் படைப்புகள் - படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார். தந்தை பெரியாரின் தொலைநோக்கு! விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பது தான் தமிழ்நாட்டின் வரலாறு. விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற் போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, காந்தியாரைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறிய வர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப் பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ‘‘வெள்ளையர் ஆட்சி ஏன் ஒழியவேண்டும்'' என்று தலையங்கம் தீட்டிய பெரியார்! திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று கூவுவது ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், ‘குடிஅரசு' ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ‘‘ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை!'' பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய ‘கவர்னர்' என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்து கொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை படித்திருக்கிறார். அதிமுக மேனாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் திரு.ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு- தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லை யென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல் வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்! -இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனி, 22 பிப்ரவரி, 2020

வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

ஆரியத்தின் பொய்யும் புரட்டும் நீடிக்காது - அம்பலமாகும்!

நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

இதைவிட ஒண்ணாம் நம்பர் விஷமம் வேறு உண்டா?

வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட, திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் திரிபுவாதம் செய்திருப்பது - ஒண்ணாம் நம்பர்  விஷமம் என்றும், இத்தகு பொய்யும் புரட்டும் நீடிக்காது - நிலைக்காது - அம்பலமாகும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிந்து சமவெளி நாகரிகம் என்பது புராதன - பண்டைக் கால பழைமை வாய்ந்த திராவிட(ர்) நாகரிகம் ஆகும். திராவிட மொழிகளில் மூத்த முன்னோடி மொழி தமிழ்மொழி. இதனை அகழ்வாராய்ச்சி மூலம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய பழைய நகரங்களைத் தோண்டி எடுக்கும் ஆராய்ச்சியை, மேற்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கால தொல் பொருள் ஆய்வு அதிகாரிகளான சர். ஜான் மார்ஷல், ஃபாதர் ஹிராஸ் ஆகிய ஆய்வாளர்களும், அதனைத் தொடர்ந்து பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அறிஞர்களும் திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், ஆரியர்களும் இதனை மறைத்தும், திரித்தும் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பரந்து

இருந்தவர்கள் திராவிடர்களே!

திராவிடர்கள் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரந்து இருந்தவர்கள்; தமிழ்மொழி அக்காலத்தில் பேசப்பட்டது; நாகர்கள் தமிழ் மொழி பேசிய திராவிடர்கள் என்ற கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது "தீண்டப்படாதவர்கள் யார்? ஏன் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆக்கப்பட்டார்கள்?" என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தை

அழித்தவர்கள் ஆரியர்களே!

அது ஒருபுறமிருக்க, சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களது வேதத்தின் பல சுலோகங்கள் இந்தத் தத்துவார்த்த கருத்துக்களையே கொண்டது என்றும் மேல் நாட்டு அறிஞர்கள் முதல் நம் நாட்டு வரலாற்றாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

திராவிடப் பண்பாடு - நாகரிகம் காலத்தால் மூத்தது; கருத்தாலும் முதிர்ந்தது என்பதை ஏற்க மனமில்லாத ஆரியக் கூட்டமும், அதன் "அடியார்களும் நுனியார் களும்" இன்று ஒரு கட்டுப்பாடான பொய்ப் பிரச் சாரத்தைக் கட்டவிழ்க்க, அமெ ரிக்காவில்கூட அன்று ஆள் பிடித்தது அம்பலமாகியது!

வாஜ்பேயி பிரதமராக

இருந்தபோது நடந்தது என்ன?

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி இதில் மும்முரமாக ஈடுபட்டு மொஹஞ்சதாரோ ("திராவிட") காளை மாட்டுச் சின்னத்தை  - முத்திரையை (ஆரிய) குதிரையாக மற்றியது அப்போதே அம்பலமாகியது. (ஆதாரம்: 'Front line' ஆங்கில ஏடு)

அன்று முதலே தங்கள் கைவசம் உள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இல்லாத ஆறாகிய (கற்பனை) சரஸ்வதி நாகரிகம் என்று ஒன்றை இட்டுக்கட்டி, அதனைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய சிலரைத் தயாரித்து எழுத வைத்து வந்தார்கள் - வருகிறார்கள்!

பி.பி. லால் என்பவர்மூலம் தொடங்கி வைத்தனர். எஸ்.பி. குப்தா என்பவரைவிட்டு 'சிந்துசமவெளி நாகரிகம்' என்ற பெயரைக்கூட மாற்றி திரிபு செய்து பார்த்தனர். சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று மாற்றி திராவிட நாகரிகம் என்பதையே மறைத்து, அழித்து ஒழித்துவிட வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

ஆய்வாளர் டோனி ஜோசப் நூல் என்ன கூறுகிறது?

DNA ஆய்வு மூலம் பல அரிய தகவல்கள் வருவதோடு, அக்காலத்திலே புழக்கத்திலிருந்து - மக்கள் பயன்படுத்தியது தமிழ் என்பதை ஆய்வாளர் டோனி ஜோசப் (Tony Joseph) அவர்கள் எழுதிய ஆய்வு நூலில் (The Early Indians)  குறிப்பிட்டுள்ளார்.

The First Urbanites: The Harappans முதல் நகரத்தவர்; ஹரப்பியர்கள் என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில்,

''How the Largest Civilization of its time, with a unique set of practices and outlook, took wing. And how its creators spread the Dravidian languages and became the ancestors of both North Indians and South Indians'' என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்:

"அன்றைய காலகட்டத்தில் தலை சிறந்த பண்பட்ட நாகரிகக் குழுக்களாக திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வியல் முறை சிறந்த நாகரிகத்திற்கான எடுத்துக்காட்டுகளாக திகழ்ந்தது. அவர்கள் தங்களின் நாகரிகத்தோடு தங்களுக்கென்ற தனித்த மொழியை யும் கொண்டு வட இந்தியா மற்றும் தென் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர்."

நிதி அமைச்சரின் ஒண்ணாம் நம்பர் விஷமம்!

இதை தலைகீழாக்கிட நேற்று (1.2.2020) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையில், சரஸ்வதி நாகரிகம் என்ற ஆர்.எஸ்.எஸ். கரடியை உள்ளே திணித்து, அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்திருப்பது ஒண்ணாம் நம்பர் விஷமம்! திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் குரலை அங்கே ஒலித்துள்ளது  - வன்மையான கண்டனத்திற்குரியது.

நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

"சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது" என்பது போன்ற மோசடி வித்தை இது!

பொய்யும், புரட்டும் அம்பலமாகும்!

வரலாற்றை மாற்றுவது, திரிபுவாதத்திற்கு ஆளாக்குவது, என்பதில் இவர்கள் தலைகுப்புற நின்று (சிரசாசனம்) போட்டாலும் இளைய தலைமுறையையோ, இனிவரும் தலைமுறையையோ  இக்கூட்டம் ஒருபோதும் ஏமாற்ற முடியாது!

பண்பாடு, மொழி இவைகளை அழிப்பதே அவாளின் குறிக்கோள்!

ஒப்பனைகள் வெகுநாள் நீடிக்காது!

உண்மை ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் வெளியாகும்; அதில் இவர்களது பொய்யும் புரட்டும் பலியாகும். - அம்பலமாகும் - இவர்களின் சதித் திட்டம் நீடிக்காது- நிலைக்காது என்பது உறுதி! உறுதி!!

 

கி. வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

(குறிப்பு: இவர்கள் கூறும் சரஸ்வதி பற்றிய ஆபாசப் புராணக்கதை -& ஆதாரத்துடன் 3ஆம் பக்கம் காண்க)

 

 

திராவிட நாகரிகத்தைத்  திட்டமிட்டு அழித்த சதி

மும்பை பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் முகப்பில் 1990-களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் குறித்த வரைபடங்கள், அங்கிருந்து எடுத்த புதைப்பொருட்கள் மற்றும் அப்பகுதியின் வரலாறு போன்றவை எழுதி, அதற்கு இந்திய தீபகற்பத்தில் திராவிட நாகரிகம் மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்று தலைப்பிடப்பட்டு இருந்தது. 1995-களுக்கு முன்பு அங்கு சென்ற பலர் இதைப் பார்த்துள்ளனர்.

1995-களில் முதல் முதலாக சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது, பம்பாய் (அழகிய வளைகுடாக்களைக் கொண்ட பகுதி) மும்பையாக மாறியது. விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையமாக மாறியது. சாகர்(பெருங்கடல்) விமான நிலையம் சத்திரபதி சிவாஜி விமான நிலையமாக மாறியது. பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகமும் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகமாக மாறியது. இவ்வளவு மாற்றங்களோடு சேர்த்து, அங்கு இருந்த மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்ற எழுத்துக்களில் பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ என்பதை அழித்து uஸீளீஸீஷீஷ்ஸீ என்பதை எழுதிவிட்டார்கள். இப்போது அங்கு uஸீளீஸீஷீஷ்ஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ அதாவது பெயர் தெரியாத நாகரிக மனித இனம் வாழ்ந்தது என்று எழுதிவிட்டார்கள்.  கிட்டத்தட்ட உலக அகழ்வாராய்வு அறிஞர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட கருத்து ஆரிய இனம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே திராவிட இனம் செழித்து வளர்ந்திருந்தது என்பதாகும். 2017-ஆம் ஆண்டு முதல் கீழடி ஆய்வுகள் கூட இந்துகுஷ், கைபர் மற்றும் பர்மிய சமவெளிக்கு மேல் இன்றைய பங்களாதேஷ் பகுதிகள் முதல் தென்கோடி நிலப்பகுதி கடலடியில் மூழ்கிய தென் குமரி வரை திராவிட இனம் வாழ்ந்துள்ளதற்கு சான்றாக இருக்கும் போது இவர்கள் அடையாளம்தெரியாத இனப்பிரிவு என்று எழுதிவைத்துள்ளனர். நிதி அமைச்சரின் உரையின் படி நாளை இவை அனைத்தும் சரஸ்வதி நாகரிகம் என்று மாறும் ஆபத்து உள்ளது.

திராவிடத்திலிருந்து தொளவீரா வரை: குஜராத்தில் உள்ள அரப்பா நாகரிகத்தின் அடிச்சுவடாக இன்றும் இருக்கும் இந்த பகுதியும் திராவிட நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் வார்த்தையில் 'திராவிடா' என்று முன்பு இருந்தது, சிவசேனா மகராட்டிராவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அதே கால கட்டத்தில் 1995-ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் கேசுபாய் படேல் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு அரப்பா நாகரிகத்தில் இருந்த 'திராவிடா' குறித்த வாசகங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு தொளவீரேஷ்வர் என்ற ஒரு கடவுள் இருந்ததாகக் கூறி அந்தப் பகுதிக்கு தொளவீரா என்ற பெயர் வைத்து இன்று அராப்பா நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதி தொளவீரா என்று அடையாளம் காணப்படுகிறது, 'திராவிடா' என்ற பெயர் இருந்த அனைத்து அடையாளங்களையும் அழித்து விட்டார்கள்.

ஆரிய - பித்தலாட்ட சதி - புரட்டல்களுக்கு அளவும் உண்டோ!

- விடுதலை நாளேடு 2 2 20

சனி, 8 பிப்ரவரி, 2020

தந்தை பெரியார் மீது அவதூறு பரப்புவதா? கண்டனக் கணைகள் பாய்கின்றன

பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

தமிழ், தமிழர்களின் வர லாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற விஷ யங்களைப் பேசி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள் வதாக மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசி ரியர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பேராசிரியர் ராமசாமி.

அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ரஜினி தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை குற்றவாளி எனச் சாட இயலாது என்றபோதிலும், தமிழர்களின் கலாச் சாரம், வழக்கம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைத் தொடும் விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்ப்பது நல்லது என்றார் ராமசாமி.

கேள்வி: பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான ஊடகச் செய்தியை எடுத்துச் சொல்லி ரஜினி தன் கருத்தைச் சொல்ல முற்பட்டது தவறா?

பதில்: கருத்து தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ராமர் சிலை மீது காலணிகள் வீசப்பட்டதாகக் கூறு கிறார் ரஜினி. அதே காலகட்டத்தில் பெரியார் மீதும் எத்த னையோ தாக்குதல்கள் நடந்துள்ளன. அதை மறுக்க இய லுமா? அது குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை? புனி தங்களை சுட்டுப் பொசுக்கியவர் தமிழன் உருப்பட வேண்டும், சாதிகள் ஒழிய வேண்டும், பிராமண ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் பெரியார் என்பதுதான் வரலாறு. ரஜினி ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை? மக்களுக்காக பெரியார் எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார். ரஜினி அதுபோன்று தொடர்ந்து போராடியுள்ளாரா?

கேள்வி: ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. அண்மைய நிகழ்வில் அவர் பெரியார் குறித்துப் பேசிவிட்ட தால் அவரைக் குற்றவாளி என்று சொல்வதற் கில்லை. அதேசமயம் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ரஜினி புரிந்து, தெரிந்து கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

திராவிட வரலாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள் ளாமல் தேவையற்ற விஷயங்களைப் பேசி ரஜினி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகள் சிலவற்றை இப் போதும் கூட நான் ஏற்பதில்லை. அதேசமயம் மூட நம்பிக் கைகளை ஒழிக்க வேண்டும், மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே பெரியாரின் முதன்மை விருப்பமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது. அவர் பல உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தார்.

அவரது இந்த எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில ஏற்பாடுகளைச் செய்த னர். அந்த 1971ஆம் ஆண்டு நிகழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

கேள்வி: சில விவகாரங்கள் தொடர்பாக ரஜினி அவ் வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாகின்றன. அதற்காக கருத்தே சொல்லாமல் மௌனம் காக்க வேண்டும் என்பது சரியா?

பதில்: யாரும் அப்படிச் சொல்லவில்லை. ரஜினி அடிப் படையில் ஒரு நடிகர். ஏற்கெனவே அவர் தெரிவித்த சில கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சில கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.

தொழில்முறை நடிகரான அவர் ஒன்று தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது முழு நேர அரசியலுக்கு வர வேண்டும். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றிருக்கக் கூடாது. அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம்.

கேள்வி: ரஜினியை எதிர்ப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ரஜினி திரையுலகில் நல்ல நடிகர். பல வெற்றி களைக் கண்டவர். அவர் அதே துறையில் நீடிப்பது நல் லது. மாறாக எதுகுறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.

முதலில் ஆன்மீக அரசியல் குறித்துப் பேசியவர், அதிலி ருந்து பின்வாங்கியதாகக் கூறப்பட்டது. பாஜக இந்தியாவில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நல்ல தலைவராக செயல்பட்டு வருகிறார்.

எனினும் அந்தக் கட்சி தமிழகத்தில் வலுவாகக் காலூன் றுவது அவ்வளவு சுலபம் அல்ல. அது மட்டுமல் லாமல் ரஜினியை நம்பி தமிழகத்தில் பாரதிய ஜனதா களமிறங்கினால் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்கும்.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் ஒரு தமிழரை நம்பிக் களமிறங்க வேண்டும். மாறாக ரஜினியை முன்னிறுத்துவது சரியல்ல.

ரஜினியைப் போன்றவர்களுக்கு பெரியார் போன்ற வர்களுடைய அருமை தெரியாது. திராவிடக் கட்சிகள் வேண்டுமானால் திசைமாறிப் போயிருக்கலாம். ஆனால் திராவிட சித்தாந்தம் என்பது தமிழர்களுக்கு நிச்சயம் தேவை.

அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பெரியார் பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தாவது:-

தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை ராயபுரத்தில் 22.1.2020 அன்று காலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக் குமார் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அதிமுக தக்க நேரம் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்தாகும். நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி, மக் களை ஏன் ரஜினி திசைதிருப்ப பார்க்கிறார் என தெரிய வில்லை. அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 4 தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும், நாங்கள் அதை கண்டித்து குரல் கொடுப்போம். ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரஜினி விவகாரம் தற் போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்ற நடவடிக் கையை பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது’ என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில்  செய்தியா ளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை நடிகர் ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்த மும் இல்லை என்றும் தெரிவித்தார். 95 வயதிலும் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றார். மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என்றும், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந் திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். ராஜீவ்காந்தியை கிராமத் தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கலைஞருக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது என தெரிவித்தார். மேலும், எது நடந்தாலும் உடனே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகிறது. எனவே ஊராட்சித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது

''குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகிறது தி.மு.க. ஆன்மிகவாதிகளைப் பழிதீர்க்கும் செயலை தி.க-வினர் தொடர்ந்து செய்து கொண்டிருக் கின்றனர்.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். ரஜினி பேசியதின் நியாயத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க-வின் முகமூடி தான் தி.க. தமிழச்சியைத் திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை மிரட்டிப் பார்க் கிறார்களா?

ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்ன பயங்கரவாதிகளா. அவர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்? மகாத்மா காந் தியைக் கொலை செய்தது ஒரு கொலைகாரன். அவன் ஆர்.எஸ்.எஸ் அல்ல. ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய வர்கள் தேசியவாதிகள்.

பெரியார் போன்றவர்கள் இல்லையென்றால் நான் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால், ஆன்மி கத்தைப் பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். நேர்மையாக வாழ்ப வர்கள் ஆன்மிகவாதிகளே'' என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா

சிபிஅய் பொதுச்செயலாளர் து.ராஜா கூறுகையில், "பெண்கள் விடுதலைக்காகவும் சமூகநீதிக்கா கவும் போராடிய மாபெரும் பகுத் த றிவாளர் தலைவர் தந்தை பெரியார். எவர் ஒருவரும் இது போன்று அவர்குறித்து விமர்சிக் கக் கூடாது. ஒப்பற்ற தலைவர் குறித்து பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும்" என்றார்.

முதல்வர் நாராயணசாமி

புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக் கைகளை போக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்த சம்பவம் நடந்ததா? என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து தந்தை பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்துக்குரியது. அவர் கருத்தை திரும்ப பெற்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச் சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறு நாராயண சாமி கூறினார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதா வது: பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப் பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார் என்று நாமக்கலில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். பெரியார் பற்றி ரஜினிகாந் துக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்பதால் அவர் பேசாமல் இருப்பது தான் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் தனது சுட்டுரைப் பக்கத்தில் ரஜினியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், அவுட்லுக் குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது செரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவ லிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 24 1 20

திங்கள், 16 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாட்டின் பல பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள்மீது தடியடி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதுடில்லி,டிச.16 குடியுரிமை சட்டத் திருத்தத் துக்கு எதிராக டில்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்களைத் தாக்கினர். கல்லூரி நூலகத்தையும் மோசமாகத் தாக்கிச் சிதைத்தனர்.  இதனைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட் டம் தொடர்ந்து நடந்து வருகிறது. டில்லியில் நடக்கும் போராட்டம் பேருரு எடுத்துள்ளது. டில்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு களை வீசி தடியடி நடத்தினர். காவல்துறையினரின் தடியடியையும் மீறி மாணவர்களின் போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண் டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை காவல் துறையினர் வீசி தடியடி நடத்தினர். இந் நிலையில் திடீரென பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின.

இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப் பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்ய வில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப காவல்துறையினர் இப்படி பொய்ப் புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் டில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாண வர்களை மோசமாக தாக்கியுள்ளனர். மாண விகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் புகுந்து ரப்பர் குண்டுகளால் சுட்டும் அடித்தும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஜவகர்லால் நேரு, அலிகார், அய்தராபாத் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜாமியா மிலியா பல்கலைக் கழக கலவரத்தை தொடங்கி தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத் திலும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அங்கு மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள்  நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களைஅடித்து உதைத்து, லத்தி மூலம் காயப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டில்லி, அய்தராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக மாண வர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ் வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப் பிட்டு இருக் கிறார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் டில்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.  இங்கு மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் வரும் காலங்களில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். குடி யுரிமை சட்ட திருத்தத்தை பாஜக மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்பு நிலவி வருகிறது, இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட் டுள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடி யுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த காட்சிப் பதிவு யூ டியூபில் வெளியாகி உள்ளது. அதில் இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- , விடுதலை நாளேடு, 16.12.19

சனி, 28 செப்டம்பர், 2019

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு

கண்டனம்


சென்னை, செப்.28 - அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதைத் திணிப்பைத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் செய்துள்ளது.
அதன் தலைவர் முனைவர் அ.ராமசாமி, செய லாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் நேற்று (27.9.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.அய்.சி.டி.யு.) 2018 ஆம் ஆண்டு நாடு முழுமையிலும்  உள்ள பொறியியல்  பல்கலைக்கழகங்களுக்குச் சுற்ற றிக்கை ஒன்றினை அனுப்பியது.
அதில், பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனவும் பொறியியல் படிப்புகளுடன் ஹூமானிட்டீஸ் (Humanities), சமூக அறிவியல் (Social science), நிருவாகம் (Management) ஆகியவற்றில் 32 பாடங்களைப் பட்டியலிட்டு, அதன் எட்டு செமஸ் டர்களில் 4,5 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், குறிப்பாகத் தத்துவ இயல் படிப்பில் பகவத் கீதை, வேதம், உபநிடதம் முதலிய பாடங்களை  நடத்த வேண்டும் என்று கூறியது.

கல்வி ஓடையில் ஆர்.எஸ்.எஸ். காவி முதலைகளின் நுழைவு அடையாளம் இது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்தவரும் ஆளுநராலே நியமனம் பெற்ற துணைவேந்தர் சூரப்பா இக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக சி.ஈ.ஜி., ஏ,சி.டி., எஸ்.ஏ.பி.,  குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி. ஆகிய நான்கு கல்லூரிகளின் பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் பகவத் கீதை முழுதுமாகப் பாடத் திட்டமாகச் சேர்த்துள்ளார். காலஞ்சென்ற சுஸ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்  என்று முயன்றபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரும் எதிர்ப்பு அலை பரவியதால் வாலை சுருட்டிக் கொண்டு விட்டனர்.
பகவத் கீதை ஒரு கொலை நூல். பகவத் கீதையினை இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் ஏற் பதில்லை. பகவத் கீதை வருண பேதம் உருவாக்கும். கிருஷ்ணனே ’சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ அதாவது நான்கு வருணப் பாகுபாட்டை உருவாக்கியதாக கூறும் நூல். மேலும் பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் எனும் சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர் அல்லாதவர் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என இழிவு படுத்தும் நூல். சூரப்பாவின் இத்தகு மோசமான ஒரு சமயச் சார்புடைய நூலைப் பொறியியல் பாடத்தில் சேர்த்திருப்பது கல்வியாளர்களுக்கும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பொறியியல் பாடம் உருவாக்கம் (கிரியேசன்)பற்றியது. கீதையோ அழிவுக்கு வழிவகுப்பது (டெஸ்ட்ரக்சன்). தமிழக அமைச்சர் மா.பாண்டி யராஜன், ‘‘கீதை பண்பாட்டு நூல்'' என்கிறார். யாருடைய பண்பாட்டு நூல்; அது ஆரியருடைய பண்பாட்டு நூல். அண்ணா பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் அமைச்சர், அண்ணாவின் கருத்துக்கு எதிராகக் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சில பார்ப்பனச் சிசுக்கள் பகவத் கீதையில் நிருவாக இயல் இருப்பதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பாடமாக இருப்பதாகவும் ஊடகங்களில் கதை பேசுகின்றன. நிருவாக இயலுக்கு ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. திருக்குறள் இருக்கிறது. எனவே, மத நூல் கல்விக் கூடத்தில் நுழையக் கூடாது.
குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகியுள்ள பகவத் கீதையைப் பாடமாகச் சேர்ப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகள் இந்நாட்டில் ”இந்துத்வா'' கொள்கைகளை மாண வரிடத்தில் திணிப்பது ஆகும்.  அண்ணா பல் கலைக் கழக அறிக்கையின் படி பொறியியல் இரண் டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தத்துவ இயல் பாடப்பிரிவும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. தத்துவ இயல் பாடப்பிரிவின் கீழ் பகவத் கீதையும்  இடம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க மய்யத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய 2014 ஆண்டு முதல் கல்வி பண்பாடு ஆகிய துறைகளில் சமஸ்கிருதத்தையும், பார்பனீயப் பண்பாட்டையும், உயர் கல்வி நிறுவனங் களைக் கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகள் செய்து வருவதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டித்தே வந்துள்ளது. பா.ஜ.க.  அரசின் கீதைத் திணிப்பு இன்றைய முயற்சி மட்டும் இல்லை.
2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் மய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் நோக்கம் சமஸ் கிருதத்தையும்  வேதங்களையும்  வளர்ப்பதென்பதாகும். இக்குழு பத்தாண்டுத் திட்டமொன்றைத் தயாரித்தது.   அதேபோல 2016 இல் தேசியக் கல்விக்கொள்கையினை உருவாக்கித் தந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையிலும் இத்திட்டம் உள்ளது.
இப்படிப்பட்ட நீண்ட கால மோசடித் திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசு அய்.அய்.டி,பொறியியல் பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் சமஸ்கிரு தத்தையும் வேத புராணங்களையும்  புகுத்தி வருகிறது.  ஆர்.எஸ்.எஸ். ஆதரவினரையே துணைவேந்தராக நியமித்தனர். அவர்களிலொருவர் தான் அண்ணா பல்கலைக்கழகத்  துணை வேந்தர் சூரப்பா. அவர் பதவி ஏற்றதிலிருந்தே,தனியார் மய நடவடிக்கைகளும், காவி மய நடவடிக்கைகளும் பெருகியுள்ளன.
இன்று பகவத் கீதை,வேத புராணக் குப்பைகளை பாடமாக  வைப்பார்கள்.  நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்கு  என்று ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை நியமிப்பார்கள். இத்திட்டம் நிறைவேறியதும் அடுத்து மருத்துவக் கல்வி,கலை அறிவியல் கல்வியில் இத் திணித்தல் தொடரும்.
எனவே இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்பது கல்வியாளர் சமய சார்பின்மையில்  நம்பிக்கை உடைய எம் போன்றோர் கருத்தாகும்.
இதனை உணர்ந்தே எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலான அரசியல் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம் இத்திணிப்புகள் எதையும் என்றும் எதிர்த்துப் போராடி வருகின்றது.
மேலும் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொறியியல் படிப்பிற்கும், பகவத் கீதைக்கும்,வேத புராணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில் துணை வேந்தர் சூரப்பா தத்துவயியலில் பகவத் கீதை உள்ளிட்டவை விருப்பப் பாடமாக வழங்கியுள்ளதாகவும், விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் எனும் கண் துடைப்புப் பதிலை வெளியிட்டுள்ளார்.
நமது கண்டனமும் வேண்டுகோளுமே தத்துவ இயல் பாடமே பொறியியல் மாணவர்களுக்கு வேண்டாதது முழுமையாக நீக்கப்படவேண்டும் என்பதே. கல்வியில் இந்தப் பா.ஜ.க அரசின் குறுக் கீடனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- விடுதலை நாளேடு, 28. 9. 19