திங்கள், 21 அக்டோபர், 2019

பிரதமர் மோடி தமிழைக் கையில் எடுப்பது ராஜதந்திரமாம் ஆர்.எஸ்.எஸ். - விஜயபாரதம் கூறுவதைத் தமிழர்களே புரிந்துகொள்வீர்!

பக்திப் போதை ஊட்டப்பட்டாலும் பெரியார் பிறந்த மண் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்பதில் உறுதியாகவே இருக்கும்!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்', பிரதமர் மோடி தமிழைக் கையில் எடுத்திருப்பது ராஜதந்திரம் என்று சொல்வதன்மூலம், தமிழின்மீது உண்மையிலேயே அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறதா? இல் லையா? அதேபோல, பக்தி பெருகி ஓடுகிறது என்று ‘தீபாவளி மலரில்' ‘விஜயபாரதம்', ஹிந்து விரோதக் கும் பலுக்குத் தோல்வி என்று தலையங்கம் தீட்டி மகிழலாம்; ஆனால், பெரியார் பிறந்த மண் பக்திப் போதையால் ஏமாந்துவிடாமல், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று வாக் குகள்மூலம் நிரூபித்துதான் வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மைக்காலங்களில் பிரதமர் மோடி அவர்கள், ‘தமிழ்மொழி மீது தனக் குள்ள தீராக் காதலை' - வாய்ப்பு நேரும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்!

அவரது தமிழ் மொழி மீது கொண்ட தீராக் காதலை - வழிந்தோடும் தமிழ்ப் பற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘விஜயபாரதம்' (18.10.2019) ஏட்டிலும், அட்டைப் படத்திலும்!

பிரதமரின் பேச்சு

‘‘சென்ற வாரம் சென்னை அய்.அய்.டி. யில் அவர் ஆற்றிய உரையில், ‘‘தமிழ் மொழி உலகின் மூத்த மொழி'' என்றது தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வார்த்தை மட்டுமே தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ‘கிலி' ஏற்படுத்தியதற்கான காரணமல்ல!

இதற்கு முந்தைய வாரம் அமெரிக்கா விலுள்ள அய்.நா. சபையின் 74 ஆவது பொதுக்குழுவில் பாகிஸ்தானுக்குப் பதி லடி தந்து உலக நாடுகள்வரை அசத்திய பேச்சின் அடிநாதம் கணியன் பூங்குன் றனாரின் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' மேற்கோளாகும்!

இதே கட்டுரையிலே, பிரதமர் மோடி யின் திடீர்த் தமிழ்க் காதல் ஏன் வந்தது? எப்படி வந்தது? எதனால் தேவைப் படுகிறது? என்பதன் உள்நோக்கத்தை நாம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும், ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போட்டு ஆடுகிறார்; விழிப் போடு இருங்கள்'' - தமிழ்நாட்டு மக்களே என்று எச்சரிக்கை மணி அடிப்பதற்குத் தேவையே இல்லாமல், ‘‘பார்ப்பான் புத்தி எப்போதும் பின்புத்திதான்'' என்று  தந்தை பெரியார் சொல்வதை நிரூபிக்கும் வண்ணம்  - அதே ஏடு, அதே கட்டுரையில் கூறியுள்ள விளக்கம், மோடியும் - ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் போடும் ஒப்பனையை அவிழ்த்துக்காட்டி, நமது (விளக்கப்) பணியை எளிதாக்கி விட்டது!

‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட் டது'' என்று கூறும் தந்தை பெரியார் கூற்றுக்குச்  சரியான  உண்மை விளக்க மாகிறது!

தமிழைக் கையில் எடுப்பது ராஜதந்திரமாம்!

மேலும், அவ்வேட்டின் விளக்கம் இதோ, படியுங்கள், கேளுங்கள்!

‘‘இந்தியா முழுவதும் காவி மயம் ஆகிவரும் சூழ்நிலையில், தமிழகம் மட்டும் தனித்து நிற்பதும், அதுவும் தொடர்ந்து திராவிடக் கும்பல்கள் கையில் சிக்கித் தவிப்பதும் (அ.தி.மு.க.வுக்கும் சேர்த்துத்தானே இந்தக் குட்டு - சாஷ்டாங்க சரணாகதி மன்னர்கள் இதை யாவது கேட்டு முதுகெலும்பைத் தேடு வார்களா இனி?) உண்மையில் மோடி குழுவுக்கு பெரும் கவலை அளித்து (‘மோடி கம்பெனி'  என்பதன் தமிழாக் கம்தானே சரியாகச் சொன்னால்) வரும் விஷயம்தான். பாடம் புகட்ட தமிழையே ஆயுதமாக, தமிழைப் பிழைப்பாக்கி, 60 ஆண்டுகளாக அரசியல் செய்துவரும் தி.மு.க. கும்பலுக்கு  எடுத்த  ராஜதந்திரத்தை இப்போது தொடங்கி இருக்கிறார் கள் '' என்று எழுதுகிறது ‘விஜயபாரதம்.'

புரிந்துவிட்டதா? தமிழ்ப் பெரு மக்களே, திராவிடத்தின் தீரம்மிக்க அறிஞர்களே!

‘‘தமிழைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுவது, வேட்டி கட்டுவது, கவிதையை தமிழில் மொழி பெயர்த்து ஊடகங்களில் உலாவரச் செய்தல்,''

‘‘...பின்பொருதரம் நெற்றி முழுவதும் சந்தனப்பட்டையுடன் கூடிய வேட்டி சட்டை உடுத்திய போஸ்! மோடியின் நெஞ்சார்ந்த தமிழ்ப் பற்றுக்கான சான்றுகள்.'' இதுவும் ‘விஜயபாரதம்'தான்.

- எப்படியிருக்கிறது?

தமிழ் என்னும் தூண்டில்

உடைகளை மாற்றுவதில் உலக மகா நாயகனாக பிரதமர் மோடி எப்போதும் திகழுவதும், 10 லட்சம் ரூபாயில் எளிய சட்டை இங்கிலாந்தில் தயாரித்து உடுத்தி, ஏலம் விடும் வித்தையும் இவரைத் தவிர வேறு யாருக்கும் வரும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மோடி அவர்களுக்கு இப்போது தமிழ்நாட்டை வளைக்க - ‘‘பிடிக்க'' வேறு எந்தத் தூண்டில்களைவிட தமிழ் மொழித் தூண்டிலில் சில மீன்கள் சிக்காதா என்ற சபலத்தின் வெளிப்பாடே இந்தத் திடீர்த் தமிழ் காதல் என்ற நாடகம்! என்பதை ‘விஜயபாரத' கட்டுரையே காட்டிக் கொடுத்துவிட்டதே!

தமிழ்நாடும், தமிழர்களும் அவ்வளவு இளிச்சவாயர்கள் அல்ல; ஒருபோதும் ஏமாந்த சோணகிரியாகமாட்டார்கள்.

‘தீபாவளி மலர்' என்ன கூறுகிறது?

ஆரியக் கூத்தாடிகளை ரசித்தாலும் கூட காரியத்தில் கண்ணாயிருப்பார்கள் பெரியார் மண்ணின் மைந்தர்கள் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். ஏடு தனது தொடர்ந்து ஒப்பாரி - அழுகுரலில் அதன் தீபாவளி மலர் (25.10.2019) தலையங்கத்தில் உள்ளதே, நாம் பதில் கூறுவதற்கு அவசியமற்றதாக்கி விட்டது.

இதோ அதன் ஆதங்கம் - பாரீர்!

‘‘தமிழ்நாட்டில் ஒரு கும்பல் தொடர்ந்து ஹிந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்; இவர்களின் பிரச்சாரத் திற்கும் பிறகும்கூட,  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய ஒரு கோடி பக்தர்கள் திரண்டனர் என்றால், தமிழ்நாடு எப்போதும் ஆன்மிகத்தின் பக்கம் என்பதை நிரூபித்திருக்கிறது.

ஹிந்துக்கள் கோவிலுக்குப் போவது மட்டுமல்லாமல், ஓட்டுப் போடச் சொல் லும்போதும், ஹிந்துவாக வாக்கு அளிக்க வேண்டும்; ஹிந்து விரோத தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களுக்கு ஹிந் துக்கள் வாக்களிக்க மாட்டோம் என்று இந்தத் தீபாவளி நன்னாளில் சபதம் ஏற்போம்'' என்று ஓலமிடுகிறது.

இதன் பொருள் என்ன?

பக்தி வேறு - வாக்கு வேறு

பக்திப்  போதையை எவ்வளவு தான் இவர்கள் ஊட்டினாலும், ஒருபோதும் ஏமாந்துவிடாது தந்தை பெரியாரின் தமிழ் மண் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நன்றி!

பக்திப் போதையை ஊட்டினாலும் பா.ஜ.க.வைப் புறக்கணிப்பதில் தெளி வாகவே, உறுதியாகவே தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற ஆற்றாமையைத் தானே அவாளின் ‘தீபாவளி மலர்' வெளிப்படுத்துகிறது.

முகமூடிகளும்,ஒப்பனைகளும் ஒருபோதும் நிரந்தரமாகி, எம்மக்களை ஏமாற்றிட முடியாது!

புரட்சியாளர் அம்பேத்கரையும் விழுங்கிட முயற்சி செய்யும் இந்தக் காவிக் கூட்டத்தால், பெரியார் என்ற நெருப்பிடம் நெருங்கினால் - ஆசைப் பட்டால், நிச்சயம் பருத்தி - பஞ்சு பொதி யின் கதிக்கு ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ்மீது அக்கறை இருந்தால் பிரதமர் என்ன செய்யவேண்டும்?

உண்மையிலேயே தமிழ்க்காதல் பிரத மருக்கு - பா.ஜ.க. மத்திய ஆட்சிக்கு இருக் குமானால், எம்மொழியான செம்மொழி வளர்ச்சி நிறுவனத்தை முடக்கிப் போட்டு, சமஸ்கிருத புளியேப்பக்காரர்களுக்கு விருந்து வைப்பதும், தமிழ்மொழி நிறுவன பசியேப்பக்காரர்களை பட்டினி போட்டுக் கொல்லும் பரிதாப நிலையை மாற்றிட முன்வராதது ஏன்?

கோவில்களில் தமிழையே பயன்படுத் தவும், நீதிமன்றங்களில் தமிழ் பயன்பட மத்திய அரசு  முட்டுக்கட்டை போடாமலி ருக்கவும் ஆணைகளைப் பிறப்பிக்க மோடி அரசு முன்வரட்டுமே! தமிழையும் ஆட்சி மொழியாக்கட்டுமே!

சமஸ்கிருதம் தேவபாஷை - தமிழ் நீஷபாஷை என்று இனி கூறமாட்டோம் என்று பிரகடனம் செய்வார்களா?

புரட்சிக்கவிஞர் கூறினார்,

‘‘வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்''

எவ்வளவு பெரிய உண்மை!

ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

21.10.2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக