அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 டிசம்பர், 2025

அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!

 


இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும். ஆனால், நீதித்துறையைப் பொறுத்தவரையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக இதனை எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக நீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தின், மக்களவையில் தி.மு.க.  பொருளாளரான டி.ஆர்.பாலு அவர்கள் 11.12.2025 அன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 124, 217, 224 பிரிவின்கீழ் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், இதில் இட ஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, கூடுதலாகத் தெரிவித்த தகவல்படி,

உயர்ஜாதி பிரிவினர் மட்டும்
76.45 சதவிகிதத்தினர்!

2018 முதல் 2025 நவம்பர்வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 32 பேர் எஸ்.சி. (தாழ்த்தப்பட்டோர்) பிரிவினர், 17 பேர்  எஸ்.டி. (பழங்குடி யினர்) என்றும், ‘பொதுப் பிரிவினர்’ என்ற முகமூடி பெயரில், உயர்ஜாதி (பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் – Forward Community) பிரிவினர் மட்டும் 76.45 சதவிகிதத்தினர் ஆவர்.

எஸ்.சி.  பிரிவினர் 3.8 சதவிகிதம்

எஸ்.டி. பிரிவினர் 2 சதவிகிதம்

பிற்படுத்தப்பட்டோர் 12.2 சதவிகிதம் (103 பேர்)

சிறுபான்மையினர் 5.5 சதவிகிதம்

பெண்கள் (நீதிபதிகள்) 14 சதவிகிதம் என்று கூறியுள்ளார்.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூக நீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்.

நீதித்துறையில் சமூகநீதி ‘கானல் நீராகவே’ உள்ளது!

முன்னுரிமை என்பது அச்சட்டத்தின் முகப்புரை (Preamble)யிலேயே வலியுறுத்தப்பட்டிருந்தும் கூட, நிர்வாகத் துறையில் (executive) உயர்ஜாதி, குறிப்பாக பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய ஜாதியினரின் அதிகார, ஆதிக்கச் சூழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆக்கப்பட்டு, செயலற்றவைகளாக ஆக்கப்பட்டுள்ளதோடு, உச்ச நீதிமன்றத்  தீர்ப்புகள், உயர்ஜாதி நீதிபதிகளால் வியாக்கியானம் செய்யப்பட்டு, தடைக்கற்களை ஏற்படுத்தியதால், சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’ – நீதித்துறையைப் பொறுத்து, கடந்த 75 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது!

நீதித் துறையில் பார்ப்பன மயம் – காவி மயம் ஆக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டிலும் நீதித் துறையின் மூலமாக மறைமுகமாக காவி ஆட்சியை நடத்திட ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். ‍ – பா.ஜ.க. அரசு தீவிரமாக முயன்று வருவதை அண்மைக்காலச் செய்திகள் சொல்லுகின்றன.

முன்பே ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளோம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அள வுக்கு மிக அதிகமாகப் பார்ப்பனர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், ஒரே முறையில் நிறையப் பார்ப்பனர்கள் நீதிபதிகளாக்கப்பட்டால், அது பெரும் கவனத்திற்குரியதாகவும், எதிர்ப்புக்குரிய தாகவும் மாறும் என்பதால், நீதிபதிகள் நியமனத்திற்கான பட்டியலை இரண்டு, மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு முறையும் அதில் பார்ப்பனர்களை இணைக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதை முன்பே ஆதாரத்து டன் எடுத்துக் காட்டியதுடன், அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளோம். மக்கள் மன்றத்தில் எடுத்துக்காட்டி, நீதித் துறையில் சமூக நீதியின் அவசியத்தை முன்வைத்துள்ளோம். வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் இதற்காகப் போராடியுள்ளனர் – போராட்டம் இன்னமும் தேவைப்படுகிறது!

ஆனாலும், இந் நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது  பார்ப்பனர்களை மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க.வின் வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கும் வகையில் மூன்று கட்டமாகப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பட்டியலை எப்படியேனும் நீதிபதிகள் நியமனத்தில் இடம்பெறச் செய்துவிட பல பின்னணியுடன் நடை பெற்றுவருகின்றன என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெ டுத்துப் பரிந்துரைப்பதற்கான குழுவில், மூத்த நீதிபதி கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு அவர்களும் இடம்பெற்றிருந்தார். ஆனால், அவர் திடீரென கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு 8 ஆம் இடம் தான் கிடைக்கும். இங்கு மூன்றாம் இடத்தில் இருப்பவரை இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

அவர், அந்த இட மாறுதலை ஏற்று, கேரள உயர்நீதி மன்ற நீதிபதியாக இன்னும் பொறுப்பேற்காத நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவே தொடரு கிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மூன்றாம் இடத்தில் இருக்கும் அவருக்குப் பதிலாக, நான்காம் இடத்தில் இருக்கும் நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களைப் பரிந்துரை குழுவில் சேர்த்து, அவரது ஒப்புதலுடன் மாவட்ட நீதிபதிகளிலிருந்து ஆறு பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைப் பட்டியலை அனுப்பினார்கள்.

அந்தப் பட்டியல் குறித்து மாற்றுக் கருத்தைச் சொல்லாத தமிழ்நாடு அரசு,   கொலீஜியத்தில் இதுவரை இல்லாத நடைமுறை (மூன்றாம் இடத்தில் நீதிபதி நிஷா பானு இருக்கும்போது, நான்காமிடத்தில் உள்ள நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களை பரிந்துரைக் குழுவில் இடம்பெறச் செய்தது) பின்பற்றப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்தப் பரிந்துரைப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்பியது.

இது இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முறை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அதற்குப் பின்பும், தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டிய பிரச்சினை குறித்து எந்தவித பதிலையும் சொல்லாத சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இடம்பெற்றுள்ள அதே கொலீஜியத்தைப் பயன்படுத்தி, வழக்குரைஞர்களிலிருந்து (பார்) 9 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைத்து, அடுத்த பட்டியலை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்றைய (12.12.2025) ‘இந்து’ ஏட்டில்,  சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி எழுதியுள்ள கட்டுரையிலும் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டுள்ளார்.

அவசர கொலீஜிய மாற்றம் ஏன்?

இட மாறுதலை ஏற்றுக்கொண்டு நீதிபதி நிஷா பானு அவர்கள், கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பே, ஏன் இந்த அவசர  கொலீஜிய மாற்றம் என்ற கேள்வி எழுவது இயல்பானதே!

நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்கள், இம்மாதம் ஓய்வு பெறக்கூடியவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டால், அடுத்த இடத்தில் (அய்ந்தாவது) இருக்கும் நீதிபதி திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக் குழுவில் இடம்பெறுவார். அது தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதால், அதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக நீதிபதிகளுக்கான பரிந்துரைப் பட்டியலை அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

குடியரசுத் தலைவர் மூலம்
அழுத்தம் தரும் நடவடிக்கைகள்!

அடுத்தடுத்த பட்டியல்களில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆதரவாளர்களையும், அவர்களது வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் ஆக்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அப் பட்டியலை ஏற்கக் கூடியவர் அந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்பதாலேயே இந்த அவசரம் காட்டப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. நீதிபதி நிஷா பானு அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்ல மறுத்துவரும் நிலையில், நேற்று (12.12.2025) குடியரசுத் தலைவர் மூலம் அழுத்தம் தரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவைப் பெற்று ஒரு நாளும் தங்களால் ஆட்சி நடத்த முடி யாது என்பதைப் புரிந்து கொண்டு தான், ஒரு மாநிலமே ஸநாதனத்திற்கு எதிராக உள்ளது என்று வெளிப்படையாகவே அவர்களுக்குத் தெரிகிறது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூரின் நேற்றைய பேச்சு நமக்குக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்!

எனவே தான், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு ‘‘போட்டி அரசாங்கம்’’ நடத்த முயற்சிக்கிறார்கள்; கல்வித் துறையை நாசமாக்கத் துடிக்கிறார்கள். ஆனால், அவை எதுவும் பலிக்கவில்லை என்றதும், நீதித்துறையைக் காவி மயமாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துகிறார்கள். இந்தத் ‘‘தந்திர மூர்த்திகள்’’, தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்.

75 நீதிபதிகள் இடம்பெற வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மேலும் சிலர் ஓய்வு பெறக்கூடும் என்ற சூழலில், மொத்தமாக தங்களுக்கு ஆதரவானவர்களை நீதிபதிகளாக்கவே இத்தகைய கடும் பிரயத்தனத்தில் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், உயர்நீதித் துறையில் சமூகநீதி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் முன்பே வழிகாட்டியுள்ளதே!

இது சம்பந்தமாக அகில இந்திய அளவில் இதை மட்டுமே மய்யப்படுத்தி, ஓர் அறப்போராட்டத்தினை திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து, முந்தைய மண்டல் குழுப் பரிந்தரை செயலாக்கம் நடந்ததைப்போல, நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டம்!

இடையில், மாநில சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு உள்பட குறுக்கிடுவதால், முதல் கட்டப் பிரச்சாரம் தொடங்கி, 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்த, ஒத்தக் கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து, உரிமைப் போராட்டத்தினை நடத்திட விழைவோம் என்பது உறுதி!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.12.2025

சனி, 24 ஆகஸ்ட், 2024

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா?

 

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை


தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு!

மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்!
‘தினமலரில்’ வெளிவந்த விளம்பரத்தைப் பாரீர்!

பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது – தடுக்கவேண்டும்! அமைதிப்பூங்காவை அமளிக்காடாக்கக் கூடாது என்று அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம் – வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு ‘தினமலரில்‘ (11.8.2024) அரைப்பக்கம் செய்தி – விளம்பரம் வந்துள்ளது. (அருகே காண்க)
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா?
இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது!
‘பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் – மாறிவிட்டார்கள் – இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர்பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, பார்ப்பனர்களின் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது – தந்தை பெரியார் சொன்னதும், திராவிடர் கழகம் சொல்லிக் கொண்டு இருப்பதும் எத்தகைய மலை போன்ற உண்மை என்பது விளங்காமல் போகாது!
பழைய சம்பிரதாயங்களைப் புதுப்பிக்கப் போகிறார்களாம்!
அதுவும் எந்தக் காரணத்துக்காக இந்த ஏற்பாடாம்?
‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘
அதாவது தங்களது உயர்ஜாதி பிராமணத்துவ சம்பிரதாயங்களை பழையபடி மீண்டும் கொண்டுவர நிர்மாணிக்கத்தான் இந்தத் திட்டமாம்.
இதன் பொருள் என்ன?
அவர்களின் அந்தப் பழைய சம்பிரதாயம் என்பது என்ன?
மீண்டும் மனுதர்மமா?
பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் – இந்த உலகத்தை பிரம்மாவானவர் பிராமணர்களுக்காகவே படைத்தார். நான்காம் வருணத்தவனான சூத்திரன், பிரம்மாவின் காலில் பிறந்தவன் – விபச்சாரி மகன் – கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அவனை வேலை வாங்கலாம் என்கிற மனுதர்மம்தானே அவர்கள் கூறும் அந்த சம்பிரதாயம்!
மீண்டும் அந்த சம்பிரதாயம் என்றால், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு காணும் இந்தக் காலகட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல தொடை தட்டுகிறார்களா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட,அமைதித் தென்றல் வீசிய தமிழ்நாட்டில், வேதபுரத்தார் வீண் வம்பு விஷ விதையை விதைக்கிறார்களா?
காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, வானொலி மூலம் தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடமில்லாத ஒரு சூழ்நிலையை மிகவும் பொறுப்புடன் பாதுகாத்த பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு.
அதேநேரத்தில், மும்பையில் அக்ரஹாரத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதும் உண்டு.
கடலைத் தாண்டிச் செல்லமாட்டார்களா?
பழைய சம்பிரதாயம் என்றால், பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு, திறந்த பூணூல் மேனியோடு திரிவார்களா? பஞ்சகச்சம் கட்டுவார்களா? கடலைத் தாண்டக் கூடாது என்ற பழைய சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பார்களா?
‘‘பழைய நாளில் பிராமணன்தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ‘‘பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு’’ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது!’’ என்கிறாரே காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘‘காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் உபந்நியா சங்கள்’’முதற்பகுதி‘கலைமகள்‘ 1957–1958 பக்கம் 28).
பிச்சை எடுக்கும் அந்தப் பழைய சம்பிரதாயத்தை மீண்டும் கடைப்பிடிக்கப் போகிறார்களா அக்கிரகார ‘திருமேனிகள்!‘
தெருக்களின் ஜாதிப் பெயரை நீக்கி 
ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி 1978 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகவிருந்தபோது, சாலைகள் மற்றும் தெருக்களுக்கு இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார்.
ஜாதி ஒழிப்புக்குக் கலைஞரின் பங்கு
தென் மாவட்டங்களில் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தையடுத்து மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்க ளுக்குச் சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை யும் நீக்கி ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர்  முதலமைச்சர் கலைஞர்.
அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள ஜாதிகளைக் குறிப்பிடும்போது, ஜாதிப் பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ‘ஆதிதிராவிடர் வகுப்பினர்’ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை 24.2.2007 இல் அரசாணை பிறப்பித்ததுண்டே!
சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழித்தவர் 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பள்ளிப் பாடப் புத்தகங்களில் தலை வர்களின் பெயர்களின் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு (5.8.2021 இல்) புதிதாக அச்சிடப்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தமிழ்நாடு அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோ கிக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், ‘பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்‘ என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை (உ.வே.சாமிநாதய்யர் என்பதை) தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
ரூ.500 கோடி செலவில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின்கீழ் (2021 ஜூன்) சென்னையில் இருக்கும் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்கியவர் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
சென்னையைப் பொறுத்தவரை 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன. இதில் ஜாதி ரீதியாகக் கிட்டத்தட்ட 50–க்கும் மேற்பட்ட ஜாதிப் பெயர்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, அடையாறில் அப்பாவு கிராமணி என்ற பெயரில் ஜாதிப் பெயரான கிராமணி நீக்கப்பட்டு உள்ளது. மாற்றாக அப்பாவு (கி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகைகளில் தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீடு ஆகியவை இடம்பெறுகின்றன. மொத்தமாக பெயர் பலகைகளை மாற்ற சென்னையில்  8.43 கோடி ரூபாய் இன்றைய தி.மு.க. ஆட்சியில் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது – தடுத்தாகவேண்டும்!
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காலகட்டத்தில் பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ திட்டமிடப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது – தடுக்கவேண்டும்! அமைதிப்பூங்காவை அமளிகாடாக்கும் நிலைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் ‘திராவிட மாடல்’ அரசு!
பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்த சென்னை இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (5.1.1953) பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதி மனப்பான்மையைத் தூக்கி எறிந்து, மனிதர்களாக வாழ்வோம் என்று பார்ப்பனர்களுக்குக் கூறிய அறிவுரையை நினைவுப்படுத்துகிறோம்.
மீண்டும் பழைய சம்பிரதாய ஜாதித்துவ வீராப்பைக் காட்டலாம் என்று நினைத்தால், அதன் பலன் யாரைச் சேரும் என்பது மட்டும் நினைவிருக்கட்டும்!
தமிழ்நாடு அரசு இதனை அலட்சியமாகக் கருதாது என்றும் எதிர்பார்க்கிறோம்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கி, ‘‘நாடே சமத்துவபுரமாக ஒளிரவேண்டும்‘‘ என்று முழங்கியவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள். பெரியார் நினைவு சமத்துவபுரத்தைப் பெரும்பாலும் திறந்து வைத்தவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரும், இன்றைய முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பது வரலாறு.
அதற்கு நேர் எதிரான ஜாதித்துவத்தை, வருண தருமத்தை நிலைநாட்ட ஆழம் பார்க்கிறார்கள், எச்சரிக்கை!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
23.8.2024

சனி, 10 ஆகஸ்ட், 2024

வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது – பிணைகளை மறுப்பது – ஜீவாதார உரிமைக்கு எதிரானது!


விடுதலை நாளேடு

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

வழக்கு விசாரணை என்ற பெயரில் காலத்தை நீடித்துக்கொண்டே போவது – பிணைகளைத் தொடர்ந்து மறுப்பது – அடிப்படை ஜீவாதார உரிமைக்கு எதிரானது என்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தில், டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு பிணை (ஜாமீன்) வழங்குவது சம்பந்தமான வழக்கில் நேற்று (9.8.2024) அவ்வழக்கினைத் தொடுத்துள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் (அமலாக்கத் துறை, சி.பி.அய். ) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விசுவநாதன் ஆகிய இருவரும் எழுப்பியுள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது – அதுவும் இன்றைய காலகட்டத்தில்.
விசாரணை என்பது விரைவில் முடிக்கப்பட வேண்டிய ஒன்றே!
‘‘ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையை எவ்வளவு விரைவில் முடிக்கவேண்டும் (right to speedy trial) என்பதும், தனி நபர் சுதந்திரம் (Personal Liberty) என்பதும் மிகமிக முக்கியமானவையாகும்.
அரசோ, பிராசிகியூஷன் அமைப்புகளோ, அதேபோல் நீதிமன்றங்களோ பிணை உரிமைகள் வழக்குகளை காலம் தாமதித்து நீதி வழங்குவது கூடாது; குற்றம் மிகவும் சீரியஸ் ஆனது என்று கூறி, கைது செய்யப்பட்டவரின் உரிமைகளை நிறுத்தி வைக்கக் கூடாது” என்று ஜஸ்டிஸ் கே.வி.விசுவநாதன் அவர்கள் கூறியதும்,
அதுபோலவே, ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், ஜாமீன் வழங்க விசாரணைக்கு வந்துள்ள அவ்வழக்கில் ‘‘கூடுதல்  நிபந்தனையை, மணீஷ் சிசோடியா என்ற டில்லி துணை முதலமைச்சருக்கு விதிக்கவேண்டும்” என்று வற்புறுத்தியபோது, ‘‘மக்களிடம் வேர் பிடித்துள்ள இப்படிப்பட்டவர்களுக்கு அத்தகைய நிபந்தனைகள் தேவையில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார். ‘‘விசாரணை இல்லாத தண்டனை காலமாகவே இருக்கலாமா?” என்றும் கேட்டுள்ளார்.
இப்படிப்பட்ட வழக்குகளில் தேவையற்ற காலதாமதம் செய்வது அரசமைப்புச் சட்ட அடிப்படை ஜீவாதார உரிமைகளுக்கு எதிரானது என்பதை நன்கு இடித்துக் காட்டியுள்ளது, உச்சநீதிமன்றத்தின்மீது – அது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் இறுதி நம்பிக்கை என்ற கருத்து உறுதியாகிறது!
தமிழ்நாட்டில் மேனாள் அமைச்சர் வழக்கு விசாரணையை இன்னும் எவ்வளவுக் காலத்திற்கு நீடிப்பு?
தமிழ்நாட்டில், மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களும் ஓராண்டுக்குமேல் சிறையில் உள்ளது மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்ந்து இதய சிகிச்சை அதன் விளைவுகளால் பாதிப்பு என்ற நிலையில்கூட, அவரது பிணை (ஜாமீன்) மனுவை கடுமையாக ஆட்சேபித்து வருவது, ஏதேதோ புதுப் புதுக் காரணங்களைக் குறிப்பிட்டு ‘‘விசாரணை இல்லாத தண்டனை காலத்தை” நீட்டித்து வருவது, அரசமைப்புச் சட்டம் அவருக்கு அளித்துள்ள தனி நபர் சுதந்திர உரிமை, விரைந்த விசாரணை என்ற இரு அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாக ஆகாதா?
செந்தில்பாலாஜி என்ற தனி நபருக்காக நாம் இதனைச் சுட்டிக்காட்டவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படலாமா என்பது எண்ணிப் பார்க்கப்படவேண்டும்.
நீண்ட கால சிறையில் இருந்தவர்  குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டால், 
சிறைத் தண்டனைக்கு யார் பொறுப்பு?
நீண்ட காலம் விசாரணைக்கு முன்பே ஒரு நபர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தால், ஒரு வாய்ப்பு – வழக்கு விசாரணையின் முடிவில், ‘‘அவர் விடுதலை செய்யப்பட்டால், அவர் அனுபவித்த தண்டனைக் கொடுமைக்கு தக்க பரிகாரம் என்ன காண முடியும்?” என்ற கேள்விக்கு எவர்தான் பதில் அளிக்க முடியும்?
அது நியாய விரோதம் அல்லவா?
பொதுவாகவே சட்ட மரபு என்பது
Bail is a right
Jail is an exception
என்பதுதானே பொதுவான வழக்குகளில் கடைப்பிடிக்கப்படும் வழமை.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு – மறுக்கப்பட்ட தீர்ப்பே!
இம்மாதிரி வழக்குகளில் ‘‘சீரியஸ் குற்றம்‘‘ என்ற முத்திரை குத்தி, பிணை (ஜாமீன்) மறுப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியபடி, அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமை – அதன் அடிப்படைக் கட்டுமானத்திற்கே முரணான நடவடிக்கை யாக அமையுமே என்பதால்தான், நீதிபதிகள் சரியான முறையில் இவ்வாறு கூறியுள்ளனர். நீதி வழங்கப்படல் வேண்டும்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி அல்லவா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10.8.2024

திங்கள், 3 ஜூன், 2024

கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை



Published June 2, 2024, விடுதலை நாளேடு

கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞரால்
தமிழ்நாடு இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது!
திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்!

சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முத்தமிழறிஞர் மானமிகு கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் சுய விமர்சனம் செய்த ஓய்வற்ற உழைப்பின் ஒப்பற்ற தலைவர் பல்கலைக் கொள்கலனான நூற்றாண்டு நிறைவு விழா நாயகர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2024).
‘(திருக்)குவளை’யில் பிறந்து குவலயத்தையே தனது புகழ் எல்லையாக்கிக் கொண்ட – எதிர்நீச்சல் போராளியாக – உடலால் மறைந்த பிறகும்கூட, இட ஒதுக்கீட்டுக்காக (தனது உடலை அடக்கம் செய்யும் இடத்துக்காக) நீதிமன்றத்தில் போராடி வென்று, அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம்பிடித்த அவரது பெருமை வியக்கத்தக்கது!
அவர்தான் அண்ணாவின் ஆட்சியை, அய்யா வழியில் நடத்தி, அகிலமே கவனித்து, பாராட்டும் வகையில், அரசினை நடத்தியதும், அவரது சாதனைகளால் பலன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

மானமிகு கலைஞரின் சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவுக் கோட்பாடுகள்!
சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவு இவையெல்லாம் அவர் தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசானிடமும் – அவர்தம் தலைமகன் அறிஞர் அண்ணாவிடமும், ‘‘ஈரோட்டுக் குருகுலவாசத்திலும்’’ கற்றுக்கொண்டவர் என்பதால், எந்த எதிர்ப்பையும் துச்சமென எண்ணி, துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினையின்மூலம் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி யினர், சிறுபான்மையினர், மக்கள் தொகையின் சரி பகுதியான மகளிர் – இவர்களுக்கு, புது வாழ்வு அளித்த புரட்சியாளர் ஆவார்!
தந்தை பெரியார் தொலைநோக்கோடு, அறிஞர் அண்ணா வுக்குப் பின் முதலமைச்சராக மானமிகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அவருக்கு அன்புக் கட்டளையிட்டதே ஓர் அரிய எடுத்துக்காட்டு!
பிறகு திணிக்கப்பட்ட நெருக்கடி காலத்தின் அடக்குமுறை – இயக்கத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததோ என்று பலரும் கணித்து, அஞ்சிய நேரத்தில், அவரது தலைமைதான் – அவரது ஆட்சியை ஒருமுறை, இருமுறை திட்டமிட்டே இழக்கச் செய்து, கழக முக்கிய பொறுப்பாளர்களையும் கைது செய்து, காராக்கிரகத்தில் அடைத்ததோடு, ஏடுகளில் தணிக்கை என்ற கருத்து சுதந்திரத்திற்கும் கல்லறை கட்ட நினைத்த கோரத்தாண்டவத்தை, அவரது துணிச்சல்தான் வென்று காட்டியது.

சமரசமற்ற அரசியல் நிலைப்பாடு!
சமரசமற்ற அவரது அன்றைய அரசியல் நிலைப்பாடும் – கொள்கைவயப்பட்ட கோணல் இல்லாப் பயணமுமே அதனைத் தக்க வகையில் எதிர்கொண்டது; வென்று நின்றது!
“மற்றொரு பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” என்று கூர்த்த மதியோடு அண்ணா சொன்னதும் உண்மை யாயிற்று!
சாதனை சரித்திர நாயகராக, காலத்தை வென்று கடமையாற்றிய கலைஞரின் புகழ் என்றும் குன்றின்மேல் ஒளிவிளக்காக ஓங்கிப் பிரகாசிக்கிறது!

திராவிடத்தின் தேவையும் – பயணமும்!
அவர் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்பதற்கேற்ப, சாதனையாளராக, இன்றைய ஆளுமைமிக்க அடக்கம் நிறை முதலமைச்சராக மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற உழைப்பின் ஊற்றை அடையாளம் காட்டிச் சென்றதால், தமிழ்நாடு இந்தியாவிற்குக் கற்றிடமாகி – கலங்கரை வெளிச்சமாக – வழிகாட்டுகிறது!
எனவே, திராவிடத்தின் தேவையையும், புகழையும் திக்கெட்டும் பரப்பிட உறுதி ஏற்போம்!
பயணங்கள் தொடரட்டும்!
பயன்கள் குவியட்டும்!

சென்னை தலைவர்,
2.6.2024 திராவிடர் கழகம்

புதன், 1 மே, 2024

ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை



விடுதலை நாளேடு
Published April 30, 2024
மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு
நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப் படும் திருநாள்!
உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க் கத்தாலும் பிரித்து வைத்து பேதப்படுத்தி சுரண்டிக் கொழுத்த சுயநல சக்திகளுக்கு எதிராக சூளுரைத்துத் தொழிலாளி வர்க் கம் வெற்றி கண்ட திருநாள் – வரலாற்றுப் பொன்னேட்டில் மிளிரும் உரிமை நாள்!
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க மும் அடையாளம் காட்டிய அரிய திருநாள்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அங்கே
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக்கவிஞர் கேட்டதோடு,
‘‘பொத்தல் இலைக்கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்”
என்று கவிதையைச் சொடுக்கினார்!
இன்று அதானிகளும், அம்பானிகளும், டாட்டா, பிர்லாக்களும் ஆகிய கார்ப்பரேட் கனவான்களின் ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., மோடி ஆட்சியாகி, விலைவாசி ஏற்றமும், வேலையில்லாக் கொடுமையும், சமூகநீதி வெறும் கானல் நீராகி வரும் நிலையை மாற்றிடும் வாய்ப்பாக, நடை பெறும் மோதலைக் கருவியாக்கி, அனை வருக்கும் அனைத்துமான சமதர்ம உல கினை சமைக்க ஒருங்கிணைந்து ஒன்று திரண்டு வென்று காட்டி, எதேச்சதிகார உயர்ஜாதி – உயர்வர்க்க காவி ஆட்சியை வீழ்த்திட, வீறுகொண்டு சூளுரைப்
போம்!
எமது மே தின வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30-4-2024

புதன், 27 மார்ச், 2024

தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை



விடுதலை நாளேடு
Published March 22, 2024

* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர் பாடக் கூடாதா?
* வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார்
*தந்தை பெரியார்மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கமென்ன?
*  அவதூறுகளைப் புறந்தள்ளி பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது அளிப்பதில் உறுதிகாட்டும் மியூசிக் அகாடமிக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!

இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், இரு பார்ப்பனப் பாடகிகள், டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் பற்றி எல்லாம் பாடி இருக்கிறார் என்றும், பெரியார் வன்முறையாளர் என்றும் தந்தை பெரியார்பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியும், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பும் தெரிவித்து வருவதைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா வுக்கு அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இசைத் துறையில் புகழ் பெற்ற
டி.எம். கிருஷ்ணாவுக்கு விருதும் – எதிர்க்கும் சக்திகளும்!
கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கருநாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்து வதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர் திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன் படுத்துவதற்காகவும் இவ் விருது வழங்கப்படுவதாக அவ் வமைப்பு கடந்த மார்ச் 17 அன்று அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ் வமைப்பின் உயரிய விருதான சங்கீத கலாநிதி பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.

அவ் வகையில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிப்புச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20-ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகி யோர், டி.எம்.கிருஷ்ணா தலைமை யில் நடைபெறும் விழாவில் தாங்கள் பங் கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை மியூசிக் அகாட மியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் இது குறித்து பரப்பினர். விருதுத் தேர்வு தொடர்பான கருத்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.
ஆனால், அதற்கு அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக – ஜாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும். (அவர் களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.)
தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவரு டைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி.

இசை மேதை டி.எம். கிருஷ்ணா ஜாதி, மத, உணர்வு களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயர் (A Humanist). “மனித குலத்தை ஒரு குலமாகக் கருதி, காற்றும், மழையும், சூரிய ஒளியும் எப்படி மானுடத்திற்கு இயற்கை அளித்த பொது உரிமையுள்ள பொது உடைமைகளோ அதுபோல, இசையின்பமும்கூட அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஓர் அற்புத ஊற்றாக, அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாக்க வேண்டும்! யாருக்கும் எட்டாது, ஒரு சிலருக்கே என்ற ஏகபோகத்தை மாற்றி திறமையும் – புதுமையும் – புத்தாக்கங்களும் (Innovation) இசையிலும் புகுத்தப்பட வேண்டும். இசையை ஜாதிக் கண்ணாடி போட்டு பார்ப்பது தவறு” என்ற புதிய பார்வை கொண்டவர்.
இதன் காரணமாக அவர் ஒரு பெரியார் பற்றாளர்கூட.
கடந்த ஆண்டு, வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய இசை மற்றும் குரலிலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் வரிகளிலும் “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல் வெளியானது. இவை தான் மேற்சொன்ன பாடகிகள் இருவரின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகி யுள்ளது.

டி.எம். கிருஷ்ணாவின் முயற்சிகளிலும், அவரது சமூக – அரசியல் நிலைப் பாடுகளிலும் முரண் பாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முழுக்க தந்தை பெரியாரின் மீதான அவதூறும் வெறுப்புணர்வும் நிரம்பியவை ஆகும்.
தந்தை பெரியார் மனித நேயத்துக்காகவும், சமத் துவம் – சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடிய உலகத் தலைவராவார். தந்தை பெரியாரின் கருத்துகள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதும், சமூகநீதிக்கான அடையாளமாக தந்தை பெரியார் கொண்டாடப்படுவதும் பெரியார் உலகமயமாகி வருவதும், அவர்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே, இனப் படுகொலையை முன்மொழிந்தவர் என்று அவரைப் பற்றி திட்டமிட்டு, தொடர்ந்து சில பார்ப் பனர்கள் இட்டுக் கட்டி ஆங்கிலத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
(கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாடு வரை இவர்களின் அவதூறு பரப்பும் முயற்சிகள் தொடர்ந்தன.) இன்று அதனையே கர்நாடக இசைப் பாடகிகளான மேற்சொன்ன இருவரும் தங்கள் பதிவில் எழுதியுள்ளனர்.

வன்முறையைத் தவிர்த்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவதா?
உலகிலேயே வன்முறையை நாடாமல், ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திய தலைவர் தந்தை பெரியார். உலகில் வேறெங்கும் இல்லாத வர்ணாசிரம – ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தி, அதற்காகவே சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிட இயக்கத்தை வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்டு வருபவர் தந்தை பெரியார். காரணம், அவர் ஓர் தனி மனிதரல்லர் – தத்துவம்! உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும், அவரது கொள்கைகள், போராட்டங்கள் தான் இன்றும் வெற்றி பெறுகின்றன. இத்தனைப் பெரிய சமூகப் போராட்டத்தில் எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபடாமல் ஓர் அமைதிப் புரட்சி இயக்கமாக இதை உருவாக்கி, வழிநடத்தியவர். இன்று வரை அந்தப் பாதையில் தடம்மாறாமல் திராவிடர் கழகம் நடை போடுகிறது. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு சமூகத்திற்காகப் போராடும் கருப்பு மெழுகுவர்த்திகள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று, தாக்குதல்களுக்கு உள் ளாகி பெரியார் தொண்டர்கள் உயிரைத் துறந்ததுண்டு. ஆனால், அப்போதும் நாம் வன்முறையை நாடிய தில்லை.

காந்தியாரைப் படுகொலை செய்த கால கட்டத்தில்கூட, பார்ப்பனர்கள்மீது ஏவாமல் அமைதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்
இந்துத்துவ வெறியன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனரால் காந்தியார் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டபோது, இந்தியா முழுவதும் கலவரங்கள் நடை பெற்றன; மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது துளி வன்முறைகூட நிகழாமல் காப்பாற்றியவர் தந்தை பெரியார். அகில இந்திய வானொலியில் உரையாற்றி, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் தக்க வைத்த மனிதநேய மாண்பாளர் அவர்.
குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுக்க போராட்டங்களால் பொழுதளந்தவர் – தந்தை பெரியார் இவற்றில் எங்கேனும் வன்முறையைக் கைக் கொண்டவரல்லர். அதனால்தான் இன்றளவும் போற்றப்படுகிற தலைவராக அவர் இருக்கிறார்.

இராயப்பேட்டை யுவர் சங்கக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார் கூறிய அறிவுரை
05.01.1953-இல் இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (பார்ப்பன இளைஞர்களால் நடத்தப்பட்ட அமைப்பு) பெரியார் ஆற்றிய உரை, பார்ப்பன எதிர்ப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக விளக்கும் ஒன்றாகும். “பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இது பிராமணர்களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்ன தாகவோ, அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை” என்று அந்தக் கூட்டத்திற்காக மட்டுமல்ல; தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் வன்முறையின் பக்கம் இந்த இயக்கத்தை நடத்திடாமல், இன்றைக்கும் அறவழிப் போராட்ட இயக்கமாகவே இதனை நடத்தி வருவதற்கும் வழிகோலியவர் தந்தை பெரியார்.
அவரை வன்முறையாளர் என்றும், இன்னும் அதிகப்படியான வார்த்தைகளால் இனப்படுகொலையை முன்மொழிந்தவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவதும், இழிவு செய்வதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டனத்திற்குரியவையாகும்.
எந்த பேதமும் இல்லாமல் மனித குலம் வாழ வேண்டும் என்பதே அவரது தத்துவம், நோக்கம், செயல்பாடுகள் அத்தனைக்கும் அடிப்படை.

பார்ப்பனப் பெண்களின் விடுதலைக்கு
தந்தை பெரியாரின் பங்களிப்பு உண்டே!
தந்தை பெரியார் இல்லையேல் பெண்ணடிமைத் தனம் இந்த நாட்டில் நீங்கியிருக்க வழி உண்டா? தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டுமானது அல்லவே! அவருடைய கருத்துகள் தானே பார்ப்பனர் சமூகத்திலும் புரட்சியை உண்டாக்கின. விதவை என்று கூறி, மொட்டையடிக்கப்பட்டு, முக்காடிட்டு மூலையில் அமர்த்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் மறைந்து, பார்ப்பன மகளிரும் தங்கள் சுயமரியாதையைப் பெறுவதற்குத் தந்தை பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும், செயல்பாடும் தானே காரணம்!

வர்ணாசிரம, ஜாதி, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும், பாகுபாடுகளுக்கும், அனைத் துத் துறையிலும் இதே நிலை கோலோச்சி வந்ததற்கும் எதிராகப் போராடிய தந்தை பெரியார், அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்களையும் திருத்தி, சமத்துவ நிலைக்குக் கொண்டு வரவிரும்பி உழைத்தவரே அல் லாமல், அவர்களை அழிக்க நினைத்தவர் அல்லர்.
பெரியார் மீதான அவதூறுகளையும், அவரை வன்முறையாளராகச் சித்தரிக்கும் போக்கையும் தொடர்ந்து ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். பலமுறை அவை பொய்கள் என்பது நிரூபிக்கப்பட்டும், உண்மை நிலையை உணர்ந்தும் கூட தொடர்ந்து இதனைப் பரப்புவது கயமையானதாகும்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பேசியுள்ள இருவருக்கு ஆதரவாக அரிகதா நடத்தும் துஷ்யத்து சிறீதர், விஷாகாஅரி, சித்ரவீணாரவிகிரண் உள்ளிட்ட இன்னும் சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெரியார் என்பவர் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக உயர்ந்து நிற்பதைச் சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சி தான் இத்தகைய நிலைப்பாடுகளுக்கும், அவதூறு களுக்கும் காரணமாகும்.
சம்பந்தப்பட்ட மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவர் திரு.முரளி அவர்கள் இசைக் கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி ஆகியோருக்கு எழுதிய பதிலில், தனக்கு எழுதப்பட்ட கடிதம் பொது வெளியில் பகிரப்ப ட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். மேலும், விருதுக்கான தங்கள் தேர்வில் உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் அரியக்குடி, ராமானுஜ அய்யங்காரின் எதிர்ப்பும், ‘குடிஅரசு’ இதழில் கலைஞர் எழுதிய ‘தீட்டாயிடுத்து’ என்ற கட்டுரையும்
1946-ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் எழுதிய துணைத் தலையங்கத்தை (09.02.1946) இந்தச் சூழலில் நினைவூட்டுவது பொருத்த மாகும்.
திருவையாறு தியாக ராயர் உற்சவத்தில் (கர்நாடக இசை மேடையில்) தமிழ ரான தண்டபாணி தேசிகர், ‘சித்தி விநாயகனே’ என்று தமிழ்ப் பாட்டு பாடியதற்காக, “தமிழில் பாடி, சந்நிதானத் தைத் தண்டபாணி தேசிகர் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் அதே மேடையில் பாட மாட்டேன்” என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்கள் அரற்றியது 1946-ஆம் ஆண்டோடு முடிந்துபோகவில்லை; அதே நிலை தான் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது என்பதற்கு இப்போது சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள நண்பர் டி.எம்.கிருஷ்ணா தலைமை யேற்கும் நிகழ்ச்சியில் “பாட மாட்டோம்” என்று பாடகிகள் இருவர் தெரிவித்திருக்கும் எதிர்ப்பே சான்றாகும்.

போராட்டம் இரண்டு தத்துவங்களுக்கிடையில்! அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும், அனை வரும் சமம், அனைவருக்கும் உரிமை வேண்டும், மொழி, இன பேதம் கூடாது என்று கருதும் சமத்துவத் திற்கு எதிராக எதிலும் மேல்-கீழ் இருக்க வேண்டும். எதுவும், யாரும் சமமில்லை, தமிழ் நீச பாஷை, தமிழர்களின் கலையுடன் கர்நாடக இசை கலக்கக் கூடாது என்று கருதும் போக்குக்கும் நடக்கும் போராட் டமே இது! தன்னுடைய தளத்தில் நின்று, தான் கற்ற கலையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும், அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து, இசைந்து செயல்படுத்திவரும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்களே – இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை, மேற் சொன்ன இருவரின் எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

முற்போக்குக் கருத்துக்களை முன் வைத்துப் பாடினால், அது அவதூறா – இழுக்கா?
கர்நாடக இசைக்கு அவர் சேதம் ஏற்படுத்தி உள்ள தாகவும், இசையில் ஆன்மீகத்துக்கு டி.எம்.கிருஷ்ணா இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதை வெட்கப்படத்தக்கதாகக் கருதும் அளவுக்கு அவரது செயல்கள் ஆக்கியுள்ளன என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் காட்டுகிறது.

கலை அனைவருக்கும் பொதுவானதே!
கலை அனைவருக்குமானது, கலையில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்ற கருத்தைத் தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
டி.எம்.கிருஷ்ணா எங்கு பிறந்தார் என்பது முக்கிய மில்லை; அவர் எதை முன்னிறுத்துகிறார் என்பதே முக்கியம். சமத்துவத்திற்கான குரல் எங்கிருந்து வந்தா லும், அதைக் கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை!
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, ஏராளமான பார்ப்பன நண்பர்களும் குரல் கொடுத்திருப்பதும், கலை அமைப்புகள் ஆதரவாக நிற்பதும் வரவேற்கத் தக்கனவாகும்.
அவசியமற்ற இந்த சர்ச்சை எழுந்த பின்னாலும், விருது தேர்விலும், தங்கள் நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக நிற்கும் மியூசிக் அகாடமி அமைப்புக்கும், அதன் தலைவர் திரு.முரளிக்கும் நமது பாராட்டுகள் வாழ்த்துகள்!
நண்பர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல சிறப்புகளைப் பெற்றவர் என்றாலும், அவரது சமூகக் கருத்துகளுக்காகவே அவர் எதிர்க்கப்படுகிறார் என்றால் அவரை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை! அதே வேளையில், அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில் வன்மத்தைக் கக்கும் அனைவரின் சிந்தனையும் இன்னும் வர்ணாசிரமத்தில் இருந்து மீளவில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பெரியார்மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் சந்திக்க நேரும்.
இசைத்துறையைச் சார்ந்த இரண்டு பெண்களை முன்னிறுத்தி, இந்தச் சூழலில் இதைப் பொதுத் தளத்தில் விவாதிக்கச் செய்து, இதன் பின்னணியில் இருந்து இயங்குவோரையும் தந்தை பெரியார் மீது அவர்கள் அவதூறு பரப்புவதையும், அவரை இழிவு செய்வதையும் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது!
இப்படி பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது உறுதி!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2024