நமது சிறப்புச் செய்தியாளர்
‘‘நந்தன் அன்று தீ குளித்திருக்கலாம் அல்லது குளிக்க வைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நந்தன் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்து அர்ச்சகர் ஆகும் காலம் இது'' என்று கர்ச்சனை செய்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனைக்குப் பாராட்டு விழா என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (19.8.2021) மாலை நடத்தப்பட்ட கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
உரையின் சுருக்கம் வருமாறு:
களங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நமது நோக்கம் போரில் வெற்றி பெறுவதே - வெற்றி பெற்றாகவேண்டும்.
முதலமைச்சர் துணையுண்டு - அதற்கு ஆதரவும் உண்டு. மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
நாம் எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கவேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு பலரும் பல கோவில்களில் தாழ்த்தப்பட்டவர் உள்பட அர்ச்சகர்களாகப் பணியாற்றத் தலைப்பட்டனர் என்ற வுடன், பார்ப்பனர்கள் பதறுகிறார்கள்.
ஒரு தனித் தீவை விலைக்கு வாங்கி ஆங்கே குடி யேறலாம் என்று முடிவு செய்திருப்பதாக ‘யூ-டியூப்'மூலம் பார்ப்பனர்கள் கூறியிருப்பதாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தன் வரவேற்புரையில் கூறினார்.
அதனை நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செல்ல முடிவு எடுத்துவிட்டால், நாங்கள்கூட நன்கொடை திரட்டித் தர தயாராகவே இருக்கிறோம்.
1971 தேர்தல் - சேலம் நிகழ்வை மய்யப்படுத்தி எதிரி களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இராமனை செருப் பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர்.
விளைவு என்ன?
1967 தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க., 1971 தேர்தலில் 184 இடங்களைப் பெற்று பெருவெற்றி பெற்றது.
அந்தத் தேர்தலில் ஆச்சாரியாரோடு (ராஜாஜியோடு) காமராசரும் கூட்டு சேர்ந்தார்.
தேர்தல் முடிவு தங்களுக்குப் பாதகமாக இருந்தது என்ற நிலையில், ராஜாஜி கையொப்பமிட்டு ‘கல்கி'யில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
‘‘இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது - மகாபுருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டே வெளியேற திட்டமிட்டுள்ளனர்'' என்பதுதான் அந்த அறிக்கை.
அதேபோல்தான் இப்பொழுது பார்ப்பனர்கள் இந்தி யாவை விட்டு வெளியேறி தனித் தீவில் குடிபுகப் போகி றார்களாம் - நல்லது, முதலில் அதைச் செய்யுங்கள்! வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழ் அர்ச்சனை மொழி - தமிழன் அர்ச்சகர் என்றால், அவ் வளவு வேதனை பார்ப்பனர்களுக்கு - அவ்வளவு எதிர்ப்பு அவர்களிடம்.
நடராஜனைத் தரிசிக்க நந்தன் தீக்குளித்த காலமில்லை இது. நந்தன் கோவில் அர்ச்சகராகும் காலம் இது - அந்தக் காலம் வந்துவிட்டது - தி.மு.க. ஆட்சியில், தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து முத்திரை பதிக் கும் இந்த ஆட்சியில்.
1971 தேர்தலின்போது தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரத்தினச்சுருக்கமாக கருத்தாழமுள்ள நான்கு வரி அறிக்கையை ‘விடுதலை'க்கு அனுப்பி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
என்ன அந்த அறிக்கை?
‘‘இன்றைய ‘‘ஆஸ்திகம்'' என்பது உயர்ஜாதியினர் நலம் - இன்றைய ‘‘நாஸ்திகம்'' என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.
உங்களுக்கு இதில் எது வேண்டும்?'' (‘விடுதலை', 19.2.1971) என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
அதைத்தான் இங்கு நினைவூட்டவேண்டும். அப்பொழுது தவத்திரு அடிகளார் சொன்னதுபோல, நமது அம்மையார் அடிகளார் இங்கு வந்து உரையாற்றியுள்ளார்.
சமூக அநீதி எங்கு தலையெடுக்கிறதோ அங்கு சமூக நீதி வெடிக்கும். கோவில் கருவறையில் குறிப்பிட்ட ஜாதி யினர்தான் போக முடியும் - அர்ச்சனை செய்ய முடியும் என்ற சமூக அநீதிக்கு இப்பொழுது விடிவு கிடைத்துள்ளது. ஜாதியைப் பாதுகாக்கும் இடமாக கோவில் கருவறை இருப்பதால்தான் சமூகநீதிப் போராட்டம்.
‘‘ஸ்டாலின் வரப் போறாரு
விடியல் தரப் போறாரு'' என்ற பாடல் உண்மையாகவே ஆகிவிட்டது!
தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில் மறைவிற்கு 5 நாள்களுக்குமுன் இறுதி உரையை வழங்கினார் - அது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது.
‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே!' என்று வருத்தப்பட்டார்.
பெரியார் மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டது.
பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது. துடிக்கி றார்கள் - தனித் தீவுக்குப் போகலாம் என்று ஆசைப் படுகிறார்கள். ஆகமத்துக்கு விரோதமாக நடக்கலாமா என்று கேட்கிறார்கள்.
கருவறையில் குளிர்சாதனம் (ஏசி) எந்த ஆகமத்தில் உண்டு?
தேவதாசிகள் ஆடிப் பாடியதற்குப் பிறகுதான் சாமி புறப்பாடு என்று வைத்திருந்தார்களே - அந்த ஆகமம் இப்பொழுது எங்கே போனது? மின் விளக்கு எப்பொழுது வந்தது?
இந்த நேரத்தில் அரசுக்கு ஒரு வேண்டுகோள் - அர்ச்சகர்கள் அரசு ஊழியர்கள்தான். உள்துறை பணியாளர்கள்தான். அரசு சட்டப்படி ஓய்வு வயது 60 தான். அதன்படி அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் புதிதாக 69 விழுக்காடு அடிப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
சத்தியவேள் முருகனார் போன்றவர்கள் நடத்தும் பயிற்சி நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யலாம் என்றார்.
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நன்றி கூறிட, காணொலி கருத்தரங்கம் இரவு 8.45 மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை தனியே வரும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக