கலைஞர் நினைவு நாளில் தலைவர்கள் சூளுரை
தொகுப்பு : மின்சாரம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவை யொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி கருத்தரங்கம் நேற்று (7.8.2021) மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
சரியான நேரத்தில் சரியானதை எப் பொழுதும் செய்யத் தவறாத திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல ஏற்பாடு செய்து இருப்பதாகப் பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டினர்.
திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரை
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி.வீரமணி அவர்கள் தலைவர்களின் நினை வேந்தல் என்பது - சம்பந்தப்பட்ட தலை வர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் சார்ந்த இயக்கம் எது? அவற்றின் சித்தாந்தம் என்ன? அவர்கள் ஆற்றிய தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், கருத்துகளை எடுத்துக் கூறவும், இந்தக் காலகட்டத்தில் அந்தக் கொள்கைகளின் அவசியம் என்ன?, நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், செயல்படுவதற்குமான நிகழ்ச்சியே என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரின் தோள்மீது அண்ணா வும், அண்ணாவின் தோள் மீது கலைஞரும், கலைஞரின் தோள்மீது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் நிற்கிறார்கள்.
குவளையில் (திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர்) பிறந்து குவலயத்தை ஈர்த்தவர் கலைஞர் என்றார் கழகத் தலைவர்.
கலைஞர் அவர்களைப் பற்றி அண்ணா சொன்னது என்ன? என்னை எம் தோழர்கள் அறிவார்கள். எனினும் என்னை முற்றிலும் அறிந்தவர் - உணர்ந்தவர் கருணாநிதிதான் என்று அண்ணா அவர்கள் சொன்னதையும் நினைவுபடுத்தினார்.
அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் கழகத்தைக் கட்டிக் காத்தார் என்றால், கலைஞருக்குப் பிறகு தளபதி அந்தப் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்.
வரும் 15ஆம் தேதி கோட்டையில் முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா வில் உள்ள ஒவ்வொரு மாநில முதல் அமைச்சருக்கும் ஆகஸ்டு 15இல் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரங்களால் கோட்டையிலே கொடி உயரும்போது அங்கே மாநில சுயாட்சி எனும் கொள்கையும் உயரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி.
ஒரு நூற் றாண்டு திராவிட இயக்கத்தில் அரை நூற்றாண்டு தலைமை என்பது தலைவர் கலைஞ ருக்கே உண்டு என்று எடுத்த எடுப்பிலேயே முத்திரை பதித்தார்.
பாண்டிச்சேரியிலே கயவர்களால் கலைஞர் தாக்கப்பட்ட நிலையிலே, அவரை அடையாளம் கண்டு, ஈரோடு 'குடிஅரசு' அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார் தந்தை பெரியார்.தொடக்கமே சிறப்பானது என்றார்.
தஞ்சை நிகழ்ச்சி ஒன்றில் கலைஞர் பங்கேற்கச் சென்றார். மதுரை இலக்குவனார் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் போது, தஞ்சை நிகழ்ச்சிக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது. அண்ணா பேசிக் கொண்டி ருந்த போது கலைஞர் வந்து சேர்ந்தார்.
அண்ணா அப்பொழுது சொன்னார். நிகழ்ச்சி என் பேச்சோடு முடிந்துவிடாது. எனக்குப் பின்னால் கருணாநிதி தொடர்வார் என்றார்.
ஆம், அண்ணாவுக்குப் பின் கலைஞர் தானே தொடர்ந்தார் - கட்சியை வழி நடத் தினார் என்பதை நயமாக எடுத்துக் கூறினார் வைகோ.
சேலத்தில் தந்தை பெரியாருக்கு வெள்ளிச் சிம்மாசனம் அளிக்கும் விழா. அவ்விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் கலந்து கொள்கிறார். அய்யாவை அந்த வெள்ளிச் சிம்மாசனத்தில் முதல் அமைச்சர் அமர வைப்பதாக நிகழ்ச்சி - தந்தை பெரியார் என்ன செய்தார்? கலைஞரின் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அந்த வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைத்த அந்த அரிய நிகழ்ச்சியை படம் பிடித்துக் காட்டினார் மதிமுக பொதுச் செயலாளர்.
வட ஆரிய சனாதன ஹிந்துக் கலாச்சாரப் படையெடுப்பை, அதன் முற்றுகையைத் தகர்த்திட தலைவர் கலைஞரின் நினைவு நாளில் உறுதி எடுப்போம் என்று முழங்கியது திராவிட இயக்கப் போர்வாள்!
ஆ. இராசா எம்.பி.
(திமுக துணைப் பொதுச் செயலாளர்)
13ஆம் வயதில் 8ஆம் வகுப்புப் படித்துக் கொண் டிருந்த போது கலைஞர் அவர்களின் ஒரு கவிதையைப் படித்து தந்தை பெரியா ரையும், அண்ணாவையும் தேடியவன் நான்.
காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான், இன்று திமு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றுபவனாக இருக்கிறேன் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையில் குறிப்பிட்டதாவது; இன்று மதவாத அரசியல் கோலோச்சுகிறது, கலைஞரோ வாக்குவங்கி அரசியலைப் பற்றிக் கவலைப்படாதவர்.
அவருக்கென்றுள்ள சமுதாய கருத்து உறுதியானது. இந்து மதத்தைப் பற்றி அவர் சொன்ன ஒன்றுக்காகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார். அதற்கு ஆதாரபூர்வ புத்தகத்தை முன் வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் கமலபதிதிரிபாதி எழுதிய ஹிந்தி புத்தகத்தில், அகராதியில் அதற்கான ஆதாரம் இருந்தது.
இன்றைக்கும் கலைஞர் தேவைப்படுகிறார் ஏன்? ஆர்.எஸ்.எஸ். அதிகார அரசியலில் ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களே சங்கமித்தனர். ராமதாஸ் அத்வாலே கரைந்தே போய்விட்டார்.
வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூக இயக்கங்கள் இல்லை.
தமிழ்நாட்டிலே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், அவரின் வழி தோன்றல் தளபதி ஸ்டாலின் என்று வாழையடி வாழை யாக மதவாத எதிர்ப்பு - சமூகநீதி முற்போக்குப் பகுத்தறிவு சக்திகள் இணைந்திருக்கிறோம்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு தளபதி ஸ்டாலின் தலைமையில் முன்னெடுப்போம் - முறியடிப்போம் என்றார் மானமிகு ஆ.இராசா.
எந்த நாட்டுக்கும், தத்துவமும், தலைமை யும் முக்கியம்.
தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கைகளில் சொல்லாத பலவற்றைச் செய்யக் கூடியவர். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவப்புரம் போன்றவை அவை என்பதைக் குறிப்பிட்ட ஆ. இராசா அவர்கள் மற்றொரு எடுத்துக் காட்டையும் எடுத்துக் கூறினார்.
1951இல் ஒன்றியத்தில் சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் ஹிந்து கோட்பில் (Code Bill) ஒன்றை கொண்டு வந்தார்.
பெண்களுக்கு சொத்துரிமை, மண விலக்கு, தத்து எடுத்தல் போன்ற உரிமைகள் அவை.
பிரதமரோ நேரு அவர்கள் - கடவுள் பற்றிய கவலை இல்லாதவர், பகுத்தறிவுவாதி என்ற எல்லாம் இருந்தும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்த அந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பதவி பெரிதல்ல - கொள்கையே பெரிது என்று பதவி விலகினார். அம்பேத்கர் - அப்பொழுது ஒன்றைச் சென்னார். இன்று தோற்று இருக்கலாம் - ஒரு காலம் வரும் இவை எல்லாம் சட்டமாகும் என்றார்.
1929களில் தந்தை பெரியாரால் சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இவை. அவர் வழி வந்த தலைவர் கலைஞர் 1990களில் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்ததை - சுட்டிக் காட்டி - அம்பேத்கர் 1951இல் கூறியது கலை ஞர் காலத்தில் நிறைவேறியதா இல்லையா? என்று அர்த்தம் மிக்க வினாவை எழுப்பினார் ஆ. இராசா.
ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
பொதுச் செயலாளர்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் - சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் தம் உரையில் கலைஞர் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் 30 ஆண்டுகள் நம்மை விட்டுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு மனிதர் ஒரு துறை அல்ல - சில துறைகளில் பரிமளிக்கலாம். ஆனால் கலைஞர் அவர்களோ, தொடாத துறையில்லை. அவர் தொட்ட தெல்லாம் துலங்கும் என்பது போல அவரால் புகழ் பெறாத துறையே இல்லை என்று புகழாரம் சூட்டினார்.
தமிழர்களைத் தட்டி எழுப்பினார் - கழகத்தைக் கட்டிக் காத்தார்.
சமூகநீதியில் அவர் பதித்தவை சாதாரண மானதல்ல, வன்னியர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப் பட்டவர் என்ற பட்டியலில் சேர்த்தவர் கொங்கு வேளாளர்களைப் பிற்படுத்தப் பட்டவர் பட்டியலில் இணைத்தார். அருந்த தியர்க்கு 3 சதவீதம் அளித்தார்.
அனைவருக்கும் நண்பராக விளங் கியவர் கலைஞர். இன்று இல்லை என்றாலும் மாநில சுயாட்சி, சமூக நீதி காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய கால கட்டம் இது என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பொதுச் செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
தாய்க் கழக மாம் திராவிடர் கழகம் நடத்தும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பேசு வோர் பட்டியலில் எனக்கு இடம் இல்லை யென்றாலும் ஒரு பத்தாண்டு என்னைப் பக்கத்தில் உட்கார வைத்தவர் கலைஞர். அந்த நன்றி உணர்வோடு - இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாக எனக்குப்படுகிறது.
நான் கடவுளை நம்புபவன் அல்ல. ஆனால் ஆலயங்களில் அன்னைத் தமிழ் என்ற செய்தி - கலைஞரின் நினைவு நாளில் கிடைத்திருக்கிறது. இப்பொழுது தமிழ் - வெகு விரைவில் தமிழர்கள் கோயில் கருவறைக்குள்.
எதிர்ப்புதான் வரும் - வரட்டும் - எதிர் கொள்வோம்! மாநில சுயாட்சி தேவைப்படும் காலம் இது. ஓட்டுக் கேட்கலாம் - புரிந்து கொள்ள முடிகிறது - ஆனால் ஒட்டல்லவா கேட்கிறார்கள்!.
அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டம் இது. கலைஞர் இனிப் பேசப் போவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அவர் குரலைப் பேச வேண்டும்.
மாநில சுயாட்சியும், சமூக நீதியும் நம் முன் உள்ளவை. கலைஞர் ஊட்டிய உணர்வோடு முன்னெடுப்போம்!
மற்றொன்று -
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பும் வழியைச் சொல்லி விட்டது - அனைவரும் விடுதலை செய்யப் படுதல் வேண்டும் என்றார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முசுலீம் லீக்
காலம் வரும் போகும் - கலைஞரின் நினைவுகளோ என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
40 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைஞருடன் நட்போடு பழகி இருக்கிறேன்.
சிறுபான்மை சமுதாய மக்களை எப்போதும் நேசித் தவர் அவர். மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அளித்தார் என்பதை விட சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து வைத்திருந்தார் என்பது தான் முக்கியமாகும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கலைஞர் அவர் களை சந்திக்க கோபாலபுரம் சென்று இருந்தேன். அப்பொழுது உரையாடிக் கொண்டு இருந்தபோது இடையே ஒன்றையும் சொன்னார். “பேராசிரியர் நான் யாருக்குமே தீங்கிழைத் தவன் அல்ல” என்று அவர் சொன்னதை இன்று நான் நினைத்தாலும் கண்கலங்கு கிறேன் (கண்கலங்கினார் பேராசிரியர் - அனைவரை யுமே கண்கலங்க வைத்தார்).
எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்நாட்டை தன் கட்டுப் பாட்டில் வைத்திருந்தவர் கலைஞர். ஆளும் கட்சியாக இந்தபோதும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தபோதும் சரி, அவரை முன்னிறுத்தியே எல்லாம் நடந்தன.
தந்தை பெரியாரின் சமூக - அரசியலை வீழ்த்திட அண்ணாவை, கலைஞரை வீழ்த்திடத் திட்டமிட்டனர்.
பெரியார் முன்னெடுத்த சமூக நீதி, சனாதன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஜாதி மத எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்துத்துவா எதிர்ப்பு இவற்றை எதிர்த்திட - வீழ்த்திட திமுக எதிர்ப்பு என்ற ஒன்றைக் கைகொண்டனர் நமது எதிகள் - சனாதன சக்திகள்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் மறைவிற்குப் பிறகு திராவிட தத்துவங்களைக் குழி தோண்டிப் புதைத்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர். கலைஞர் தலைமையேற்றுப் பெரியார் அரசியலைக் கை எடுக்கிறார் என்றவுடன் அவரை வீழ்த்திடத் திட்டமிட்டனர் - குறி வைத்தனர். கலைஞரை வீழ்த்தினால் திராவிட அரசியலை வீழ்த்தி விடலாம் என்றும் எண்ணினார்கள்.
குறிப்பாக 1971 தேர்தல் அதற்கான சோதனைக் களமாக அமைந்தது. இதுவரை காணாத வெற்றியை தி.மு.க. கண்டது. 184 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
திராவிட தத்துவம், சமூக நீதி தத்துவம் திமுகவுக்கு - கலைஞருக்குக் கை கொடுத்தது. கலைஞரை வீழ்த்த முடியவில்லை.
கலைஞரின் பெரியார் நினைவு சமத்துவபுரம் - உலகம் கண்டிராத ஒன்று.
ஊரையும் சேரியையும் இணைத்த தத்துவம் - செயல்வடிவம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரம்.
சமூகநீதி களத்தில் ஆசிரியர் அவர்களும், கலைஞர் அவர்களும் களமாடி காத்த வரலாறு மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார் எழுச்சித் தமிழர்.
தந்தை பெரியார் சமுதாய - அரசியல் சித்தாந்தத்தை - கலைஞர் கடைப்பிடித்த அந்த கொள்கைகளை தளபதி ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைத்து பாதுகாப்போம். சனாதன சக்திகளை முறியடிப்போம் என்றும் சூளூரைத்தார்.
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
75 ஆண்டு காலம் பிரகாசித்த ஒளி நமது கலைஞர். தந்தை பெரியார் பட்டறையில் தயாரிக் கப்பட்டவர். கடின உழைப்பால் சமூக, அரசியல், கலை, இலக்கிய துறைகளிலும் அழுத்தமான முத்தி ரைகளைப் பொறித் தவர்.
1938இல் மாணவனராக இருந்த போது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தவர். எந்தப் பிரச்சினையிலும் சமயோசிதப்படி நடந்து கொள்பவர். உரையாடல்களில் நகைச்சுவை ததும்பும்.
சாமான்ய மக்களின் பகுதியில் இருந்து உழைப்பால் உயர்ந்தவர். எதிர்ப்புகள் - சதிகள் - வஞ்சகங்கள் - ஆரிய சக்திகள் - இவற்றை எதிர்ப்பதில் வெற்றி கண்டவர். சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்காக அவர் செய்த கல்வி உள்ளிட்ட உதவிகள் மிகப் பெரியவை என்றும் குறிப்பிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
தோழர் இரா. முத்தரசன்
(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
கலைஞர் அவர்கள் உயி ரோடு இல்லை. ஆனால் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக் கிறார்.
ஒரு குக்கிராமத்தில் சாமான்ய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்த நிலைக் குச் சென்றார்.
எவ்வளவு உயர்ந்தாலும் தொடக்க நிலையை அவர் மறக்கவேயில்லை. விவசாயி கள் பகுதிகளில் அவர் தொடர்ந்து ஆற்றிய மேடைப் பேச்சுகள்தான் அவரைப் பெரும் பேச்சாளராக ஆக்கியது.
அவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். நமது நாட்டைப் பொறுத்தவரை மூத்த ஏடு - தந்தை பெரியார் நடத்திய 'விடுதலை' ஏடு. அதனைத் தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர் நமது ஆசிரியர் பெருந்தகை! அடுத்து எங்களின் 'ஜனசக்தி'. கையெழுத்து ஏடாக கலைஞரால் தொடங் கப்பட்டதுதான் 'முரசொலி'.
மக்களை ஒன்றுபடுத்துவது - ஒருங்கிணைப்பது என்பது பத்திரிகைகளால் தான் முடியும். அதனை லெனின் நன்றாகவே உணர்ந்திருந்தார். கலைஞர் 'முரசொலி'யில் எழுதும் உடன்பிறப்புக் கடிதம் கழகத்தினரைக் கட்டிப் போட்டது.
சோவியத் வீழ்ச்சி என்று கூறப்பட்டதும், கம்யூனிசம் அது பிறந்த இடத்திலேயே புதைந்தது என்று எழுதினார் 'சோ' ராமசாமி. கலைஞர் அப்பொழுது எழுதினார் வீழ்ச் சியல்ல - தற்காலிகப் பின்னடைவு என்று எழுதினார்.
திராவிட இயக்கம் அழிந்து விட்டது என்று சிலர் பேசுகிறார்கள் - கனவு காண்கிறார்கள். திராவிட இயக்கம் அழியாது - அழியவே அழியாது.
தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சவால்களை எதிர் கொள்வார். அந்தத் துணிவும், திறனும் அவரிடம் உண்டு.
நமது ஆசிரியர் அவர்கள் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை மிகவும் சரியாக செய்வார். இந்த நிகழ்ச்சியும் அதுதான் என்று தோழர் முத்தரசன் குறிப்பிட்டார்.
தோழர் கே. பாலகிருஷ்ணன்
(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்)
அரசியல் மாறுபாடுகளைக் கடந்து மக்கள் தலைவ ராகக் கலைஞர் மதிக்கப்படுவதற்குக் காரணம் அவரின் ஆளு மைதான்.
குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்படிச் செய்தார் என் றால், அது சாதாரணமானதல்ல.
எழுத்து, படிப்பு, வாசிப்பு, கலைத்துறை, இலக்கியத் துறை எல்லாவற்றிலும் அவரின் பாண்டித்துவம் பிரமிக்கத்தக்கவை.
1969லேயே மாநில சுயாட்சிக்கான ஆக்க பூர்வ பணிகளை செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி பி.வி. ராஜ மன்னார் தலைமையில், டாக்டர் இலட்சுமணசாமி முத லியார், சந்திரா ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவை ஏற்படுத்தி அறிக்கையைப் பெற்றுத் தந்தவர்.
இன்றைக்கு நிலைமை என்ன? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கின்றனர். இதற்கு மாற்று என்பது மாநல சுயாட்சியே!
1976இல் நடந்தது என்ன? நெருக்கடி நிலை அறிவிக் கப்பட்டது. நெருக்கடி நிலைமையை ஏற்காத மாநிலம் தமிழ்நாடு. அதன் விளைவு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. திமுக தோழர்கள் சிறைவாசம். கொள்கையில் உறுதி யாக நின்று காட்டியவர் கலைஞர்.
இன்றைய தினம் ஒரு கூட்டம் கோயில்களை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் தனியார்களின் சுரண்டல் கூடமாக இருந்த கோயில்கள் எல்லாம் ஹிந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டது. மறுபடியும் சுரண்டலாம் என்று நினைக் கிறார்கள். அதனை அனுமதிக்க முடியாது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை கலைஞர் நிறைவேற்றினர். கேரள மாநிலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாட்டிலும் அது நடைபெறும் என்றார் தோழர் கே.பி.
கே.எஸ். அழகிரி
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
கலைஞர் அவர்களின் நினைவு நாளில் இது போன்ற நிகழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வருகிறார். கலைஞர் - ஆசிரி யர் அவர்களுக்குள் இருந்த நட்பு மிக ஆழமானது.
ஜாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு நிறைந்த ஒரு சமுதாயத்தில் அதனை எதிர்த் துப் போராடிய களத்தில் கலைஞர் மிகவும் முக்கிய மானவர் - அவர் ஒரு சகாப்தம்.
சுயமரியாதை இயக்கத்தில் அவர் ஏற்றுக் கொண்ட அந்தக் கொள்கையில் மறையும் வரை உறுதியாக இருந்தார்.
பூமிக்குள் தான் விதை புதைக்கப்படுகிறது அந்த விதை உறங்குவதில்லை. பூமியைப் பிளந்து கொண்டு விருட்சமாக உருவாகிறது.
இந்தக் கால கட்டத்தில் அரசியல் செய்வது எளிது. ஆனால் கலைஞர் பொது வாழ்க்கையை தொடங்கிய காலம் மிகவும் கடுமையானது - கொடுமையானது. கலைஞர் அதிகம் படிக்கவில்லை. ஆனால் அனை வற்றையும் அவர் படித்தார்.
சட்டமன்ற வரலாற்றில்கூட அவர் போற்றிய ஜனநாயகம் தனித் தன்மையானது. எதிர்க்கட்சிக் காரர்களை அதிகம் பேச அனுமதித்தவர். காரணம் அவரின் தன்னம்பிக்கை!
பெண் என்றால் அவர்கள் ஓர் உயிர் என்று மதிக்காத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றியவர் அவர்.
ஊருக்குள்ளேயே வர முடியாதவர்களைக் கோயில் கருவறைக்குள் கொண்டு வர சட்டம் செய்தவரும் அவரே.
மனித உரிமையின் அடிப்படையில் கைரிக்ஷாவை ஒழித்தவரும் அவரே, என்றார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
மிகவும் சிறப்பான முறையில் பொருத்தமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியரையும், கழகத்தையும் போற்றுகிறோம் என்றும் கூறினார்.
வரவேற்புரை, இணைப்புரை, நன்றியுரை!
கருத்தரங்கின் தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற் புரையாற்றினார். அதில் மூன்று நிகழ்வுகளை, கருத்து களைப் பதிவு செய்தார்.
முதலாவது: உங்களைப்பற்றி நீங்கள் ஒருவரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன் என்ற இதழ் ஒன்றின் கேள்விக்குக் கலைஞர் பளிச் சென்று கூறிய பதில் "மானமிகு சுயமரியாதைக்காரன்" ('குங்குமம்' 30.4.2006).
இரண்டாவது: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?
கலைஞரின் பதில்: இந்த இரண்டையும் விட, அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான். ('தினகரன்' பேட்டி 6.5.2006)
மூன்றாவது: மூன்றாம் தர அரசு என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி - சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியபோது, சட்டப் பேரவை யில் முதல் அமைச்சர் கலைஞர் கம்பீரமாக எழுந்து பிரகடனப் படுத்தினார்.
"தமிழ்நாடு அரசு நாலாம் ஜாதி மக்களான சூத்திரர் களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன்.
இவ்வரசு நாலாந்தர அரசு தான், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர அரசைத் தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறுமாறுப்புடனும், பெரு மையுடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன்." (28.7.1971) என்று தமிழ்நாடு சட்டப் பேர வையில் பிரகடனப்படுத்தியவர் முதல் அமைச்சர் கலைஞர்.
இந்த மூன்று முத்தான - முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞரின் அறிவிப்புகளை மய்யப்படுத்தி எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசலாம் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்.
நன்றி கூறிய திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி பற்றி விமர்சனம் செய்யப்பட்ட ஒன்றை சுட்டிக் காட்டினார்.
தகர டப்பாவுக்குள் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கியது போல் உள்ளது கருணாநிதியின் வசனம் என்று இன எதிரிகள் விமர்சித்தனர். கூழாங்கற்களை பட்டை தீட்டப் பட்ட வைரக் கற்களாக மாற்றுவ தற்குத் தான் பராசக்தி வசனம் என்று பதில் அளித்தவர் மான மிகு கலைஞர் என்று கூறி கருத் தரங்கில் பங்கேற்ற அனைவருக் கும் மற்றும் உலகம் முழுவதுமிருந்தும் காணொலியில் பங்கேற்று சிறப்பித்த பெரு மக்களுக்கும் நன்றி கூறினார்.
இணைப்புரையாற்றிய திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒவ்வொருவர் உரைக்கு முன்பும் அவர்களைப் பற்றியும், உரைக ளுக்குப்பின்னர் உரையின் ஒளிவீசிய முத்துக்கள் பற்றியும் நேர்த்தியாக எடுத்துரைத்தார்.
பங்கேற்பு
மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸூம் காணொலி வழியாக சுமார் 450-க்கும் மேற்பட்டோர் நேரடியாக பங்கேற்றனர்.
யூடியூப், ஃபேஸ்புக் ஆகிய தளங் களின் வாயிலாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றைய நிகழ்வைப் பார்வையிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக