பெட்ரோல் விலை குறைப்பு - பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் கல்வி உள்ளிட்ட மக்கள் நல பட்ஜெட் புத்தாக்கத்தின் வெளிச்சம்!
நூறு நாள்களில் ஆட்சியின் மகுடத்தில் ஒளிரும் முத்துகள்!
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர், நீதிக்கட்சி வழியில் மக்கள் நலன் பேண சமுதாய வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு செயல்படுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச் சராகப் பொறுப்பேற்று, இன்று (14.8.2021) நூறு நாள்கள் ஆகின்றன.
நேற்று (13.8.2021) நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த அமைச்சரவையின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்! ஆட்சியின் அமைதிப் புரட்சித் தொடக்கம் இது என்று அறிவிக்கும் வகையில், ‘முதல் காகிதமில்லா பட்ஜெட்' என்ற பெருமையோடு தாக்கலான இந்த வரவு - செலவு நிதிநிலை அறிக்கை, முழு ஆண்டின் பட்ஜெட் அல்ல.
ஆறு மாதங்களுக்கான பட்ஜெட்
2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகள், இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கோவிட் பெருந்தொற்றைச் சமாளிக்க, தடுக்க முன்னு ரிமை கொடுத்துப் போராடும் மு.க.ஸ்டாலின் முதலமைச் சரான நிலையில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், விடியல் ஆட்சியின் விடிவெள்ளி என்று, பல்வேறு நிதிப் பற்றாக்குறை - நெருக்கடிகளுக்கிடையேயும் மக்கள் நலம் சார்ந்த வரவு- செலவுத் திட்டமாகவே அமைந்துள்ளது!
இக்கட்டான நெருக்கடி - கஜானா காலியாகியதோடு, ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் என்ற சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் சுமை இவ்வாட்சித் தலையில் விழுந்துள்ளதை ஏற்று, புதிய வரவு - செலவுத் திட்டத்தை - இடைக்காலத்திற்கும் அளிக் கும் நிலை - எப்படிப்பட்ட சூழ்நிலையில் என்பதை மக்களுக்கு ஒளிவுமறைவின்றி விளக்கவே இதற்கு முன்னுரையாக 9.8.2021 அன்று வெள்ளை அறிக்கை ஒன்றை விவரமாக வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
சோதனைகள் சாதனைகளாகின்றன
அதில், தமிழ்நாட்டு நிதிநிலை - பொருளாதாரம் எப்படி, ஆக்சிஜன் கிட்டாத அவசர சிகிச்சைப் பிரிவு (அய்.சி.யூ.) நோயாளியைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை - வேறு சிகிச்சை செய்யும்முன், நோயாளியையும் காப்பாற்றி, அறுவை சிகிச் சையையும் வெற்றிகரமாக்கிடும் பொறுப்பேற்ற மருத்துவர்கள் போல் - முதலமைச்சரின் வழிகாட்டலில் - வல்லுநர்களின் துணையோடு அமைத்து, அறிவித்து - இந்த இடைக்கால பட்ஜெட் தனித் தன்மையான சிறப்போடு, சோதனைகளையும் எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றிடத் துணிந்த வரவு - செலவுத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது; மக்கள் பெரிதும் வரவேற்கும் பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது.
புதிய வரியில்லா பட்ஜெட்
1. வெளிப்படைத் தன்மை 2. சமூக ஈடுபாடு 3. வல்லுநர்கள் கருத்துகள் 4. உறுதியான நடவடிக்கை என்ற நான்கு வலிமையான ஆயுதங்களைக் கொண்டதாக உள்ளதால், இது காகிதமில்லா பட்ஜெட் என்றாலும், ஆயுதமில்லா பட்ஜெட் அல்ல.
“தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, தவிர்க்கவே வெள்ளை அறிக்கை என்ற ‘பஞ்சப்பாட்டு' என்றும், புதிய வரிகளைப் போடவே இப்படி ஒரு முன்னுரை போல வெள்ளையறிக்கை என்றும், எதிர்க்கட்சிகள் குறிப் பாக அ.தி.மு.க.வும், அதன் சுற்றுக் கிரக ஊடகங்களும் கூறியது, உண்மை கலவாத அப்பட்டமான பொய்யும் வழுவும் என்பதைப் புரிய வைத்துவிட்டது இந்த இடைக்கால பட்ஜெட்!
புதிய வரிகள் இல்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் செயல்படத் தொடங்கிவிட்டன.
எவ்வளவு நெருக்கடி இருப்பினும் அதனை சாமர்த்தி யமாக சமாளித்து, ஏழை - எளிய மக்களுக்கும், ‘சாமான்யர் களுக்கும், மகளிருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்குமான மக்கள் நலப் பாதுகாப்பு அரசு இது' என்பதைக் காட்டும் வண்ணம், மிக நேர்த்தியான வகையில், ‘திராவிட மாடல்' ஆட்சி எப்படி விடியலை மக்களுக்கு அளிக்கும் ஆட்சி என்பதை அறிவிக்கும் வகையில், நிதியமைச் சரின் மூன்று மணிநேர பட்ஜெட் உரை - முழு நம்பிக்கையை மக்களுக்கு விதைத்துள்ளதாக அமைந்துள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, ஒன்றிய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்காவிடினும், நடுத்தர எளிய மக்கள் பயன்பட - இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்பெற ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாற்றுத் திறனாளிகளுக்கு பல சலுகைகள், உழவர் நலன் காக்க இலவச மின்சாரம் உள்பட பல திட்டங்கள், வேளாண்மைக்கான தனி பட்ஜெட் என்ற புதுமைகளின் - புத்தாக்கத்தின் வெளிச்சம்!
கடந்த பத்தாண்டு கால இருட்டை விரட்டி, காலைக் கதிரவனின் கதிரொளிப் பாய்ச்சப்பட்டு ஒளிமிகுந்த தமிழ்நாட்டை - இந்த மக்களின் வேதனைகளை விரட்டி, சாதனை சரித்திரத்தை நாள்தோறும், நாள்தோறும்- துறைதோறும், துறைதோறும் படைத்துவரும் இவ்வாட்சியால் ஏற்படும் விடியல் ஆட்சி தனது மகுடத்தில் ஒளிரும் முத்துக்களைப் பதித்து நம்பிக்கை ஒளியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது நாளும்!
நூறு நாள்களில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட சாதனை!
பெரியார், அண்ணா கொள்கைகள்
கருவூலத்தைக் களவாடியவர்களை மக்களுக்கு அடை யாளம் காட்டும் பணியும் இவ்வாட்சியின் தொடர் பணியாகத் தொடரட்டும். தூய்மையான ஆட்சி என்ற முரசொலி கேட்டு, நமது தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர்தம் கொள்கைகளை அரியணை ஏற்றிய அரசியல் எப்படி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மக்கள் நல அரசாக இருக்கிறது என்பதற்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீதிக்கட்சி, அண்ணா, கலைஞர் ஆட்சிகளின் பெருமைக்குரிய நீட்சியாகவும், மாட்சி யாகவும், மீட்சியாகவும் ஆட்சியை நடத்தி வருகிறார் என்பதற்கு பட்ஜெட்டும் ஒரு சரியான சரித்திர சான்றாகும்.
சென்னை
14.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக