தமிழில் அர்ச்சனை மற்றும் பார்ப்பனர் அல்லாதோரும் ஆகம விதிகளின் படி நன்கு பயிற்சி பெற்று கருவறையில் சென்று பூஜை செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இதுபிடிக்காத பல பார்ப்பன அரசியல் பிரமுகர்களும் ஹிந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிக்கொண்டு வருகின்றனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் லட்சுமி நாராயணன் சுந்தர் என்பவர் பாஜவின் பிரபல நபராக அறியப்பட்டவர், இவர் தன்னை ஆடிட்டர் என்றும், அரசியல் ஆலோசகர் என்றும் கூறிக் கொண்டு வருகிறார்.
இவர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஏற்கெனவே அர்ச்சனை செய்த குருக்களை அடித்துத் துரத்திவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டார்,
அதற்காக ஒரு பார்ப்பனர் அழுதுகொண்டே வெளியேறுவது போல் படத்தைப் போட்டு, இதோ பாருங்கள் ஒரு குருக்கள் கண்ணீர் சிந்துகிறார் - இரக்கமில்லாத அரசே என்று எழுதியிருந்தார். இந்த போலித்தகவல் சமூகவலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது, அந்த உண்மைக்குப் புறம்பான தகவலை பாஜக பிரமுகர்களான கே.டி.ராகவன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே தாங்களும் அதைப் பரப்பிக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு முதலமைச்சரே சட்டப்பேரவையில் விளக்கம் கொடுக்கும் கடமையைச் செய்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல் மக்களிடையே சேர்ந்த பிறகு, அதற்கு முதலமைச்சர் நேரம் எடுத்துவிளக்கம் கொடுக்கும் நிலைஏற்பட்டது, இப்போதுவரை அந்த போலியான தகவலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இந்த நிலையில் போலியான தகவல்களை அனுப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது,
இனிமேல் போலி தகவலைப் பரப்பினால், தம் மீது நடவடிக்கை வந்து பாயுமே என்று அஞ்சிய பார்ப்பனர்கள் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி வேறு தீவில் வாழலாம் என்றும், ராக்கெட்டில் ஏறி உயிர்வாழத்தகுந்த வேறு கோள்களில் வாழலாம் என்றும் புலம்பத் துவங்கிவிட்டனர்.
Mahesh
@Mahesh10816
Patriotic Indian-India First-Call a Spade a Spade. Honored to be followed by @narendramodi ji & @rajnathsingh Ji
I strongly advocate that Brahmins all over world should come together purchase an island in some part of the world (not in India) & create a separate country for Brahmins where they can follow their culture & rituals with their heads held high. Another Israel has to be created
நான், உலகில் உள்ள அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் சொல்வது என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்று கூடி பணம் சேர்த்து விற்பனைக்காக இருக்கும் தீவுகளில் பெரிய தீவுகளை வாங்கி (இந்தியாவிற்கு அருகிலோ அல்லது இந்தியாவிடமிருந்தோ வாங்கவேண்டாம்) குடியேறிவிடுவோம், அங்கே நாம் நமது கலாச்சாரத்தை வழிபாட்டை மேற்கொள்வோம், புதிய இஸ்ரேலை உருவாக்குவோம்.
மற்றொருவர் இந்த பூமியை விட்டு வேறு உலகத்திற்குச் சென்றுவிடலாம், என்கிறார். (சபாஷ்! சரியான முடிவு!)
நாம் இந்த பெருவெளியில் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற ஓர் உலகத்தை கண்டுபிடித்து பார்ப்பனர்கள்(ஹிந்து) அங்கே குடியேறி நமது கலாச்சாரத்தை வளர்க்கலாம், அங்கே எந்த எதிர்ப்பும் இன்றி பின்பற்றலாம். (குடுமி வைத்துக் கொள்வார்களா? பஞ்ச கச்சம் கட்டுவார்களா?)
இங்கே முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசுகள் நமது கலாச்சாரத்தை சிதைக்கின்றன, ஊடகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டளைக்கு ஆடுகின்றன. ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவதையே பகுத்தறிவு என்கிறார்கள் என்று இப்படி தொடர்ந்து சமூகவலைதளத்தில் புலம்பத்துவங்கிவிட்டனர்.
1971இல் சேலத்தில் திராவிடர் கழக மாநாட்டில் - ஊர்வலத்தில் ராமன் படத்தை செருப்பால் அடித்து விட்டனர் என்று பெரும் பிரச்சாரப் புயலை எழுப்பி - தி.க. ஆதரிக்கும் திமுகவைத் தோற்கடிப்பீர் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்தனர். கோயில் கதவு அளவுக்கு பெரிதாக பெரிய பெரிய சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினர்.
தேர்தல் முடிவு என்ன? 1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற திமுக - 1971இல் 184 இடங்களில் வென்று மானமிகு கலைஞர் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்பொழுது - சுதந்திரா கட்சியின் தலைவர் - குலதர்மவாதி ராஜாஜி கல்கி இதழில் என்ன எழுதினார் தெரியுமா’
“இனித் தமிழ்நாட்டில் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேற வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உட்பட எண்ணத் தொடங்கி விட்டார்கள்” என்று எழுதினாரே (கல்கி: 14.4.1971)
அப்பொழுது எந்தெந்த மகா புருஷர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்று தெரிவிக்க வில்லை.
இப்பொழுது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை செயல்படுத்தும் நிலையில், கோயில்கள் எல்லாம் என்னவோ பார்ப்பனர் வீட்டு பணத்தில், பார்ப்பனர்களே தொழிலாளர்களாக இருந்து கோயிலைக் கட்டியது போல், தங்களின் பிதிரார்ஜித சொத்து போல வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறுகிறார்கள் - சாபம் இடுகிறார்கள்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் - சமூக அநீதி செயல் பற்றித் தந்தை பெரியார் பேசினார். எழுதினார், தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகும் அது தொடர்கிறது என்று வருகிறபோது “பார்ப்பனர்களைப்பற்றி இன்னும் பேச வேண்டுமா? அவர்கள் எல்லாம் திருந்திவிட்டனர்!” என்று பார்ப்பனர் அல்லாதாரே பேசுவதுண்டு. அவர்களெல்லாம் - பார்ப்பனர்கள் இப்பொழுது போடுகிற கூச்சல், ஆவேசத்தை பார்த்த பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?
பார்ப்பனர் அல்லாத இளைஞர்களே உணரும் ஒரு சூழலை பார்ப்பனர் ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.
ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது. இளைஞர்களே பார்ப்பனரைத் தெரிந்து கொள்வீர்! புரிந்து கொள்வீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக