தந்தை பெரியார் கொள்கைவழி - கலைஞர் பிறப்பித்த சட்டத்தை செயல்படுத்தி ‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்'' அகற்றம் - ஸ்டாலின் ஆட்சியில்!
தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல - மீட்சியின் அத்தியாயம்!
- தமிழர் தலைவர் ஆசிரியரின் மனந்திறந்த பாராட்டு-
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் கொள் கையை சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயனோ அதனை செயல்படுத்தி- தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று மனந்திறந்த பாராட்டினை தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
இன்று (14.8.2021) காலை ஒரு பொற்கால ஆட்சியின் புதியதோர் புரட்சி பூபாள இசை எம் காதுகளில் தேனிசையாகப் பாய்ந்து பரவசப்படுத்துகிறது!
கோவில் கருவறைக்குள் பதுங்கிய ஜாதி - தீண்டாமைப் பாம்பு!
உழைப்பின் மறு உருவமாம் ‘ மானமிகு சுயமரியாதைக்காரரான' எமது மூத்த சகோ தரர் மதிப்புமிகு கலைஞர் - தமது ஆசானான அறிவுத் தந்தையின் அன்புக்கட்டளையாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, அதன்மூலம் கருவறைக்குள் ஒளிந்து கொண்ட ஜாதி - தீண்டாமைப் பாம்பை அடித்து விரட்ட முயன்றபோது, அதை ஆட்சியின் சட்டங்கள்மூலமே சாதித்துக் காட்டி சரித்திரம் படைப்போம் என்றார்.
அரை நூற்றாண்டுகால நீதிமன்ற - வீதிமன்ற அறப்போர்கள் தொடர்ந்தன. இன்று வெற்றிக்கனி பறித்துள்ளோம்!
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்!
தந்தை பெரியாரின் உடலுக்கு அரசு மரி யாதை செய்த துணிச்சல்கார முதலமைச்சர் கலைஞர், அதன் பிறகு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.
‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்த எங்கள் அரசு, அவருடைய ‘‘நெஞ்சில் தைத்த முள்ளை'' - அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயலாக்கப் படுத்தி - அகற்ற முடியவில்லையே என்பதே எனது அந்த ஆதங்கம்- மனவருத்தம்'' என்றார்.
கடந்த 99 நாள்களுக்குமுன் கலைஞரின் கொள்கை வாரிசு, செயல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தையின் ஆதங் கத்தைப் போக்கிய தனயனாக - திராவிடர் ஆட்சி முதலமைச்சராக அமர்ந்து முள்ளை அகற்றி, ஜாதி ஒழிப்பு - தீண்டாமை அழிப்பு வரலாற்றில் ஒரு புதிய பொன்னேட்டை இணைத்துள்ளார்.
மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் 58 பேருக்கு (அனைத்து ஜாதியினருக்கும்) அர்ச்சகர் நியமனம் ஆணை அளிப்பு!
அதுவும் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயத்தக்க வகையில் சிறப்புடன் செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள், முத்தாய்ப்பாய் இன்று (14.8.2021) மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மண்டபத்தில் அனைத்து ஜாதியினர் பயிற்சி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு (58 பேருக்கு) நியமன ஆணைகளை வழங்கி, துளி ரத்தம்கூட சிந்தாத அமைதிப் புரட்சியாக - அறிவுப் புரட்சியாக அகிலம் பாராட்டும் வண்ணம் ஒரு சமூகப் புரட்சியை, தக்க சான்றோர்கள், ஆதீனங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவர் முன் னிலையிலும் சாதித்துக் காட்டியுள்ளார். பாராட்ட வார்த்தைகளே இல்லை!
முதலமைச்சரின் ‘பேசாது செய்த புரட்சி' விழாவை மேலும் பெருமைக்குரியதாக்கியது!
சட்டத்தை செயலாக்கிய சாதனை!
அன்று தந்தை விரும்பினார்; தனயன் (கலைஞர்) ஆட்சியில் சட்டங்கள் செய்தார் - சலிக்காமல். இன்று தனது தந்தை விட்டுச் சென்ற பணியை தனயன் (முதலமைச்சர்) முடித்து வைத்தார்.
அறிஞர் அண்ணா, ‘‘பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கினார்'' - கலைஞர் அவர் விரும்பிய சட்டம் செய்தார் - கலைஞரின் தனயன் முதலமைச்சராகி சட்டத்தினைச் செயலாக்கி சாதனை சரித் திரம் படைத்திருக்கிறார்.
இது ஆட்சி மட்டுமல்ல - மீட்சியும் அல்லவா!
வகுப்புரிமை - சமூகநீதிப் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த நாள்
(ஆகஸ்ட் 14) இன்று! (1950).
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக