சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய அனைவருக்கும் நமது நன்றி!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இதர பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்றிருந்த நிலையை மாற்றி, ஒன்றிய அரசுக்கே அந்த உரிமை என்று சட்டம் செய்த அதே பி.ஜே.பி. ஒன்றிய அரசு, அதனை முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கே என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (10.8.2021) நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த 127 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா (அன்றாடம் நாடாளுமன்றத்தில் கடும் அமளிகள்; காரணம், இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி சுமார் 1000 பேரின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு என்ற முறைகேடுபற்றி அவையில் விவாதிக்க ஆளும் அரசு முன்வர வேண்டு மென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காததினால் ஏற்பட்டுள்ள கூச்சல், குழப்பம் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும் நிலையில், இடையிடையே ஆளும் கட்சி பலத்தால் சிற்சில மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றி வருகின்ற நிலையில்) - மட்டும் 385 எம்.பி.,க்கள் ஆதரவுடன் - அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவு உள்படப் பெற்று, எதிர்ப்பின்றி, ஏகமனதாக நிறை வேறிய சிறப்பினைப் பெற்றது.
சமூகநீதிக் களத்தில் வென்றெடுக்கப்பட்ட முக்கிய மைல்கல் வெற்றி
இந்த 127 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா சமூகநீதிக் களத்தில் வென்றெடுக்கப்பட்ட முக்கிய மைல்கல் வெற்றியாகும்.
இதன்மூலம், சமூகநீதி - அதிகாரம் அளித்தல் துறை ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள் குறிப்பிட்டது போல, 671 பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பிரிவினர் பெரிதும் பயனடைவர்;
மாநில அரசுகளே (இதர) பிற்படுத்தப்பட் டோர் யார் என்று அடையாளம் கண்டு, வரையறை செய்யும் அதிகாரம் இதற்குமுன் இருந்ததை 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தச் சட்டத்தின்மூலம் (அதை அவசர கோலத்தில் நிறைவேற்றியது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசுதான்) பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் சமூகநீதிபற்றிய அதிகாரம் - உரிமை - மக்கள் போராட்டத்தினாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டிய பிறகே, இப்படி ஒரு மாபெரும் எதிர்ப்பைச் சமாளிக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து, எதிர்ப்பின்றி, எதிர்க்கட்சியினரின் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது!
என்றாலும், 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா வரைவின்போதே, நாடாளுமன்ற மாநிலங்களவை நிலைக் குழு முன்பு அழைக்கப்பட்டு, கருத்துக் கூறுமாறு நம்மை அழைத்தபோது, டில்லி யில் அக்குழுவின்முன் (இன்றைய ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் அக்குழு தலைவர்) அந்த குறிப்பிட்ட மசோதாவின் வாசகங்கள் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி தனி மனு கொடுத்ததோடு ஏறத்தாழ பல உறுப்பினர்கள் முன்னிலை யில், சுமார் 30 நிமிடங்களுக்குமேல் விளக்கினோம்.
102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்போது ஏற்கப்படவில்லை!
நம் கருத்தை தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏற்று, கருத்து கூறினர். அது 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்போது ஏற்கப்பட வில்லை; ஏற்கப்பட்டிருந்தால், 127 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - அதுவும் உச்சநீதிமன்றம் இடித்துரைத்தபின், மக்கள் எழுச்சிக்கு அஞ்சியும், வருகின்ற உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தல்களை மனதிற் கொண்டும் இப்படி ஒரு மசோதா நிறை வேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டிருக்கவே இருக்காது.
‘‘மூக்கை நேரடியாகத் தொடாமல், சுற்றி வளைத்துத் தொடுகின்ற கதைபோல'' அமைந்தது!
சமூகநீதிக் கொடியை ஏந்துவது
காலத்தின் கட்டாயமாகி விட்டது!
என்றாலும், நாடாளுமன்ற வளாகத்தில் வீசும் இவ்வளவுப் போராட்ட புயலுக்கு மத்தியில், இப்படி ஓர் ஆக்கப்பூர்வ சமூக நீதி சட்டத்திற்கு அனைத்துக் கட்சி உறுப்பி னர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு - சமூகநீதி என்பது எப்படியும் அனைத்துக் கட்சிகளாலும் புறந்தள்ளப்பட முடியாத மூச்சுக் காற்றாக ஆகிவிட்டது என்பதை ஆளுங்கட்சி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ‘மன தளவில்' எப்படி இருந்தாலும் - பழைய வரலாறுவேறு எதிர் நிலைப்பாடாக இருந் தாலும், இப்போது சமூகநீதிக் கொடியை அவர்களும் ஏந்திட வேண்டியது - காலத்தின் கட்டாயமாகி விட்டது!
தந்தை பெரியார் அவர்கள் 1950 இல் தொடங்கிப் போராடியதன் விளைவே 1951 இல் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம், முதன்முதலில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 15(4) இந்தியா முழுவதற்கும் பயன் அளிக்க வழிவகை செய்த சட்டத் திருத்தமாகியது!
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
பின்னாளில், மண்டல் கமிசன் பரிந்துரை அமலாக்கம் வி.பி.சிங் ஆட்சியில் - அவர் செய்த செயலாக்கத்தினால் வெகுண் டெழுந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. 10 மாதங் களில் அவருடைய ஆட்சியைக் கவிழ்த் தது. மண்டலுக்கு எதிராக இராமன் கோவில், கமண்டலைத் தூக்கியதை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சுட்டிக்காட்டியதோடு, ‘‘இதற்காகப் பிரதமர் பதவியை எத்தனை முறை வேண்டுமானாலும் இழக்கத் தயா ராக இருப்பேன். என்றாலும், மண்டல் உருவாக்கிய சமூகநீதிக் காற்று மேலும் பலமாக வருங்காலத்தில் வீசுவதை எவரும், எந்த அரசும் தடுத்துவிட முடியாது'' என்று முழங்கினார்.
பெரியார் மண் - சமூகநீதி மண் என்பது
காலத்தால் அழியாத கல்வெட்டு!
தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் ஈட்டிய மகத்தான வெற்றி! அதனை இன்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் அத்துணைக் கட்சிகளும் சமூகநீதிக் குரலை ஒலிக்கத் தவறவில்லை. பெரியார் மண் - சமூகநீதி மண் என்பது காலத்தால் அழியாத கல்வெட்டு ஆகியது.
அப்போது இதற்கு எதிர்நிலை எடுத்த பா.ஜ.க., கால ஓட்டத்தில் ஏற்கும்நிலை இன்று கட்டாயமாகிவிட்டது!
அதன் விளைவே, இரண்டாண்டுகளில் இப்படி ஒரு மற்றொரு திருத்தத்தின்மூலம் பறிக்கப்பட்ட சமூகநீதி உரிமை மீட்கப்பட்ட பொருள்போல நமக்குக் கிட்டியது.
கோடான கோடி
ஒடுக்கப்பட்ட மக்களின் பறிக்கப்பட முடியாத உரிமை
இது ஆட்சியாளர்களின் செயல் - சாதனை என்பது ஒருபுறம் என்றாலும், கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் பறிக்கப்பட முடியாத (Inalienable right) உரிமை என்பது இதன்மூலம் வரலாறு பதிவு செய்துவிட்டது!
அனைத்துக் கட்சி, ஆளுங்கட்சி உள்பட அனைவருக்கும் நமது நன்றி!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
11.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக