திங்கள், 11 நவம்பர், 2019

மதக் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது

அரசமைப்பு சட்டத்தின் மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை

இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு குற்றமே என்றும் தீர்ப்புக் கூறியுள்ளனர்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று (9.11.2019) அளித்த தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தீர்ப்பு, மதக் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது - பாபர் மசூதி இடிப்பு குற்றமே என்றும் தீர்ப்புக் கூறியுள்ளனர் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (10.11.2019) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான வழக்கும், சன்னி, ஷியா போன்ற முஸ்லீம் அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தும் நடந்த வழக்குகளில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய வழக்காக - இறுதியில் முந்தைய அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மூன்றாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற தீர்ப்புக்கு மேல் முறையீடாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான அரசமைப்பு சட்ட அமர்வு 5 நீதிபதிகளைக் கொண்டது - 40 நாட்களாக அமர்ந்து தொடர்ந்து விசாரித்து  நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட - ஒருமனதான தீர்ப்பை நேற்று (9.11.2019) வழங்கியுள்ளது!

இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்களுடன் இணைந்து தீர்ப்புவழங்கிய எஞ்சிய 4 நீதிபதிகள் ஜஸ்டீஸ் எஸ்.ஏ. பாப்டே, டாக்டர் தனஞ்செய் ஓய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் ஆவர்.

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

ஒருமித்த கருத்துடன், அளிக்கப்பட்டுள்ள முக்கியத் துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு 929 பக்கங்களைக் கொண்டது.

அதனையொட்டி கடைசி பத்தியில்

"One of us, while being in agreement with the above reasons and directions, has recorded separate reasons on:  "Whether the disputed structure is the birth-place of Lord Ram according to the faith and belief of the Hindu devotees." The reasons of the learned judge are set out in an addendum."

இதன் தமிழாக்கம்:

"எங்களில் ஒருவர், நாங்கள்  கூறும் காரணங்கள், ஆணைகளை ஏற்றுள்ள நிலையில், தனது கருத்தைத் தனியாகப் பதிவுசெய்ய விரும்பி, தனியே கூடுதலான ஒரு பகுதியாகப் பதிவு செய்துள்ளார்; அதில் இராமனான கடவுளின் பிறப்பிடம் பற்றிய ஹிந்துக்களின் நம்பிக்கையையும், ஆழமான உறுதியான நம்பிக்கையையும் பற்றியதை ஏற்பதில் எந்தத் தவறும் கிடையாது என்பதை விளக்கியுள்ளார்." (புராணக் கதைகள், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகியைக் காட்டுவார்கள் என்பதற்காக 116 பக்கங்கள் தனியே எழுதியுள்ளார்!)

அந்த அய்வரில் இப்படி எழுதியவர் பெயர் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை; கையெழுத்தும் இல்லை என்பது ஒரு விசித்திரம்!

சுமார் 1000 பக்கங்கள் கொண்ட ஒருமித்த கருத்துள்ள தீர்ப்பின் வாதங்களில் சில முக்கிய கருத்துக்கள்.

1. மொத்தம் போடப்பட்ட 14 மனுக்களில்  சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2. ஷியா வக்ப் வாரியத்தின் மனு தள்ளுபடி

3. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் அது காலிமனையில் கட்டப்படவில்லை.

4. அதற்கு முன் கோயில் இருந்தது உறுதியாக வில்லை.

5. ராம்லல்லா மட்டுமே மனுதாரர்.

6. ஒரு மனுதாரரின் நம்பிக்கையை மற்றொரு மனுதாரர் மறுக்க முடியாது.

7. சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் சிலை 1949இல் வைக்கப்பட்டது.

8. நிலம் யாருக்கும் சொந்தமல்ல - அரசுக்கே நில உரிமைச் சட்டப்படிதான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

9. இந்திய அரசமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி மத்திய அரசு 2.77 சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமன் கோயில் கட்டலாம். அதை மத்திய அரசு ஒரு டிரஸ்ட்  அமைத்துச் செய்ய வேண்டும்.

10. மூன்று மாதத்திற்குள் டிரஸ்ட்டினை சில நிபந்தனைகளுடன் அமைக்கலாம்.

11. முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்திக்குள் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும். (இதுவும் அரசமைப்பு சட்ட 142ஆவது விதிப்படியே)

இது போன்று பல வாதங்கள் வரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன!

விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு இது

யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை (Win  - Win Solution) இது என்றும் கூறிவிட முடியாத பல விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு இது.

இராமர் கோயிலை குறிப்பிட்ட பாபர் மசூதி இடத்திலே கட்டுவோம் என்பவர்களின் மகிழத்தக்க வெற்றியைத் தருகிறது இத்தீர்ப்பு.

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் தந்து மசூதி கட்டி வழிபாடு நடத்திக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சமரச ஆறுதல் போன்ற தீர்ப்பு.

மதக் கலவரங்கள் வெடித்து மக்கள் பலியாகக் கூடாது என்பதற்காகவே இப்போதைய தீர்ப்பு  என்று குறிப்பிட்டாலும்கூட, எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பும், பெயர் குறிப்பிடாத நீதிபதியின்  சுமார் 116 பக்கக் கூடுதல் கருத்துரைகள் - பல்வேறு சட்டசிக்கல்கள் வழக்குகள் போட மதவாதிகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

மதச் சார்பின்மைக்கு சோதனை

அரசமைப்பு சட்டத்தின் மதச் சார்பின்மை மிகப் பெரிய சோதனைக்கு ஆளாகி இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

புராணங்களை வரலாறுகளாக, விஞ்ஞான உண்மைகளாக்கும் "ரசவாதங்கள்" இந்த தீர்ப்பின் கடைசி 100 பக்கங்களில் இடம் பெற்று அறிவியல் மனப்பான்மையை அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் உணர்த்திட வேண்டியது அடிப்படைக் கடமை என்பதையும் காணாமற் போகச் செய்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மனிதநேயமே மக்களை

வழி நடத்த வேண்டும்!

என்றாலும் மதவெறிக்கு இடமின்றி மனிதநேயமே நம் மக்களை வழி நடத்த வேண்டும். பாபர் மசூதி இடித்தது குற்றம் என்பதைத் தீர்ப்புச் சுட்டிக் காட்டியுள்ளதால், வழக்குகள் கை விடப்படாமல் குற்றவாளிகள் நீதிக்குமுன் நிறுத்தப்படுவதை இத்தீர்ப்பு ஒரு போதும் தடுக்கவில்லை.

 

கி. வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10-11-2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக