திங்கள், 11 நவம்பர், 2019

அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

பெண்ணடிமை - ஜாதி ஒழிப்பு - சமூகநீதி பாதுகாப்பு - திராவிடர் இயக்கம்

குறித்து சரமாரியான கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் பதில்

வாசிங்டன், நவ.11  ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி, திராவிடர் இயக்கம் குறித்த பல்வேறு கேள்வி களுக்குப் பதிலளித்தார் அமெரிக்கத் தமிழ் வானொலிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அமெரிக்கத் தமிழ் வானொலியின்

சிறப்பு நேர்காணல்

சான்பிரான்சிஸ்கோ நகரில் 13.10.2019 ஞாயிறு மாலை அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில் தோழர் இந்திரா தங்கசாமி அவர்களால் (கலிஃபோர்னியா),  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் வருமாறு:

வணக்கம். அமெரிக்கத் தமிழ் வானொலி நேயர்களே, நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று, நாம் சம கால வாழ்வில், வாழும் தலைவர் அய்யா கலைஞர் அவர்களுக்குப் பிறகு, திராவிட இயக்க அரசியலில் வாழும் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களை சந்திக்கவிருக்கிறோம்.

அவர் பெரியார் அறக்கட்டளைமூலம் பல்வேறு பணிகளை செய்கிறார். திராவிட இயக்கத்தின் முது பெரும் தலைவர். அய்யா அவர்களை இன்று நாம் சந்தித்து பல்வேறு வினாக்களை நாம் தொடுப்போம்.

அவர் வழியாக பெரியார் அறக்கட்டளை செய்யும் நற்பணிகளையும், அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம், நமக்கு உதவி தேவைப்படும்பொழுது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

வணக்கம் அய்யா!

தமிழர் தலைவர்: வணக்கம்!

இந்திரா தங்கசாமி: நீங்கள் இங்கே வந்ததில் மகிழ்ச்சி. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நேயர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தலைவர்: மகிழ்ச்சி.

தமிழ்த்தேசியம் என்று சொல்லி திராவிட இயக்கங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களே?

இந்திரா தங்கசாமி: தமிழ்நாட்டில் திராவிட அரசி யலை வீழ்த்துவதற்கு சக்திகள் கிடையாது. இருந்தாலும், தமிழ்த்தேசியம் என்று சொல்லி ஒரு பிரிவினர் திராவிட இயக்கங்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். அவர்களைத் தன்வசப்படுத்தி வலதுசாரி சக்தி கள் முன்னோடி வந்துவிடுமோ என்கிற ஒரு அய்யமும், அச்சமும் எல்லோருக்கும் இருக்கிறதே, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: உங்களுடைய கேள்வி  இந்த சூழலில் மிகவும் ஆழமானதும், தேவையானதுமான ஒன்று.

நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது. வலதுசாரி சக்திகள் என்று சொல்லக்கூடிய மதவெறி சக்திகள். திராவிட இயக்கங்களை வீழ்த்துவதற்குத் தங்களால் முடியவில்லை என்பதால், அவர்கள் ‘‘பல மாயமான்களை'' அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ‘‘மாய மான்களில்'' ஒரு குழுதான், இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தைப் பேசக்கூடியவர்கள். திராவிட இயக்கமும், தமிழ்த் தேசியமும் பின்னிப் பிணைந்தவை.

இன்னுங்கேட்டால், இந்த உணர்வை உருவாக் கியவர்களே, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், திராவிட இயக்கமும், கலைஞரும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் போன்ற அமைப்புகள்தான்.

அந்த வகையில் பார்க்கும்பொழுது, மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.

தமிழர், தமிழர் உணர்வு என்று சொல்லுகின்ற நோக் கத்தில், திராவிட இயக்கத்தின்மீது அதிருப்தி இருக்கின்ற நேரத்தில், அதனை நேரிடையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத மதவெறி சக்திகள், இதுபோன்றவர் களை ஊக்கப்படுத்தி, மறைமுகமான பலவகை ஆதரவைக் கொடுத்து, அதன்மூலமாக அவர்களைப் பிளவுபடுத்தி, பிரிவுபடுத்தி அதன்மூலம் காலூன்றலாம் என்பதற்கு செய்யப்படுகின்ற யுக்திகளில் ஒன்று இது.

எனவே, இந்த அம்பு என்பது ஏவுகின்றவர்கள் வேறு; இவர்கள் அதற்குப் பயன்படுகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகவேதான், ‘மாயமான்' என்று நான் சொன்னது மட்டுமல்ல, ஏவப்படுகின்ற அம்புகள் அவர்கள்.

குறிப்பாக இப்பொழுது வலதுசாரி சக்திகள் இருக் கின்றன இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், பார்ப்பனீய ஊடகங்களும் அல்லது வேறு சாதாரணமாக இருக்கக்கூடிய ஜாதீயத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களும் அவர்களுக்கு அபாரமான விளம்பரங்களைக் கொடுத்து, அது ஏதோ திராவிட இயக்கத்தை வீழ்த்தக்கூடிய ஒரு பெரிய சக்தி போல, ஒரு மாயத் தோற்றத்தை போலிப் பார்வையை உரு வாக்கிக் காட்டுகிறார்கள். இதில் அவர்கள் தோல்வி அடைவார்கள்.

உண்மையில் தமிழ்த்தேசியம், திராவிட தேசியம் என்பதும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல.

இன்னுங்கேட்டால், எப்படி நாலணா என்பது ஒரு ரூபாய்க்குள் அடக்கமோ, அதுபோல, தமிழ் என்பது மொழிப் பெயர். திராவிடம் என்பது பண்பாட்டுப் பெயர்.

நான் மொழியால் தமிழன்; ஆனால், வழியால் திராவி டன். காரணம், திராவிடக் கலாச்சாரம், திராவிட நாகரிகம் என்பது, ஆரிய நாகரிகத்திற்கு நேர் எதிரான ஒன்று.

ஆரிய நாகரிகம் - வருணாசிரம தர்மத்தைக் கொண்டது

திராவிட நாகரிகம் என்று சொல்வது இருக்கிறதே, அது முழுக்க, முழுக்க ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்லக்கூடிய,

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று சொல்லக்கூடிய பரவலான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதுபோல், இப்பொழுது நாட்டால் நான் இந்தியன்; தத்துவத்தால், வழியால் திராவிடனாக இருக்கக்கூடிய நான், விழியால், பார்வையால் முழுக்க முழுக்க நான் ஒரு மனிதன்.

எனவே, மனிதத்துவம் என்ற அந்தப் பரந்த பார்வை, மானுடப் பார்வை உண்டு. இதுதான் திராவிடத் தத்துவம்.

தமிழ்த் தேசியம் என்பது, இந்த உணர்வை உருவாக் கியது. இன்னுங்கேட்டால், திராவிட இயக்கம் இல்லை யானால், தமிழ்த் தேசியம் என்பதே பிறந்திருக்காது!

எனவேதான், அதனுடைய அடிப்படையே இங்கே இருந்து கொண்டு போனதுதான். இன்றைக்கு அதை வைத்து, அதையே தங்களுடைய ஆயுதமாகக் கொண்டு திசை திருப்பலாம் என்று திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.

உங்கள் கேள்வியில் அழகான பதில் இருந்தது. வலதுசாரி சக்திகள் என்பதை நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்.

அந்த வலதுசாரி சக்திகள்தான் இப்பொழுது மதவெறி சக்திகள், பதவி வெறி, பண வெறி, அதேபோல, ஏமாந்த மக்களை திசை திருப்பலாம் என்று நினைக்கிறார்கள். ஏற்கெனவே நாம் விதைத்திருந்த அந்த விதையை, இந்த நாற்றங்காலில் இருந்து எடுத்து இன்னொன்றில் நட்டுக் கொள்ளலாம்; அதன்மூலம் வளர்க்கலாம் என்ற நினைப்புதானே தவிர, வேறொன்றுமில்லை.

இந்திரா தங்கசாமி: உங்கள் பதிலிலிருந்து திராவிடம் நீர்த்துப் போகாது வளரத்தான் செய்யும்?

தமிழர் தலைவர்: ஒருபோதும் நீர்த்துப் போக முடியாது. ஏனென்றால், இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று எதிரிகளுக்கே தெரியாது.

தமிழ்த் தேசியம் பேசுகிற கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெறுகிறார்களே?

இந்திரா தங்கசாமி: தேர்தல் அரசியலில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சில கட்சிகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகளைப் பெறுகிறார்களே, அது எப்படி சாத்தியமாகிறது என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகள் பெறுவது என்பது நம்முடைய நாட்டில், பல்வேறு காரணங்களைப் பொறுத்தது; பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்தது.

எந்த இடத்திலும் அவர்கள் இதுவரை கட்டிய டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றதாக வரலாறு கிடையாது.

பொதுவாக இருக்கிறவர்களுக்கு, பலசாராருடைய சிந்தனைகளைப் பொறுத்தது. ஒருவருக்கே வாக்களிக்க வேண்டுமா? இவர்களுக்கு வாக்களித்தால் என்ன? என்று நினைக்கக்கூடியவர்களும் உண்டு - நோட்டா மாதிரி.

அதேபோல, வேறு வகையான அதிருப்திகள். உள்ளூர் பிரச்சினைகள் இருக்கும்; ஜாதிப் பிரச்சினை இருக்கும்; தேர்தல் என்பது இருக்கிறதே, அது கொள்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது அந்தந்த காலகட்ட சூழ்நிலையைப் பொறுத்தது.

ஆகவேதான், மற்றவர்களுக்கு மாற்று ஏற்பாடு இது என்று சொல்லுகின்ற நேரத்தில், அதைப்பற்றி ஒரு ‘பூதாகரமாக' நினைக்கக்கூடிய ஒரு பலூன் அது.  அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை. அதில் ஒரு சிறிய குண்டூசியைக் குத்தினால், அது தானாகவே ‘புஸ்' என்று போகக்கூடிய அளவில் இருக்கும்.

ஆகவேதான், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாக்குகளைப் பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், நம் முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பள்ளிக் கூடம் ஆரம்பிப்பதற்கு அனுமதி வேண்டும்; தொழிற் சாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வேண்டும். அது மிகவும் எளிதானதல்ல.

அதேபோல, வேறு நிறுவனங்களை தொடங்கவேண் டும் என்றால், அனுமதி வாங்கவேண்டும். ஆனால், மிக எளிமையான ஒன்று என்னவென்றால், கட்சி தொடங்கு வதுதான். அதற்கு இரண்டு பேர்கூட வேண்டாம்; ஒருவர் இருந்தாலே போதும்.

ஆகவே, அந்த சூழ்நிலையில், ‘இந்தக் கட்சிக்குத்தான் வாக்களித்துப் பார்க்கலாமே' என்று வேடிக்கையாகவும் நினைக்கக்கூடியவர்கள் இருப்பார்கள்.

‘பரசுராமன்' என்று ஒருவர், நிற்காத தேர்தலே கிடையாது. அவருக்கும் சில வாக்குகள் விழுகின்றன. அதனால் மக்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் அல்ல. தவறிப் போய் விழுகிறது.

இன்னுங்கேட்டால், ‘நோட்டாவிற்கு' அதிகமான வாக்குகள் விழுகின்ற இக்காலகட்டத்தில், அந்தக் கட்சிகளைப்பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.

பகுத்தறிவுப் பாசறை வகுப்புகள்

இந்திரா தங்கசாமி: திராவிட இயக்க இளைஞர்களுக்கு பகுத்தறிவுப் பாசறை வகுப்புகள் முன்பெல்லாம் நடத் தப்படும். அப்படிப்பட்ட வகுப்புகள் இன்றைக்குத் தொடர்ந்து நடைபெறுகின்றதா?

தமிழர் தலைவர்: திராவிடர் கழகம் தேர்தலில் நிற் காத ஒரு அமைப்பு. திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என் றாலும், அரசியலுக்குப் போகின்ற நேரத்தில், ஒரே ஒரு பலகீனம் என்னவென்றால், அரசியலுக்குச் சென்று பல்வேறு காரியங்களைச் செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும்கூட, அரசியலுக்குச் சென்ற பிறகு, வாக்கா ளர்களைத் திருப்தி செய்வதற்காக, தங்களுடைய கொள்கையை சமரசப்படுத்திக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அதற்காகத்தான் திராவிடர் கழகம் என்பது, தந்தை பெரியார் அவர்கள் நாங்கள் தேர்தலுக்கே நிற்கமாட் டோம் என்றார். எங்களைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தலைப்பற்றிய கவலையைவிட, அடுத்த தலை முறையைப்பற்றி கவலைப்படக் கூடியவர்கள் நாங்கள்.

ஆனால், அதேநேரத்தில், தேர்தலையும் அலட்சியப் படுத்த முடியாது. அதன்மூலமாகத்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கின்ற நேரத்தில், இரண்டிற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு.

ஆகவேதான், இந்தப் பிடிப்பு என்பது இருக்கிறதே, அது அவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவு கொள்கையை முழுக்க முழுக்க சொல்வதற்கு, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் இடையறாமல், அதற்குப் பாதுகாப்பான அணியாக இருக்கிறது. ஆங்கிலத்தில், ‘‘Sappers and Miners'' என்று சொல்வார்கள். முன்னாலே பாதைப் போட்டுக் கொண்டு போவது; கவனமாக இருப்பது; விழிப்பாக இருப்பது - இவை அத்தனையையும் செய்கிறோம் - திராவிடர் கழகத்தவர்கள் ஆகிய நாங்கள்.

அதேநேரத்தில், அரசியல் கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையில், பல நேரங்களில் அவர்கள், தேர்தல் நேரங்களில் அவர்கள் தங்களை கொள்கையில் சமரசம் செய்துகொண்டுதான் வாக்குகளை சேகரிக்கவேண்டிய அவசியமும், கட்டாயமும் ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாததும்கூட. அந்தக் காலகட்டத்தில்கூட எச்சரிக் கையாக இருங்கள் என்று சொல்வதற்கு, முழுக்க முழுக்க பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மக்களை தன் பின்னால் அழைத்துச் செல்வது திராவிடர் கழகம், பெரியார் இயக்கம் - தாய்க்கழகம். மக்கள் பின்னாலே செல்வது அரசியல் கட்சி.

ஏனென்றால், மக்களை தங்கள் பின்னால் அழைத்துச் செல்லும்பொழுது, அதனுடைய தத்துவம் வேறு. ஆனால், தேர்தலில், தங்களுக்குப் பின்னால் அழைத்துச் செல்வது என்பதைவிட, மக்கள் பின்னால் சென்றால்தான் அவர்களுக்கு வெற்றி - தோல்வி என்று நிர்ணயம் செய்ய முடியும் என்பதே யதார்த்தம் ஆகும்.

ஆகவே, அரசியல் கட்சிகளுக்கும், சமூகப் புரட்சி இயக்கங்களுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. இந்தக் காலகட்டம், இந்த நிலைப்பாடு அரசியலிலே தவிர்க்க முடியாதது; தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. திரா விடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக் குப் பயிற்சிப் பட்டறையை முறையாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது; தி.மு.க.வும் நடத்துவது உண்டு.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லையே!

இந்திரா தங்கசாமி: அய்யா மிகச் சரியாக சொன் னீர்கள். அதிகாரம் வேண்டும் என்றால் அரசியலுக்குப் போகவேண்டும்; அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிற்று. அப்படி அரசியலுக்குப் போன பிறகுகூட, நீங்கள் பின்புலமாக  இருந்திருக்கிறீர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்ற பிரச்சினையில். அய்யா முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதனை சட்டமாக்கினார்கள். அப்படி சட்ட மாக்கிய பிறகும்கூட, இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒரு ஜாதியினரைத் தவிர, வேறு யாரும் அர்ச்சகராக ஆக முடியவில்லையே - அதற்கான காரணம்  என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இத்தனைத் தலைவர்கள், இவ்வளவு இயக்கங்கள் இருந்தும் அதனை ஏன் செய்ய முடியவில்லை?

தமிழர் தலைவர்: உங்களுடைய கேள்வியில் ஒரு சிறு திருத்தம்.  அந்தப் பிரச்சினையில் அதிகாரப்பூர்வமாக தீர்ப்பினை நமக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் உள்பட எல்லோரும் சேர்ந்துதான் வழக்குத் தொடுத்தி ருந்தார்கள்.

கலைஞர் கொண்டு வந்த இரண்டாவது சட்டம் - தந்தை பெரியார் விரும்பியபடி, அவர் ‘‘நெஞ்சில் தைத்த முள்ளை'' நான் அகற்றுவேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்து, ஒரு சிறப்பான வாய்ப்பை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

அதனை எதிர்த்து மறுபடியும் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். நீதிமன்றத்தில் நமக்கு வெற்றி கிடைத்தது.

அந்த வெற்றியைக்கூட, அந்தத் தீர்ப்பைக்கூட திரிபு வாதம் செய்தார்கள். எங்களைப் போன்றவர்கள்தான் அந்தத் தீர்ப்புக்கான விளக்கங்களை கொடுத்து தெளி வாக்கினோம்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், 206 பேரில் ஒருவர், பயிற்சி பெற்றவர், அறநிலையப் பாதுகாப்புத் துறையினரால் மதுரை மாவட்டத்தில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி பெற்ற 206 பேரில் 10 பேர் இறந்து போய் விட்டனர். இன்னும் பயிற்சி பெற்ற மற்றவர்கள் இருக் கிறார்கள். அவர்களுக்கான நியமனங்களை இன்னும் வழங்கவில்லை. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் உள்ள  ஓர் அரசு. இதுவே நிலை மாறியிருந்து, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்திருந்தால், அனை வருக்கும் அர்ச்சகர் பதவி வழங்கப்பட்டு இருக்கும்.

உச்சநீதிமன்றம் அதற்கு எந்தத் தடையும் சொல்ல வில்லை. அதைக் காரணம் காட்டித்தான் இதுவரையில் அதனை நிறுத்தி வைத்திருந்தார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பும் சரியாக வந்துவிட்டது. மக்களும் பக்குவப்பட்டு இருக்கிறார்கள். எதிர்ப்போ மற்றவையோ வைதீகர்கள் மத்தியில்கூட இல்லை.

இப்பொழுதுகூட மதுரையில், பயிற்சி பெற்ற ஒருவர் மாரிச்சாமி என்பவர் மதுரை தல்லாகுளம் அய்யனார் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்தச் செய்தியும் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந் திருக்கிறது. தொடர்ந்து இன்னமும் நாங்கள் அடைய வேண்டிய இலக்காக அதனைத்தான் வைத்திருக்கிறோம்.

அதனை அரசுதான் செய்யவேண்டும். இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை ஆணையிட்டு, அவர் களுக்கு பதவி வழங்கவேண்டும். அதனை செய்ய அங்கேயுள்ள ஓர் அரசு செய்ய மறுக்கிறது.

அங்கே அரசியல் மாற்றம் ஏற்பட்டால், உண்மையான திராவிட இயக்க ஆட்சி ஏற்பட்டால், அடுத்த நிமிடமே அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். எங்களுடைய முயற்சியில், முதல் முயற்சியாக, முதல் கையெழுத்துப் போடக்கூடியதாக அமையும். ஆட்சிக்கு வருகின்ற வர்களை வேலை வாங்க முடியும். நாங்கள் ஆட்சிக்குப் போகிறவர்கள் அல்ல; ஆட்சியில் இருப்பவரை வேலை வாங்குவதுதான் எங்களுடைய வேலை.

அதனைத் தெளிவாகச் செய்வோம். அந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த மாற்றத்தை நீங்களும் பார்க்கப் போகிறீர்கள். நாங்களும் அதனை எதிர்பார்க்கிறோம். அன்றைக்கு உங்களுடைய வானொலி வாழ்த்துச் சொல்லும்.

தந்தை பெரியார் என்பவர்

ஒரு மாபெரும் ஜீவநதி!

இந்திரா தங்கசாமி: திராவிடர் கழகத்தைப்பற்றி பேசினாலோ, தந்தை பெரியாரைப்பற்றி பேசினாலோ, ஒரே வார்த்தையில், ‘‘அவர்கள் சாமி இல்லை'' என்று சொல்கிறவர்கள் என்று முடித்துக் கொள்கிறார்கள். அதனையும் மீறி, ஜாதிப் படிமானம் தெரியாத மக்களிடம் பெரியாரைக் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்றால், அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்?

தமிழர் தலைவர்: சரியாகச் சொன்னீர்கள். தந்தை பெரியார் என்பவர் ஒரு மாபெரும் ஜீவநதி. அந்த ஜீவநதியில், பல கிளைகள் உருண்டோடிக் கொண்டு வரும்.

தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நீங்கள் சொன்னபடி, இரண்டே சிமிழ்களில் தந்தை பெரியாரை அடக்கிவிடலாம் என்பது இன எதிரி களுடைய ஒரு உத்தியாக இருக்கிறது.

சாமி இல்லை என்று அவர் சொன்னார்,

கடவுள் இல்லை என்று அவர் சொன்னார் என்று சொல்வது உண்மை.

அதனை எதற்காக சொன்னார்? ஏன் சொன்னார்? என்பதுதானே மிகவும் முக்கியம். அதை ஆராய வேண்டாமா?

அந்தக் கடவுளைக் காட்டி ஜாதியை நிலை நிறுத்திய பொழுது, ஜாதியால், தீண்டாமையால் ஏற்படுகிற தீமை களை நிலை நிறுத்தியபொழுது, அப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவையா?

‘‘உன்னை சூத்திரனாக,

உன்னை கீழ்ஜாதிக்காரனாக,

உன்னை தீண்டத்தகாதவனாக,

பார்க்கக்கூடாதவனாக,

நெருங்கக்கூடாதவனாக ஒரு கடவுள் படைத்திருக்கிறது என்று சொன்னால், அப்படிப்பட்ட கடவுள் தேவையா?''

தேவையில்லையே! அந்தக் கடவுளை தூக்கிப் போடாமல் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?'' என்று கேட்டார், நியாயமானதுதானே!

ஜாதி இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு ஒரு அடிப்படையான காரணம், மனிதனால் இந்த ஏற்பாடு உருவாக்கப்பட்டது என்ற கருத்து - பரிணாமம் ஆழமாகப் பதிந்திருந்தால், எப்பொழுதோ ஜாதி ஒழிந்து போயிருக்குமே.

இல்லை, இது கடவுளால் உண்டாக்கப்பட்டது.

மனுதர்மம் சொல்லுகிறது, பிரம்மாவினால் உண்டாக்கப்பட்டது.

பகவத் கீதை சொல்லுகிறது, ‘‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்'' - ‘‘நான்கு ஜாதிகளை நானே உருவாக்கினேன். நானே நினைத்தால்கூட,  அந்த ஜாதி தர்மத்தை, சுதர்மம் என்பதை மாற்ற முடியாது'' என்று கிருஷ்ணன், அர்ஜூனனிடத்தில் சொல்லுவதாக பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது!

எனவே, ஜாதியும், வருண தர்மமும் மாற்றப்பட முடியாது என்ற ஒரு அடித்தளத்தை உருவாக்கி வைத்தி ருக்கின்ற நேரத்தில்தான், பெரியாரும் சரி, அம்பேத்கரும் சரி தெளிவாக அதை உடைத்தாலொழிய ஜாதி ஒழியாது என்றார்கள்.

ஏனென்றால், இலட்சியப் பயணம் செல்லுகின்ற நேரத்தில், எவை எவையெல்லாம் குறுக்கிடுகின்றனவோ அந்தக் குறுக்கீடுகளையெல்லாம் அப்புறப்படுத்தினால் தான், அந்தப் பயணம் தொடரும்.

அந்த வகையில், கடவுளை குறுக்கே போட்டார்கள்; மதத்தை குறுக்கே போட்டார்கள். ஆகவேதான், பெரியார் அவைகளை எதிர்க்கவேண்டிய அவசியம் வந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

நம்மைப் பொறுத்தவரையில், நம் பணி  என்பது சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், அறிவுச் சுதந்திரம், தனி மனித சுதந்திரம் இவைதான் அடிப்படைக் கொள்கை.

அந்தக் கொள்கையை அடைகின்ற முறைகள் இருக்கின்றன அல்லவா - கொள்கை என்பது பிரின்சிபிள் என்பது - அதை அடைகின்ற முறை பாலிசி என்று சொல்வது - திட்டங்கள் என்று சொல்வது.

அடிப்படையாக பெரியார் கொள்கையை மாற்றிக் கொண்டதில்லை. ஆனால், திட்டங்கள் மாறியிருக் கின்றன. ஒருவர் ஒரு இடத்திற்குச் செல்லவேண்டும் என்றால், விமானத்திலும் போகலாம்; காரிலும் போகலாம்; தொடர் வண்டியிலும் போகலாம். அதுபோன்று, போவது என்பது திட்டங்கள் - முறைகள் போன்றது.

ஆனால், இலக்கு என்பது இருக்கிறதே, அது கொள்கைகள். அந்தக் கொள்கை அடிப்படையில் வருகின்ற நேரத்தில்,

அவருடைய கொள்கை சமத்துவம்

அவருடைய கொள்கை மானுடப் பற்று.

அதை அடைவதற்கு குறுக்கே கடவுளைக் கொண்டு வந்து போட்டார்கள்; குறுக்கே பேதத்தைக் காட்டி னார்கள். பார்ப்பனீயம் என்று உள்ளே வந்த நேரத்தில், அவர் பார்ப்பனீயத்தை எதிர்க்கவேண்டிய அவசியத் திற்கு ஆளானார்.

ஆகவே, இதையெல்லாம் தெளிவாக சொல்ல வேண்டியது  அவசியமானதாகும். அவருடைய சமத் துவக் கொள்கைகள் இன்றைக்குப் பரவிக் கொண்டி ருக்கின்றன. உலகளாவிய நிலையில் பரவிக் கொண் டிருக்கின்றன.

நேற்றுகூட நான் இங்கே உரையாற்றியபொழுது, அமெரிக்காவில் எப்படி ஜாதி உணர்ச்சி, அதுவும் கலி போர்னியா பகுதியில் வழக்கு நடக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. வெளிநாடுகளில், புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்கள் மத்தியில், எது வரக்கூடாதோ, எந்த ஜாதி உணர்ச்சி வரக்கூடாதோ அது இங்கே வந்தி ருக்கிறது.

தமிழ்நாட்டில் இது கொடுமையாக இருக்கிறது; இன்னமும் தீண்டாமைக் கொடுமைகள் இருக்கின்றன. இன்னமும் தனி இடுகாடு, சுடுகாடுகள் இருக்கின்றன என்றால், அந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வரக்கூடிய அளவிற்கு இருக்கின்ற காரணத்தால், இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்; இன்னமும் பெரியாருடைய கொள்கைகள் தேவைப்படுகின்றன.

அதேபோல, இட ஒதுக்கீடு, சமூகநீதி. அவை இந்த நாட்டிலும் தேவைப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக் கிறது - affirmative action
என்ற பெயராலே. இங்கும் அந்த சமூகநீதி தெளிவாகவே வந்திருக்கிறது. அரசாங்க ரீதியாகவே இங்கே ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில், இட ஒதுக்கீடு என்று வருகின்ற நேரத்தில், வைதீக நம்பிக்கையுள்ளவர்கள் கூட அதனால் பயன்பட்டு இருக்கிறார்கள்.

இன்னொன்றை உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் - இந்த இயக்கம் மனிதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது.

இந்த இயக்கம், ஒருவரைத் தொட்டால் தீட்டு, இன்னொருவர் படிக்கக்கூடாது; கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கக்கூடாது என்பது போன்ற மனுதர்ம தத்துவங்களை உடைக்க வேண்டும் என்று சொல்லி,

மானிடத்தினுடைய ஒட்டுமொத்த உரிமைகளுக்காகப் பெரியார் போராடினார்.

மக்களில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு சரி பகுதியான வாய்ப்பு என்றெல்லாம் பிரச்சாரம் செய்தால், நிச்சயமாக மனுதர்மம் அடிபட்டுப் போகும்.

இப்பொழுது வைதீகர்களாக இருப்பவர்களுக்குக்கூட தெளிவாகத் தெரியும். நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டிருப்பார், கோவிலுக்குப் போவார். ஆனாலும், பெரியார்மீது பற்றோடு இருப்பார்.

பெரியார் சிலைமீது தமிழ்நாட்டில் கை வைத்ததும், எவ்வளவு பெரிய எதிர்ப்புகள் வந்தன. அந்த ஆதரவு காட்டியவர்கள் எல்லாம் நாத்திகர்கள் மட்டும் இல்லை; கடவுள் நம்பிக்கையாளர்களும் சேர்ந்துதான் அதனை எதிர்த்தார்கள். இது எதைக் காட்டுகிறது என்று சொன் னால்,

பெரியார்தான் தங்களுக்குப் பாதுகாப்பு

பெரியார்தான் தங்களுடைய பிள்ளைகள் படிப் பதற்குக் காரணம்

பெரியாரும், காமராசரும், அண்ணாவும், கலைஞரும் இல்லையானால், தங்களுடைய பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

தமிழ்நாடுதான், இந்தியாவிலேயே சட்ட ரீதியாக 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற மாநிலமாகும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு, அதனை நிலைநாட்டக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் பெரியாரால்தான், இந்த இயக்கத் தால்தான் நாம் பெற்றோம் என்று உணரக்கூடியவர்கள், கடவுள் நம்பிக்கையாளர்களாக இருந்தாலும், இருக் கிறார்கள்.

இன்னொன்றை உங்களுக்குச் சொல்லவேண்டும்; நண்பர் சுப.வீரபாண்டியன் அவர்கள், பெரியார் பிறந்த நாள் விழாவில்  (17.9.2019) கலந்துகொள்ளும்போது மிக அழகாக ஒன்றை சொன்னார்.

ஒரே ஒரு வரியில் சொன்னதை, இங்கே சுட்டிக் காட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்லக்கூடிய நிலை ஒரு காலத்தில்.

‘‘சாமி கும்பிடுகிறேன்'' என்று சொல்வது இன்னொரு காலத்தில்.

ஆனால், இன்றைக்கு சாமி கும்பிடுகிறேன் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்களே தவிர, ‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்கிறவர்கள் இல்லை. இதைத்தான் பெரியார் செய்தார். இந்தப் பேதத்தை எண்ணிப்பார்த்தால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அவர் வெற்றி பெற்றி ருக்கிறார்.

பெரியார் இல்லையானால், நமக்குக் கல்வி இல்லை

பெரியார் இல்லையானால், நமக்கு உத்தியோகம் இல்லை

பெரியார் இல்லையானால், நமக்கு மான வாழ்வு இல்லை.

எனவேதான், பெரியார் அவர்கள், தன்னுடைய கொள்கையை சொல்லும்பொழுது, ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சொன்னார்.

மனிதர்க்கு என்று சொல்லும்பொழுது, உலகளாவிய தத்துவம் அது. ஆகவே, அதையெல்லாம் எடுத்து சரியானபடி பிரச்சாரம் செய்யவேண்டும்.

இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன் னால், ஊடகங்கள், உங்களைப் போன்று புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய ஊடகங்கள் எல்லாம்கூட, இந்த உணர் வாளர்களாக இருக்கக்கூடிய காரணத்தினால், உண் மையைச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது - இது வரையில் தடுக்கப்பட்டு இருந்தது - மறுக்கப்பட்டு இருந்தது - மறைக்கப்பட்டு இருந்தது - இவை அத் தனையும் இன்றைக்கு சரியாக வந்திருக்கின்றன. ஆகவே, எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இது ஒரு தொடர் பயணம். இந்தப் பயணத்தில் சில கட்டம் முடிந்திருக்கிறது. இன்னும் அதிகமான கட்டம் வரவேண்டும்.

அதேபோல, பெண்ணிய சிந்தனை. பெண் ஏன் அடிமையானாள்? மக்களில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்கள் - பாலியல் நீதியை இன்றைக்கு மக்களிடையே சொன்னால், பெரியாருடைய கருத்துகள்தான் இன் றைக்கு உலகத்திலேயே தலை ஓங்கி நிற்கக்கூடிய ஒரு கருத்து.

பெர்ட்ரண்ட் ரசலை சொல்லுவார்கள். ஆனால், பெர்ட்ரண்ட் ரசலையும் தாண்டி பெரியார் சிந்தித்தார்.

உடம்பில் இரண்டு கைகள் இருக்கின்றன; இரண்டு கண்கள் இருக்கின்றன; இரண்டு கால்கள் இருக்கின்றன. ஒரு கை இயங்கி, ஒரு கண்ணுக்குப் பார்வை, ஒரு கால் மட்டுமே இயங்குகிறது என்று சொன்னால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர். சரி பகுதியாக இருக்கிற பெண்களை ஏன் நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று கேட்டது மட்டுமல்ல, பெரியாருடைய பெண் உரிமைச் சிந்தனை இருக்கிறதே, அது இதுவரையில் எவரும் எட்ட முடியாத எல்லைக்குப் பெரியார் சிந்தித்திருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

காரணம், பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. அந்த சமூக விஞ்ஞானத்தோடு பெரியார் ஒரு கேள்வி கேட்டார். ஆண்களைப் பார்த்து மிக அழகாக ஒன்றைச் சொன்னார்,

‘‘ஆண்களே, இது ஆணாதிக்க சமுதாயம் தெரியும் எனக்கு. ஆனால், பெண்ணுக்கு உரிமையா? என்று வரும்போது உங்களுக்குத் திகைப்பாக இருக்கும். எந்த ஆணாக இருந்தாலும், நல்ல வேலைக்காரி கிடைத் திருக்கிறாள் திருமணத்தின்மூலமாக என்ற அளவிற்கு நினைப்பதுண்டு. ஆனால், தயவு செய்து ஒன்றை சொல்கிறேன்.

பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கவேண்டும்; பெண்களை சமத்துவத்தோடு நடத்தவேண்டும் என்று சொல்கிறபொழுது, தயவு செய்து உங்கள் மனைவி மார்களை நினைத்துக்கொண்டு யோசிக்காதீர்கள்; உங்கள் மகளை நினைத்து யோசியுங்கள்; உங்கள் தாயை நினைத்துக்கொண்டு யோசியுங்கள். உங்கள் தங்கையை நினைத்துக்கொண்டு யோசியுங்கள். அப்போதுதான், அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

உங்கள் மனைவியை நினைத்துக்கொண்டு யோசித் தால், ஒரு நல்ல ‘அடிமை' கிடைத்திருக்கும்பொழுது, ‘எஜமான்' எப்படி விட்டுக் கொடுப்பான் என்ற உணர்வுதான் உங்களுக்கு இருக்கும் என்று சொன்னார் தந்தை பெரியார்.

இதுபோன்ற கருத்துகள் இன்றைக்குப் பரவலாகி வருகின்றன.  பெரியார் பாடுபட்டதினால்தான், பெண் களுக்கு வாக்குரிமை அந்தக் காலத்தில் தொடங்கிய திலிருந்து, சொத்துரிமை இந்தக் காலத்தில். இன்னுங் கேட்டால், அம்பேத்கர் அவர்களுடைய காலத்தில் கொண்டுவரப்பட முடியாத அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சனாதனம் - இன்றைக்குப் பின்வாங்கிக் கொண்டு, கலைஞர் காலத்தில் சட்டமாக்கப்பட்டு பெண்களுக்கு சொத்துரிமை வந்தது என்று இன்னும் பெண்களுக்குத் தெரியாது.

அதுமட்டுமல்ல, மற்ற மதங்களில் விதவைகள் உண்டு. ஆனால், இந்து மதம் என்ற சனாதன மதம் இருக்கிறதே, அந்த சனாதன மதத்தில் விதவைத் தன்மை உண்டு. விதவையைவிட, விதவைத் தன்மை என்பது மிகவும் கொடுமையானது.

அம்மா விதவை, மகனை வளர்த்து ஆளாக்கிய, அவனுடைய திருமணத்தில் முன்னிற்க முடியாது. சொந்தத் தாயான அவர், மறைந்து நின்றுதான் பார்க்கவேண்டும். இதுதான் இந்து மதம். அது கொடுமை என்று பெரியார் கேட்டார்.

இப்போதுதான் மறுமணம், விதவைத் திருமணம், கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெரியாருடைய வெற்றி என்னவென்றால், அந்தக் காலத்தில் அக்கிரகாரத்தில் உள்ள பெண்கள், இளம் பெண்களாக இருந்தாலும் கணவன் இறந்துவிட்டால், வெள்ளை சேலை உடுத்தி, மொட்டை பாப்பாத்தி என்று அழைப்பார்கள். இன்றைக்கு யாராவது, அப்படிப்பட்ட ஒருவரை அக்கிரகாரத்தில் காட்ட முடியுமா?

எனவே, அக்கிரகாரப் பெண்களும், பெரியாரால், பெரியார் தத்துவத்தால், பெரியார் கொள்கையால் பயன் அடைந்திருக்கிறார்கள். இதுபோன்ற கொள்கைகளை எடுத்துச் சொல்கின்றபொழுது, நிச்சயம் பெரியார் வெல்வார்.

பெரியார் மானுடத்தை நேசித்தவர். அவருக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது. மற்றவர்கள் குறுக்கே வரும்பொழுதுதான், அதை அகற்றக்கூடிய நிலைக்கு வருகிறபொழுது, அவர் கடவுளைப்பற்றி, மதத்தைப்பற்றி, மற்றவைகளைப்பற்றி பேசவேண்டிய அவசியத்திற்கு ஆளானார்.

உங்களுக்குத் தெரியும், நீங்கள் சிதம்பரத்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்தவர். அதனால், நந்தன் கதை தெரியும்.

நந்தன் அவதாரமாக வந்தவுடன்,

காணி ஓர் முழம்

கட்டு முக்கலம் கண்ட பிறகும்,

நடராஜப் பெருமானை தரிசிக்கப் போனாராம். அங்கே என்ன நடந்தது என்று சொன்னால், அவரை தீக்குள் போட்டார்களாம். தீக்குளித்து வந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்போதும்கூட நந்தனை உள்ளே வா என்று நடராசர் அழைக்கவில்லை; நந்தியே விலகி இரு என்றுதான் சொன்னார்! அவர் இருக்கிற இடத்திற்கு அழைக்கவில்லை; ஆனால், அந்த நந்தன்களை உள்ளே செல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதற்குக் காரணம் பெரியார்தானே!

ஆக, இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண் டும். பிரச்சாரம் தெளிவாக இருக்கவேண்டும்.

பிரச்சார ஊடகங்கள் எங்களுக்கு உரிய வாய்ப்பைக் கொடுப்பதில்லை. அதிகமான கூட்டங்கள், திராவிட இயக்கப் பிரச்சாரங்கள்தான் இன்றைக்கும் நடக்கின்றன. ஆனால், விளம்பரங்கள் கிடையாது. அரசியல் கட்சி களுக்குப் பரபரப்பு - பேட்டிகள், சவால்கள் இதற்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர,

மனிதனுடைய அடிப்படை உரிமைகள் காப் பாற்றப்பட வேண்டும்

சமத்துவம் காப்பாற்றப்பட வேண்டும்

எல்லோருக்கும் கல்வி என்பது பரவலாக்கப்பட வேண்டும்

அனைவருக்கும் அனைத்தும் தரவேண்டும் என்ற தத்துவங்களுக்கு வாய்ப்பு உண்டாக்கப்பட வேண்டும்.

இதை எடுத்துச் சொன்னாலே, நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.

தந்தை பெரியார்மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே!

இந்திரா தங்கசாமி: நன்றி அய்யா! நீண்ட விளக்கம். தேவையான விளக்கம். அது தொடர்புடைய ஒரு கேள்வி.

நீங்கள் பெரியாரோடு பயணித்தவர் தொடர்ந்து. பெரியாரைப்பற்றி ஒரு விமர்சனம், அது உங்களுக்கு தெரிந்திருக்கும்.     பெரியார் மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள தலித் போன்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே?

தமிழர் தலைவர்: அது அடிப்படை அற்ற விமர்சனம் என்பதற்கு ஒன்றை சொல்கிறேன்.

கலைஞர் தொலைக்காட்சியில் தலைமை செய்தி யாசிரியராக இருக்கக்கூடிய நண்பர் திருமாவேலன் அவர்கள், ‘‘ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா பெரியார்?'' என்று ஒரு அரிய புத்தகம் எழுதியிருக்கிறார். 300 பக்கங்கள் உள்ளது அந்த புத்தகம்.

இந்த இயக்கத்திற்குப் பெயரே என்னவென்றால், நான் ஜாதியை சொல்லக்கூடாது. கீழ்ஜாதிக்காரன் பெயரை சொல்லித்தான், திராவிட இயக்கத்தை சொல் வார்கள். நான் அந்த சொல்லைப் பயன்படுத்த விரும்ப வில்லை.

வலதுசாரி ‘மாயமான்'களைப்பற்றி சொன்னேன் அல்லவா, அந்த மாயமான்களில் இதுவும் ஒரு ‘மாயமான்.' ஆகவேதான், அதனை எச்சரிக்கையோடு பார்த்தாலே, அது தெளிவாகத் தெரிந்துவிடும்.

அவர்களுடைய ஏவுகணைகள்தான் இவைகள். அந்த ஏவுகணைகள் பயன்படாது.

திருமாவேலன் அவர்களுடைய புத்தகத்தில், ஆதார பூர்வமாக எழுதியிருக்கிறார். ‘குடிஅரசு' இதழ், ‘விடுதலை' இதழிலிருந்து ஆதாரங்களை எடுத்து எழுதி யிருக்கிறார்.

இன்னுங்கேட்டால், பெரியார் அவர்கள், காந்தியாரை விட்டு வெளியே வந்ததற்குக் காரணமே, தீண்டாமைப் பிரச்சினைதான்.

பொதுக் கிணறு, பொதுக் குளம் இவையெல்லாம் அரிஜன் நலநிதியிலிருந்து வரவேண்டும் என்று சொன்னவர் பெரியார். 1920 ஆம் ஆண்டு. காந்தி யாருக்கும், பெரியாருக்கும் அதில்தான் முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பெரியார் சொன்னார், தனிக் கிணறு, தனிக் குளம், தனி இடம் என்று சொன்னால், தீண்டாமை அப்படி யேதான் இருக்கும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு மாடி வீடு கட்டிக் கொடுத்து என்ன பயன்? பொதுக் கிணறில்தான் அவர்கள் தண்ணீர் எடுக்கவேண்டும் என்றார்.

காந்தியாரைப் பொறுத்தவரையில், பொதுவாக அமர்ந்து சாப்பிடுவதைக்கூட அவர் விரும்பவில்லை. அதனை எதிர்த்துப் பேசியிருக்கிறார். அதனை அம் பேத்கர் அவர்கள் கண்டித்திருக்கிறார்.

நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், பெரியார் அவர்கள் தன்னுடைய தலைவர் காந்தியா ரையே எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் யாருக்காக பாடுபட்டார் பெரியார்? ஆதிக்க ஜாதியினருக்கா? அல்லது மற்றவர் களுக்கா? இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும்!

ஆகவேதான், வேண்டுமென்றே, வரலாறு தெரியாத வர்கள், திசை திருப்பல்களுக்காக செய்கிறார்கள்.

நான் சொன்னதுபோன்று, அவர்கள் பலவகையான ‘‘ஏவுகணைகளை'' ஏவுகிறார்கள். அதிலே ஒன்றுதான், இப்படி பலரைப் பிடித்து இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள். அது அவர்களுக்குப் பயன்படாது.

நிச்சயமாக, மின்மினிகள் மின்சாரத்தை மாற்றிவிட முடியாது.

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித

இட ஒதுக்கீடுபற்றி...

இந்திரா தங்கசாமி: 69 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கிறது என்று சொன்னீர்கள். உயர்ஜாதியினருக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொடுத்திருக்கிறார்கள். அதனை உங்களுடைய இயக்கம் எதிர்க்கின்றது. ஆனால், அதனால் பாதிப் பில்லை; 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் நாங்கள் கை வைக்கமாட்டோம் என்று அரசு சொல்கிறது. அப்படி இருக்கும்பொழுது, அதில் தவறு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில்  கடந்த ஜூலை 8 ஆம் தேதி  சென்னை தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதே பிரச்சினையில் நான் தெளிவுபடுத்தினேன்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே அந்த 10 சதவிகிதம் உடைப்பதாகும். பல பேருக்கு இது தெரிய வில்லை. பாதிப்பில்லை, பாதிப்பில்லை என்று சொல் கிறார்கள். புளியேப்பக்காரனுக்கு இட ஒதுக்கீடு எதற்கு?

விமானத்தில் போகிறவர்கள் அடித்துப் பிடித்து இடம் பிடிப்பது கிடையாது. அதேநேரத்தில், தொடர்வண்டியில் அன்-ரிசர்வ்மெண்ட் கம்பார்ட்மெண்டில் இடத்தைப் பிடிப்பதற்காக முட்டித் தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

அவரவர்களுக்கு அவரவர்கள் இடம் என்றால், தள்ளிக்கொண்டு போகவேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் இடம் கொடுப்பதைப்பற்றி கவலையில்லை. அது வகுப்புவாரி உரிமை.

இருக்கின்ற இடம் குறைவு. பகிர்ந்து அளிக்கவேண் டும். யாருக்கு அளிக்கவேண்டும்? பசியேப்பக்காரனுக்கு அளிக்கவேண்டும். இட ஒதுக்கீட்டினுடைய தத்துவம் அதுதான்.

அப்படி வரும்பொழுது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்றுதான் இருக்கிறது. பொருளாதார அடிப்படை என்பது கிடையாது. அது அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமானதாகும்.

இப்பொழுதுகூட அது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் முடிவில் அது அடிபடக்கூடிய அளவில் இருக்கிறது.

உயர்ஜாதிக்காரர்களில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடாம். ஏழைகள் என்றால், எல்லா ஜாதிக்காரர்களிலும் இருக்கக்கூடிய ஏழைகள் அல்ல. உயர்ஜாதிக்காரர்களில் இருக்கக்கூடிய ஏழைகளாம். இதன் வித்தியாசத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்காது என்கிறார்களே, 69 சதவிகித இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு; அதிலே 20 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (எஸ்.சி. பிரிவினருக்கு) 18 சதவிகிதம், அதற்குப் பிறகு ஒரு சதவிகிதம் மலைவாழ் மக்களுக்கும், பழங்குடி மக்களுக்குமாக இருந்தது.

100 இடங்களில், 69 இடங்கள் போனால், மீதி 31 இடங்கள். அந்த இடங்களுக்குத் திறந்த போட்டி - பொதுப் போட்டி என்று சொல்வார்கள். அதில், ஒடுக்கப் பட்ட சமுதாயமோ, முன்னேறிய ஜாதியினரோ - திறமை அடிப்படையில் அனைவரும் போட்டியிடக் கூடிய இடம்.

அதிலிருந்துதான் 10 சதவிகிதத்தை உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், இவர்களுக்கு வருகின்ற வாய்ப்பைத் தடுத்துத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் திறமையோடு போட்டி போடுகின்ற  இடங்கள் குறைந்துவிடுகிறது. முன்னேறிய ஜாதிக்காரர்கள் உத்தியோகத்தில் அதிகமாக இருக் கிறார்கள்; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பதவிகளில் அதிகமாக இருக்கிறார்கள். இதுகுறித்த புள்ளிவிவரங் களை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

ஆகவேதான், இது முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான முதல் கட்டம்.

எனவேதான், அதனைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. வழக்குகளும் தொடுக் கப்பட்டு இருக்கின்றன.

தென்னாட்டில் இரண்டே ஜாதியினர்தான். பார்ப் பனர் -  பார்ப்பனரல்லாதார். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்தான் சட்டப்பூர்வமாக, அரசியல் சட்ட ரீதியாகவும், உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படியும்.

வடநாட்டில் அப்படியில்லை.  இடைப்பட்ட சத்திரியர், வைசியர் என்றெல்லாம் இருக்கிறது. அதிலே முன்னேறிய ஜாதியினர், மற்றவர்கள். அவர்கள் வாக்கு வங்கிக்குப் பயன்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு.

ராஜஸ்தானில் அவர்கள் தோற்றவுடன், மத்தியப் பிரதேசத்தில் தோற்றவுடன், பெரிய மாநிலங்களில் தோற் றவுடன், அதனை சரிப்படுத்துவது எப்படி என்பதற் காகத்தான், அவசர அவசரமாக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இதனைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவேதான், இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக் கிறது.

எனவே, இது அரசியல் சட்டத்திற்கும் விரோதம்; சமூகநீதிக்கும் விரோதம்.

ஏனென்றால், பசியேப்பக்காரனைத்தான் பந்தியில் முன்னாலே அமர வைக்கவேண்டுமே தவிர, புளியேப் பக்காரர்கள் உட்காரக்கூடாது.

இட ஒதுக்கீடு என்பது பசியேப்பக்காரனுக்கே தவிர, புளியேப்பக்காரனுக்காக அல்ல. இந்த 10 சதவிகிதம் புளியேப்பக்காரனுக்காகத்தான். அவனை உள்ளே கொண்டு வருவதற்கே -  இட ஒதுக்கீட்டை அழிப்பதற் காகத்தானே தவிர, வேறொன்றுமில்லை.

(தொடரும்)

-விடுதலை நாளேடு 11 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக