திங்கள், 18 நவம்பர், 2019

பெரியார் அறிவுசார் பயங்கரவாதி என்ற ராம் தேவுக்கு வட மாநிலங்களில் கடும் கண்டனம்

வடக்கேயும் பயணித்துவிட்டார் தந்தை பெரியார்

'ராம்தேவைக் கைது செய்!' என்ற முழக்கம் வெடித்துக் கிளம்பியது

புதுடில்லி, நவ. 18- தந்தை பெரியார் அறிவுசார் பயங்கரவாதி என்று சொன்ன சாமியார் ராம் தேவைக் கைது செய்யச் சொல்லி வடநாட்டில் எதிர்ப்பு முழக்கங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளது.

ராமன் கோவில் விவகாரம் தொடர் பாக நடந்த விவாதத்தின் போது யோகா சாமியார் ராம்தேவ் பெரியாரை அறிவுசார் பயங்கரவாதி, அவருடைய சிந்தனைகளால் தூண்டப்பட்டவர்கள் தங்களை மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக் கொண்டு பயங்கரவாத செயல் களில் ஈடுபட அச்சப்படுவதில்லை என்று கூறினார். மேலும் பெரியார் தனது கருத்துக்களால் அறிவுசார் பயங்கர வாதிகளைத்தான் உருவாக்கினார் என் றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அறிவுசார் பயங்கரவாதிகள் என்றும் பேசினார்.

யார் இந்த ராம்தேவ்?

யார் இந்த ராம்தேவ்? நிறுவனம் துவங்கிய சில ஆண்டுகளிலேயே 40 ஆண்டு பெரு நிறு வனங்களுக்கு நிகரான வருவாயை ஈட்டியவர். இதற்கு முறையான கணக்கு கிடையாது அரியானா பாஜக அரசு இவருக்கு ரூ.700 கோடியை அப்படியே தூக்கிக் கொடுத்தது. 60 ஏக்கர் நிலத்தை வாரிவழங்கியது, அதில் அவர் யோகா பல்கலைக்கழகம் கட்டவேண்டுமாம். அதற்கு அரியானா அரசு அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என்று கூறியது, பிறகு இந்த 700 கோடி ரூபாய் எதற்கு தந்தார்கள், அது மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் யோகா கற்றுத்தருவதற்கு கொடுத்த முன்பணத்தொகை என்று கூறப்பட்டது, சாமியார் ராம்தேவ்-நிறுவனம் வெளிப்படையாக வரிமோசடி செய்தபோதும் பலகோடி ரூபாய்களுக்கு கணக்கு காட்டாமல் இருந்த போதும் அவர் பக்கம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எதுவுமே பாயவில்லை.

பதஞ்சலி என்ற பெயரால் பெரும் கொள்ளை

2013 ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு என்ற போர்வை யில் வெறும் ரூ.42 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட சாமியார் ராம் தேவின் பதஞ்சலி இன்று ரூ.10,000 கோடி சொத்துமதிப்புகளைக் கொண்டுள்ளது, இவரது ஒவ்வொரு புதிய நிறுவனத்திற்கும் அனைத்து மத்திய அமைச்சர்களும் செல்கின்றனர். மோடி யும் அவ்வப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தன்னை மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்று கூறி தன்னுடைய வணிகத்தை மேம்படுத்தினார்.  யாதவ் வகுப்பைச் சேர்ந்த வர் என்று சொல்லிக் கொண்டு முலாயம் சிங் மற்றும் லல்லு பிரசாத் போன்றவர்களிடம் நெருக்கம் காட்டி தன்னுடைய வணிகத்தை தொடர்ந்துவந்தார். தற்போது அரசியலில் இந்துத்துவ சக்திகள் பலம் பெற்றதால் இந்துத்துவ சக்திகளுக்கு சாதகமாக அவர் களின் ஓசைக்கு இவரும் சுதி ஏற்றுகிறார், தனது வணி கத்திற்காக இவர் எந்த ஒரு செயலையும் செய்ய தயங் காத பேர்வழி!

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்று கேள்வி கேட்டார். எனது நிறுவனத்தில் பிறப்டுத்தப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர் கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே திறமையானவர்கள்; ஆகவே திறமை இருந்தால் யாரும் எந்த வேலையும் பார்க்க முடியும் , இட ஒதுக்கீடு என்பது திறமையில்லாதவர்களைப் பதவியில் அமர்த்த வைக்கும் ஒன்றாகும் என்று பேசினார்.

காவல்துறையின் போக்கு

அரியானாவில் தாழ்த்தப்பட்ட ஒருவரின் வீட்டைத் தாக்கிய நபர்கள் அந்த வீட்டுக்குத் தீவைத்தனர். அந்த தீயில் இரண்டு குழந்தைகள் எரிந்து சாம்பலாயின. 2017-ஆம் ஆண்டு நடந்த இக்கொடூர நிகழ்வு குறித்து நேரில் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது, ராம்தேவ் ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் முதலிரவு கொண்டாட செல்கிறார் என்று கொச்சைப் படுத்தி பேசிய பேர்வழி இவர்.  இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் அதைப் பதிவு செய்யாமல் சமூகத்தில் முக்கிய நபரின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர் என்று கூறி தனிநபர் உரிமையில் தலையிடுவது என்ற சட்டப்பிரிவில் புகார் அளித்தவர்கள் மீதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பெரியார் அறிவுசார் பயங்கரவாதியாம்

யோகா கூட்டம் ஒன்றில் பேசிய ராம்தேவ் திடீரென்று பெரியார் குறித்து பேச ஆரம்பித்து விட்டார், அவர் இந்தியில் பேசியதாவது., இப்போது சிலர் கிளம்பி இருக்கிறார்கள்,  நாங்கள் திராவிடர்கள் - ஆரியர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள். இந்த நச்சுக்கருத்தை திணித்தவர் யார்? "ராமசாமி நாயக்கர் ஒரு நாத்திகர்" - அவர் கூறுகிறார் கடவுளைக் கும்பிடுகிறவர்கள் காட்டுமிராண்டிகள்  கடவுளைப் பரப்பியவன் முட்டாள், மதங்களை விஷம் என்று கூறுகிறார், அதை ஊரெல்லாம் கூறினார், அதை இன்றும் சிலர் மக்களிடையே பரப்பி வருகின்றனர் என்றார்.

அதன் பிறகு ராமர் கோவில் தொடர்பான விவாதம் ஒன்றில் பேசிய அவர் மூல்நிவாசி (திராவிட அமைப்பினர்) பாம் சேப் அமைப்பினர் - இவர்கள் மக்களைப் பிரிக்க திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்களுக்கு நான் அறிவுசார் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டியுள்ளேன். இது ராமனின் பூமி; இங்கு இவர்களின் கருத்துகள் இனி எடுபடாது என்று கூறினார்.  இது போன்ற (திராவிடர், மூல்நிவாசி, கடவுள் மறுப்பு) கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அரசு ஒரு சட்டத்தை இயற்றவேண்டும். இவர்களின் கருத்துக் களை சமூக வலைதளத்தில் பரப்புவதை தடைசெய்ய வேண்டும்  இவர்களது கருத்துக்கள் எந்த எந்த தளத்தில் உள்ளதோ அனைத்தையும் அகற்றிவிடவேண்டும், அம்பேத்கர் மற்றும் மகாத்மா புலேவின் கருத்துக்களை பரப்புபவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று கூறினார்.

இவரது இந்தப்பேச்சை அடுத்து வட இந்தியாவில் இவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

ராம் தேவைக் கைது செய்!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய ராம்தேவ்வை கைதுசெய்ய வேண்டும் என  வட இந்தியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன.

"பாபா ராம்தேவ்வை கைது செய்!", பதஞ்சலி நிறுவனத் தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பீர் என ட்விட்டரில் நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. #ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் "பெரியாரை பின்பற்றுபவர்கள் வளர்ந்துவருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள்" என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப் பெரிய பிசாசு என்கிறார், என்றெல்லாம் ராம்தேவ் பேசியு ள்ளார்.

லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சிறந்த மனிதர்களாக இருக்க முடியாது. அம்பேத்கரை பின்பற்றுவ தாக கூறும் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நான் அவர்களுக்காக ஒரு சொல்லை உருவாக்கியுள்ளேன், அதுதான் அறிவுசார் பயங்கரவாதம். கருத்தியல் பயங்கர வாதத்துக்கு எதிராக சட்டங்களை உருவாக்க வேண்டும் எனச் சில நாள்களுக்கு முன்பு பேசினார். இதில் பெரியார் மற்றும் அவரின் சித்தாந்தம் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்தக் கருத்துதான் பாபா ராம்தேவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. பாபா ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்ற னர். பாபா ராம்தேவ் பேசிய வீடியோவைப் பகிர்ந்து வரு கின்றனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர், வித்யா பூஷண் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அம்பேத்கர் மற்றும் பெரியாரை சரியாகப் படித்திருந்தால் பாபா ராம்தேவ் பயனடைவார்.

ராம்தேவ் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் சமூக நீதி மற்றும் சுய மரியாதையை நம்பும் மக்கள் அவரது தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 18 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக