வெள்ளி, 22 நவம்பர், 2019

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

இரத்தம் கொதிக்கவில்லையா?

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?

நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். நாடாளுமன்றத்தில் உள்ள பிற்படுத் தப்பட்ட உறுப்பினர்களே, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இரத்தம் கொதிக்கவில்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற் கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம்!

அதில் மொத்தமுள்ள 30,774 இடங் களில் 50 சதவிகிதம் அதாவது 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், மத்திய அரசோ அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர் வதால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்காமல் போகும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் ‘பம்பர்' பரிசா?

ஆனால், இதே ஆணையில் 10 சதவிகிதம் உயர்ஜாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களி லும்  இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர் ஜாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப் பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும்  300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கைவாசிகளான பிற்படுத்தப்பட் டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மாநில அரசு என்ன செய்துகொண்டுள் ளது? பா.ஜ.க.வுக்கு பஜனை பாடவே நேரம் போதவில்லையா? கண்டிக்கத் தக்கது.

உயர்ஜாதியினருக்கு மட்டும்

சட்ட விரோதமாக பம்பர் பரிசா?

இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப் பட்டோரே! (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஜனநாயகப்படி பெரும் பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படும் கொடூரம்!

தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே;  அதிலும் இந்தியாவிலேயே முன் னணி மாநிலமாக உள்ளது. இருந்த போதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாததால் (இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது). சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற் படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங் களை இழக்கிறார்கள்.

உயர்ஜாதியில் ஏழைகள்மீது கரிசனம் பாரீர்!

அதேநேரத்தில், சட்ட விரோதமான - உச்சநீதிமன்றத்தாலேயே நிராகரிக் கப்பட்ட பொருளாதார அளவுகோலை உயர்ஜாதியில் ஏழை என்பவர்கள்பால் செலுத்தி (10 விழுக்காடு) இடங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

வங்கித் தேர்வில்

நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாக கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிளார்க் பணிகளுக்காக நடத் தப்பட்ட தேர்வில் எப்படி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது?

பொதுப் பிரிவினருக்கு 61.25%

இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 61.25 %

மலைவாழ் மக்களுக்கு 53.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா? 25.5%

நியாயப்படி கல்விக் கூடங்களில் 25.5% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி கிடையாது. ஆனால்,  பி.ஜே.பி. என்னும் மனுதர்ம ஆட்சியிலே 61.25% மதிப்பெண் பெற்றால்தான் தாழ்த்தப் பட்டோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு  தேர்ச்சி. ஆனால், உயர்ஜாதியின ருக்கோ கட் ஆஃப் மார்க் வெறும் 25.5 சதவிகிதம்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானே!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்யவேண்டும்?

இரத்தம் கொதிக்கவில்லையா? நாடா ளுமன்றத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.

மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் இது குறித்து நேற்று குரல் எழுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மனுதர்ம சமூக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். இதைத் தி.மு.க. உறுப்பினர் களும் முன்னெடுக்கவேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோள்!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. ஆனால், மனுநீதி பி.ஜே.பி. ஆட்சியிலோ குறைந்த எண் ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக் குத்தான் எல்லாமும் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் என்ன செய்யவேண்டும்? குட்ட குட்ட குனிந்து கொண்டு இருக்கப் போகிறோமா?

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எரி மலையாகக் கிளர்ந்து எழுவது எந்நாள்? தந்தை பெரியார் பிறந்த மண்தான் குரல் கொடுக்கவேண்டும் - கொடுப்போம் - நிமிர்ந்திடுவீர், எழுந்திடுவீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.11.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக