கலி.பூங்குன்றன்
அபாண்டம் - அழிபழி சுமத்துவது - அவாளின் பிறவிப் புத்தி
திருவள்ளுவர் மீது திரிநூல்காரர்களுக்கு அவ்வளவுப் பெரிய பற்றா? குறளின் கருத்தின் மீது கொள்ளை ஆசையா?
அப்படியெல்லாம் இருந்ததற்கான எந்தச் சுவடும் கிடையாது - கிடையவே கிடையாது.
தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், திராவிட இயக்கம் பூத்த சித்தாந்த மண்ணில் நரிகள் நாட்டாண்மை செய்ய முடியாது என்பது தெரிந்த செய்தியே - அவாளுக்கு நம்மைவிட "நன்னாவே" தெரியும்.
ஊடுருவி அழிப்பது - திரிபுவாதம் செய்வதெல்லாம் இந்தத் திரி நூலார்க் கூட்டத்திற்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால்தான் கைவரிசையைக் காட்ட முனைந்து "கைகால் உடைந்து" கிடக்கின்றனர்.
"பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் கிடையாது" என்பார் அண்ணல் அம்பேத்கர் (Learned Not Intelligent).
திருவள்ளுவர் விடயத்திலும் இப்பொழுது அதுதான் நடந்தது - நடந்தே விட்டது. திருக்குறள் எங்களுக்கு உடன்பாடுதான் என்று உரிமை கொண்டாடியிருக்கலாம்.
அதைவிட்டுவிட்டு திருவள்ளுவர் யார் தெரியுமா? எங்களவாள் - இந்து மதத்தைச் சேர்ந்தவாள் என்று காட்ட வேண்டும் எனத் திட்டமிட்டு, திருவள்ளுவர்க்குக் காவி ஆடை போர்த்தி நெற்றியிலே பட்டையையும், கழுத்திலே உருத்திராட்ச கொட்டையையும் அணிவிக்கப்போய் - அது எதிர் வினையை - விளைவை ஏற்படுத்தி, சங்பரிவார் பிஜேபி கூட்டத்தை சும்மா பதறப் பதறப் பந்தாடித் தீர்த்து வருகிறது தமிழகம்.
வாயை வைத்துக்கொண்டு சும்மாதான் இருக்க முடிந்ததா? அதுதான் இல்லை; ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த வார 'துக்ளக்'கில் கூட திருவாளர் குருமூர்த்தி குடுமி என்ன எழுதுகிறது தெரியுமா?
'திருக்குறளை மலம்' என்று தந்தை பெரியார் கூறியுள்ளாராம் ('துக்ளக்', 13.11.2019, பக். 19)
இதே கருத்தைப் பார்ப்பனர் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, தொலைக்காட்சிகளில் அபாண்டமாக இதே பொய்யைப் போக்கிரித்தனமாக உதிர்த்தனர்.
இந்த இடத்திலே சவால் விட்டே கேட்கிறோம் - தந்தை பெரியார் எப்பொழுது எந்த இடத்தில் இதனைக் கூறினார் என்பதை ஆதாரப்பூர்வமாகக் கூறட்டும் பார்க்கலாம். ஒரு சவால் அல்ல. பல சவால்களாகவே விடுகிறோம்!
அறிவு நாணயம் என்ற ஒன்று கடுகு மூக்கு அளவுக்கு இருக்குமானால் ஆதாரத்தோடு அடுத்த இதழில் எழுத முன் வரட்டும் இந்தக் குருமூர்த்தி வகையறாக்கள்!
விவஸ்தை கெட்டதுகளுக்கு ஏடு ஒரு கேடா!
எதையும் ஆதாரத்துடன் கூறும் அறிவு நாணயமின்றி அள்ளி விட்டு அள்ளி முடியும் அற்பத்தனம் அவர்களின் டி.என்.ஏயிலேயே அமைந்துவிட்டது போலும்!
முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் பெரியாரே! (1949இல்)
மலிவு விலையில் அச்சிட்டு மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவரும் அவரே! “குடிஅரசு" தலையங்கத்தின் மேற்பகுதியில் முதன்முதலில் குறளைக் கையாண்ட தலைவரும் அவரே!!
ஆனால் இவர்களின் நிலை என்ன? "தீக்குறளை சென் றோதோம்" என்ற ஆண்டாளின் பாடல் வரிக்குத் "தீய திருக் குறளை ஓதமாட்டோம்" என்று பொருள் கூறியவராயிற்றே - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. குறளை என்றால் குள்ளம், கோட்சொல் குற்றம் என்று பொருள் (மதுரைத் தமிழ்ப் பேரகராதியில்)
தொலக்காட்சியில் வாதம் புரிய வந்த ஒரு அம்பி, "அப்படி சங்கராச்சாரியார் சொன்னது உண்மைதான் - பிறகு மாற்றிக் கொண்டு விட்டார் தன் கருத்தை" என்று கூறுகிறார்.
அவருக்கு ஒரு சாவல்! சங்கராச்சாரியார் எப்பொழுது மாற்றிக் கொண்டார்? மாற்றிக் கொண்டு அவர் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் குறித்தும் சொன்னது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
செத்துப்போன மூத்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டுமல்ல; அவரைத் தொடர்ந்து வந்த (தண்டத்தைவிட்டு இரவோடு இரவாக ஓடிய காம.... கோடி) ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?
"திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு பொருட்பால், காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி கூறியதற்கு ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் 2.4.1982 அன்று நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதே!.
அதையும் தாண்டி "திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்" (தினத்தந்தி, 16.4.2004) என்று சொன்னவரும் இதே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதிதான்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சொன்ன திருவள்ளுவர் எங்கே? "நான்கு வருணங்களையும் நானே படைத்தேன், அப்படி என்னால் படைக்கப்பட்டு இருந்தாலும் நானே நினைத்தால்கூட அதனை மாற்றியமைக்கவே முடியாது" என்று 'பகவான்' கிருஷ்ணன் சொன்னான் என்பது தானே கீதையின் வாசகம். (கீதை அத்தியாம் 4, சுலோகம் 13).
"சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்" என்று தொடங்கும் கீதையின் வரிகளைத் தொடர்ந்து சொல்லப்பட்ட குண-கர்ம விபாசக என்பதில் ஏதோ தத்துவார்த்தம் இருப்பது போல பேசினார் - தொலைக்காட்சியில் பிஜேபி பிரமுகர்; என்ன தத்துவார்த்தம் என்பதை அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
அவர்களின் லோகக் குருவான சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்த "குணகர்ம விபாசக" என்பதற்கு என்ன பாஷ்யம் சொல்கிறார்?
"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்ல வில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாசக என்றே சொல்கிறார் என்கிறார்கள்.
சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவத £கவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?
அப்படியானால் அவர் தியரியில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், ப்ராக்டிஸில் (நடைமுறை யில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல."
('தெய்வத்தின் குரல்' முதல் பாகம், பக். 989,992)
பிஜேபியின் பேச்சாளர் தோழர் சீனிவாசன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பகவான் கிருஷ்ணனைக் காப்பாற்றப் போகிறாரா? அல்லது அவர்கள் லோகக் குருவைக் காப்பாற்றப் போகிறாரா?
எப்படி எப்படியோவெல்லாம் கர்ணம் அடித்து குட்டிகரணம் போட்டாலும் இன்னொரு இடத்திலே வசமாக சிக்கிக் கொள்ள வேண்டும்.
"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாம் 9, சுலோம் 321) என்று கீதை சொல்லுகிறதே - இதற்குப் பதில் என்ன?
பிறக்கும்போதே இந்த நிலை என்று ஆகிவிட்ட பிறகு குணம் எங்கிருந்து வந்தது? "கர்ம விபாசக" எங்கேயிருந்து குதித்தது?
மனுதர்மம் பற்றி பிரச்சினை எழுந்தபோது - அதனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலை ஏற்பட்டபோது அதே தோழர் சீனிவாசன் அவர்கள் மனுதர்மத்தைக் கை விட்டாரே பார்க்கலாம். நாங்கள் மனுதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காலத்தால் ஒழிக்கப்பட வேண்டியது என்ற பொருளில் பேசினார்.
அது உண்மையானால் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரைக் கை கழுவ வேண்டியிருக்கும்.
குறளின் அறத்துப்பாலில் கூறப்படும் அறம் பற்றி என்ன கூறுகிறார் பரிமேலழகர்!
"அதாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்... அஃது ஒழுக்கம், வழக்கம், தண்டம் என மூவகைப்படும்" என்று எழுதியுள்ளாரே.
மனுதர்ம சாஸ்த்திரத்தில் எவையெல்லாம் கூறப்பட்டு உள்ளனவோ அவற்றை ஏற்றும், எவை எல்லாம் தவிர்க்கப் பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் தவிர்த்தும் திருவள்ளு வர் எழுதியுள்ளதாக பரிமேலழகர் எழுதியுள்ளாரே!
இந்த இடத்தில் பிஜேபி பேச்சாளர் தோழர் சீனிவாசன் யாரைக் கைவிடப் போகிறார்? மனுவையா? பரிமேலழ கரையா? மனுவின் அடிப்படையில் கருத்துக் கூறப்பட்ட திருவள்ளுவரையா?
மனுவைக் காப்பாற்ற முடியாத கிடுக்கிப் பிடியில் பிஜேபி பேச்சாளர் அந்த இடத்தில் வேறு வழியில்லாமல் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அதனை ஏற்றுக் கொள் ளாது; காரணம் மனுதர்மம் தான் இந்தியாவில் சட்டமாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை யாகும். மனுவை ஏற்கவில்லை என்று கூறும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது?
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திலேயே மனுதர்மத்தை அலங்கரித்து எடுத்துச் செல்லப்படும் நிலையில் மனுதர் மத்தை அவர்களால் எப்படி தூக்கி எறியப்பட முடியும்? காதைப் பிடித்துத் திருகிவிடாதா ஆர்.எஸ்.எஸ்.?
1981 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மனுதர்ம சாத்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே! (Economic and Political Weekly, 6.3.1982)
திருவள்ளுவர் மீது காவியைப் போர்த்தும் காலித்தனம் ஒரு பக்கம் இருக்கட்டும். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்துவது, இவர்களிடமிருந்து மாறுபட்ட கொள்கை உள்ளவர்களை அவர்களின் மறைவிற்குப் பிறகு சிறுமைப்படுத்துவது அல்லது தன்வசப்படுத்துவது என்பதும் பார்ப்பனர்களின் பிறவிப் புத்தியாகும்.
மறைந்த பகுத்தறிவாளர் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான “விஜயபாரதம்" என்ன எழுதியது தெரியுமா?
"விபூதி பூசிக் கொண்ட அண்ணாதுரை" என்ற தலைப்பில் "விஜயபாரதம்" என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழில் (6.12.2017 பக். 26,27) ஒரு செய்தி வெளிவந்தது.
"அண்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு அடையாறு மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அவருடன் மருத்துவமனையில் இருந்த காவல்துறை அதிகாரி வே.ராமநாதன் தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்" என்று எழுதியது 'விஜயபாரதம்' எனும் ஆர்.எஸ்.எஸ். இதழ்.
"அண்ணாவைக் காண்பதற்காக சுத்தானந்த பாரதியார் அங்கு வந்தாராம். இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்தாராம் சுத்தானந்த பாரதியார்... கொஞ்சம் தயங்கினாராம். அண்ணாதுரை கடவுள் மறுப்பு கொள்கை உடையவராயிற்றே, விபூதி பூசிக் கொள்ள மாட்டாரே என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அண்ணா தன் தலையைத் தூக்கி நெற்றியைக் காண்பித்தாராம். தயக்கமின்றி சுத்தானந்த பாரதியார் கரம் விபூதியைப் பூசிற்று."
இதுகுறித்து அப்பொழுதே "அண்ணா மீது அவதூறா?" என்று 'விடுதலை' (21.1.2017) கண்டனக் கணைகூட வீசியதே.
அப்படி நடந்திருந்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை. அண்ணாவின் பெருந்தன்மையைத்தான் அது காட்டும். கடவுள் வாழ்த்துப் பாடப்படும்பொழுது தந்தை பெரியார் எழுந்து நின்றதுண்டே! - அண்ணாவின் பெருந்தன்மையைக் கொச்சைப்படுத்துவது அவர்களின் கொச்சைப் புத்தியைத் தான் காட்டும்.
சங்கராச்சாரியாரின் விஷமம்!
இதோடு விடவில்லை, ஏதாவது விஷமம், அபாண்டத்தில் ஈடுபடவில்லை என்றால் இவாளுக்குத் தூக்கமே வராது - 24 மணி நேரமும் அது பற்றி சிந்தனை தான் - செயல்பாடுதான்!
இதோ இன்னொன்று: "அண்ணா இறந்தபோது பெரிய வருக்குத் தகவல் வந்தது. உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவில் மண் கொடுத்து சென்னைக்கு அனுப்பினார்கள். இந்த ஊர் மண்ணை அவரது சமாதிக்குள் வைக்கச் சொன்னார்கள். இன்றைக்கும் அண்ணா சமாதியில் இருக்கிறது காஞ்சிபுரத்து மண். இறந்தாலும் அண்ணா இந்த ஊர் மண்ணுடன் தான் இறந்திருக்கிறார்". ('குமுதம்', 28.12.2000, பக். 48).
அண்ணாமீது எவ்வளவு ஆத்திரம் இருந்தால், அவர் இறந்த பிறகும்கூட அவர்மீது அபாண்டம் சுமத்துவார்கள். "முதலில்லா வியாபாரம் - சோக மில்லா வாழ்வு" என்று சங்கராச்சாரியாரை அர்ச்சித்தவர் அண்ணாவாயிற்றே.
('திராவிடநாடு', 19.4.1942, "சங்கராச்சாரி பதவி தற்கொலை" என்னும் கட்டுரையில்).
அந்தக் கோபம்தான் அண்ணா இறந்த பிறகும் அவர்மீது அசிங்கத்தைத் தூக்கி எறிந்ததற்குக் காரணம்!
அந்த அபாண்டத்தைப் படித்ததும் திராவிடர் கழகம் வாளா இருக்க வில்லை. அதை வைத்துக்கொண்டு, 'பார்த்தாயா, அண்ணாதுரையே இப்படி' என்று எழுதுகோல் பிடிக்க அவாள் வட்டாரத்தில் ஆட்களுக்காப் பஞ்சம் - வருங்கால ஆய்வாளர்கள் இதனை சிக்கெனப் பிடித்துக் கொள்வார்களே! இதுகுறித்து அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு உடனடியாக அண்ணாவின் அருமை மகன் டாக்டர் பரிமளம் மறுப்பு எழுதினார்.
டாக்டர் அண்ணா பரிமளம் மறுப்பு - கண்டனம்!
அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ. பரிமளம் 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:
அன்புள்ள ஆசிரியர் அவர்கட்கு, வணக்கம்.
காஞ்சி சங்கராச்சாரியார் என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றி கூறிய சில கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மடலை எழுதுகிறேன்.
என் தந்தை பேரறிஞர் அண்ணாஅவர்கள் மறைந்தபோது அவரை அடக்கம் செய்த இடத்தில் காஞ்சி சங்கராச் சாரியார் காஞ்சி கோவிலில் இருந்து எடுத்த மண்ணை அனுப்பி அதை சந்தனப் பெட்டியில் வைத்ததாக துளிகூட உண்மையில்லாத ஒரு செய்தியை 'குமுதம்' இதழ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அண்ணா அவர்களின் மூத்த மகன் என்கிற முறையில் இதை நான் மறுக் கிறேன்; வன்மையாகக் கண்டிக்கிறேன். என் தந்தை அவர்கள் மறைந்து முப்பத் தோரு ஆண்டு களுக்குப் பிறகு இப்படி ஒரு செய்தியை வெளியிடுவது என்பது ஒழுக்கமற்ற, நாணயமற்ற ஒரு செயல்.
முன்னர் ஒருமுறை என் அன்னை இராணி அம்மையார் இவரைச் சந்தித் தாக ஓர் பொய்யான செய்தியை வெளி யிட்டார்; அதையும் மறுத்தேன். என் அன்னை மறைகிறவரை எந்தக் கோவிலுக்கும் செல்லாதவர். இப்படி அடிக்கடி உண்மை கலப்பற்ற பொய் செய்தியை இவர் சொல்லுகிறபோது எனக்கு என் தந்தை அண்ணா அவர்கள் 'ஆரியம் விதைக்காது விளையும் கழனி' என்று சொன்ன, சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. இப்படி அடிக்கடி நச்சு விதைகளை அவர் விதைப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளட்டும் எனக் கூறி, அவர் கூறியது உண்மையல்ல, அது மட்டு மின்றி இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை தமிழ்ச் சமுதாயத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள்
பரிமளம்
அபாண்டம் பேசுவது ஆரியத்தின் பிறவிக்குணம். அது திருந்துவதாக இல்லை போலும்!
கோவை - சதுமுகை என்னும் ஊரில் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு, கருஞ்சட்டையினர் மீது பழி போட் டது இந்து முன்னணி. காவல்துறை 'சரியாகக் கவனித்ததும்' அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் என்பது அம்பலமாகிவிட்டது. மோசடி, பித்தலாட்டம், பழிதூற்றம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவம் தான் இந்துத்துவாவா? வெட்கக்கேடு.
"தி.க. தலைவர் வீரமணியின் குடும்பத்தினர் என்னை சந்தித்ததுண்டு" என்று இதே சங்கராச்சாரியார் அளித்த பேட்டியைத் தொடர்ந்து கழகத் தலைவர் வழக்குத் தொடுத்தார்.
சமாதானத்துக்கு ஆள் எல்லாம் அனுப்பிப் பார்த்தார், மசியவில்லை - அதற்குள் மரணம் அடைந்ததால் தப்பினார்.
முற்றும் துறந்த முனிவர்கள், மும்மலத்தையும் அறுத்த முனிபுங்கவர்களாயிற்றே! அவர்கள் எல்லாம் கூடவா இப்படிக் கீழ் நிலையில் இறங்குகிறார்கள் என்ற எண்ணம் வரலாம்.
முற்றும் துறந்தவர்களாவது - முனிபுங்கர்களாவது அவர்களுக்கு இருக்கும் பார்ப்பன இனப்பற்றுக்கு ஈடு இணை ஏது?
- விடுதலை நாளேடு 6 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக