திங்கள், 18 நவம்பர், 2019

மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கெல்லாம் பாராட்டு! பாராட்டு!! விருதுநகர்ப் பிரகடனத்தை நிறைவேற்றுவோம்!

* சுயமரியாதை இயக்க வீரர்கள் கோட்டம் விருதுநகர்

* விருதுநகர் மண்ணிலே வரலாறு படைத்த ப.க. பொன்விழா மாநாடு

நாடு தழுவிய போராட்ட விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்க!

விருதுநகரில் கடந்த சனியன்று (16.11.2019) நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அருமைத் தோழர்களுக்கெல்லாம் பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து - விருதுநகரில் வெளியிட்ட பிரகடனத்தையும் நிறைவேற்றி முடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விருதுநகர் - கடந்த காலத்தில் திராவிடர் இயக்கமான ‘நீதிக்கட்சி' என்ற ஜஸ்டீஸ் கட்சி (எஸ்.அய்.எல்.எஃப். - தென்னிந்தியர்  நல உரிமைச் சங்கம்) பூத்துக்குலுங்கிய மண் - அதனோடு அரசியல் களத்தில் எதிர்புறத்தில் நின்று போராடிய காமராசரை, தந்தை பெரியார் ‘பச்சைத் தமிழர்' என்று அழைத்து - ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடிக்கும் வீரராக  அவரை ஆக்கி, ஆட்சியில் அமர்த்த துணிவை முன்வைத்து, செயல்  ஊக்கியாக இருந்தவர் தந்தை பெரியார் என்பது  இளைய தலை முறை இன்று கற்கவேண்டிய வரலாற்றுப் பாடம்; அந்த காமராசரின் பிறந்த பூமியில் தான் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இம்மாநாடு!

விருதுநகர் - சுயமரியாதை இயக்க சீலர்களின் கோட்டம்!

அக்காலத்திலேயே சுயமரியாதை இயக் கத்தின் முதல் தலைவராக தந்தை பெரியார் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பட்டி வீரன் பட்டி டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டி யனாருக்கு அடுத்தபடி முக்கியத்துவம் பெற்று, இறுதிவரை நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகவும் திகழ்ந்தவர் விருதுநகர் வே.வே.இராமசாமி (நாடார்) அவர்கள்.

இவர் காலத்தில் உருவான இளைஞர்தான் ‘வாலிபப் பெரியார்' என்று பலரால் அழைக் கப் பெற்ற ஏ.வி.பி.ஆசைத்தம்பி!  முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சாத்தூர் பா.இராசாமணி. (கடைசியில் காங்கிரசில் சேர்ந்து காமராசரின் சாத்தூர் பிரதிநிதியாக ஆன போதிலும், என்றும் பெரியார் தொண்டராகவே திகழ்ந்தவர் அவர்).

ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எழுத்தாளர் விருதை ந.இராமசாமி போன்றவர்கள் பணி யாற்றியவர்கள். தி.மு.க.வுக்கு போன பின்னரும், விருதுநகர் திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர் ஏ.வி.பழனி யப்பன் - (ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தந்தை யார்) - அவரது தங்கை, தங்கை கணவர் எல்லாம் நம் இயக்கத்தோடே பயணித்த வர்களே! சாத்தூர் காசிராசன், விருதை இளஞ்செழியன், இராமர் போன்றவர்கள் திராவிடர் கழகத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர்கள்.

அடுத்த கட்டத்தில் வரும் 1921 இல்  ஜனவரியில் நூற்றாண்டு தொடங்கும் கழகச் செயல் வீரர் - ஏ.வெங்கடாசலபதி பி.ஏ.,  அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக, பொதுக்குழு உறுப்பினராக இறுதிவரை உறுதியுடன் செயலாற்றியவர்.

இன்றும் அவரது மகன் புகழேந்தி கழகக் கடமை வீரராகவே திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அருப்புக்கோட்டையோ விருதுநகர் அருகில் உள்ள சுயமரியாதைக்கோட்டை (அதை விரிக்கின் பெருகும்).

விருதுநகர் மாநாட்டு வெற்றிக்கு

உழைத்த வீரர்கள்!

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுயமரியாதை மண்ணில் பகுத்தறி வாளர் கழகத் தலைவராக, மாநிலத் துணைத் தலைவராக தலைமை ஆசிரியர் கொள்கைச் சீலர் நல்லதம்பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இதனால் பணி ஓய்வுக்கு முன் பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் வந்தன - மலைபோல் வந்தவை பனிபோல் கரைந் தன - இவரும், இவர் குடும்பத்தினரின் உறுதி காரணமாகவும், அவரது ஒழுக்கத் திறன் காரணமாகவும்!

மாணவப் பருவந்தொட்டே திராவிடர் கழகத்திற்கு அருமையான செயல் வீரராக இருந்து மாவட்ட கழகத்தைக் கட்டிக் காத்தவர் சிவகாசி ‘வானவில்' மணி அவர்கள்;  விருதுநகர் மாவட்டத்துக்குக் கிடைத்த அரியதோர் மாவட்டச் செயலாளர் உழைப்பின் உருவம், கொள்கைத் தங்கம் அருப்புக்கோட்டை ஆதவன் ஆவார். எளிமை, இனிமை, உழைப்பு, அடக்கம், ‘விடுதலை' பரப்பும் வித்தகர் - தோழர் ஆதவன் அவர்கள். அவருக்குப் பெருந் துணை அருப்புக்கோட்டைச் சிந்தனை யாளர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் இள இரத் தங்கள் பொறுப்பில் அமரட்டும் என்ற உணர்வோடு, செயல் வீரர் - திறன்மிக்க தீரர் திருப்பதி அவர்களை மாவட்டத் தலை வராக்கிட முன்மொழிந்து வழிவிட்டார் வானவில் மணி. தோழர் திருப்பதியின் திறன் - செயல் ஆற்றும் தன்மை - இராசபாளையம் பகுதியில் தொடங்கி, தென் மாவட்டங்கள் வரை மிகவும் இடையறாத பணிகள் என்றாலும், முகம் சுளிக்கா முயற்சிமூலம் வெற்றிக்கனி பறிக்கும் தனித்தன்மையாளர். அவருக்கு அருமையான (டீம்) ஒத்துழைப்புக் குழு உண்டு.

இயக்கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ்,  தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம், தென் மாவட் டங்களின் பிரச்சார செயலாளர் எடிசன்ராசா, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச்செயலாளர்  இரா. தமிழ்ச்செல்வன், ப.க. பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன்,  ப.க. எழுத்தாளர் மன்றத் தலைவர் டாக்டர் வா.நேரு,  பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக் குழுப் பொருளாளர்ச.குருசாமி (கே.டி.சி.), கடை வீதி வசூல் குழு, தெருமுனைப் பிரச்சாரக் குழு, மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் விருத்தாசலம்  த.சீ.இளந்திரையன்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.சுரேஷ், மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், தஞ்சை மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஏ.யோவான், எஸ்.குமார், ஏ.பிரகாஷ், தென் காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வே.முருகன், விருத்தாசலம் மாவட்ட  இளைஞரணி பிரவீன்குமார் ஆகியோரின் (சில பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக் கவும்). கூட்டு உழைப்பு விருதுநகர் மாநாட்டு வெற்றியை கனியாக்கி நம் மடிமீது விழச் செய்தது!

விருதுநகர் காணாத மக்கள் பெருவெள்ளம்!

விருதுநகர் காணாத கூட்டமும், பகுத் தறிவுப் பிரச்சாரப் பெரு வெள்ளமும் கரை புரண்டு ஓடியது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

தொடக்கத்திலிருந்தே காவல்துறை கீழ்மட்ட அதிகாரிகள் தந்த தொல்லைகள் பல என்றாலும், நியாயம் வழங்கினர் மேல் மட்ட கடமை உணர்ந்த காக்கி அதிகாரிகள்.

கட்டுப்பாடோடு கருஞ்சட்டை இராணு வம் களம் கண்டு பலம் பெருக்கிற்று; மக்களுக்கு வளம் சேர்க்க வாகை சூடியது.

நம்மால் மட்டுமே முடியும்!

உழைத்த தோழர்கள், ஒத்துழைத்த பொதுமக்கள், மகளிரணியினர் உள்பட அனைவருக்கும் எமது மகிழ்ச்சியும், மகிழ்ச்சி கலந்த நன்றி, பாராட்டுகளும்!

தோழர்களே, கொள்கை ஆதரவாளர் களே! 2020 ஜனவரி 3 ஆம் வாரத்திலிருந்து 10 நாள்கள், 30 கூட்டங்கள் குமரிமுதல் சென்னைவரை தொடர் பிரச்சாரம் எனது தலைமையில் நடைபெற ஆயத்த ஏற்பாடு களில் முந்துங்கள்.

விருதுநகர் பிரகடனத்தின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க ஆயத்தமாகுங்கள்!

வந்து கலந்துகொண்ட அத்துணை அறிஞர்களுக்கும் எமது நன்றி!

‘‘உழைப்பின்  வாரா உறுதிகள் உளவோ?''

‘‘நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது;

வேறு எவராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!

விருதுநகர்ப் பிரகடனத்தை நிறை வேற்றுவோம்!

வாழ்க பெரியார்! வெல்க நம் இலட்சியங்கள்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.11.2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக