வெள்ளி, 29 நவம்பர், 2019

மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைகளுக்கு நம்முடன் இணைந்து உத்தவ் தாக்கரே குரல் கொடுப்பார்

தளபதி  மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

மும்பை, நவ.29 மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியின் சார்பில்  அமைந்துள்ள அரசுக்கு  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று (28.11.2019) மும்பையில் நடைபெற்ற பதவி யேற்பு விழாவில் பங்கேற்று தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மராட்டிய மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்த £ர். அவர் தமது சுட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

திரு. உத்தவ் தாக்கரே அவர்களுக்கு, முதலமைச்சர் பதவிக்காலம் சிறப்பாக அமைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இந்த சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க, நான் மும்பையில் இருந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

மகாராட்டிர மாநிலத்திற்கு உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்.

மகாராட்டிராவில் வாழும் தமிழர்களின் பாது காப்பையும் - அம்மாநிலத்தில் தமிழர்களின் முன்னேற் றத்தையும்  உறுதிசெய்ய; புதிய அரசு, தமிழர்களோடு இணைந்து பணிபுரியும் என்று நம்புகிறேன்.

மேலும், உயரிய மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகள் குறித்து திரு. உத்தவ் தாக்கரே அவர்கள், நம்மோடு இணைந்து குரல் கொடுப்பார் என்றும் நம்புகிறேன்.

மும்பை மாநகருக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. சரத் பவார் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கக்கூடிய வகை யில், மகாராட்டிராவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்று மையை ஏற்படுத்துவதில், அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 29 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக