* இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருமா?
* பெரியார் அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் எத்தகையவை?
* பெரியார் நூல்களைப் பொதுவுடைமை ஆக்குவதில் என்ன தயக்கம்?
* வெளிநாட்டுத் தமிழர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

வாசிங்டன், நவ.12 நம்மை இணைப்பதை விரிவுபடுத்துவோம் - பிரிப்பதை அலட்சியப்படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில் தோழர் இந்திரா தங்கசாமி அவர்களால் (கலிஃபோர்னியா), திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
என்றைக்காவது இட ஒதுக்கீட்டிற்கு
ஆபத்து வருமா?
இந்திரா தங்கசாமி: காஷ்மீரில் அரசமைப்புச் சட்டமான 370- அய் ரத்து செய்துவிட்டார்கள். அதுபோன்று இட ஒதுக்கீட் டிற்கு என்றைக்காவது ஆபத்து வரும் என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர்: என்றைக்காவது இல்லை; எப்போதுமே ஆபத்து உண்டு. ஏனென்றால், மத்தியில் இருக்கக்கூடிய கட்சியை வழிநடத்தக்கூடிய ஓர் அமைப்பு இருக்கிறது.
இப்போது மத்தியில் இருக்கக்கூடிய அரசை வழிநடத்தக் கூடிய ஒரு மதவெறி அமைப்பு இருக்கிறது. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை.
அந்த அமைப்பின் தலைவர் மிகத் தெளிவாகச் சொல் கிறார், ‘‘இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்; தேவையில்லை'' என்று சொன்னார்.
பீகாரில் தேர்தல் நடைபெற்றபொழுது அங்கே சொன்னார்; மக்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி வந்தது. ஏனென்றால், இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது. அந்த அளவிற்குப் பெரியார் கருத்துகள், இந்த இயக்கக் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன! நேரிடையாக திராவிட இயக்கம் அங்கே போகவில்லையென்றாலும், அதனுடைய கொள்கைத் தாக்கம் உண்டு.
நேற்று நடைபெற்ற நிகழ்வில்கூட நான் சொன்னேன், மண்டல் கமிஷனை அமல்படுத்த 42 மாநாடுகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்; அதேபோன்று 16 போராட்டங்களை நடத்தினோம். டில்லியில்கூட நடத்தினோம். பிறகு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தவுடன், ஒரு பகுதியை செயல்படுத்தினார். பிறகு, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் அர்ஜூன் சிங் மத்திய அமைச்சராக இருந்தபொழுது இன்னொரு பகுதி கல்வியிலும் இட ஒதுக்கீடு தரப்பட்டது.
ஆகவே, வடபுலத்தில் இந்த நிலை வந்தாயிற்று. அவர் களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால், பாம்பு புற்றுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டுவது போன்று எட்டிப் பார்க்கும்.
சில மாதங்களுக்கு முன்பு, அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘‘இட ஒதுக்கீட்டைப்பற்றி நாம் உட்கார்ந்து பேசவேண்டும்'' என்று, புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல, விஷ உருண்டை போன்று சொன்னார்.
உடனே திராவிடர் கழகம் எதிர்த்தது; தமிழகம்தான் முதன்முதலாக எதிர்த்தது. எல்லா கட்சிக்காரர்களும் குரல் கொடுத்தார்கள். வடநாட்டிலும் எதிர்ப்புக் குரல் எழும்பியதும்,
‘‘நாங்கள் அப்படி சொல்லவில்லை; தவறாக அதைப் பத்திரிகைகள் வெளியிட்டுவிட்டன'' என்று பின்வாங்கினார்கள்.
பாம்பு புற்றுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டுவது போன்று எட்டிப் பார்க்கும். தலையில் ஒரு தட்டுத் தட்டியதும், தலையை உள்ளே இழுத்துக் கொள்ளும். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!
ஆகவே, நாங்கள் இதில் கவனமாக இருக்கின்றோம். சமூகநீதி போராட்டம் இருக்கிறதே, இது முழுக்க முழுக்க புராண காலத்திலிருந்து தொடங்கிய போராட்டமாகும்.
ஆகவே, அது இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதில் கவனமாக இருக்கவேண்டும். அதுதான் எங்களுடைய வேலை!
பெரியார் அவர்கள், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறியதற்குக் காரணமே, சமூகநீதிக் காகத்தான், இட ஒதுக்கீட்டிற்காகத்தான்.
50 சதவிகித இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்று சொன்னார்கள்; அப்படியென்றால், நான் வெளியேறு கிறேன் என்று சொன்னார்.
இன்றைக்கு 50 சதவிகிதத்தையும் தாண்டி, 69 சதவிகிதத்தை அவருடைய தொண்டர்கள் காலத்தில் நாங்கள் அடையச் செய்திருக்கின்றோம்.
மூன்று அரசியல் சட்டத் திருத்தங்கள் திராவிடர் கழகத்தால் வந்திருக்கின்றன.
ஒன்று, முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் - அது பெரியார் காலத்தில் 1951 ஆம் ஆண்டு.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு வந்த வரலாறு
பெரியாருக்குப் பிறகு, எளியவர்களாக என்னைப் போன்ற வர்கள் இந்த இயக்கத்தை நடத்தக் கூடிய நிலையில், 69 சதவிகிதம் வந்தது.
இந்த 69 சதவிகிதத்தைப்பற்றி ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும். இந்த சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது? ஜெயலலிதா அம்மையாரால்.
தன்னை அவர் சட்டமன்றத்தில் பார்ப்பனர் என்று அறி வித்துக் கொண்டவர். யாராக இருந்தாலும், அவர்களைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.
அந்த சட்டத்தை எழுதிக் கொடுத்தது நாங்கள். முதல மைச்சராக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார். அவர் ஒரு பார்ப்பனர்.
அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். அவர் ஓர் ஆந்திரப் பார்ப்பனர்.
அரசியல் சட்டத் திருத்தம் 9 ஆவது அட்டவணைப் பாது காப்பிற்காக வந்தபொழுது, குடியரசுத் தலைவர் கையொப்பம் போடவேண்டும்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா. அவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர்.
ஆக, மூன்று பார்ப்பனரையும் வைத்து வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்!
26 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது 69 சதவிகித சட்டம்.
மூன்றாவதாக, மத்திய அரசில் இட ஒதுக்கீடு - கல்வித் துறைகளான அய்.அய்.டி., அய்.அய்.எம்.எஸ். போன்ற துறை களில்.
2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, மத்திய அரசாங்கத்தோடு கூட்டணி வைத் திருந்தார். மத்திய அமைச்சராக அர்ஜூன்சிங் அவர்கள் இருந்தார். 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தோம்.
எனவே, மூன்று அரசியல் சட்டத் திருத்தங்களை திராவிடர் கழகம் கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் சட்டம் வருவதற்கு முன்பிருந்தே கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்லக்கூடிய வகுப்புவாரி உரிமை 1928 ஆம் ஆண் டில் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து வந்த வரலாறு, இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை!
ஆகவே, சமூகநீதி என்பது இருக்கிறதே, அது இதயம் போன்றது. திராவிட இயக்கங்களுடைய மூச்சுக் கொள்கையே சமூகநீதிதான்.
அதற்கு ஆபத்து ஏற்படும்பொழுதெல்லாம் குரல் கொடுத் துக் கொண்டே இருக்கவேண்டும். கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால், எதிரிகள், நாம் எப்பொழுது ஏமாறுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். விஷ உருண்டையில் தேனைத் தடவு கிறார்கள்.
இட ஒதுக்கீடு எவ்வளவு நாளைக்கு என்று கேட்கிறார்கள், பாலம் கட்டுகிறார்கள், அதுவரையில் மாற்றுப் பாதையில் தானே செல்லவேண்டும். எவ்வளவு நாள் மாற்றுப் பாதையில் செல்லவேண்டும் என்றால், அதற்கு என்ன பதில் என்றால்,
எவ்வளவு நாளைக்குப் பாலம் கட்டுவதற்குத் தாமதம் ஆகிறதோ, அதுவரையில் மாற்றுப் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.
பாலத்தை சீக்கிரம் கட்டுங்கள்; ஜாதியை ஒழியுங்கள். பிறகு சரியாகிவிடும்.
பல்கலைக் கழகங்களில் தமிழர் அல்லாதவர்களை நியமிக்கிறார்களே....!
இந்திரா தங்கசாமி: இப்பொழுது திராவிட இயக்கம்தான் ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருந்தும், பின்வாசல் வழியாக நிறைய திணிக்கப்படுகின்றன. அண்மையில், பொறியியல் கல்லூரியில் மதம் சார்ந்த பாடத் திட்டங்களைக் கொண்டு வருகிறார்களே, பல்கலைக் கழகங்களில் தமிழர் அல்லாதவர் களை நியமிக்கிறார்களே, இதையெல்லாம் எப்படி தடுக்க முடியும்?
தமிழர் தலைவர்: இராமாயணத்தை எடுத்துக்கொண்டால், விபீஷ்ணன் இராவணனின் சகோதரன்தான். கும்பகர்ணனும் இராவணனின் சகோதரன்தான். வாலியும், இராவணனும் உறவினர்கள்தான்.
வாலியினுடைய பங்களிப்பும், வாலியினுடைய கவனமும், கும்பகர்ணனுடைய பாதுகாப்பும் இராவணனுக்கு இருந்தது.
ஆனால், விபீஷணன் யார் பக்கம் இருந்தான்? அதனால் தான், இந்த இயக்கத்தை உடைத்தார்கள். அதை தங்கள் வயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
மடியிலே கனம்; வழியிலே பயம்.
அந்த நிலைமை அரசியல் ரீதியாக மாறினால், சரியாகி விடும்.
இதற்குமேலே இந்த நாட்டிலே, இந்த மண்ணிலே விளக்கம் சொல்ல நான் விரும்பவில்லை.
பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியில் தெரிவதில்லையே?
இந்திரா தங்கசாமி: உங்களுடைய இயக்கத்தைப்பற்றி எல்லோருக்கும் தெரியும், மிகவும் வெளிப்படையானது என்று. பெரியார் அறக்கட்டளை சார்பில் நிறைய கல்வி நிறுவனங் களும், பல்கலைக் கழகமும் உள்ளன. நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால், அதுபற்றி வெளியில் தெரிவதில்லையே, ஏன்?
தமிழர் தலைவர்: மிகவும் அருமையான கேள்வி. அடிப் படையான கேள்வியாகும்.
உங்களுக்குத் தெரியும், தந்தை பெரியார் அவர்களைப் போல ஒரு சிக்கனவாதியை உலகத்தில் பார்க்க முடியாது. பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரிலேயே அதிகமான முனிசிபல் வரியைக் கட்டவேண்டிய வீடுகள் அனைத்தும் பெரியாருடையது. அதற்கும் ஒரு அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள், அதிலிருந்து வரக்கூடிய பணத்தையும் இயக்கத்திற்கே கொடுத்தார்கள்.
கையெழுத்து போடுவதற்குக்கூட நாலணா வாங்குவார் தந்தை பெரியார் அவர்கள். ஒளிப்படம் எடுக்கவேண்டும் என்றால், 5 ரூபாய் கொடுக்கவேண்டும். அதையெல்லாம் முடிச்சுப் போட்டு வைத்து, கணக்கு வைத்திருப்பார்.
ஒரு வேடிக்கையான சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒளிப்படம் எடுக்கும்பொழுது புலவர் இமயவரம்பன், என்னைப் போன்றவர்கள் எல்லாம் கூட இருந்தோம்.
ஒருவரிடம் நீங்கள் பணம் வாங்கவில்லையா? என்று கேட்டார் தந்தை பெரியார்.
எங்களுக்கு வியப்பாக இருந்தது, எப்படி அவர் கணக்கு கேட்கிறார் என்று.
அவர் பளிச்சென்று காரணம் சொன்னார், 21 முறை பிளாஷ் பல்பு எரிந்ததே? என்றார்.
அப்படியென்றால், எத்தனை முறை பிளாஷ் அடித்தது என்று எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்படியெல்லாம் சேர்த்த பணத்தை பெரியார் என்ன செய்தார்? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பொது அறக்கட்டளையை உருவாக்கினார்.
அந்த அறக்கட்டளையை ஒழிப்பதற்காக நிறைய வரி போட்டார்கள்.
பெரியார் காலத்தில் 15 லட்சம் ரூபாய்
மணியம்மையார் அவர்கள் தலைமை ஏற்றபொழுது 60 லட்சம் ரூபாய்.
அவருடைய காலத்திற்குப் பிறகு, நான் பொறுப்பேற்றவுடன், 1978 ஆம் ஆண்டு வட்டிக்கு மேல் வட்டி போட்டு, வரிக்கு மேல் வரிகள் போட்டு, இரட்டை வரிகள் போட்டு - அதனுடைய நோக்கம் என்னவென்றால், இந்த அறக்கட்டளையின் சார்பில்தான் எல்லாமே நடைபெறுகின்றன என்று நினைத்த ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு செய்தன. ஆகவே, எரிவதை இழுத்தால், கொதிப்பது நின்று போகும் என்று திட்டமிட்டு செய்தார்கள்.
அதற்குப் பிறகு, கடைசி கட்டத்தில் வாதாடி, 80 லட்சம் ரூபாய் வருமான வரியை நீக்கினார்கள்.
பிறகு அது அறக்கட்டளையே என்று சொன்னார்கள். அது தனி நபருடைய நிறுவனம் என்று வரி போட்டார்கள்.
இதை அத்தனையும் கடந்து, பிறகு ஒரு அறக்கட்டளை என்று உருவாகிய நிலையில், பெரியார் காலத்தில், இரண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்.
ஏனென்றால், அன்றைய காலகட்டத்தில், உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் ஆசிரியர்களாக இருந்தார்கள். நம்முடைய பிள்ளைகளும் ஆசிரியர் பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக பெண்களுக்கு ஒரு ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி; ஆண் களுக்காக ஆசிரியர் பயிற்சிப் பள்ளி.
நாகம்மை குழந்தைகள் இல்லம். அந்த இல்லத்தில், கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். பிறந்த ஒரு நாள் குழந்தையையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து, அன்னை மணியம்மையார் அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு முன்னெழுத்தாக (இனிசியல்) ஈ.வி.ஆர்.எம். என்று வைத்தார்கள்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லம்
அந்த இல்லத்தில் வளர்ந்து படித்த பெண்கள் இதுவரையில் 34 பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, பட்டதாரிகளாக ஆக்கியிருக்கிறோம். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இன்றைக்கு நல்லவிதமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
பிஎச்.டி. பட்டம் பெற்று இருக்கிறார் ஒரு பெண். பேராசி ரியராக இருக்கிறார். அவருடைய கணவர் ஆடிட்டராக இருக்கிறார். அவர்கள் குடந்தையில் இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லியபடி, விளம்பரம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இது வியாபாரம் அல்ல.
நாங்கள் வாக்கு வாங்கக்கூடிய இயக்கமல்ல. மக்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொண்டிருக்கிறோம்.
பெரியார் அவர்கள் ஒவ்வொரு காசையும் முடிச்சு போட்டு வைத்திருந்தார். அவை அத்தனையையும் மக்களுக்கே கொடுத்தார்.
அந்த அறக்கட்டளையில் அவருடைய சொந்த பந்தங் களுக்கு இடமில்லை. ஜாதிக்கு இடமில்லை.
அதுபோன்ற அளவிற்கு அதனை வளர்த்து, பாதுகாத்து இன்றைக்கு அது எந்த அளவில் இருக்கிறது என்றால், ஏராள மான மருத்துவமனைகளாக - 10 மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் நடக்கின்றன.
முதன்முதலாக தனியார் துறையில் பாலிடெக்னிக் உரு வானது வல்லத்தில்தான். அதற்குப் பிறகு, கல்லூரி.
உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், எம்.ஜி.ஆரே எங்களை அழைத்து பொறியியல் கல்லூரியை ஆரம்பிக்கச் சொன்னார். அவருடைய கல்வி அமைச்சர்மூலம் சொல் லியனுப்பினார். அந்த காலகட்டத்தில் நாங்கள் கலைஞரை ஆதரித்துக் கொண்டிருந்தோம்.
பெரியார் அறக்கட்டளையில், பாலிடெக்னிக் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஆகவே, கல்லூரியைத் தொடங்கச் சொல்லுங்கள். அதற்கு ஆதரவை நாங்கள் தருகி றோம் என்று சொல்லியனுப்பினார்.
உடனே நாங்கள் பொறியியல் கல்லூரியைத் தொடங் கினோம்.
நேற்றுகூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், இந்த ஊரில் 35 பெண்கள் பழைய மாணவிகள் நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார்கள்.
. கனடாவில், அமெரிக்காவில், சிங்கப்பூரில் என்று உலகம் முழுவதும் பழைய மாணவர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், அந்தப் பிள்ளைகள் எங்களை அன்போடு, ஒரு தந்தையை வர வேற்கின்ற உணர்ச்சியோடு வரவேற்கும்பொழுது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
அந்தக் கல்லூரி, பெண்களுக்கான உலகத்தின் முதல் பொறியியல் கல்லூரியாகும். கனடா நாட்டில், பெண்கள் பொறியியல் படிப்பு படிப்பதற்கு முன்வருவதில்லை. இவ்வளவு வளர்ந்துள்ள அமெரிக்காவிலும் பெண்கள் பொறியியல் படிப்பு படிப்பதற்கு அதிகம் முன்வருவதில்லை.
என்னிடம் கேள்வி கேட்டார்கள், தனியே ஒரு பெண்கள் பொறியியல் கல்லூரியை நடத்தும் அளவிற்கு, பெண்கள் வருகிறார்களா? என்று.
ஆம் என்றேன்.
அந்தப் பெண்கள் எல்லாம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
மற்ற கல்லூரிகளில் இருக்கும் பாடத் திட்டம்தான் எங்கள் கல்லூரியிலும். ஆனால், எதையும் துணிவுடன் சந்திக்கக்கூடிய பெரியாரின் துணிவுதான் மிகவும் முக்கியம்.
பிறகு அது பல்கலைக் கழகமாக மாறிற்று. இன்றைக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக இருக்கிறது.
கழகத்தின் வெளியீடுகள்
அதேபோன்று, மருந்தியல் கல்லூரி. 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆக, 10 ஆயிரம் பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து முடித்து வெளியே சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை மாறியிருக்கிறது.
அதேபோன்று, நிறைய பட்டதாரிகளை உருவாக்கியி ருக்கிறோம். 27 ஆண்டுகளாக கல்லூரியாக இருந்தது, இப்பொழுது நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்.
பிரச்சாரத்தைப் பொறுத்தவரையில், ‘விடுதலை', ‘உண்மை', குழந்தைகளுக்காக ‘பெரியார் பிஞ்சு', அதேபோன்று ஆங்கில மொழியில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழ்.
பெரியாருடைய கொள்கைகள் பரவவேண்டும் என்பதற் காக புத்தகங்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடு கிறோம்.
முதன்முதலாக இணையத்தில் வெளிவந்த தமிழ் நாளேடு ‘விடுதலை'தான். 85 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொள்கையோடு நடைபெறக்கூடிய நாளிதழ் விடுதலை. விடுதலையில் சினிமா விளம்பரமோ, சோதிடச் செய்திகளையோ, ராசி பலன்களையோ போடுவதில்லை. கொள்கை ரீதியாக நாளிதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் அடிப்பது போன்றதாகும். அதற்கெல்லாம் காரணம், இந்த அறக்கட்டளைதான்.
ஆகவேதான், ஒரு பக்கம் அறிவுப் பணி, இன்னொரு பக்கம் கல்விப் பணி; இன்னொரு பக்கம் தொண்டு; இன்னொரு பக்கம் சமுதாயப் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, எங்கெல்லாம் தமிழர்களுக்கு, திராவிடர் களுக்கு, மானிட உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படுகிறதோ, அப் போதெல்லாம் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிடு வோம்.
மற்றவர்கள் சொல்ல பயப்படுகிற, சொல்லத் தயங்குகிற கருத்துகளை விடுதலை ஏடு தனித்தன்மையோடு சொல்லி வருகிறது. இன்றைக்கும் இணையத்தில் உலகம் முழுவதும் படிக்கிறார்கள்.
பெரியாருடைய அறக்கட்டளைதான் அதற்கெல்லாம் காரணம். பெரியாருடைய காலத்திற்குப் பின்பு, மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கப் பொறுப்பை ஏற்றார்கள். அந்த அம்மையாருக்கு இருந்த சொத்துகளை வைத்து, தனியாக ஒரு அறக்கட்டளையை அமைத்து, அதன் சார்பாக கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பணியை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு அதில் முழுத் திருப்தி இருக்கிறது.
பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அதனுடைய பயன் விரிவடைந்து இருக்கிறது, ஒரு பெரிய ஆலமரம் போல. விளம்பர வெளிச்சம் என்பது இல்லை. உங்களைப் போன்றவர்கள் அதனைப் புரிந்து கேட்டதற்கு நன்றி.
பொதுவுடைமை ஆக்குவதில்
உங்களுக்கென்ன தயக்கம்?
இந்திரா தங்கசாமி: பெரியாருடைய படைப்புகளை பொதுவுடைமை ஆக்குவதில் உங்களுக்கென்ன தயக்கம்?
தமிழர் தலைவர்: ஒரு தயக்கமும் இல்லை. யார் வேண்டுமானாலும், பெரியாருடைய கருத்துகளை புத்தகமாகப் போடவேண்டும் என்றால், நாங்கள் அதற்கு அனுமதி கொடுக்கிறோம்.
மற்றவர்கள் போன்று நாங்கள் கிடையாது. பெரியாருடைய கருத்துகள் புரட்சிகரமான கருத்துகளாகும். அதில் ஒரு சொல்லை மாற்றிவிட்டார்கள் என்றால், பொருளே மாறிப் போய்விடும்.
பிற்கால சமுதாயத்திலே பெரியார் முரண்பட்டுப் பேசினார் என்று சொல்வார்கள். இப்பொழுதே பெரியாரைபற்றி முரண் பாடான செய்திகளும், தவறான செய்திகளும், திரிபுவாதங்களும் நடைபெறுகின்றன. நாங்கள் உயிரோடு இருக்கும்போதே இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன.
பெரியார் அவர்கள், ‘‘பார்ப்பானை பிராமணன் என்று அழைக்காதே - சூத்திரன் என்று உன்னை சொல்வதற்குச் சமம்'' என்று சொல்லியிருப்பார்.
மற்றவர்கள் என்ன செய்வார்கள், பார்ப்பனர் என்ற சொற்களை உச்சரிப்பதற்கு யோசிப்பார்கள். ஆனால், அந்தச் சொல் இலக்கியத்தில் வரக்கூடிய சொல்லாகும்.
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்பது பாரதியாருடைய பாட்டு.
‘‘மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்''
திருவள்ளுவருடைய குறளாகும்.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி
தீவலம் வந்து
இது சிலப்பதிகாரம்.
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண் மின்
இது கபிலர் அகவல்.
இப்படி வரிசையாக இருக்கும்.
அதனாலே இரண்டு வார்த்தையை மாற்றிப் போட்டு விட்டால் போதும்.
அதனால்தான் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், எங்களிடம் அனுமதி பெற்று வெளியிடலாம்.
நாங்கள் அதற்காகப் பணம் ஏதும் வாங்குவதில்லை. பெரியாருடைய கொள்கைகளில் பாதகம் ஏதும் இல்லாமல் பார்த்து, அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அனுமதி கொடுக்கிறோம்.
இந்த ஒரு பாதுகாப்பு - பெரியாரைப் பொறுத்தவரை தேவை. ஏனென்றால், பிற்காலத்தில், பெரியாரை தலைகீழாக மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் உண்டு - புத்தருக்கு ஏற்பட்ட ஆபத்துபோல.
ஏன் இப்பொழுது அம்பேத்கரையே தழுவி அழித்து விடலாம் என்று நினைக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
இன்னொரு செய்தி என்னவென்றால், பெரியார் காங்கிரசில் இருந்தபொழுது, காந்தியாரை ஆதரித்து கொள்கைப் பிரச் சாரம் செய்தபொழுது அப்பொழுது ஒரு கருத்து பெரியாருக்கு.
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு, அதே காந்தியாரை பெரியார் எதிர்த்திருக்கிறார். அதே காந்தியாரை கோட்சே சுட்டுக்கொன்ற பொழுது, இந்த நாட்டிற்குக் காந்தி நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கு அவர் விளக்கமும் சொல்கிறார், ‘‘வாழ்ந்த காந்தி யார் வேறு; அவர் வருணாசிரமத்தை ஆதரித்தவர். மறைந்த காந்தியார், அதனைப் புரிந்துகொண்டு விழித்தெழுந்தார். உடனே அவரை வாழவிடவில்லை'' என்றார்.
பெரியார் அவர்கள், கடல் அளவுக்குப் பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். இவை அத்தனையையும் முன் வைக்க வேண்டியதை பின் வைத்து, பின் வைக்கவேண்டியதை முன் வைத்து- மாற்றினாலோ அது மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கும்.
ஆகவேதான், பாதுகாப்பு கருதி நாங்கள் அதனை செய்தி ருக்கிறோம். திரிபுவாதங்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறோமே தவிர, அனுமதி கொடுக்கக்கூடாது என்பதல்ல.
எங்களிடம் அனுமதி கேட்டால், உடனடியாக அதனை சரி பார்த்து அனுமதி கொடுத்துவிடுவோம்.
இன்னொரு ஆபத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
அரசுடைமையானால், உரிமை அரசுக்கு. அவர்கள் வெளியிடாமல் இருந்தால், யாரும் அதுபற்றி கேட்க முடியாது. அரசுகள் மாறி மாறி வருகின்றன. அப்படி வருகின்ற ஒரு அரசு, ‘‘பெரியாருடைய நூல்களை வெளியிடவேண்டிய அவசிய மில்லை'' என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது.
ஆகவேதான், அது தேவையில்லை என்று சொல்கிறோம்.
பெரியார் அனைவருக்கும் உரியார்.
‘எனக்குப் பிறகு என்னுடைய நூல்கள்' என்று சொன்னார் பெரியார்.
அந்த நூல்கள், கருத்துகள் பரவுவதற்கு நாங்கள் எளிமையான வெளியீடுகள் முதல் பெரிய வெளியீடுகள்வரை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைக்கு அதிகமான அளவிற்குப் புத்தகங்கள் உலகளா விய அளவிற்கு உலகம் முழுவதும் செல்வதற்கும், பெரியார் உயராய்வு மய்யம் என்ற அமைப்பு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இருக்கிறது.
அந்த அமைப்பின் சார்பில், பெரியாருடைய ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகம் ஜெர்மன் மொழியில் மொழி யாக்கம் செய்யப்பட்டு, அண்மையில் வாசிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்திய மொழிகளில் பல மொழிகளில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் வெளிவந்திருக்கிறது.
பெரியாருடைய கருத்து சிதையக்கூடாது; திரிபுவாதத்திற்கு ஆளாகக்கூடாது என்கிற கவலைதான் எங்களுக்கு.
பெரியாருடைய படைப்புகள் கணினி மயமாக்கப்படுமா?
இந்திரா தங்கசாமி: பெரியாருடைய படைப்புகளை கணினி மயமாக்குகின்ற பணிகள் நடைபெறுகிறதா?
தமிழர் தலைவர்: நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறப்பாக அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
முதலில் நாங்கள் செய்திருப்பது, சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலகம் - ஆய்வகத்தில் தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது; அதில் சான்றாவணங்கள் எங்கெங்கே இருக் கிறதோ அதை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். அதிலிருந்து தகவல்களை எல்லோருக்கும் கொடுக்கிறோம்.
விரைவில் நீங்கள் எல்லாப் படைப்புகளையும் கணினியில் பார்க்கலாம். ஆனால், ஒரே ஒரு பாதுகாப்புதான் - திரிபுவாதம் வரக்கூடாது என்பதுதான்.
பெரியாரை யாராலும் மறைத்துவிட முடியாது. மற்றவர் களுக்கு இல்லாத ஒரு வசதி பெரியாருக்கு உண்டு. அது என்னவென்றால், மதத் தலைவர்களுடைய நூல்களை புனித நூல்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், யாரும் கிட்டே இருந்து எழுதியது கிடையாது.
மகாபாரதத்தில் ஒரிஜினல் மகாபாரதம் உண்டா என்றால், கிடையாது. இடைச்செருகல்தான் என்று அறிஞர்களும், ஆய்வாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
பகவத் கீதையை எடுத்துக்கொண்டால், எதிரே படைகள் நிற்கின்றன; கிருஷ்ணன் கீதா உபதேசம் செய்கிறார்; 700 சுலோகங்கள் சொல்கின்ற வரையில், எதிரே நிற்கின்ற படையினர் சும்மா இருப்பார்களா?
அன்றைக்கு எழுத்துக்கள் அச்சுக்கு வராத காலத்தில், கேட்டார், கண்டார் என்பதுதான் மத நூல்களுக்கு இருக்கிற வாய்ப்பு.
பெரியாருக்கு அப்படியில்லை. பெரியாருடைய கருத்துகள் பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவராலேயே திருத்தி வெளியிடப்பட்டு இருக்கின்றன. அது அதிகாரப்பூர்வ மானது.
அதற்குப் பிறகு எங்களுடைய காலம், மின்னணு காலம் வந்த பிறகு, நிறைய அளவிற்கு, அவரது இறுதிப் பேச்சுகூட ஒலிப்பதிவாக இருக்கிறது.
ஆகவே, இப்படி பல செய்திகள் ஆதாரங்களோடு இருக் கின்றன. மற்ற தலைவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு தந்தை பெரியாருக்கு இருக்கிறது. எனவே, தந்தை பெரியார் என்பவர் மக்கள் தலைவர். அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தம் இல்லை.
இன்னுங்கேட்டால், அனைத்து மானிடத்திற்கும் சொந்த மானவர் அவர்.
‘‘திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கவேண்டும். உலக மக்களைப் போல் என்னுடைய மக்கள் இருக்கவேண்டும்'' என்று சொன்னார்.
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று நான்கே வார்த்தையில் சொல்லிவிட்டார். ஆகவேதான், அதனை சொன்ன பெரியாருக்கு மானுடப் பார்வை. எனக்குத் தனிப் பற்று கிடையாது என்றும் சொன்னார்.
அவருடைய கருத்துகள் அத்தனையும் பாதுகாக்கப்பட்டு, எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். எல்லா மொழி களிலும் கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அதனை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்குத் தேவை.
உலகம் முழுவதும் இருக்கிற மக்கள், இளைஞர்கள் இன்றைக்குப் பெரியாரை வாசிப்பதைவிட, பெரியாரை சுவாசிக்கவேண்டும் என்கிற அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
பெரியாருடைய எழுத்துக்களும், அம்பேத்கருடைய எழுத்துக்களும் புரட்சிகரமான அளவிற்கு இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் இன்றைக்கு ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள்.
எனவே, அது பொதுச் சொத்து; அந்தப் பொதுச்சொத்தை எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு, பாதுகாப்போடு பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது எங்களுடைய பணி. அந்தப் பணியை நாங்கள் செய்து வருகிறோம்.
உங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுக்கவேண்டுமானால்,
அதற்கு என்ன வழிமுறை?
இந்திரா தங்கசாமி: இதுபோன்ற பணிகளுக்கு வெளியில் இருந்து நன்கொடை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? நன்கொடை கொடுக்கவேண்டுமானால் அதற்கு என்ன வழிமுறை?
தமிழர் தலைவர்: தாராளமாக; நன்கொடை கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் நாட்டில் அதற்குரிய சட்டம் இருக்கிறது. வருமான வரித் துறையில், ‘‘பாரின் கான்ட்ரிபூஷன் ஆக்ட்'' என்ற சட்டம் இருக்கிறது. வெளிநாட்டவர்கள் நன் கொடை கொடுத்தால், அந்த நன்கொடைகள் முறையான ஒரு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அந்தக் கணக்கில் செலுத்தலாம் என்று இருக்கிறது.
நன்கொடை யார் கொடுத்தாலும், அந்தக் கணக்கில் வரவு வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அதுபற்றிய கணக்குகளை நாங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பவேண்டும். முறைப்படி அதனை நாங்கள் செய்கின்றோம்.
தாராளமாக நன்கொடை கொடுக்கலாம்; மக்களுடைய பங்களிப்பு என்பதுதான் மிகவும் முக்கியம்.
தந்தை பெரியார் சொல்வார், வெளியில் சென்று வசூல் செய்யவேண்டும். காரணம் என்னவென்றால், மக்கள் பங்களிப்பு இருக்கவேண்டும்; அப்போதுதான் அந்த இயக்கம் வளரும் என்பார்.
ஒரு பெரிய பணக்காரன் இயக்கத்தை தொடங்குவதற்கும்; சாதாரண ஆள்கள் இயக்கத்தைத் தொடங்குவதற்கும் வேறு பாடு உண்டு. ஏனென்றால், எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால்தான், இயக்கம் வளரும். பணம் மட்டுமல்ல, உழைப்பைக் கொடுக்கிறவர்கள் உழைப்பைக் கொடுக்கலாம்; பணத்தைக் கொடுப்பவர்கள் பணத்தைக் கொடுக்கலாம்.
சிலரால் பணம் கொடுக்க முடியாது; உழைப்பைக் கொடுப் பர். சிலருக்கு வசதி இருக்கும் பணத்தைக் கொடுப்பார்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களும் தாரளமாக உதவிகளை செய்கிறார்கள். இப்போதுகூட, அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள்; அதில் ஒரு நண்பர் மோகனன் என்பவர். தமிழ்நாடு பவுண்டேசன் என்ற அமைப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அதன்மூலமாக நன்கொடை கொடுக்கிறோம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.
மேசை, நாற்காலி புதிதாக வாங்கவேண்டும் என்று சொன்னவுடன், அதற்காக ஒரு லட்சம் ரூபாயை அதனுடைய தலைவரே கொண்டு வந்து கொடுத்தார்.
பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற வசதியற்ற பிள்ளை களுக்கு உதவித் தொகையை, சில நிபந்தனைகளுடன், நிபந்தனை என்றால், இவ்வளவு மதிப்பெண் வாங்கவேண்டும் என்று சொல்லி உதவித் தொகையை நேரிடையாகவே வந்து படிக்கின்ற பிள்ளைகளுக்கு அளிக்கிறார்கள்.
யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும்?
இந்திரா தங்கசாமி: உதவி செய்யவேண்டுமானால், யாரை தொடர்பு கொள்ளவேண்டும்?
தமிழர் தலைவர்: நேரிடையாக எங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி இருக்கிறது.
செயலாளர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற முகவரிக்கு நன்கொடை அளிக்கலாம்.
இங்கே உங்களுக்கு முழு விவரம் வேண்டும் என்றால், டாக்டர் சோம.இளங்கோவன், பெரியார் பன்னாட்டு அமைப்பு இருக்கிறது. அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டால், சரியான வழிமுறையை சொல்வார்கள்.
பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் வேளையில், பெரியார் காலத்திலிருந்து ஒரு பெரிய புரட்சி என்னவென்றால், மாலை போடாதீர்கள்; மாலை வீணாகத்தான் போகிறது. அதற்குப் பதிலாக பணமாகக் கொடுங்கள் என்று சொல்வார்.
நாங்கள் மாணவப் பருவத்தில் அய்யாவோடு செல்கையில், மாலையை நிறைய பேர் அணிவிப்பார்கள்.
அய்யா இந்த மாலைகளை என்ன செய்வது? என்று கேட்டால்,
அந்த மாலைகளை ஏலம் விட்டுவிடுங்கள் என்பார்.
நாங்களும் ஏலம் விடுவோம். இரண்டனா என்று பெரியாரே ஆரம்பித்து வைப்பார் ஏலத்தை!
ஏலத்தில் கிடைத்த அந்தப் பணத்தையும் இயக்க வளர்ச்சிக்கே கொடுப்பார்.
இயக்கத்திற்குப் பணம் கொடுத்தாலும், நன்கொடை கொடுத்தாலும், வளர்ச்சி நிதி கொடுத்தாலும் அவை அத்தனையும் தனித்தனி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, முறையாகக் கணக்கு வைக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது.
பெரியார் அறக்கட்டளையிலும்
வாரிசு அரசியல் இருக்கிறதா?
இந்திரா தங்கசாமி: எல்லா இடங்களிலும் வாரிசு அரசியல் இருக்கிறது; பெரியார் அறக்கட்டளையிலும் அதுபோன்ற வாரிசு அரசியல் இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கிறதே, அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அது தவறானது. பெரியார் அறக் கட்டளையில் 13 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
பெரியார் காலத்தில், பெரியார் தலைவராக இருந்தார்; மணியம்மையார் செயலாளராக இருந்தார். அது வாரிசு அரசியல் அல்ல. அதற்குப் பாதுகாப்பாக யார் இருக்கிறார்களோ, அவர்களை நியமிப்பதுதான்.
‘டிரஸ்ட்' என்கிற வார்த்தைக்குப் பெயரே நம்பிக்கை என்று அர்த்தம். யாரை வேண்டுமானாலும் நம்ப முடியாது.
‘‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்
தீரா இடும்பை தரும்''
இதுதான் வள்ளுவருடைய குறளாகும்.
‘‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்''
அதுதான் அடிப்படை.
எங்களுக்கு வாரிசு அரசியல் கிடையாது. அரசியலே இல்லை என்று சொல்லும்பொழுது, பிறகு எப்படி வாரிசு வரப் போகிறது?
ஆனால், பாதுகாக்கவேண்டும்.
தந்தை பெரியாருடைய தொலைநோக்கு இருக்கிறதே, அன்னை மணியம்மையாரோடு திருமணம் என்று வரும் பொழுது, மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தன. வயதானவர், சிறிய பெண்ணை மணம் செய்யப் போகிறார் என்றெல்லாம்.
அதைப்பற்றியெல்லாம் பெரியார் அவர்கள் கவலைப் படாமல், அன்றைக்கு மணியம்மையார் திருமணம் என்பது, சட்டப்படிக்கான பெயரே தவிர, ஏற்பாடே தவிர, அது இயக்கத்திற்குச் செய்யக்கூடிய எதிர்கால பாதுகாப்பே ஆகும் என்று சொன்னார்.
பிறகு, அண்ணாவே அதை கடைசியில் ஒப்புக்கொண்டு சொல்லக்கூடிய அளவிற்கு வந்தது.
அதனால்தான், இன்றைக்கு இத்தனைக் கல்வி நிறு வனங்கள், பல்கலைக் கழகம் எல்லாம் வந்திருக்கின்றன.
நான் ஒப்பிடக் கூடாது; வேறு சில தலைவர்களின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகள், கொலை வழக்குவரை சென்றிருக்கிறது. அதனை நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.
ஆகையால், இரண்டு குறள் சொன்னேன் பாருங்கள், அதனை வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு இடமும் இல்லை.
பல பேர் இருக்கிறார்கள்; இயக்கத் தோழர்கள் இருக் கிறார்கள். ஒரே ஒரு நபர் கிடையாது. அமைப்பு ரீதியாக இருக்கக்கூடிய இந்த இயக்கம்.
13 பேர் இருக்கிறார்கள்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் தணிக்கை இருக்கிறது. ஆகையால், எந்தப் பிரச்சினையும் கிடையாது.
இந்திரா தங்கசாமி: இது எங்களுடைய ஆசையும்கூட; திராவிட இயக்கங்கள் பிரிந்து இருக்கின்றனவே, அவை எல்லாம் ஒன்றாக இணையக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: அது பிளேடு போன்றது. பிரிந்தல்ல; விரிந்து இருக்கிறது.
பிரிவது வேறு; விரிவது வேறு.
படைகளில், விமானப் படை, தரைப்படை, கப்பல் படை என்று இருக்கிறது. அது பிரிந்துதான் இருக்கிறது. ஆனால், அடிப்படை என்ன, அப்படைகள்தான் நாட்டைப் பாதுகாக்கின்றன.
அதுபோன்று, திராவிட இயக்கங்களில், உண்மையான திராவிட இயக்கங்கள், பிரிந்திருக்கவில்லை - விரிந்திருக் கின்றன.
நான் அடிக்கடி சொன்ன உதாரணம், பவள விழா மாநாட்டில் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்கிறேன்.
கத்திரிக்கோல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்தால் போதாது; இரண்டாகப் பிரிந்திருந்தால்தான், வெட்ட முடியும். ஆகவே, கத்திரிக்கோல் போன்றுதான்.
அமெரிக்கத் தமிழர்களுக்கு
நீங்கள் சொல்ல விரும்புவது!
இந்திரா தங்கசாமி: நல்ல விளக்கம் அய்யா. திராவிட இயக்கங்களால்தான், நிறைய சாமானியர்கள் இங்கே வந்திருக்கிறோம். இங்கே இருக்கிற தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தமிழர் தலைவர்: அறிவுரை சொல்லக்கூடிய தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. அறிவுரையை யாரும் விரும்புவதும் இல்லை.
உலகத்திலேயே மிகவும் சுலபமான ஒரு பணி என்றால், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதுதான்.
ஆகையால், இது அறிவுரையல்ல - வேண்டுகோளாக சொல்கிறோம்.
புலம் பெயர்ந்து வந்திருக்கின்ற நீங்கள், முதலாவது தமிழ்நாட்டில்தான் ஜாதி, மதவெறியெல்லாம் இருக்கிறது. அப்படியல்லாமல், மானிடப் பற்றோடு வாழுங்கள்.
உலகம் ஓர் குலம் என்கிற உணர்வோடு வாழுங்கள். பரந்த மானுடம்.
வண்ணங்கள் பல இருக்கலாம்; ஆனால், அது நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கக்கூடாது.
வேற்றுமையில் ஒற்றுமை - அதற்கு அய்யா அவர்கள் சொன்ன கருத்தையே நான் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
புலம்பெயர்ந்த தமிழர்கள், திராவிடர்கள், இங்கே வாழக் கூடியவர்கள் - நேற்றுகூட நீங்கள் பார்த்திருப்பீர்கள் - பஞ்சாபில் இருக்கிறவர்களும், மதத்தால் வேறுபட்டவர்களும், மனதால் ஒன்றுபட்ட காட்சியை நாம் பார்த்தோம். அந்த உணர்வை உருவாக்கவேண்டும்.
இந்த நாட்டில் வந்து, என்னுடைய ஜாதி, நீ என்ன ஜாதி? என்று சொல்வதற்கு அடையாளம் எதுவும் கிடையாது.
ஆகவே, ஜாதி உணர்ச்சிக்கோ, மத உணர்ச்சிக்கோ இடங்கொடாமல், மானிடப் பற்றுதான் அவசியம்.
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்பதுதான் நம்முடைய பண்பாடு.
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
என்ற குறுந்தொகை வரவேண்டும். ‘பெருந்' தொகை வந்தவுடன் குறுந்தொகை மறந்துபோய்விட்டது நம்முடைய நாட்டில்.
ஆகவே, அதைப்பற்றி கவலைப்படாமல், மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.
கடைசியாக ஒன்று,
சமுதாய ஒற்றுமைக்காக தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார்,
எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உங்களுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; அவருடைய உடை வேறு;
உங்கள் உயரம் வேறு; என்னுடைய உயரம் வேறு; அவருடைய உயரம் வேறு.
ஆனால், நாம் எல்லோரும் மனிதத் தன்மையில் ஒன்று.
மூளைச்சாவு ஏற்படும்பொழுது மானிட உறுப்புகளை கொடையாகக் கொடுக்கிறோம். விழிக்கொடை கொடுக்கிறோம். அதில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. நாடு பார்ப்பதில்லை.
யாருக்குப் பொருந்தும் என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு இருக்கும்பொழுது,
பெரியார் சொல்வது போன்று,
எது நம்மை பிரிக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்;
எது நம்மைப் இணைக்கிறது என்ற பொது இடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இணைப்பதை அகலப்படுத்துங்கள்; ஆழப்படுத்துங்கள்;
பிரிப்பதை அலட்சியப்படுத்துங்கள்.
இதுதான் நம்முடைய வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.
இதுதான் என்னுடைய வேண்டுகோள்.
இந்திரா தங்கசாமி: நன்றி அய்யா! எங்கள் அமெரிக்கத் தமிழர்கள் வானொலி நேயர்கள் சார்பாக நீங்கள் நீண்ட காலம் நலத்தோடு வாழ்ந்து பணியாற்றவேண்டும்.
தமிழர் தலைவர்: மிக்க மகிழ்ச்சி, நன்றி!
மேற்கண்டவாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
- விடுதலை நாளேடு 12 11 19