சனி, 11 ஜனவரி, 2020

கல்விச் சுற்றுலாவுக்காக சாதவாகனா பல்கலைக்கழக மாணவர்கள் பெரியார் திடலுக்கு வருகை!

சென்னை, ஜன.10, சாதவாகனா- பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள், தங்கள் பேராசிரியர்களுடன் சென்னை பெரியார் திடலுக்கு கல்விச்சுற்றுலாவாக வருகை தந்து சுற்றிப்பார்த்தனர்.

தெலங்கானா கரீம்நகரில் உள்ள, சாதவாகனா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயிலும் 19 இருபால் மாணவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு பேராசிரியர்கள் யஸ்வந்த் ராவ், சூரப்பள்ளி சுஜாதா ஆகியோருடன் 8.1.2020 அன்று பிற்பகல் 2:45 மணிக்கு வருகை தந்தனர். தங்களின் வாகனத்திலிருந்து இறங் கியதுமே அவர்கள் கழகப் பொருளார் வீ.குமரேசன் அவர்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அவரோடு தங்களை உற்சாகத்துடன் அறிமுகப் படுத்திக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் உடுமலை வடிவேல்  பெரியார் திடலைச் சுற்றிக்காட்டினார்.

பேராசிரியர் சூரப்பள்ளி சுஜாதா மாணவர் களுக்கு பெரியார் நினைவிடத்திலுள்ள கல்வெட்டுகள் ஒவ்வொன்றிலிருக்கும் ஆங்கில வாசகங்களைப் படித்து, அதை தெலுங்கில் மாணவர்களுக்கு மொழிபெயர்த்துக் கூறினார். ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் மாணவர்கள் உணர்ச்சியுடன் கைதட்டினர். தொடர்ந்து பெரியார் காட்சியகத்தையும் சுற்றிப்பார்த்தனர்.

பெரியார் திடலிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்படும்போது, மெரினா கடற்கரையிலுள்ள திராவிடர் இயக்கத்தின் தலைவர்களின் நினைவிடங்களையும் பார்வையிட்டபின் இரவே தெலங்கானா திரும்பத் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சூரப்பள்ளி சுஜாதா குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு 10 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக