சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுத் திரிந்திடும் மக்கள் பெருங்கூட்டத்திற்குப் பெரியாரியலை நாளும் கற்றுக் கொடுத்திடும் பகுத்தறிவியல் ஆசிரியர் எங்கள் தமிழர் தலைவராவார்.
ஆசு + இரியர். மனத்துள் கிடக்கும் மாசினை அகற்றும் ஆசிரியர். அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல், வஞ்சகம், பொறாமை, அறிவிலித்தனம் ஆகிய மாசுகளைப் பகுத்தறிவுப் போதனைகளால் விரட்டி அடிக்கும் பண்பட்ட ஆசிரியர்.
இன்னார் இனியரெனக் கொள்ளாது, மொத்தத் தமிழர்க்கும் நன்னெறி காட்டிடும் நல்லாதனராவார். இவர் இயற்கையாய்க் கருவழிப் பெற்ற அறிவோடு தந்தை பெரியாரின் தொடர்பு வழிப்பெற்ற பகுத்தறிவை நிரம்பக் கொண்டு பெரியார் பணி முடிக்கும் பேராசிரியராவார்.
அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின்
“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற் பவை”,
எனும் குறள்வழி நின்று இயற்கையறிவோடு நூல்கள் பல தேடிக் கொணர்ந்த மிக்க நுட்பமான அறிவோடு எதிர்வினையாடி, கேட்போர் வியக்கும் வண்ணம், பொருந்தும் பொருளோடு செறிந்த கருத்தினைக் கூறிப் பெரியாரியலை மக்களிடம் தடங்கலின்றிக் கொண்டு சேர்ப்பித்திடும் நாநலம் பெற்ற ஆசிரியர்,
புரியாத கருத்துக்களை அவரின் விளக்கமான விரிவுரையால் அறிந்து தெரிந்து தெளிவு பெறலாம்.
“மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்பது அவரிடம் கேட்கப்பட்ட வினாவாகும். . .
“மனிதனாக மனிதத் தன்மையுடன், மனித நேயத்துடன், ‘எம்பதி’ என்ற ‘‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’’ என்று நடந்து கொள்ள வேண்டும்”, என்ற சிறந்த விடையினைத் தந்தவர் எங்கள் ஆசிரியர்.
இன்றைய காலகட்டத்திற்குத் தேவையானதைப் பல்லாண்டுகட்கு முன்பே சொல்லி வைத்தவர் எங்கள் ஆசிரியர்,
“இளம்பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை ஒழிக்கத் தீர்வு என்ன?” என்ற வினா அவரிடம் கேட்கப்பட்டது. அடிமைத்தளை அறுத்தல் வேண்டும். வலுவான சட்டங்களைக் காலதாமதமின்றிச் செயல்படுத்தித் தண்டிக்க வேண்டும். விரும்பியவர்களுக்கு இலவசத் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும். வாலாட்டம் தானே அகலும் என்று விடை பகர்ந்தார்.
என்றைக்குமே எந்தநிலையிலும் எங்கள் ஆசிரியர் பகுத்தறிவில் குழப்பமிருந்ததில்லை.
‘அன்பே சிவம்‘ என்றார் திருமூலர். ‘அறிவே தெய்வம்‘ என்றார் பாரதியார். எது சரி? என்ற வினாவிற்குக் குழப்பமில்லாது ‘கடவுள் ஒரு குழப்பம்‘ என்றார் பெரியார் என்று தெளிவோடு தெளிவில்லாதோர் புரிந்திடப் பதில் தந்தார்.
‘வெள்ளையர் ஒருவர் இந்துவாக மதம் மாறச் சம்மதித்தால் அவரை எந்த ஜாதியில் சேர்ப்பது? அவருக்கு எந்த வர்ணத்தின் தர்மங்களைப் புகட்டுவது?’
வினா, விநோதமானதுதான். எங்கோ, எவரிடமோ கேட்க வேண்டிய வினாதான். ஆனாலும், எங்கள் ஆசிரியர் தமக்கே உரிய சியசிந்தனையுடன் விளக்கவுரை பகர்ந்தார். சிக்கலான கேள்வி. எப்படியிருந்தாலும் அவர் பிராமண ஜாதியில், வர்ணத்தில் சேர்க்கப்பட முடியாது என்பது உறுதி. சமயோசிதத்தில் வர்ண தர்மங்களை அவரே கற்றுக்கொள்ள முடியும் என்று.
இந்தியாவில் பொருளாதாரச் சீரழிவு நடைபெற்று வரும் இக்காலத்தில் எங்கள் ஆசிரியர், அதற்கான காரணங்களை முன் வைக்கிறார். அதனை எடுத்துக்கொண்டால் இந்தியர் சமூகம் பலன்பெறும்.
“இந்தியப் பொருளாதார வளர்ச்சி, குறைவதற்குப் பொருளாதாரக் கொள்கை மட்டும்தான் காரணமா?” என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ஆசிரியரின் பதில்,
“1) ஜாதி முறை 2) தலைவிதி நம்பிக்கை 3) பொருளாதாரக் கொள்கை. இவைகளின் கூட்டுதான் காரணங்கள் என்பதாகும்” என்றார். இவைகளை ஆளுபவர்கள், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தோர் உற்றுநோக்கித் தீயன அகற்றி, நல்லன கொண்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதுதானே உண்மை.
பார்ப்பனீயத்தை வென்றுதான் நம் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இன்னமும் குறைகளோடுதான் இச்சமூகம் வாழ்ந்து வருகிறது. அதற்கான போராட்டங்கள் விரைவு படுத்தப்படுமா? என்ற எண்ணத்துடன் கேட்கப்பட்ட ஒரு வினா.
“ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தபோது தமிழன் உரிமை காக்கப் போராடி வெற்றி பெற்றது போல, இன்று பார்ப்பனீயத்துடன் போராடி வெல்லத் தயங்குவதேன்?
தயக்கமில்லாத் தலைவரின் முன் வினவப்பட்ட வினா தயக்கம் ஏன் என்று. “ஆங்கிலேயர்கள் நாணயமான எதிரிகள். பார்ப்பனீயம் வஞ்சகம், சூது, வாது, அய்ந்தாம் படை ஆளுமை கொண்ட ஓர் அமைப்பு. ஆதலால், போராடி வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதே நேரத்தில் முடியாததுமல்ல” என்ற தன்வலிமை, தன்னைச் சார்ந்து இயங்கிடும் இயக்கத் தொண்டர்களின் வலிமை எப்படிப்பட்டது என்பதனை நினைந்து உறுதியுடன் வெல்வோம் என்று விடையாகத் தந்தார்.
‘தமிழர் பண்பாடு என்றால் என்ன?’ தெரிந்தெடுத்த வினாவினைத்தான் எங்கள் ஆசிரியரால் மதிக்கப்படும் எழுத்தாளர் அம்மையார் கேட்டார்.
“ஆரியக் கலாச்சாரம் வேறு, தமிழர் பண்பாடு வேறு தான். தாயை, தமக்கையை, மகளை வாடி, போடி என்று அழைக்காத ஒரு பண்பாடே தமிழர் பண்பாடு” என்றாரே பார்க்கலாம். இதுபோன்ற விடையினை யார்தான் தந்திருக்க முடியும்? எங்கள் பகுத்தறிவு ஆசிரியரால்தான் தரமுடியும். நாங்களும் அவரின் பதிலால் தமிழர் பண்பாட்டின் கூறுகளைத் தெளிவுடன் புரிந்து கொண்டோம்.
‘மனிதன் பகுத்தறிவினை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்‘ என்பதற்கான நிகழ்வொன்றைச் சொல்லுங்கள்’ என்றொரு வினா.
“காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் லீலைகளுக்குப் பிறகும் பக்தியா? கோவிலுக்குச் செல்லலாமா? என்ற நடந்த முறைகேடான செய்தியினைச் சான்றாக்கிப் பகுத்தறிவுப் பரவலுக்கு விடை பகர்ந்து மானிடச் சமூகத்திற்கு நல்வழி காட்டியவர்.
‘குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு’ என்பார் திருவள்ளுவர்,
பொய்யிலப்புலவன் கூற்றின்படி நம் ஆசிரியர் தன்னளவில் பிறர் விரல் நீட்டிக்காட்டிக் குற்றஞ் சாட்ட முடியாதவராய்த் திகழ்ந்து கொண்டு, தான் சார்ந்த மக்கள் சமூகத்தின் உயர்வுக்கும் நற்செயல் செய்து வாழ்ந்து வருகின்றவர் தானே. அவரை உலகம் தம் சுற்றமாய்க் கொண்டு கொண்டாடி மகிழத்தானே செய்யும் அதனால்தான் இந்நாட்டில் யாருக்கும் கிடைக்காத பெருமை, தந்தை பெரியாரின் சீரிய தொண்டராம் நம் ஆசிரியப் பெருந்தகைக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதினை உலக மனிதநேயர் கூட்டமைப்பு வழங்கிக் தம் அமைப்பினையும், தம்மையும் பெருமைக்குள்ளாக்கி வரலாற்றைச் செம்மைப்படுத்திக் கொண்டது.
இந்நாளில் அகவை 87 காணும் எங்கள் ஆசிரியர்! ‘சொலல் வல்லன் சோர்விலன்’ எனப் பசுமரத்தாணி’ போல் எவர் மனதிலும், எது பற்றியும் மாசின்றிப் பதியும் வண்ணம் கருத்தினை எளிதாய்க்கூறிப் பயன் எய்தச் செய்திடும் ஆசிரியர். எங்களுக்கு ஆசிரியர், என்றும் எங்கள் ஆசிரியராய், நல்ல உடல்நலம் உடையோராய் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திட வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில்- உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக் களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
(தந்தை பெரியார், ‘விடுதலை’,1.1.1962)
விடுதலை’,4.1.20)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக