வெள்ளி, 10 ஜனவரி, 2020

எந்த பெரியார் திடலிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினாரோ அந்த பெரியார் திடலில் நீதியரசர் மோகன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

தந்தை பெரியாரிடம் நெருக்கமாகவும், சட்டம் தொடர்பானவற்றில் தந்தை பெரியாருக்கு ஆலோசகராகவும் இருந்தவர் மோகன்

நீதிபதி மோகன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை

சென்னை, ஜன.8  தந்தை பெரியாரிடத்தில் மிகவும் நெருக்கமாகவும், சட்டம், வழக்குகள் தொடர் பானவற்றில் தந்தை பெரியாருக்கு ஆலோசகராகவும் இருந்தவர் நீதிபதி திரு.மோகன் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

7.1.2020 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக நடை பெற்ற நீதியரசர் மோகன் அவர்களுக்கான நினை வேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமை யேற்று உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

சட்டக் கல்லூரியில் எனக்கு ஆசிரியர்

மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும் உரிய ஒரு துன்பியல் நிகழ்ச்சியாக இது இருந்தாலும், வாழ்க்கை என்பது பகுத்தறிவாளர்களைப் பொருத்தவரையில், இன்பமும், துன்பமும் கலந்த ஒன்றே! எனவேதான், துன்பம் வருகின்ற நேரத்தில் துவண்டு விடக்கூடாது என்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய வழியைப் பின்பற்றிய ஒருவருக்கு, இன்றைக்குப் படத்திறப்பு. தந்தை பெரியார் எனக்கு ஆசானாக - அறிவாசானாகத் திகழ்ந்தார்கள். சட்டக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இங்கு படமாகவும், பாடமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அய்யா நீதியரசர் மோகன் அவர்கள் திகழ்ந்தார்கள்.

வெற்றி வீரராகவே இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுடைய தளபதி

அப்படிப்பட்ட அவர், நண்பர்கள் சொல்லியதைப் போல, இந்த மேடையில் பலமுறை முழங்கியிருக் கிறார்கள். ஒரு சிங்கத்தின் கர்ஜனைப் போல இருக்கும் அவரின் உரை! அவர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று சொல்வார், ‘‘எல்லோரும் நன்றாக வேகமாகக் கைதட்டுங்கள்; சில பேர் மட்டும்தான் கைதட்டுகிறீர்கள்? கைதட்டுவதில் கூட பஞ்சமா?'' என்று சொல்வதைக் கேட்ட பல பேர் இன்றைக்கும் இங்கே இருப்பார்கள். ஓர் அருமையான சான்றோர் பெருமகன்;   இன்றைக்குப் படமாக திகழ்ந்துவிட்டாரே என்ற துன்பியல் நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை மாற்றி நடக்கவேண்டியவர்கள் நடக்கவேண்டும் என்ற உணர்வோடு, அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நிகழ்ச்சிக்கு உடனே ஒப்புக்கொண்டு, பல்வேறு பணிகளுக்கிடையிலே இங்கே சிறப்பாக வந்து, ஒரு வெற்றி வீரராகவே இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களு டைய தளபதி அன்புச் சகோதரர் திராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களே,

சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு

தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ராஜூ

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான வகையில் அவ ரோடு பல ஆண்டுகள் பணியாற்றி, அவரைப் போலவே, உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, வரலாற்றுச் சிறப்புமிகுந்த சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு, ஜாதி ஒழிப்புக் கண் ணோட்டத்தோடு பல தீர்ப்புகளைக் கொடுத்திருக்கக் கூடிய அய்யா நீதியரசர் ராஜூ அவர்களே,

கலைஞர் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியரசர் ஏ.கே.ராஜன்

அதேபோல, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குக் காரணமான தீர்ப்புகளை மிகச் சிறந்த முறையில் வழங்கிய நீதிபதிகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.  உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த நீதிபதியும் இருக்கிறார்; அதனை அமல்படுத்துவதற்குக் கலைஞர் அவர்களாலே நியமிக்கப்பட்ட குழுவினு டைய தலைவராக இருந்த நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களும் இங்கே இருக்கிறார்கள்.

வரியியல் நிபுணர் அய்யா ராஜரத்தினம்

அதேபோல, சிறந்த ஆலோசனை சொல்லக்கூடிய அய்யா வரியியல் நிபுணர், மூத்தவர், 92 வயதிலும் இன்றைக்கும் உற்சாகத்தோடு எல்லோருக்கும் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய அய்யா ராஜரத்தினம் அவர்களே,

பேராசிரியர் அரசு செல்லையா

இந்த நிகழ்வில் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த அமெரிக்கப் பேராசிரியர் அரசு செல்லையா அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

நீதியரசர் குடும்பத்தின் சார்பில், நன்றியுரை கூறவிருக்கக்கூடிய அவருடைய அன்பு மகள் சுமதி  அவர்களே, மகன் கவுதமன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பாக நன்றியுரை கூறவிருக்கக்கூடிய அந்த அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களே,

எதிரே அமர்ந்திருக்கும் மேனாள் நீதிபதிகளே,  நாடாளுமன்ற உறுப்பினர்களான பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களான பெருமக்களே, தேர் வாணையக் குழுவின் மேனாள் உறுப்பினர்களான பெருமக்களே, பல்வேறு பொறுப்புகளில் இருக்கக் கூடிய பத்திரிகை ஆசிரியர்களே, நண்பர்களே, எல்லாவற்றையும்விட, அய்யா மோகன் அவர்களு டைய குருதிக் குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரர்களே, கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதியரசர் மோகனின் தமிழின உணர்வு

அய்யா நீதியரசர் அவர்களைப்பற்றி இங்கே நிறைய சொன்னார்கள். எனக்கு மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நான் சட்டக் கல்லூரியில் அவரு டைய மாணவன். சட்டக் கல்லூரியில் பெரும்பாலான வகுப்புகள் புறக்கணிப்படுவதுதான் வழக்கமாக இருக்கும், பல மாணவர்களுக்கு. பிராக்சி கொடுப்பது வழக்கம். ஆனால், நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு வகுப்பு என்றால், அது நீதியரசர் மோகன் அவர் களுடைய வகுப்புதான். ‘பிராப்பர்ட்டி' வகுப்பு எடுத் தார்கள். தமிழ் மன்றத்திற்கு அவர்தான் தலைவராக இருந்தார். அவருடைய தமிழின உணர்வைப் பார்க்கும்பொழுது வியப்பாக இருந்தது எங்களுக்குப் பிறகுதான் அவருடைய வரலாற்றை சொல்லும் பொழுதும், தந்தை பெரியார் அவர்களைச் சந்திக்கும் பொழுதும் தெரியும்.

கருப்புத் துணி வாங்கி சட்டை தைத்துக்கொண்டு...

அய்யா நீதியரசர் மோகன் அவர்களும், புலவர் நன்னன் அவர்களும் தூத்துக்குடி திராவிடர் கழக மாநாட்டிற்குச் செல்லும்பொழுது, கருப்புச் சட்டை இல்லாமல் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக, கருப்புத் துணி வாங்கி சட்டை தைத்துக்கொண்டு உள்ளே சென்றனர் என்ற வரலாற்றை இங்கே சொன்னார்கள்.

திராவிட இயக்கம் யாரையும் மறக்காது;

யாருக்கும் நன்றி செலுத்த மறக்காது!

எனவே, எங்கே அவருடைய பொதுவாழ்க்கை, அவருடைய தனி வாழ்க்கையைத் தாண்டி, மாணவப் பருவத்திலே தொடங்கியதோ, அதே அமைப்பு அவருக்கு இறுதி மரியாதை செலுத்துகிறது. அதிலும் திராவிட இயக்கத்தை இன்றைக்குக் கட்டிக் காப் பாற்றுகின்ற ஒரு தலைவருடைய கையாலே படம் திறந்து வைக்கின்ற மரியாதையை செய்கிறது என்றால், நிச்சயமாக திராவிட இயக்கம் யாரையும் மறக்காது; யாருக்கும் நன்றி செலுத்த மறக்காது; யாருக் கும் வீர வணக்கம் செலுத்த மறக்காது என்பதற்கு அடையாளமாகும்.

கொள்கை உறவு என்பது, ரத்த உறவைவிட பலமானதாகும். அந்த வகையில் அவர்கள் எல்லா வகையிலும்,  வித்தியாசமானவர். எனக்கு ஆசிரியராக இருந்தது ஒரு  கட்டம்; என்னை அவர் தோழனாக மதித்துக் கொண்டது இன்னொரு கட்டம். எல்லா வற்றிற்கும் ஆலோசனை சொல்பவராக இருந்தது ஒரு கட்டம்.

அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் நேரிடையாகத் தொடர்பில் இருந்தவர்

அய்யா தந்தை பெரியார் அவர்கள், மூத்த வழக் குரைஞராக இருந்தவர்களிடத்தில் கலந்தது, பேசியது என்று சொன்னால், எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள்; பின்னாளில் நீதிபதியாக ஆனார்கள். எல்லோருமே உயர்நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலும், அதிகமான அளவிற்கு நேரிடையாகவே பழக்கம், நினைவில் வைத்துக் கொண்டிருப்பவர் அய்யா நீதியரசர் மோகன் அவர்களாவார்கள்.

தந்தை பெரியார் அவர்களிடத்தில், அண்ணா அவர்களிடத்தில், கலைஞர் அவர்களிடத்தில் நேரி டையாகத் தொடர்பில் இருந்தவர்.

இதே மேடையில், கலைஞருக்கு  நினைவேந்தல் - மரியாதை செலுத்தும் நிகழ்வில் சொன்னார், ‘‘நான் ஒருமுறை கலைஞர் அழைத்த நேரத்தில் அவரை சந்திக்கச் சென்றேன். அவருக்காக நான் காத்துக் கொண்டிருந்தபொழுது, அப்பொழுது கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘நீங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கக்கூடாது; என்னை சந்திக்கவேண்டும் என்றால், நீங்கள் நேரிடையாக தாராளமாக வரலாம்; ஏனென்றால், உங்களுடைய நிலை வேறு'' என்று கலைஞர் அவர்கள் சொன்னார் என்று, நீதியரசர் சொன்னார்.

அவருடைய தீர்ப்புகள் எல்லாம்

சமுதாயத் தீர்ப்புகள்

அவ்வளவு தூரம் ஆலோசகராக  இந்த இயக் கத்திற்கு இருந்தார். அதேநேரத்தில், நீதி வழுவாத ஒரு நீதிபதியாக இருந்தார். அதுதான் மிகவும் முக்கியம். அவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற நிலை கிடையாது. அவருடைய தீர்ப்புகள் எல்லாம் சமுதாயத் தீர்ப்புகள். அதுதான் மிகவும் முக்கியமானது.

அனைத்து ஜாதியினரும்

அர்ச்சகராக சட்டம்

இன்றைக்கு ஜாதி ஒழிப்பிலே மிக முக்கியமான அம்சமாக நிறைவேற்றப்படவேண்டியது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்வது இருக்கிறதே, அது ஏதோ மோட்சத்திற்கு முன் சீட் ரிசர்வ் செய்வ தற்காக அல்ல. மாறாக, முழுக்க முழுக்க ஜாதி, தீண் டாமை ஒழிவதற்காக, தந்தை பெரியார் அவர்களால் வற்புறுத்தப்பட்ட ஒன்று. அதுவும் இரண்டு முறை சட்டமாக்கப்பட்டு, கலைஞர் அவர்களுடைய ஆட்சி யில், இரண்டு முறையிலும் அந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொல்லுவதற்குக் காரணமாக இருக்கிறவர் இங்கே இருக்கிறார்.

இன்னுங்கேட்டால், முதலில் அந்த வழக்கு நீதிமன் றத்தில் நடந்த நேரத்தில், சிறீபெரும்புதூர் ஜீயர் உள்ளிட்ட எதிர் வழக்காடியவர்கள் பெரிய வழக் குரைஞர்கள். அவர்கள் வாதாடுகின்ற நேரத்தில், எதிர்வழக்காடக் கூடிய நிலையில் இங்கே - கோவிந்தசாமிநாதன் அவர்கள் அட்வகேட் ஜெனராக இருந்தபொழுது, இவர்கள் கவர்மெண்ட் பிளீடராக இருந்தவர். கூட இருந்து  இவர்கள்தான் தத்துவ ரீதியாக எடுத்துச் சொல்லக்கூடியவர். அவர்கள் சட்ட ரீதியாகப் பேசினாலும்கூட, கொள்கை ரீதியாக, அந்த உணர்வுப்பூர்வமாக அய்யா மோகன் அவர்கள் எடுத்துச் சொல்லி, பல நேரங்களில் ‘‘அய்யா விடம் எடுத்துச் சொல்லுங்கள். இதோ வாதாடிய விவரங்கள்; நாங்கள் எங்கெங்கெல்லாம் சென்றோம்; கலைஞர் எப்படியெல்லாம் யோசனையை சொன் னார்கள்'' என்று சொல்லி, ஒரு கட்டை எடுத்து வைத்தார்.

என்னை  அழைத்து, அந்தக் கட்டை கொடுத்தார். இதுதான் தீர்ப்பு, நமக்கு சாதகமாகத் தெளிவாக வந்திருக்கிறது, அதனை அய்யாவிடம் எடுத்துச் சொல்லுங்கள்; நடைமுறைப்படுத்த வேண்டியதை கலைஞர் அவர்கள் பார்த்துக் கொள்வார், அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று தெளிவாகச் சொன்னார்.

திராவிட இயக்கத்தினுடைய

பெருமை

அய்யாவிடம் நான் சென்றவுடன், மோகன் அவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார் என்று கேட்பார்.

அண்ணா அவர்கள் காலத்தில், மிக முக்கியமான  ஒரு கட்டம். கலைஞர் அண்ணாவிற்குப் பிறகு முதலமைச்சராக வருகிறார். அதற்கு முன்பு அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். அய்யா மோகன் அவர்களுடைய வாழ்க்கை திராவிட இயக்கத்திலே தொடங்கியது என்றாலும், அவர்கள் நீதிபதியான பிறகும்கூட, நியாயபூர்வமாக என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்வார்; முறை கேடாக ஒருபோதும் நடக்கமாட்டார்; எந்தத் திராவிட இயக்கத்தவர்களும் நடக்கமாட்டார்கள், எந்த நிலைக்குச் சென்றாலும்; அதுதான் இந்த இயக்கத்தி னுடைய பெருமை.

அய்யா தந்தை பெரியார் அவர்கள் மருத்துவ மனையில் இருக்கிறார்; அண்ணா அவர்களுக்கு, அய்யா மருத்துவமனையில் இருக்கிறார் என்றவுடன் கவலை ஏற்பட்டு, உடனே மருத்துவமனைக்குச் சென்று தந்தை பெரியாரைப் பார்க்கிறார்.

தந்தை பெரியாரை மருத்துவமனையில் சந்தித்தார் முதலமைச்சர் அண்ணா!

‘‘என்னங்க, நீங்க வந்திருக்கீங்க? டாக்டர் என்ன சொன்னாங்க?'' என்று கேட்டார் தந்தை பெரியார்.

‘‘அய்யாவிற்கு உடல்நிலை சரியாகிவிடும் என்று சொன்னார்கள்'' என்று அண்ணா அவர்கள் சொன் னார்.

அண்ணா அவர்களைப் பார்த்தவுடன், உற்சாக மாக எழுந்து அமர்ந்துவிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும்; அதை அய்யா அவர்கள் பார்க்க வேண்டும் என்றார் முதலமைச்சர் அண்ணா அவர்கள்.

‘‘வீரமணி அவர்களை அனுப்புங்கள், முக்கியமான ஒன்றைக் கொடுத்து அனுப்புகிறேன்'' என்றார் முதல மைச்சர் அண்ணா அவர்கள்.

உடனே நான், தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் அண்ணா அவர்களை சந்தித்தேன்.

அண்ணா அவர்கள், ‘‘சட்ட அமைச்சர் மாதவன் அறைக்கு நீங்கள் சென்று வாருங்கள்'' என்றார்.

சட்ட அமைச்சர் அறை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. விசாரித்துக் கொண்டு போனேன். நிறைய பேர் இருந்தார்கள்; என்னைப் பார்த்தவுடன் அவர், வாங்க என்று அழைத்து, அலமாரியில் இருந்த ஒரு நீளமான கவரைக் கொடுத்து, இதனை நீங்கள் படித்துப் பாருங்கள் என்றார்.

அய்யாவின் கருத்துப்படி இருக்கிறதா?

அல்லது ஏதாவது மாறுதல் இருக்கிறதா?

அந்தக் கவரை எடுத்துக்கொண்டு, அய்யா அவர்களிடம் சென்றேன்.

‘‘அய்யா,  சுயமரியாதைத் திருமணத்திற்கான சட் டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். அந்த மசோதா, அய்யாவின் கருத்துப்படி இருக்கிறதா? அல்லது ஏதாவது மாறுதல் இருக்கிறதா? என்பதற்காக உங் களுடைய ஒப்புதலுக்காக கொடுத்து அனுப்பியிருக் கிறார்கள்'' என்றேன்.

அந்தக் கவரில் உள்ள செய்தியைப்  லேசாகப் பார்த்துவிட்டு, நான் அதிகமாக இதைப் பார்த்து சொல்வதைவிட, நாளைக்கு நம்முடைய எதிரிகள் இந்தச் சட்டம் செல்லாது என்று நீதிமன்றத்திற்குச் செல்வார்கள். ஆகையால், இந்தச் சட்டம் செல்லுமா? செல்லாதா? என்று ஆலோசனை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் பெயரை சொன்னார்.

சட்டம் தெரிந்தவர்களிடம் கொடுத்து

ஆலோசனை கேட்டு வாருங்கள்

அவர் இந்தப் பிரச்சினையில் ஈடுபாடு கொண்ட நீதிபதி பெயரைச் சொல்லிவிட்டு, அவரிடம் இதைக் காட்டுங்கள். அடுத்தபடியாக, நம்முடைய மோக னிடம் கொடுங்கள். அதேபோன்று இன்னும் இரண்டு பேரிடம். ஆக நான்கு பேரிடமும் இந்த சட்ட வரைவைக் கொடுத்து, இதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று பார்த்துச் சொல்லச் சொல்லுங்கள். ஏனென்றால், அரசு அதிகாரிகள் இந்த  சட்ட வரைவை போட்டிருப்பார்கள். சில நேரங்களில், அவர்களுடைய கண்ணோட்டம் வேறு. அது ஏதாவது சிக்கல் இருந் தால், நீதிமன்றத்திற்குச் சென்றுவிடுவார்கள். ஆகை யால், சட்டம் தெரிந்தவர்களிடம் கொடுத்து ஆலோ சனை கேட்டு வாருங்கள் என்றார்.

அய்யா சொன்னபடியே, அந்த வரைவை அந்த நான்கு பேரிடமும் கொடுத்து ஆலோசனை பெற்று வந்தோம். பிறகு அருமையாக அந்த சட்டம் நிறைவேறியது.

50 ஆண்டுகளுக்குப் பிறகும்....

50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சட்டம் செல் லுமா? என்று வழக்குத் தொடுத்து கேட்டார்கள்; செல்லும் என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு ஆலோ சனை சொன்னவர்களில் மிக முக்கியமானவர் அய்யாவினுடைய கண்ணோட்டத்தில் ஆலோசனை சொன்னவர் அய்யா மோகன் அவர்களாவார்கள்.

அதேபோன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கர். எப்படி இந்தத் தொடர்புகள் இருக்கிறது என்றால், சட்ட ரீதியாக அவர் எங்கிருந்தாலும், அதை செய்யக்கூடியவர்.

நீதித்துறையில், தீர்ப்பு எழுதும்போது, அய்யா நீதிபதி மோகன் அவர்களுடைய தீர்ப்பைப்பற்றி சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.

கலைஞர் அவர்களுடைய கடிதங்கள்,

காவியங்கள்!

கலைஞர் அவர்கள் மிகச் சிறந்த கவிஞர். ஏனென்றால், அவர் ஒரு தீர்ப்பைப் படித்தவுடன், ஒரு கடிதம் எழுதினார். கலைஞர் அவர்களுடைய கடிதங்கள், காவியங்கள். ஒவ்வொரு நாளும் தம்பிக்கு எழுதக்கூடிய, உடன்பிறப்புக்களுக்கு எழுதக் கூடிய கடிதங்கள் காவியங்கள்.

அப்படி எழுதும்போது, பல பேருக்கு ஒன்றை நினைவூட்டவேண்டும். நீதிபதி மோகன் அவர்களு டைய தீர்ப்பையே ஒரு கடிதமாக எழுதினார்.

அந்தத் தீர்ப்பில், பொறுப்பு, கடமை என்பது மிக முக்கியம். அந்தத் தீர்ப்பை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டே வரும்பொழுது, ஒரு கவிதை. அந்தத் தீர்ப்பைப்பற்றி நாங்கள் கீழமை வகுப்பில் படித்திருக்கிறோம்.

அந்தத் தீர்ப்பு என்னவென்றால், ஒரு பெரிய சண்டை நடக்கிறது. சண்டையில் தோல்வி ஏற்படு கிறது. ஏன் தோல்வி ஏற்பட்டது என்று எழுதுகின்ற நேரத்தில், அதை அலசுகின்ற வகையில் ஒரு ஆங்கிலக் கவிதை அது.

‘‘Because the Battle was Lost''

அதில்,

ஒரு ராணுவ வீரன் இருந்திருந்தால், தளபதிக்கு உறுதுணையாக இருந்திருப்பான். அவன் இல்லாத தினால், போர்ப் படை தோல்வி அடைந்தது.

அந்த ராணுவ வீரன் உரிய நேரத்திற்கு ஏன் வரவில்லை என்றால், அவன் பயணித்த குதிரையின் லாடத்தில் இருந்த ஆணி கழன்று விட்டது. உரிய நேரத்தில் அவன் வராமையால், யுத்தத்தில் தோற்க நேரிட்டது.

‘‘Because the battle was lost'' என்பதுதான் அதனுடைய தலைப்பு.

இதை கலைஞர் அவர்கள் படித்து மிகவும் ரசித்து, அதை அப்படியே தமிழ்ப்படுத்தி, ‘‘நீதிபதி மோகன் அவர்களுடைய தீர்ப்பு, வெறும் சாதாரண சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல, இலக்கியம் கலந்த, அதுவும் ஆங்கில இலக்கியம் கலந்த ஒரு சிறப்பான தீர்ப்பாக இருக்கிறது'' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அய்யா நீதியரசர் ராஜூ அவர்கள் பேசும்பொழுது சொன்னார். அய்யா நீதியரசர் மோகன் அவர்கள், ஆங்கிலத்தில் மிகப்பெரிய புலமை வாய்ந்தவர் என்று.

தந்தை பெரியார் பிறந்த நாள் மலரில்

எழுதிய கட்டுரை!

தந்தை பெரியாரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று அய்யா மோகன் அவர்களிடம் கட்டுரை கேட்டிருந்தோம்.

1969 ஆம் ஆண்டில், நீதிபதியாக அவர் ஆவதற்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரை இது.

LION HEARTED FIGHTER

In Nature's rhythm of evolution,

A man becomes a revolution - a revolution

Becomes a man; to shed a trail of glory

That remains ever blazing in history.

Symbolising hope and confidence for the forlorn,

Society's brightest star-ever to adorn;

Unshackling the ignorant from superstition,

Lion hearted fighter aginst regimentation.

Championing with endless zeal, atheism

Undaunted, ageless ‘hero of Vaikom';

Uncompromising with evils of religion,

Social reform is his life's mission.

PERIYAR - ever held in grateful veneration,

For, 'out-castes' are ended with this generation

இனிமே பெரியாருடைய காலத்திற்குப் பிறகு அவுட் காஸ்ட் என்றோ, ஒதுக்கப்பட்டவர்கள் என் பதோ இருக்காது. அந்த நிலை மாறும் என்று எழுதினார்.

இங்கே சொன்னதுபோன்ற, உலகக் கவிஞர்களு டைய அமைப்பிற்குத் தலைவராக ஒரு தமிழர் வந்தார் என்பது இருக்கிறதே, அதை நாம் நினைத்து  நினைத் துப் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

டென்மார்க்கில் நடைபெற்ற

உலக அமைதி மாநாட்டில்...

இன்னொரு செய்தி,

நாங்கள் இந்தியக் குழுவின் சார்பாக உலக அமைதி மாநாடு டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் நடைபெற்றது. அதற்கு எங்களைத் தேர்ந்தெடுத்து அழைத்திருந்தார்கள்.

எதிர்பாராமல்  அங்கே பார்த்தால், அய்யா நீதி யரசர் மோகன் அவர்கள், கவிஞர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் வந்திருந்தார்கள். கருத்தரங்கம் அங்கே தனித்தனிப் பிரிவாக நடைபெற்றது. ‘‘மனித உரிமைகள்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒரு பிரிவில் நடைபெற்றது. ஈழப் பிரச்சினை அன்றைய காலகட்டத்தில் வேகமாக  நடைபெற்றுக் கொண் டிருந்தது.

நான் உரையாற்றும்பொழுது,  மனித உரிமைகள் என்று எதை எதையோ பேசுகிறீர்கள்.  பக்கத்தில் ரத்த ஆறு ஓடுகிறதே என்று சொன்னவுடன்,

சிங்களவர்களாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடிய இரண்டு பேர் அங்கே வந்திருந்தார்கள். கருநாடக மாநில உயர்நீதிமன்ற நீதியரசர் மோகன் தலைமை தாங்குகிறார் அந்தக் கருத்தரங்கத்திற்கு.

நீதியரசர் மோகனுக்கு வந்த கோபம்....

அந்த சிங்கள நீதிபதி எழுந்து, ‘‘அவரைப் பேச விடக்கூடாது; அவர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுகிறார்'' என்று  சொன்னார்.

ஏனென்றால், ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி பேசுகிறோம் என்பதால்,

உடனே அய்யா மோகன் அவர்களுக்குக் கோபம் வந்து எழுந்து,

I am the President, I am adorning the chair.  You have no right to talk about him. Let him speak, Let him speak என்று சொன்னார்.

உடனே நான் வேகமாகப் பேசினேன்.

மனித உரிமை என்பதைப்பற்றி பேசும்பொழுது, அவர் ஏன் ஆத்திரப்படுகிறார். பாதிக்கப்படுகிறவர்கள், யாரால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக உள்ளவராக உள்ளதால்தான் அவருக்குக் கோபம் வருகிறது என்று சொன்னேன்.

உலக நாடுகளுக்கு எங்கே சென்றாலும்,

தமிழின உணர்வை அவர் விடவில்லை

ஆக, அப்பேர்ப்பட்ட அளவிற்கு, உலக நாடுகளில் எங்கே போனாலும், அய்யா நீதிபதி மோகன் அவர்கள் தமிழ் இன உணர்வை அவர் விடவில்லை.

கடைசியாக ஒன்று,

தந்தை பெரியார் அய்யா அவர்கள், ஒவ்வொரு முறையும் அய்யா மோகன் அவர்களை சந்திக் கும்பொழுது, ‘‘என்னங்க, நம்ம ஆட்சிதானே நடை பெறுகிறது. இன்னும் நீங்கள் நீதிபதியாகவில்லையா? நீங்கள் முயற்சி எடுக்கவில்லையா? எப்பொழுதுதான் நீங்கள் நீதிபதி ஆவீர்கள்'' என்று கேட்பார்.

ஏனென்றால், அய்யா அவர்கள், டைரியில், யார் யார் எப்பொழுது நீதிபதி ஆனார்கள்; எப்பொழுது ஓய்வு பெறுகிறார்கள் என்ற விவரத்தை குறித்து வைத்திருப்பார்.

அந்தக் குறிப்பைப் பார்த்துதான் கேட்டார்.

அடுத்த கட்டத்தில் எனக்கு அந்த வாய்ப்பு வந்துவிடும் என்றார் அய்யா மோகன் அவர்கள்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் மறையும் வரை அவர் நீதிபதி ஆகவில்லை. ஆனால், அய்யா அவர்கள் மறைவிற்குப் பின் நீதிபதியாகின்ற உத்தரவு வந்தது.

பெரியார் மறைந்துவிட்டாரே, இனிமேல் என்ன வென்று நினைக்காமல், அந்த ஆணையை முதலில் எடுத்துக்கொண்டு வந்த இடம் பெரியார் திடல்தான்.

நன்றி உணர்வு மிக்க மனிதர்

இன்றைக்கு நாங்கள் அவருக்கு படத்திறப்பு நிகழ்வை நடத்துவதற்குக் காரணம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு சிறந்த நன்றி உணர்வு மிக்க மனிதர் அவர் என்பதால்தான். மனிதநேயம் என்பது என்ன? சிறந்த மாமனிதர் என்று சொன்னார்களே, மாமனி தனுக்கு நன்றி உணர்ச்சிதான் மிகமிக முக்கியம். அந்த வகையில், நீதியரசர் மோகன் அவர்கள் சிறப்பானவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் ஆகியோருடைய கருத்துகள், சட்டங்களில் அவருடைய ஆலோசனைகள் இருந்தது. அதற்குத் துணை புரிந்த நீதிபதிகள், இங்கே அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.

துணிச்சலாக கடைசி வரையில்

கருத்துகளை சொன்னவர்

நீதியரசர் மோகன்  அவர்கள் ஓய்வு பெற்ற பிறகுகூட, ஒதுங்கவில்லை. வெளிப்படையாக, கொஞ்சம்கூட தயங்காமல், துணிச்சலாக கடைசி வரையில் கருத்துகளை சொன்னார்கள். அப்படிப் பட்ட நீதியரசர் மோகன் அவர்கள், ஒரு தலைசிறந்த நீதியரசர்.

மனிதநேயத்தோடு

தீர்ப்பு எழுதியவர்!

எல்லாவற்றையும்விட,  சிறந்த கொள்கையாளர்; கட்சிக்காரர் அல்ல; கொள்கையாளர். அதுதான் மிக முக்கியம். கட்சி வேறு, கொள்கை வேறு. கொள் கையைவிடாமல், அந்தக் கொள்கையோடு கடைசி வரையில் அவர்கள் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட வர்கள் மனிதநேயத்தோடு தீர்ப்பு எழுதினார்கள். அந்த மனிதநேயக் கண்ணோட்டம் இன்றைக்கும், என்றைக்கும் நம்மை வழிநடத்தும்.

எனவே, அவர் வெறும் படமாக இல்லை; நமக்குப் பாடமாகத் திகழ்கிறார் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, அந்தக் குடும்பத்தினரும் ஆறுதல் அடையவேண்டும் என்று கூறி, நீண்ட காலமாக இந்தக் குடும்பத்திற்குத் தொடர்பு உண்டு. அவருடைய சகோதரர்  அணு அவர்கள் மிகத் தீவிரமான பெரியார் தொண்டர். பெரியாருடைய கொள்கையாளர்.  அவர் ‘நவ இந்தியா' பத்திரிகையில் பணியாற்றியவர். அதுபோல, அய்யா சண்முகசுந்தரம் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.

அவர்கள் தமிழ்ச் சங்கத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி, எங்களைப் போன்ற எல்லோரையும் அழைத்த வர்கள்.

அப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்ற ஒரு நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம்.

அந்தக் குடும்பத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்த அய்யா நீதியரசர் மோகன் அவர்கள், இன்றைக்குப் படமாகவும், பாடமாகவும் திகழ்கிறார் என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வளர்க நீதியரசர் மோகன் அவர்களுடைய புகழ்! வாழ்க மனிதநேயம்!

உதவியாளர் ராஜூ பாராட்டப்பட வேண்டியவர்!

இந்த நேரத்தில் ஒன்றை சொல்லவேண்டும், நம்முடைய அய்யா நீதிபதி அவர்கள், அவருடைய வாழ்விணையர் திலகவதி அம்மையாரை இழந்த நிலையில், அவருக்கு மிகப்பெரிய சங்கடமான சூழல். அதிலிருந்து அவர் மீள்வதே அவ்வளவு சுலபமாக இல்லாத நிலையில், பல நேரங்களில் அவருக்கு உடல்நலக் குறைவு - சங்கடங்கள் என்றால், அவருக்கு உறுதுணையாக இருந்து உதவியவர் அவருடைய உதவியாளர் ராஜூ அவர்கள். அவரைப் பாராட்ட வேண்டும்.

ஆகவே, இவரைப் பாராட்டவேண்டிய நேரத்தில், அவருடைய தொண்டுக்கும், உதவிகளுக்கும் இந்த அரங்கம் அவரைப் பாராட்டுகிறது, நன்றி செலுத் துகிறது.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


நீதியரசர் ச.மோகன் உருவப்படத்தைத் திறந்து வைத்து தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நீதிபதி நான்’ எனத் துணிவுடன் தன்னைக் கூறிக் கொண்டவர்!

நமக்குப் ப(ர)டமாக இருக்கும் நீதியரசர் விட்டுச் சென்ற கொள்கையைக் காப்பாற்ற உறுதி ஏற்போம்!!

சென்னை,ஜன.8, நீதியரசர் மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று  மாலை (7.1.2020) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   நீதியரசர் ச.மோகன் படத்தைத் திறந்து வைத்து  திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்உரையாற்றினார்.  அவர் உரை வருமாறு:

நீதியினுடைய அடையாளமாக, நேர்மையின் அடையாள மாக, கொள்கையின் அடையாளமாக விளங்கியவர் நீதியரசர் மோகன். நீதியின் அடையாளமாக மட்டுமின்றி, சமூகநீதியின் அடையாளமாகவும் விளங்கியவர் நீதியரசர் மோகன் அவர் கள். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காலையில் மதுரை செல்வ தற்காக விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, நீதியரசர் மோகன், உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், உடல்நிலை மோசமாக இருக்கிறது, என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. செய்தி கிடைத் தவுடன், விமான நிலையம் செல்லும் முன்னரே நேரடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குத் தான் சென்றேன்.

அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந் தார். நானும், டி.ஆர். பாலு அவர்களும் அவரைப் பார்க்க உள்ளே சென்றோம். எங்களைப் பார்த்ததும் என் கையைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்தார். நான் அருகில் சென்று என் கையைக் கொடுத்தேன். அழுத்தமாக பற்றிக் கொண்டார். மூக்கில், வாயில் எல்லாம் குழாய்கள் செருகப்பட்டிருந்ததால் அவரால் பேச இயலவில்லை. அவருடைய குடும்பத்தார் - மகன், மகள் அனைவரும் - அருகில் நின்று கொண்டிருந்தனர்.  “உடல்நிலை விரைவில் சரியாகி விடும். தைரியமாக இருங் கள்” என்று அவரிடம் அப்போது கூறினோம். உடனே கண் அசைவுகள் மூலம், எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தை யும் அளித்தார். அப்படிப்பட்ட அவர் இன்று நம்மிடையே இல்லை. திராவிட இயக்கத்தைச் சார்ந்த நீதிபதி என்று தன்னைத் துணிச்சலாக கூறிக் கொள்ளக்கூடிய ஒருவர் நீதியரசர் மோகன்.

தள்ளாத வயதிலும்

கலைஞரைப் போற்றி உரையாற்றியவர்

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தலைவர் கலைஞர் அவர்கள் மறைவெய்தியதற்கு பின்னர், அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் சார்பில் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்கள் நீதியரசர்களை அழைத்து இதே பெரியார் திடலில் தலைவர் கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத் தில் தனது தள்ளாத நிலையிலும் நீதியரசர் வந்து பங்கேற்றுப் பேசிய நிகழ்வை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. நான் அப்போது உங்களைப் போல கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கலைஞரால்தான் நான் நீதியரசர் ஆனேன் என்று சொன்னார். மேடையில் அமர்ந்திருக்கும் நீதியரசர்கள் அனைவரும் கலைஞரால் உருவாக்கப்பட்ட வர்கள் என்று சொன்னார். நீதியரசர்கள் யாரும் அப்படி தைரியமாக, வெளிப்படையாக கூறமாட்டார்கள். பதவிக் காலம் முடிந்த பின்னர் கூட கூறலாம். ஆனால், பதவியில் இருந்த போதே இந்தக் கருத்தைச் சொன்னவர் நமது நீதியரசர் மோகன்.

பெரியார் நூற்றாண்டு விழா அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் நீதியரசர் பங்கேற்றார்

1978இல் இதே பெரியார் திடலில், தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நீதியரசர் வரதராசன், நீதியரசர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் பெரியார் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அப் போது, ‘தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் நீதியரசர்கள் பங்கேற்கலாமா?’ என்ற பெரிய சர்ச்சையே ஏற்பட்டது. அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தைரியமாக வந்து கலந்து கொண்டவர்தான் நீதியரசர் மோகன்.

நீதிபதியாக அனைத்து

உயரங்களையும் தொட்டவர்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, கருநாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக அனைத்து உயரங்களையும் தொட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் பெருமைப் படுகிறோம்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலரது முகத்தைப் பார்த்தால் பெரிய மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட முகத்துக் குச் சொந்தக்காரர்களாக இருந்தோரில் ஒருவர் நீதியரசர் மோகன். ஒருமுறை, தலைவர் கலைஞர் அவர்களின் புத்த கத்தை நீதியரசர் மோகன் வெளியிட்டார். அதேபோல நீதியரசர் மோகன் அவர்களின் புத்தகத்தை தலைவர் கலை ஞர் அவர்கள் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாடும் குருவி’. ஆங்கிலத்தில் வெளி வந்ததன் தமிழ் மொழி பெயர்ப்பு. அப்போது, ‘எங்கள் வீட்டில் குருவிகள் எல்லாம் பாடாது, ஒருவேளை மோகன் வீட்டுக் குருவிகள் எல்லாம் பாடுமோ என்னவோ தெரியாது’ என்று வேடிக்கையாக கலைஞர் சொன்னார். அதற்கு, ‘தலைவரே நீங்கள் குயில் பாடுவீர்கள். நான் குருவி. பாட முயற்சிக்கிறேன்’ என்று நீதியரசர் மோகன் கூறினார். இப்படி உடனடியாக நீதியரசர் பதில் சொன்னதை கலைஞர் ரசித்து, ‘நீங்கள் உண்மையிலேயே நீதிபதிதான்’ என்று பாராட்டி உள்ளார்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, பல் வேறு நீதி விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டதுண்டு. அவற்றில் அதிகமானவற்றில் இடம்பெற்றவர் நீதியரசர் மோகன். அந்த அளவுக்கு தலைவர் கலைஞர் அவர் மீது நம்பிக்கை வைத்து நியமித்திருக்கிறார். காரணம், நீதியரசர் மோகன் தலைமையிலான ஆணையத்திடம் ‘நீதி கிடைக்கும்; நீதிமட்டுமே வழங்கப்படும்’ என கலைஞர் அழுத்தமாக நம்பி இருக்கிறார்.

தந்தை பெரியாரின் சமூகநீதி, அறிஞர் அண்ணாவின் மொழிப்பற்று, தலைவர் கலைஞர் அவர்களின் தமிழர் நலன் காக்கும் அக்கறை ஆகிய இந்த மூன்றிலும் பங்கு கொண்டவர் நீதியரசர் மோகன். திராவிட இயக்கத்தைப் பொறுத்த வரை எத்தனையோ மருத்துவர்களை உருவாக்கி இருக்கிறது. ஆசிரியர்களை, பேராசிரியர்களை உருவாக்கி இருக்கிறது. வழக்குரைஞர்களை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல; நீதியரசர்களையும் உருவாக்கி இருக்கிறது என்றால் அதில் வியப்படைய ஏதுமில்லை. அதற்கு உதாரணமாக நீதியரசர் கோகுல கிருஷ்ணன், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், நீதியரசர் மோகன், நீதியரசர் சிவசுப்பிரமணியன், நீதியரசர் சாமிதுரை என நீண்ட பட்டியலே போடலாம்.

'பராசக்தி'யில் நீதிமன்றத்தையே கொள்கை மேடையாக்கியவர் கலைஞர்

‘நீதி கெட்டது யாரால்?’, என்று எழுதிய தந்தை பெரியாரால், ‘நீதிதேவன் மயக்கம்’ என்று எழுதிய அறிஞர் அண்ணாவால், பராசக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதி நீதிமன்ற மேடையினையே கொள்கை மேடை ஆக்கிக் காட்டிய தலைவர் கலைஞர் அவர்களால், பல நீதிபதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். நீதியரசர் மோகன் அவர் களின் புகழைக் காலத்தால் நிச்சயமாக அழித்திட முடியாது.

என்மீது அதிக அளவு அன்பு கொண்டவர், என் வளர்ச்சி யில் அக்கறை எடுத்துக் கொண்டவர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் என்னுடன் தொலைபேசியில் உரையாடு வார். பத்திரிகை, ஊடகங்களில் வரும் செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு, உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் கூட, அக்கறையுடன் என்னைத் தொடர்பு கொண்டு செய்திகளைப் பற்றி விசாரிப்பார். அறி வுரைகள், ஆலோசனைகள் எல்லாம் வழங்கி இருக்கிறார்.

என்மீது கொண்டிருந்த பாசம் கண்டு பரவசப்பட்டேன்

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, திடீரென ஒருநாள் இரவு, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நாளை காலை நான் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். நேரடியாக வந்து விஷயத்தை உங்களிடம் கூறுவார். என்ன என்று கேளுங்கள்’ என எனக்கு உத்தரவிட்டார். அதன்படி அவரால் அனுப்பி வைக்கப்பட்டவரும் அறிவாலயத்திற்கு வந்தார். வந்தவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘உங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்களது “இமேஜை” உயர்த்தப் போகிறேன். அதற்குத்தான் நீதியரசர் அய்யா என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்’ என்று சொன்னார். சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அடுத்த பத்து நிமிடங்களில் நீதியரசர் மோகன் தொலை பேசி மூலமாக எனைத் தொடர்பு கொண்டார். ‘வந்தவர் உங்களைப் பார்த்தாரா, என்ன சொன்னார்’ என்ற விவரங் களை அக்கறையுடன் விசாரித்தார். என்மீது அவர் வைத்திருக் கும் பாசத்தை எண்ணிப் பார்த்து பரவசப் பட்டேன்.

தலைவர் கலைஞரிடம் பற்றும், பாசமும் கொண்டவர் நீதியரசர் மோகன். தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு, ராஜாஜி மண்டபத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த போது, தலைவர் கலைஞருக்கு மரியாதை செய்ய - அப்போது வந்திருந்த கூட்டம் எப்படிப்பட்ட கூட்டம் என்பது உங்க ளுக்கு தெரியும். உள்ளே நுழைய முடியாத கூட்டம் கூடியிருந்தது - அந்தக் கூட்டத்திலும் உடல் நலிவுற்ற நிலையிலும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, நேரடியாக வந்து தலைவரின் உடலுக்கு நீதியரசர் மோகன் மரியாதை செலுத்தி விட்டு அழுத அந்தக் காட்சியை என்னால் மறக்கவே இயலாது. அந்த அளவுக்கு கலைஞர் இவர் மீது நட்பு கொண்டிருந்தார். அவர் இன்று நம்மிடையே இல்லை.

கொள்கைகளைக் காப்பாற்ற உறுதியேற்போம்

அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்னது போல, அவர் இன்றைக்கு படமாக மாறி இருந்தாலும், நமக்கெல்லாம் பாடமாக மாறி இருக்கிறார். அவர் வழிநின்று, அவர் விட்டுச் சென்றிருக்கும் கொள்கைகளைக் காப்பாற்ற உறுதி எடுக்கும் நிகழ்ச்சியாக இதனைக் கருத வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு, நன்றி கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.

- இவ்வாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


நினைவேந்தல் நிகழ்ச்சியில் மேனாள் நீதிபதிகள் புகழாரம்

தந்தை பெரியாரின் சமூகநீதிப் பார்வையில் சட்டப்படியாக

சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர் ஜஸ்டிஸ் மோகன்!

- நமது சிறப்புச் செய்தியாளர் -

சென்னை, ஜன. 8- தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த வழியில் சமூகநீதிப் பார்வையில் சட்டப்படியான தீர்ப்புகளை வழங்கியவர் ஜஸ்டிஸ் எஸ்.மோகன் என்று மேனாள் நீதிபதிகளும், அறிஞர்களும் புகழாரம் சூட்டினர்.

மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எஸ். மோகன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை - பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில், திராவிடர் கழக சட்டத்துறையின் சார்பில் நேற்று (7.1.2020) மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

மன்றம் நிரம்பி வழியும் அளவுக்குப் பார்வையாளர் கள் கூடினர். ஜஸ்டிஸ் மோகன் அவர்களின் குடும்பத் தினரும் - உறவினர்களும் வருகை தந்தனர். பல்வேறு துறைப் பெருமக்களும் வந்திருந்தனர்.

1930ஆம் ஆண்டில் பிறந்த மோகன் 2019இல் மறை வுற்றார். மாணவர் பருவந்தொட்டே தந்தை பெரியார் கொள்கையில் பற்று கொண்டவர். 1948ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட் டிற்குக் கருப்புச் சட்டையுடன் சென்று பங்கு கொண்டவர்.

படிக்கும் காலத்தில் சிறந்த மாணவராக விளங்கி பல பரிசுகளையும் தட்டிச் சென்றவர் ஆவார்.

சட்டக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவும், அரசு வழக்குரைஞராகவும் (பிளீடர்), சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாகவும், கருநாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். புகழ்பெற்ற தீர்ப்புகளையும் வழங்கியவர் ஆவார்.

தந்தை பெரியார் கொள்கை ஏற்றவர் என்று சொல் வதிலோ, திராவிட இயக்க ஆர்வலர் என்று சொல்லிக் கொள்வதிலோ தயக்கம் காட்டாதவர் ஆவார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களிடத்தில் நெருக்க மாகவும், வழக்குகளில் ஆலோசகராகவும் இருந்து வந்தவர்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டது போல தந்தை பெரியார் அவர்களிடத்தில் சட்ட ஆலோ சனைகளில் வழக்குகளில் அதிக நெருக்கமாக இருந்தவர் ஜஸ்டிஸ் மோகன் ஆவார் - சுயமரியாதைத் திருமணச் சட்டம் உட்பட.

தமிழர்களில் சாதனையாளர்கள், பெருமைமிக்க வர்கள், உழைப்பால் உயர்ந்தவர்களைப் போற்றுவதும், விருதுகள் அளிப்பதும், மறைந்தால் அவர்களுக்கு நினைவேந்தல்  - படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர் களின் சிறப்புகளை, சாதனைகளைப் பதிவு செய்வதும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் திரா விடர் கழகத்தின் மரபாகவே ஆகிவிட்ட ஒன்றாகும்.

அந்த வகையில் தான் திராவிடர் கழகம் - அதன் சட்டத்துறை ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்று உரையாற்றினார்.

1978 செப்டம்பர் 17ஆம் தேதி - தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கமாகும். தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்தவர் ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் என்பதை நினைவூட்டினார் திராவிடர் கழகத் துணைத் தலைவர். அந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துகளை நினைவு கூர்ந்தார்.

சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள நடைபாதைக் கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்று கூறினார். பார்ப்பன ஏடுகள் பாஷாணத்தில் தோய்த்த அம்புகளை ஏவின - அந்த நேரத்தில் 'விடுதலை'யில் 'துள்ளாதே ஆரியமே!' நீதிபதி சொன்னது சட்டப்படியான கருத்தே என்று தலையங்கம் தீட்டினார் 'விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி என்று வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தில் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சி முக்கியமானது. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த புரபசர் கே.ஆர்.குமார் தமிழ்நாடெங்கும் மந்திர மல்ல; தந்திரமே என்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவர் ஆவார்.

சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரபசர் கே.ஆர்.குமார் சென்னை - அண்ணா சாலை, அண்ணா சிலையிலிருந்து கண்களைக் கட்டிக் கொண்டு மோட்டார் பைக்கில் பல முக்கிய சாலைகளைக் கடந்து பெரியார் திடலுக்கு வருவார் என்று விளம்பரம் செய்யப்பட்டது - ஏகப்பட்ட மக்கள் கூடினார்கள்.

சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலையிலிருந்து மோட்டார் பைக்கில் புறப்பட இருந்த புரபசர் கே.ஆர்.குமாரின் கண்களைக் கட்டிவிட்டவர் தான் அன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் மோகன் என்று, கழகத் துணைத் தலைவர் குறிப்பிட்டபோது பலத்த கைதட்டல்!

படத்திறப்பு

வரவேற்புரை முடிந்தவுடன், திமுக தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மறைந்த ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்தார். நீதிபதியின் மகன், மகள், சகோதரர் மற்றும் குடும்பத்தினர் சூழ உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

பேராசிரியர் அரசு செல்லையா

அமெரிக்கா - வாசிங்டனில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அரசு செல்லையா நிகழ்ச்சியில் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

ஜஸ்டிஸ் மோகன் அமெரிக்கா வந்திருந்தபோது அவரை வரவேற்ற நிகழ்ச்சியையும், உலகக் கவிஞர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசியதையும் நினைவு கூர்ந்தார். அமெரிக்காவில் பேசும்போது சயின்ஸ் பாடங்கள் கூட தமிழில் சொல்லிக் கொடுக்கப் பட வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் ஒருவர் சயின்சை தமிழில் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும், அது சாத்தியமா என்று கேட்டபோது 2000 ஆண்டு வரலாறு படைத்த தமிழ் செறிவான மொழியாகும். அதன்மூலம் விஞ்ஞானப் பாடங்களைத் தமிழிலும் சொல்லிக் கொடுக்க முடியும் என்று ஆணித் தரமாக அவர் பேசியதைப் பசுமையாக நினைவு கூர்ந்து பேசினார் பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள் (அவர் வாழ்விணையரோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்).

வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம்

பெரியார் திடலுக்கு நான் வர ஆரம்பித்ததிலிருந்து பல தரப்பட்டவர்களைச் சந்திக்கும், அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்ததுண்டு. அதில் மிகவும் முக்கியமானவர் ஜஸ்டிஸ் மோகன் ஆவார்.

ஓய்வு பெற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் அனுபவங்கள் சமுதாயத் திற்குப் பயன்பட வேண்டும் என்றும் மோகன் அவர்கள் கூறிய கருத்தினை சிறப்பாகப் பதிவு செய்தார்.

நீதித்துறையில் குறிப்பாக வழக்குரைஞர்கள் வாதங் களால் வெல்லுவதைவிட அழகு ஆங்கிலத் திறனால் வெல்லுவதை தன் அனுபவத்திலிருந்து ஜஸ்டிஸ் மோகன் அவர்கள் கூறியதை நினைவுபடுத்தினார்.

குறிப்பாக பிரபல வழக்குரைஞர் பல்கிவாலா அத்தகையவர் என்றும் குறிப்பிட்டார்.

தமிழக மூதறிஞர் குழுத் தலைவர்

ஜஸ்டிஸ் திரு.ஏ.கே.ராஜன்

மோகன் அவர்கள் பன்னாட்டுச் சட்டம் (International Law), இந்திய அரசமைப்புச் சட்டம் (Constitutional Law) இரண்டிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஆவார்.

தந்தை பெரியார் கொள்கைப் பாங்கோடு எதையும் சிந்தித்து சொல்லக்கூடியவர் மோகன் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறினார் நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் அவர்கள்.

கீழமை நீதிமன்றங்களில் கூட ஆங்கிலத்தில் தான் செயல்பாடுகளும், தீர்ப்புகளும் இருந்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மோகன் அவர்கள் கீழமை நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்பு எழுத வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிய தைச் சுட்டிக் காட்டினார்.

விமானப் பணிப் பெண்களின்(Air Hostess) பணிக் காலம் 35 வயது முடிந்து விட்டால் அவர்கள் மேற் கொண்டு பணியாற்ற முடியாது என்ற நிலை இருந்தது.

இது தொடர்பான வழக்கில் 35 வயதுக்கு மேலும் அப்பெண்கள் பணியாற்றலாம் என்று தீர்ப்பு வழங்கிய வர். இது பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனை வழியில் வழங்கப்பட்ட தீர்ப்பே என்றார் ஏ.கே.ராஜன் அவர்கள். சமூக நீதி தொடர்பான மற்றொரு தீர்ப்பு முக்கியமானதாகும்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்கள் அரசுக்கு உரியது. இந்த இடங்களில் சேருவ தற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், மீதி 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரி நிருவாகத்தினர் முடிவு என்றும் முக்கியமானதோர் தீர்ப்பை வழங்கியவர் ஜஸ்டிஸ் திரு.மோகன் ஆவார் என்று சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டார்.

எதிலும் மோகன் அவர்களின் பார்வை தந்தை பெரியாரின் சமூக நீதிக்கானது என்றும் விவரித்தார்.

மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ராஜூ

சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி., படித்த போதும், சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோதும் மோகன் கல்வியில் சிறந்த முறையில் ஒளி வீசியதையும், தங்கப்பதக்கங்களைக் குவித்ததையும் சிலாகித்தார் ஜஸ்டிஸ் டி.ராஜூ அவர்கள்.

உரிமையியல் துறை அரசு வழக்குரைஞராகவும், வணிக வரித்துறை அரசு வழக்குரைஞராகவும் பணியாற் றியுள்ளதையும் குறிப்பிட்டு, படிப்படியாக உயர் பதவி களில் தனது திறமையால் உழைப்பால் வளர்ந்து வந்தவர் மோகன் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியவர் ஜஸ்டிஸ் எஸ்.மோகன் என்றும் குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றபோது தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய வழக்குரைஞர் குழுவில் மோகன் முக்கியமானவர் என்றும் குறிப்பிட்ட நீதிபதி டி.ராஜூ அவர்கள் வழக்குரைஞராக இருந்த போது ஒவ்வொரு மாதமும் - பெரியார் திடலுக்கு மோகன் அவர்களுடன் வந்து தந்தை பெரியார் அவர் களை சந்தித்ததை வழமையாகக் கொண்டிருந்ததையும் பசுமையாக நினைவு கூர்ந்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். எந்தப் பொருள் பற்றியும் எந்த நேரத்திலும் பேசக்கூடிய பேராற்றல் படைத்தவர் ஜஸ்டிஸ் மோகன் என்றும் புகழாரம் சூட்டினார் ஜஸ்டிஸ் டி.ராஜூ.

(நிகழ்ச்சிக்கு வருமுன் தந்தை பெரியார் நினைவிடத் திற்குச் சென்று மரியாதை செலுத்திய பிறகே மேடைக்கு வந்தார்).

தொடர்ந்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், படத்தினைத் திறந்து வைத்த தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் உரையாற்றினர். (பேச்சு வேறு பக்கங்களில்).

நன்றியுரைகள்

ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் அவர்களின் மகள் சுமதி சுப்பிரமணியன் தனது தந்தை மோகன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று வாழ்ந்தவர். மாணவராக இருந்தபோதே 1948இல் தூத்துக்குடி திராவிடர் கழக மாநாட்டிற்குச் சென்று வந்தவர் என்றும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் கூறி இப்படியொரு சிறப்பான நிகழ்ச்சியை தமது தந்தையாருக்கு சிறப்பாக நடத்தித் தந்தமைக்குத் தமது நன்றிப் பெருக்கைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று தமது தந்தையாரின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து சிறப்பு செய்த தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் ஜஸ்டிஸ் மோகன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் ஜஸ்டிஸ் மோகன் அவர்களின் மகன் கவுதம் சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.

வழக்குரைஞர் த.வீரசேகரன்

திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன் இறுதியாக நன்றி கூறினார்.

சென்னை சட்டக் கல்லூரி விடுதி செயலாளராக இருந்த போது, விடுதி ஆண்டு விழாவிற்கு ஜஸ்டிஸ் மோகன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தந்தை பெரியார் படத்தினைத் திறக்கச் செய்ததையும், ஆசிரியர் வீரமணி அவர்களை அழைத்து காமராசர் படத்தைத் திறக்கச் செய்ததையும் எடுத்துக் கூறி தன் நன்றியுரையை நிறைவு செய்தார் வழக்குரைஞர்த.வீரசேகரன்.

7 மணிக்குத் தொடங்கி 8.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.

 -  விடுதலை நாளேடு, 8.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக