தந்தை பெரியாரின் சுய விமர்சனம்
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (24.12.2019) திராவிடர் கழகத் துணைத் தலைவர் வானொலியில் உரையாற்றினார்.
அவ்வுரையின் விவரம் வருமாறு:
தந்தை பெரியார் யார்?
தன்னைப்பற்றிய அவரின் சுய விமர்சனம், மதிப்பீடு என்ன என்பது வித்தியாசமானது.
ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் மதிப்பீடு செய்வதைவிட, தன்னைப் பற்றித்தானே மதிப்பீடு செய்வது - அந்த மனிதரைப்பற்றித் துல்லியமாக உணரு வதற்கு - தெரிவதற்கு சரியானதாகவே இருக்க முடியும்.
அந்த வகையில் தந்தை பெரியார் தன்னைப்பற்றி, எப்படி விமர்சித்துக் கொள்கிறார்?
இதோ பெரியார் பேசுகிறார்:
நான் ஒரு சுதந்திர மனிதன்
எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவை களால் பரிசீலனை செய்து ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளை தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன்.
எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால், அது நியாயமும், ஒழுங்கும் ஆகாது.
உங்களுக்கு இவை உண்மையெனப் புலப்படுமாகில் அவைகளை, உண்மையென ஒப்புக் கொள்வதில் மட்டும் பிரயோஜனமில்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்!
எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங் களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவை களை ஆராய்ந்து அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை!
நான் யார்?
நான் எனக்குத் தோன்றிய , எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லு கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத் தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத் துக்களே தவிர பொய்யல்ல.
(விடுதலை. 15.7.68; 3:1)
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக் கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
- (விடுதலை, 8.9.39; 1:4)
நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்த சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயே தான், நான் என் வாழ் நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண் டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தி, தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
(குடிஅரசு. 24.11:40; 5:4)
என்னைப் பொறுத்தவரையில் நான் என்றும் கட்சிக் காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள் கைக்காரனாகவே இருந்தேன்.
(விடுதலை. 1.6.54; 1:3)
நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப் பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன்.
நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்வி டத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ் வாழ்வே இவ்விழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்,
(குடிஅரசு.. 1.5. 48; 1:8)
‘‘தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு” என்றார் காந்தியார், அப்போது நான், ‘‘கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப் படுத்தும் இழி வுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாம லேயே சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்க வேண்டு மென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல’’ என்றேன்.
(விடுதலை. 9.10.57; 3:2)
இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்களுக்கு வராமல் தடுக்கக் கூடிய வர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரண மான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு, கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.
(விடுதலை, .4.11.61; 3:3)
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள் தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சமமனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க் குப் பரிகாரம்.
(விடுதலை, 15.10.67; 2:1)
எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடைய வில்லை . ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.
(குடிஅரசு, 19.1.36; 8:2)
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.
(குடிஅரசு, 7.8.38; 19:4)
என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.
(குடிஅரசு, 25.8.40; 13:1)
எனக்குச் சுய நலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும், சுய நலமும் எல்லையற்றன. திராவிடச் சமுதாய நலனையே என் சொந்த நலனாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுய நலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.
(விடுதலை, 15.1.55; 2:3)
யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்ற பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.
(விடுதலை, 27.7.58; 3:5)
எனது கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், எனது கருத்துக்கள் மற்றவர் களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும், உண்மையை எடுத் துரைப்பதுதான் எனது வாழ்க்கையின் இலட்சியம்.
(விடுதலை, 28.9.58 ; 1:1)
நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமு தாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக் கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதையும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக்கிறேன்.
(விடுதலை, 2.5.68; 2 : 3)
எப்போதும் என்னிடம் எனது பணம் என்று ஒன்று மில்லை. நான் பொதுப்பணிக்கு வந்தபோது என்னிட மிருந்த பணத்தை- சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப்பணத்தில் தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் - மருத்துவ மனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.
(விடுதலை, 8.8.68; 3 : 5)
என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர் பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடி கொண்டால் உயிருக்கு உயிர்தான். இல்லாவிடில், அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.
(விடுதலை, 15.9.68; 2 : 1)
சாதாரண மொட்டை மரம் போன்றது என்னுடைய வாழ்க்கை. காய், பழம், பிஞ்சு இருக்குமானால், அம் மரத்தில் யாரும் கல்லெறியாமல் பாதுகாக்க வேண்டியது அவசி யமாகும். அப்படியும் எனக்கு என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை. எதற்கும் கவலையற்ற எனக்கு, யாரிடமும் பயமில்லை; தயவு வேண்டுமென்ற விருப்பமும் இல்லை .
(விடுதலை, 3.2.58: பெ.செ.)
‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத் துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தை களோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டு மென்று பாடு படுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறை வான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் உயர்ஜாதியின ரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
(விடுதலை, 1.1.62; 1:1)
நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார் கள், எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு. வேத சாத்திரங்கள் துரும்பு. ஜாதி துரும்பு, அரசியலும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்ட வைத்துப் பிழிந்தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.
(விடுதலை, 15.10.67; 2:1)
நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப் பூர்த்தியாய் சொல்லுகின்றேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ , தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ, கூப்பிடுவதைவிட - கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும், சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும், மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.
ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்றுமூடஜனங் கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தை பூஜையில் வைத்து பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என்பேரில் ‘விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப் பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காத வர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள் கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.
நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப் பட்டு விட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் ‘அயோக்கியன்’ என்று சொல் லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும்.
எனவே, எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் - அயோக்கியனா கவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாக பிரச்சாரம் செய்பவர்கள் எனக்கு உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்.
4.10.1931 இல் நாகையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து. ‘குடிஅரசு', 11.10.31
‘‘என்னைப்பற்றி முடிவு கூற
நானே தகுதி உடையவன்''
எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கையில்லை. கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விட்டது. புரட்சியில் தான் நம்பிக்கை. ஏதாவது செய்துவிட்டுச் சாகவேண்டும். சாவு சமீபத்தில் இருக்கிறது. நான் உழைத்தது கொஞ்சமல்ல. அது எனக்குத்தான் தெரியும். அதை மதிக்க நானே உரியவன். என்னிடத்தில்தான் நல்ல திராணி இருக்கிறது. ஆகையால் என்னைப் பற்றி முடிவு கூற நானே தகுதியுடையவனே தவிர, வேடிக்கை பார்த்துக் கொண்டு நன்மை வந்தால் அடைவதும், தீமை வந்தால் தனக்குச் சம்பந்தமில்லை என்பவர்களும் தகுதியானவர் கள் அல்ல. என்னைக் குறை கூறுபவர்களும் எனக்குப் புத்தி சொல்லுபவர்களும் தங்கள் நிலைமை உரிமை ஆகியவைகளைச் சிறிதும் கவனித்துச் சொல்லட்டும் என்கிறார் தந்தை பெரியார்.
- ஈ.வெ.ரா.
(‘விடுதலை', 1.5.1943)
இப்படி தன்னைப்பற்றி தாராளமாக தங்கு தடையின்றி விமர்சித்துக் கொள்ளும் தலைவர்களைப் பார்த்த துண்டா? பார்த்ததில்லை. அதனால்தான் இவர் பெரியார்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- விடுதலை நாளேடு, 2.1.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக