வெள்ளி, 24 ஜனவரி, 2020

ரஜினியின் பின்ப(பு)லம் என்ன?

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

மின்சாரம்

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு என்பார்கள். அது ரஜினிகாந்த் என்ற நடிகருக்குத் துல்லியமாகப் பொருந்திவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் 'சோ' ராமசாமியைப் புகழ்ந்து தள்ள வேண்டும் என்ற உந்துதலில் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் சொன்னதை நம்பி தந்தை பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசினார்.

பிரச்சினை எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிய நிலையில், நாலாப்பக்கங்களிலிருந்தும் கணைகள் கனலாகத் தாக்கிய கட்டத்தில், எதையாவது சொல்லித் தீரவேண்டும் என்ற நிலையில் ஒரு சில செய்தியாளர்களை மட்டும் அழைத்து, தன்னிலை விளக்கத்தை அளிக்க முயற்சி செய்துள்ளார்.

1971 ஜனவரி 23, 24 நாள்களில் சேலத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, அதனை ஒட்டிய பேரணி குறித்து 'துக்ளக்' விழாவில் உளறிக் கொட்டியதுதான் வம்பாகப் போய்விட்டது.

இதற்கு முன்பும்கூட எதையாவது ஒன்றைச் சொல்லி விட்டு, அது பிரச்சினையானவுடன் நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று புலம்பியதுண்டு.

'துக்ளக்' தனக்குக் குரல் கொடுக்கும் என்று மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசினார்?

"1971இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவை யும் உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். அதனால் தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் 'துக்ளக்' பத்திரிகையை கைப்பற்றினார்கள். இந்த இதழை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். பிளாக்கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் பிரபலமாக்கினார்". இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

குருமூர்த்தி அய்யர்வாளோ அல்லது அந்த அக்ரகார வட்டாரமோ சொல்லிக் கொடுத்ததைத்தான் கிளிப் பிள்ளைப் பாட்டு போல் ஒப்பித்தார்.

ராமன், சீதையின் படங்கள் நிர்வாணமாகத்தான் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டன என்று இந்தக் கூட்டத்தை நம்பிதான் சொல்லித் தொலைத்தார்.

“துக்ளக்" மட்டும் தான் தைரியமாக சேலம் மாநாட்டுப் படங்களை வெளியிட்டது என்றும் அடித்துக் கூறினார்.

பிரச்சினை வெடித்து வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அந்தப் படங்கள் வெளிவந்த (?) 'துக்ளக்' இதழை ரஜினியின் கையில் கொடுத்து, செய்தியாளர்களிடம் 'வெளுத்துவாங்கு' என்று கொம்புச் சீவி அனுப்பி இருக்க வேண்டும் அல்லவா?

அதுதான் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பை யில் வரும்.

செய்தியாளர்களை ரஜினி சந்திக்கும்போது சேலம் படங்கள் வெளிவந்ததாகக் கூறப்பட்ட 'துக்ளக்' இதழோடு கம்பீரமாக வருவார் என்று எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கரியைத் தடவியதோடு, தனக்குத்தானும்கூட நன்றாக அரைத்த கரியை அப்பிக் கொண்டு விட்டாரே!

தான் 'தைரியமாக'ச் சொல்லக் காரணமாக விருந்த 'துக்ளக்' கைக் கொண்டு வரவில்லை. 'அவுட்லுக்' என்ற ஓர் இதழைக் கையில் வைத்து மந்திரவாதிபோல தளுக்குக் காட்டினார். 'இதோ பார் ஆதாரம்' என்றார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த 'அவுட்லுக்' இதழின் தொடக்கமே 1995 அக்டோபர் தான். 1971இல் நடந்த சேலம் நிகழ்ச்சிக்கு ஆதாரம் 1995 ஆம் ஆண்டு வந்த 'அவுட்லுக்' இதழாம்!

மேலும் கூடுதல் நகைச்சுவை என்ன தெரியுமா? நடிகர் எடுத்துக்காட்டியது 2017 நவம்பர் 20ஆம் தேதி 'அவுட்லுக்' இதழை. அந்த இதழிலாவது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன சேலம் படங்கள் இருந்தனவா? அதுவும் இல்லை.

சிரியுங்கள்! சிரியுங்கள்!! நன்றாகச் சிரியுங்கள்!!! விலா நோகச் சிரித்துத் தொலையுங்கள்!!!!

நடிகரின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்துச் சிரிப்பதா? பரிதாபப்படுவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

என்ன செய்வது, இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய 'பரிதாபமே' நமக்கு.

சொல்லப்பட்டது - கேட்கப்பட்டது என்பதையெல்லாம் வைத்து ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுபவர் ஒரு பொறுப்பான ஆசாமியாக இருக்க முடியுமா?

ரஜினியை பற்றி கூட ஏராள தகவல்கள் உண்டே! எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்று:

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்த கலாட்டாதான் அது:

குருமூர்த்திக்கு ரஜினி மீது என்ன வஞ்சமோ, இப்படி 'பழி தீர்த்து'க் கொண்டு விட்டார் என்று கூடச் சொல்லலாமே!.

இதில் கூடுதலான இன்னொரு நகைச்சுவையும் உண்டு. 'அவுட்லுக்' என்பது 'இந்து' குழுமத்தைச் சேர்ந்ததாம்! கூறுகிறார் நடிகர். எங்கே போய் முட்டிக் கொள்வதோ?

இப்படித் தத்து பித்து என்று உளறிவிட்டு, நான் கேள்விப் பட்டதைத்தான் சொல்கிறேன் என்று கூறி, 'இன்னும் சிறிது நேரம் இருந்தால் என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ, நாமும் உளறித் தொலைப்போமோ?' என்ற பதட்டத்தில் 'ஆளை விடுங்கள் சாமி!‘ என்று இடித்துப் புடைத்து விட்டுக் கம்பியை நீட்டிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

சேலம் ஊர்வலத்தின் போது, அதனை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனசங்கத்தினர் ஊர்வலத்தில் சென்ற பெரியாரை நோக்கி வீசப்பட்ட செருப்பைப் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எந்தவிதப் பதிலையும் சொல்லாதது ஏன்? இதுதான் ரஜினிகாந்தின் அறிவு நாணயத்துக் கான சரியான சாட்சியாம்.

இதற்குப் பதில் சொல்லாததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் முனை முறியாத முழு எதிர்ப்புக்கும், படு வெறுப் புக்கும் ஆளாகிவிட்டாரே!

சேலம் நிகழ்வு மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம் என்று தனது வீட்டின் அருகில் நடைபெற்ற பேட்டியில் கூறியுள்ளாரே நடிகர்.

மறக்க வேண்டிய ஒன்றை மறக்காமல் ஏன் நினைவு படுத்துகிறார்? ஒரு இரண்டு நிமிடப் பேட்டியில் கூட முரண்பாடு இல்லாமல் பேச முடியவில்லையே இவரால்? இந்த லட்சணத்தில் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறாராம்! நல்ல தமாஷ்!!

இராமனை வைத்து பெரியாரை சிறுமைப்படுத்தலாம் என்ற நப்பாசையில் மண் விழுந்துவிட்டதே - என் செய்வது!

'துக்ளக்'கின் துணிவைப் பற்றி சிலாகித்த குருமூர்த்தி வட்டாரத்து வார்த்தைகளை நம்பி வாய் நீளம் காட்டிய ரஜினி யின் நிலை  - எவ்வளவு பெரிய பரிதாபத்தின் பள்ளத்தாக்கில் குப்புற விழுந்து விட்டது.

இப்பொழுதாவது இந்தக் கூட்டத்தின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதைத் திருவாளர் ரஜினிகாந்த் உணர்வாரா?

இது ஒருபுறம் இருக்கட்டும் - இப்பொழுது தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இதே நடிகர் 'பெரியார் மீது எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது!' என்று சொன்னார் என்றால் நம்ப மாட்டீர்கள்தானே!

அதையும்கூட நாளை பார்த்துவிடலாமே!

- விடுதலை நாளேடு, 22 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக