செவ்வாய், 7 ஜனவரி, 2020

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

25.7.1947 - குடிஅரசிலிருந்து...

இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலைவர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா? நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக்கொள் ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என்கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மை களையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்!

இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப் போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங் களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன?

நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்ப தல்லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!

உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங் களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந் தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்தலாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவதல்லாமல், யோக்கியமும், நாணய மும் தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல் லட்டும்! நான் இப்படிச் சொல்லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மையும், மடத்தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின்றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி

உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள் ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படுவதை, நடத்தப்படுவதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத்திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக் கின்ற மகாத்மாக்களோ, ரிஷிகளோ, வீரசூர தளபதிகளோ, தியாகமூர்த்திகளோ, வீராங் கனை களோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர் களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மி களாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வருகிறான்; ஒருவரும் போகா தீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதிவிட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத் தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன். சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக்களை ஏமாற்றி  வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேற்ஜாதியார் அல்ல யாவரும் ஒரு குல மக்களே!

தொடரும்...

மனிதனுடைய அல்லது மிருகத்தினுடைய மலம் கையிலோ காலிலோ பட்டுவிட்டால் தண்ணீர் விட்டுக் கழுவி விடுகின்றார்கள். ஆனால், மனிதர் கள் சரீரத்தின்மேலோ அல்லது சரீரத்தின்மேல் இருக்கும் துணியின் மேலோ பட்டுவிட்டால் குளித்துத் தீரவேண்டும் என்கிறார்கள். எனவே, இவர்கள் மனிதத்தன்மையுள்ள மனிதர்களா?

கோயிலைச் சுத்தப்படுத்த என்று மாட்டையும், சாணியையும், மூத்திரத்தையும் கோயிலுக்குள் கொண்டு போகிறார்கள். ஆனால், மனிதன் அக்கோயிலிலுள்ள கடவுளை வணங்க என்று உள்ளே போனால் சாமி தீட்டாகி விட்டதென்று கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இவர்கள் அறி வுள்ள மனிதர்களா?

-  தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு 3 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக