ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தினமலரே, நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா?


'ஆம்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள்தான். அண்ணல் அம்பேத்கர் "நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால் அதே நேரத்தில் ஹிந்துவாக சாகமாட்டேன்" என்று சொன்னதோடு பல லட்சம் மக்களோடு ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டார்.

ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரர்கள் என்றே ஒப்புக் கொள்ள வேண்டும். சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டால் வேசி மக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் மட்டுமல்ல - மானத்தை மதிக்கும் பார்ப்பனர் அல்லாதார் 'ஹிந்து'க் கடவுள்களையோ, சாஸ்திரங்களையோ ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இன்றைக்கும் சூத்திரர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் 'தினமலர்' திரிநூல்களின் இன வெறியா?

பிரிவினைவாதிகள் யார்?

'விடுதலை' பத்திரிகை செய்தி என்று போட்டு அதில் 'விடுதலை'யில் வெளி வராத வரிகளைப் போடலாமா? 'ராமன் சக்தியை நம்பாத இவர்கள் ஈ.வெ.ரா.வின் கூற்றான 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதைப் பின்பற்ற வேண்டும்' இந்த வரிகள் 'விடுதலை'யில் வெளிவந்துள்ளதா?

எவ்வளவுக் கேவலமான அறிவு நாணயமற்ற கும்பல் இது.

ஒரு அய்ந்து நாள்கள் இடைவெளியிலேயே இப்படித் திரித்து வெளியிடுவது தான் திரிநூல்களின் பத்திரிகா தருமமா? 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று பத்தினித்தன்மைக்குப் புதுவித தர்மம் கற்பிக்கும் கைபர் கணவாய் கும்பல் அல்லவா?

சரி, அடுத்து வருவோம், ராம பிரானை நம்புபவர்கள், இசட் பிரிவுப் பாதுகாப்பை விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?

"மனிதனை நினை என்பது எந்த மனிதனை என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களுக்குத்தான் மனிதர்களில் பலரைப் பிடிக்காதே, எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கூறி பிரிவினைவாதம் பேசுவீர்களே" என்றும் ஒரு முன்னுரையையும் கொடுத்துள்ளது 'தினமலர்'.

தனிப்பட்ட முறையில் எந்த மனிதரையும் நாங்கள் வெறுப்பதில்லை. ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது - வினா ஒன்றை எழுப்பினார்.

"நீங்கள் ஏன் ஆன்டி பிராமினா இருக்கிறீர்கள்" என்பதுதான் அந்தக் கேள்வி; அப்பொழுது 'விடுதலை' ஆசிரியர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "வீ ஆர் புரோ-ஹியூமன் (Pro-Human). எனவே ஆன்டி பிராமின் (Anti Brahmin)" என்று பதில் கூறினார். மனிதர்களைப் பிறப்பின் பெயரால் பிரிவினை செய்தது யார்? ஹிந்து மதம் தானே - அந்த பிரிவினை கூடாது என்பது திராவிடர் கழகம் தானே - ஏன் தலைகீழாகப் புரட்டுகிறீர்கள்?

நீங்களும் பிராமணராக இருக்கக் கூடாது - மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.

ஓ! புரட்டல் வாதம் தானே 'தினமலர்' கூட்டத்தினுடையது!

- விடுதலை நாளேடு 19 1 20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக