செவ்வாய், 7 ஜனவரி, 2020

தமிழ்நாட்டில் ஜாதிப் பிரிவினைகளை ஏற்படுத்தியது யார்?

தீண்டாமை என்பது ஒரு கற்பனையே

பேராசிரியர் எம்.சீனிவாசய்யங்கார் ஆராய்ச்சி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

(தேரழர் எம்.சீனிவாச அய்யங்கார் எம். ஏ., அவர்கள் - 1914இல் வெளியிட்ட தமிழ் ஆராய்ச்சி ('Tamil Studies') என்னும் நூலில், 4, 5ஆவது அத்தியாயத்தில் எழுதியுள்ள வற்றிலிருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் ஒரு தமிழன் கருத்துக்களல்ல. ஆரியருடைய ஆராய்ச்சியின் பலனாக வெளியிடப்பட்ட கருத்துக்கள். ஆகவே ஆரியர்களும் தமிழர்களும் ஊன்றிப்படித்து பயன் பெறுமாறு விழைகின்றேன்)

"தென்னிந்திய கல்வெட்டுகளிலிருந்து தெரியவருவது யாதெனில் தமிழ்நாட்டு மன்னர்களின் அழைப்புக்கிணங்கி அவ்வப்போது பார்ப்பனர் வடநாடு விட்டு தமிழ்நாடு வந்து குடியேறினார்கள். அந்தப் பழங்காலத்திலேயே திராவிடர் போதிய அளவு நாகரீகம் பெற்றிருந்தமையால் பார்ப்பனர் தங்களோடு சத்திரியர்களையோ, வைசியர்களையோ தமிழ் நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரும் அவசியம் ஏற்படவில்லை.

இயற்கைக்கு மாறானதொன்றுமில்லை

"தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்களும் சூத்திரர்களும் (தமிழரைதான் ஆரியர், சூத்திரர் என்கிறார்) தனித்தனி வேறுபட்ட இரண்டு மனிதவகுப்பைச் சேந்தவர்கள். ஒரு வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும், தனித்தனி, மதம், நீதி சமூகசட்டதிட்டங்கள், கலைகள் இருந்தன. ஆகவே ஒரு சமூகத்தின் கலைகள் மதம், நீதி சமூகவிதிகள் ஆகிய இவை களை மற்ற சமூகத்தில் நுழைக்கமுயல்வது மிகவிந்தை யாகவும் மதிகெட்ட ஒரு செயலாகவும் தோற்றப்பட வேண்டும். இந்த உண்மையை ஆங்கிலம் கற்ற பார்ப்பனரல் லாதார் சரியாக உணர்ந்து கொண்டு அடிப்படையான திராவிட நாகரீகத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள். இதில் இயற்கைக்கு மாறான தொன்றுமில்லை. அவர்கள் முயற்சிக்குக் கற்றுணர்ந்தோர் ஆதரவளிக்க வேண்டியது பொருத்தமானதே"

"ஆரியர்கள் தமிழ் நாட்டிற்குள் அடியெடுத்து வைக்குமுன் ஜாதி முறை இங்கே கிடையாது" தமிழ்நாட்டிற்கு முதன் முதல் வந்த பார்ப்பனர்கள் இந்நாட்டில் தங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தை புகுத்த முயன்றார்கள். இதில் அவர்கள் வெற்றியடைவதற்குள் பலத்த எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

எந்தத் தமிழனும் பார்ப்பனர்களோடு சரிசமமாக மதிக்கப்படும் யோக்கியதை உடையவன் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மன்னர்கள் மட்டும் சத்திரியர்கள் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இந்த அரசர்கள் தமிழ்க் குடிகளாள வேளிர், அல்லது வெள்ளாளர்களிடம் பெண் கள் கொண்டிருந்தபடியால் அந்த வேளாளர்களுக்கும் சூரியன், சந்திரன், நெருப்பு, இவைகளினின்றும் தோன்றிய தாக மிக மதிப்பான வம்சாவளிகளை உண்டாக்கினார்கள்.

சச்சரவுகளுக்கு விதை  ஊன்றப்பட்டது

தங்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்தும் தங்க ளோடு பழகியும் வந்த குயவர், நெசுவுகாரர், கம்மியர் முதலிய, தொழிலாளர்களுக்கு உயர்ந்த பட்டங்களை பார்ப்பனர் வழங்கினார்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிறந்தவர்கள் என்று கட்டுக்கதைகள் உண்டாக்கினார்கள், இப்படிச் செய்தது தங்களோடு பழகி தங்களுக்குப் பயன் பட்டு வந்த இந்த தொழிலாளரை தமிழ் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு ஏற்றவும் அவர்களைத் தட்டிக் கொடுத்து புதிய சமூக அமைப்பில் பிரியத்தோடு சரியாக வேலை செய்யும்படி செய்வதற்குமேயாம். இந்த மாதிரி பின்னால் நேர்ந்த பல சண்டை சச்சரவுகளுக்கு விதை ஊன்றப்பட்டது.

"பறையன் என்ற சொல் ஒரு தொழில் செய்பவர்களைக் காட்டி வந்ததே ஒழிய ஒரு ஜாதியாரைக் காட்டவில்லை. கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்த தமிழ் புலவரான மாங்குடிக்கிழார்.

"துடியன் பாணன் பறையன் கடம்பனென்றிந்தான் நல்லது குடியுமில்லை" என்றார்.

இந்நா£ன்கும் தொழில் பாகுபாடுகளேயன்றி ஜாதிப் பிரிவுகளல்ல. இவைகள் பாலை அல்லது குறிஞ்சி நில மக்கள் மேற்கொண்ட தொழில்கள். ராஜ ராஜ சோழன் கி.பி. 1013 காலத்தில் தான் பறையன் என்ற சொல் ஒரு ஜாதியைக் குறிப்பிடும் சொல்லாக மாறியிருக்க வேண்டும். ஆதியில் வள்ளுவர்கள் தமிழர்களின் குடும்ப புரோகிதர்களாக இருந்து வந்தனர்.

எடுத்துக் காட்டுகள்

இது 'வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னற்குள் படு கருமத்தலைவற் கொன்றும்,' 'அரசனது ஆணையை யானை மீதிருந்து பறை பறைந்து தெரிவிப்பதும்

அவர்கள் வேலை'

'என்புழி வள்ளுவர் யானை மீமிசை

நன்பறையறைந்தனர்,' என்பனவற்றால் உணரலாகும்.

இன்றைக்கும் மலையாளத்தில் வேதப்பார்ப்பனராகிய நம்பூதிரிகளுக்கு இறுதிக் கடன் செய்து வைப்பது 'மாரையர்' என்ற நாவித வகுப்பார். "பண்டை எயினர்களின் வழி வந்தவர்களான தற்காலத்தில் பறையர்' எனப்படுவோர் கி.பி. 4ஆவது நூற்றாண்டு வரையிலும் ஆம்பூர் (அம்பு-ஊர்) வேலூர் (வேல்-ஊர்) முதலிய இடங்களில் சிற்றரசர்களாக ஆண்டுவந்தார்கள். அவர்கள் உயர்ந்தமதில்களையும் சூழ்ந்த அகழிகளையும் கொண்டவலிமை பொருந்திய கோட்டைகளையும், தானியம் நிறைந்த களஞ்சியங்களையும் கொண்டிருந்தார்கள். ஒழிவு நேரங்களில் பாடவும் ஆடவும் பாணர்களும் மற்போர் முதலிய உடற்பயிற்சியில் பழக்குவதற்கு 'பணிக்கர்களும்' செருப்பு முதலியவைகள் தைப்பதற்கு செம்மான்களும் நெசவாளிகளும், தச்சரும் வண்ணாரும் அவர்களிலேயே இருந்தனர். இவர்களின் மறைந்துபோன பண்டைப் பெருமையைப் பற்றி இவ்வளவு சொன்னோம். எயினர்களு (பறையர்கள்)க்குள்ளேயே பல தொழிலும் செய்பவர்கள் இருந்தார்கள் என்று கண்டோ மல்லவா? இவர்களில் பார்ப்பனர்களின் நலத்தின் எந்தெந்த தொழில் செய்யும் கூட்டத்தார் வேண்டியிருந்ததோ அக்கூட்டத்தார்கள் உயர்ந்த ஜாதிகளாக நாளடைவில் உயர்ந்தார்கள். இவர்களே தற்காலத்தில் உயர்ந்த ஜாதி இந்துக்களாகக் கருதப்படுகிறார்கள். இக்கூட்டத்தார்களுக்கு பார்ப்பனர்கள் மதிப்பான வம்சா வழிகளை ஏற்படுத்தி அவைகளுக்கு ஒரு புனிதத்தன்மையை கொடுக்கவேண்டி புராணங்களையும் எழுதினார்கள். பறையர்களின் கூட் டத்தின் (Tribe) அமைப்பில் பெரிய புரட்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் பார்ப்பனர் பிறரோடு சேராமல் தனித்து நிற்க விரும்பிய கொள்கையே. பறையர்களை தங்கள் அக்ரகாரங்களுக்குள் நுழையவிடவில்லை. பார்ப்பனர் களின் ஆதிக்கத்திற்கு முதல் பலியான பறையர்களின் உழுவப்பறையர் என்ற கூட்டத்தார்களே இன்று இவர்கள் நிலைமை எப்படியிருக்கின்றது? தாங்கள் எந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ அந்த நிலத்தை தமிழ் அரசர்களால் தங்களிடம் அண்டி வாழ்ந்த பார்ப்பனர் களுக்குப் பிடுங்கிக் கொடுக்கப்பட்டு அதே நிலத்தில் தாங்கள் அடிமைகளாக வாழவேண்டிவந்தது. நிலத்திற்கு வேறொரு எஜமானன் வரவே நிலத்தின் சொந்தக்காரனுக்கு அதே நிலத்தில் அடிமையாக வேலை செய் யும் நிலைமை ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக நாடு ஆங்கிலேயர் வசமான தும் இவ்வடிமை வாழ்வு ஒழிந்தது.

ஹிந்துக்களின் கருத்துப்படி 'தீண்டல்' என்பது என்ன? ஆரிய ஹிந்து, ஆரியனல்லாத இந்துவுக்கும் இடையே காணப்படும் ஒரு கற்பனை. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை எந்தெந்த தமிழ்க் கூட்டத்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக கைப்பற்றினார்களோ அவ்வளவுக்கவ்வளவு தொடக் கூடிய ஜாதியாராகவும் (உயர்ந்த ஜாதியாராகவும்) எவ்வளவுக்கெவ்வளவு அவை களைப் பின்பற்ற விரும்பவில்லையோ அவ்வளவுக் கவ்வளவு தீண்டப்படாத ஜாதியாராகவும் எண்ணப் பட்டார்கள்.

பறையர்கள் தான் பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள சிறிதும் விருப்பமில்லாத வர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள் உயர்ந்தஜாதி இந்து இருக்கும் இடத்திற்கு 30 கஜத்திற்குள் வந்தால் தீட்டு என்று கருதப்பட்டது. ஆரியர்களுக்கும் பண்டைத் திராவிடர்களுக்கும் இடையில் இருந்து வந்த வெறுப்பு எவ்வளவு என்பதைக் காட்ட ஒரு உதாரணம் தருதிறேன். மலையாளத்தில் குறிச்சன் (குறிஞ்சி நிலத்தார்) என்பவர்கள் தமிழ்நாட்டில் குறவர்களுக்கு சமமான வர்கள். இவர்கள் வீட்டிற்கு எப்பொழுதாவது பார்ப்பனன் வந்து விட்டுப் போனால் அவன் வந்ததால் ஏற்பட்ட தீட்டைப்போக்க வீட்டையெல்லாம் சாணமிட்டு மெழுகும் வழக்கம் இன்றும் நாளையும் இருந்து வருகின்றது

"பண்டைத் தமிழ் நாட்டில் இல்லாத ஜாதி முறையை இந்நாட்டில் ஆரியர்கள் புகுத்தியதால் தமிழர்களுள் அதிருப்தியும், பொறாமையும், வெறுப்பும் மேலிட்டு நாள டைவில் வலங்கை; இடங்கை வழக்கு என்று தமிழ்நாடு முழுவதும் பெரிய சச்சரவு ஏற்பட்டது.

இந்த ஜாதிப்பிரிவு ஏற்பட்டகாலந்தொடங்கி ஒழியாத பூசல் தமிழர்களுக்குள் இருந்து கொண்டே இருக் கின்றது. இந்த வழக்குகளுக்கு ஆதரவளித்தும், சிலசமயங்களில் தாங்களே மூட்டிவிட்டும் வந்தார்கள். பிற் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்.

'பசவர்' பார்ப்பன வெறுப்புக் கொண்டு ஜாதி வேற்றுமை களை ஒழிக்க பல உபதேசங்கள் செய்தார். அதன்பயனாக பல தாழ்ந்த ஜாதியார் தங்களை ஸ்தநவரஜஸ்கம் பிராம ணர்கள் என்றும் துலிபரவட, பிராமணர் என்றும் இன்னும் பல பிராமணர்கள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இதைக் கண்டு பொறாமையும் கோபமும் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை ஆதரித்து வந்த அரசர்களின் உதவியால் இந்தப் புதிய பிராமணர்களை 'இடங்கை' ஜாதிகளில் சேர்த்தினார்கள்.

இதன் நோக்கம் அவர்களுக்குள் தீராத சண்டை ஏற்பட வேண்டு மென்பதோடு இச்சண் டைகளில் தீர்ப்பளிக்கும்படி மேற்காட்டிய ஜாதியார்கள் தங்களிடமே வரவேண்டு மென்பதும் தான்.

பிராமணர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி.பி. 10ஆவது நூற்றாண்டில் பூரணமாயிற்று.

- விடுதலை: 16.2.1940

-  விடுதலை நாளேடு, 3.1.20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக