சனி, 4 ஜனவரி, 2020

பெண் விடுதலையே பெரியாரின் பெருங்கனவு

பெண் விடுதலை குறித்து தந்தை பெரியார் பெரும் கனவு கண்டவர். தமிழகத்தில் பெரியார் போல் பெண்களின் எதிர்காலம் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தவர்கள் வேறு எவருமில்லை . பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்களின் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, ஜாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்காற்றுகின்றன என்பது பற்றி யெல்லாம் 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடத்திய முதல் மாநாட்டில் விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒரு தீர்மானம் பெண்களுக்குச் சமமான சொத்துரிமையை அளிக்க வேண்டும் என்பதாகும்.

நம் சமூகத்தில் காலங் காலமாகப் பெண்ணுக்குச் சொத் துரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம்மை அடிமை களாக்கி ஆண்ட பிரிட்டிஷ் காலனிய அரசும் கூட தான் இயற்றிய சட்டத்தின் மூலமாக, இங்குள்ள பெண்களின் இரண்டாம் படிநிலையையே உறுதி செய்தது. நாடு விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவிலும் பெண்ணுக்கான பொருளாதாரச் சுதந்திரத் துக்கு வழி பிறக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சி யாளர்கள் கொண்டு வந்த அதே சட்டத்தைத் தொடர வேண்டும் என்றே இந்து சனாதன சக்திகள் விரும்பின. இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில் பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அவரது முயற்சி விழலுக்கு இறைத்த நீராயிற்று. அவரது விருப்பம் நிறைவேறவில்லை . ஆனால், பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்குப் பங்கு இல்லாவிட்டாலும், தந்தை சுயமாகச் சம்பாதித்த சொத்தில் மகளுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதைச் சட்டம் அனுமதித்தது.

பின்னர், பெரியார் வழியில் ஆட்சியமைக்க முன்வந்த தி.மு.க அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி பரம்பரை வாரிசுரிமை (சொத்துரிமையிலும்) சம உரிமைகள் இருக்கும் வகையில் இச்சட்டம் (இந்து வாரி சுரிமை தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989) நிறைவேற்றப்பட் டது. பெண்களைப் பொறுத்தவரை உண்மையிலேயே இது ஒரு முன்னோடிச் சட்டம் என்றால் அது மிகையில்லை . 1989-ல் இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, 1929-ல் பெரியார் நடத்திய செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை. பெரியார் இயற்றிய தீர்மானம் நடைமுறைக்கு வர 60 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

தங்களுக்குத் தாங்களே வழி காட்டிகள்

அதற்கு அடுத்த ஆண்டில் ஈரோட்டில் நிகழ்த் தப்பட்ட இரண்டாவது மாநாட்டில் பெண்களுக்கென தனி மாநாடு நடத்தியது பெரியாரின் பெரும் பங்களிப்பு. இதற்கு முக்கியமான காரணம், 'எலியின் விடுதலைக்குப் பூனை எங்காவது முயற்சி செய்யுமா?' என்று பெரியார் குறிப் பிடுவது வேடிக்கை போல் தோன்றினாலும், பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதை விட, தங்கள் விடு தலைக்காக, சுய மரியாதைக்காகப் பெண்களே முன்னின்று பேசுவதும் உழைப்பதும் சிறந்தது என்பதைத்தான். அதற் கான செயல் வடிவமே ஒரே மாநாட்டு அரங்கில் தனித் தனியாக நடத்தப்பட்ட இளைஞர்கள் மாநாடும் பெண்கள் மாநாடும். தங்களுக்கான மாநாட்டைத் தாங்களே முன் னின்று உற்சாகத்துடன் நடத்திக் காட்டினர் பெண்கள். இந்த மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களுக்கு 16 வயது வரை கண்டிப்பாகக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத் தியது. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு தேவதாசி களாக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு, கைம் பெண்கள் மறுமணம், தேவதாசிப் பெண்களை இளை ஞர்கள் மணம் முடிக்க வேண்டும் என்ற அறை கூவல் போன்றவை என ஒவ்வொரு மாநாட்டிலும் பெண்களின் நலன் முன் வைக்கப் பட்டது.

அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கு பெற வேண்டும் என்பதை பெரியார் முதன்மைப் படுத்தியதுடன் வலியுறுத்தவும் செய்தார். அத னால்தான் குடும்பத்துடன் மாநாட்டில் பங் கெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத் தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே நிகழ்த்த வேண்டும் என்ற நடைமுறையை அவர் வழக்கமாக்கினார். சுயமரியாதை இயக்க மாநாடு களில் பெண்கள் பங்கெடுப்பதும் தொடக்க உரை நிகழ்த்துவதும் வெற்றுச் சம்பிரதாயமாக இல்லாமல், தொடர் நிகழ்வுகளாக மாறின.

பெண் விடுதலை குறித்துப் பெரியார் முன்னிறுத்தும்  அடையாளங்கள்

1. ஆணும் பெண்ணும் சமம்; அதில் வேறுபாடில்லை

2. பெண்ணின் சுயமரியாதை மதிக்கப்பட வேண்டும்.

3. பெண்ணின் தாழ்வுக்குக் கற்பு, தாலி போன்ற மூட நம்பிக்கைகளும் முக்கிய  காரணங்கள்.

4. பெண்ணுக்குப் பொருளாதார சுதந்திரம் வேண்டும்: சொத்துரிமையில் இரு பாலருக்கும் சமத்துவம் வேண்டும்.

5. பெண்ணுக்குக் கர்ப்பப்பை என்று ஒரு அங்கம் இருப்பதாலேயே கற்பு என்ற தடையும் உள்ளது; அதை நீக்கி விட்டால் கற்பு என்ற கருத்தும் அழிந்து போகும்.

6. குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்ப தையும் ஒரு பெண்தான் தீர்மானிக்க வேண்டும்;

7. ஆணாதிக்க மனப்பான்மை, ஆண்மை, பெண்மை போன்ற பாகுபாடுகள் களையப்பட வேண்டும்.

ஆனால், இப்போதும் ஆண் பெண் என்ற பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது. அதனால்தான் முன்பை விட கல்வியறிவு பரவலாகி இருந்தபோதும், பெண்ணின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாலியல் தொந்தரவுகளும் வன்முறைகளும் வரைமுறையற்றுப் பெருகிப் போயிருக்கின்றன. பெரியாரின் கனவுகள் நனவாக நாம் இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

பெண்களால் பெரியார் ஆனார்

1937-இல் சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஜாஜி இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்று, 1938-இல்

"சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பொது மக்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கிறார்கள்,. ஆண் களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்று கிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக் குத்தான் சேரும், இந்த இயக்கத்தில் இருப்பது போல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம்."

- தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்

உச்ச நிலையை எட்டியது. பெண்கள் பலரும் அதில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள். தினந்தோறும் போராட்டமும் கைதுகளுமாய் நீண்டது. அதனைத் தொடர்ந்து தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் போன்ற பெண்கள் பேசி முடிவெடுத்து, 1938-ம் ஆண்டு நவம்பர் 13 அன்று சென்னையில் மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்த, நடைபெற்ற முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில் கொடுத்த 'பெரியார்' என்ற பட்டத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

பெண் ஏன் அடிமையானாள் என்பதையும் பெண்ணுக்குப் புரிய வைத்தவர். 'உன் விடுதலைக்குத் தடையாக இருக்கும் கூந்தலை நறுக்கு, ஆறு கெஜம், ஒன்பது கெஜம் புடவைக்கு மாற்றாக பேண்ட் அணிந்து கொள், பிள்ளைப்பேறு உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என்றால், கருப்பையையும் அறுத்துப் போடு' என்றெல்லாம் பெரியார் ஒருவர் மட்டுமே துணிச்சலுடன் பேசினார். ஆனால், இதை மட்டுமே அவர் பெண்களுக்குச் சொல்லவில்லை என்பதையும் நன்கு உணர வேண்டும்.

தன் வாழ்நாளில் தான் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால், பெண்களின் கல்விக்காக மட்டுமே மொத்தப் பணத்தையும் செலவழிப்பேன் என்றும் அவர் பேசி யிருக்கிறார். பெண்களின் துரதிருஷ்டம் அவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் இல்லை . அமைச்சர் ஆகவும் இல்லை , சமூக நீதியும், எளியவர்களுக்கான கல்வியும் இன்று பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியுமா? உயர் கல்வி மறுக்கப்பட்டு, கல்வி நிறுவன வளாகங்களில் நிகழும் தற்கொலைகளுக்குப் பிறகு நம் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது தவறாமல் நினைவில் எழும் சமூக நீதிக் காவலரை பெரியார் என்றழைத்த பெண்கள் போற்றத்தக்கவர்கள். தன் வாழ் நாள் கடந்தும் அவர் பெரியாராகவே நிலைத்து வாழ்கிறார். பெரியார் சிலைகள் வன்மம் கொண்டு உடைத்து நொறுக் கப்பட்டபோதும், அவர் எழுப்பிய கேள்விகளும் சிந் தனைகளும் உயிர்ப்புடன் எல்லை கடந்து நிற்கின்றன.

- பா.ஜீவசுந்தரி

நன்றி: 'தினசெய்தி' 24.12.2019

- விடுதலை நாளேடு, 29.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக