வெள்ளி, 24 ஜனவரி, 2020

ரஜினி ஆயுதமாக இருப்பது யாருக்காக?

"தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஆங்கில ஏட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியரின் அதிரடி பேட்டி!

தந்தை பெரியார் பற்றி அவதூறாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதையும், மன்னிப்பு கேட்க மறுத்து உண்மைக்கு மாறாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த தையும், கண்டித்து தமிழ்நாடே கொந் தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழின் செய்தியாளர் டி.கோவர்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டுள்ளார். அதன் சில பகுதிகள் இங்கே:

கேள்வி: இந்துக் கடவுள்களின் உருவப் படங்கள் நிர்வாண வடிவத்தில் சித்தரிக்கப் பட்டு 1971ஆம் ஆண்டு சேலத்தில் நிகழ்ந்த ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப் பட்ட தாக கூறப்படுவதை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: புராணங்களில் சித்தரிக்கப் பட்டுள்ள பாத்திரங் களைத் தான் நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். ராமனையும் சீதை யையும் நிர்வாணக் கோலத்தில் சித் தரிக்க வேண்டிய அவசியமே எங்களுக்கு ஏற்படவில் லையே! ஆனால் அய்யப்பன், ஸ்கந்தன் இருவருடைய கேலிச்சித்திரங் களை புராணக் கதைகளின் படி அமைத்து இருந்தோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பேரணி அது. எனவே புராணக் கதைகளில் உள்ளதுபோல் அமைத்து இருந்தோம். தங்கள் உணர்வுகளை அது புண்படுத்துவதாக சிலர் எங்கள் மீது வழக்கு தொடுத்தனர். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

உருவப் படங்களுக்கு காலணி மாலைகள் அணிவிக்கப் படவே இல்லை. அப்படி சில ஊடகங்கள் கூறியிருந்தால் இதோ எங்கள் கேள்வி! பெரியாரின் ஊர்வலத்தின் போது காலணி வீசி எறியப்பட்டதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? அது எந்த பெரியார் தொண்ட ருடைய காலணியும் அல்ல. எந்தக் கோயிலில் இருந்தும் எந்தச் சிலையும் வெளியே எடுத்துச் செல்லப்படவு மில்லை உடைக்கப்படவுமில்லை. அப்படிப்பட்ட செயல்பாட்டில் பெரியார் ஈடுபடவுமில்லை. அவருடைய கருத்தை தெளிவு படுத்துவதின் நோக்கமே அந்த நிகழ்வு.

ராமாயணம் பற்றியோ, தனது கொள்கைகளைப் பற்றியோ பெரியார் எழுதியுள்ள நூல்கள் எவற்றையும் நாங்கள் மறுக்கவில்லை. ராமராஜ்யம் குறித்து யார் இப்போது பேசினாலும் நாங்கள் துரிதமாகக் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? தவம் செய்த சம்பூகன் ஒரு சூத்திரன் என்ப தாலேயே அவன் தலை துண்டிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களே, இன்று அப்படிப் பட்ட ஒரு செயலை சட்டம் அனுமதிக்குமா? ராமனால் பல துன்பங்களுக்கு ஆளான சீதையை சந்தேகித்ததோடு நிற்காமல் அவளை எரியும்  நெருப்பில் இறங்க வைத்து ராமன் அக்னிப் பரீட்சையும் செய்ததாகச் சொல்கிறார்களே... இன்று அப்படியெல்லாம் நடந்தால் சட்டம் வேடிக்கை பார்க்குமா?

கேள்வி: ரஜினிகாந்த் உண்மைகளைத் திரித்து கூறியிருப்பதாக ஏன் கண்டனம் தெரிவிக்கிறீர்கள்?

பதில்: "பெரியாரின் இயக்கம் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது" என்று நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை. கருத்துக்கள் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவை திரிக்கப்பட்டவை யாக, உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தால் நிச்சயமாக கடுமையாகவே எதிர்ப்போம். இந்தச் சர்ச்சைக்கு பின்னால் மறைந்திருப்பது ஏதோ ஒரு அதிகாரத் துஷ்பிரயோகச் சக்தி. பெரியாரியம் எல் லாவற்றையும் எதிர்கொள்ளும் என்பது உறுதி.

ஒரு கட்சி ஆரம்பிக்கும் முனைப்பில் உள்ள ரஜினிகாந்த் அதற்கான தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஏதோ ஓர் உண்மையை வெளிப்படுத்து வதாக எண்ணிக் கொண்டு, உண்மை களைத் திரித்துக் கூறியுள்ளார் அவர். பிரச் சினையே அதுதான். அவருடைய பேச்சில் ஓர் உள்நோக்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. யாரோ எழுதித் தந்த வசனத்தை இவர் தன் குரலில் வாசித்து வருகிறார் என்பதும் புரிகிறது.

உலகமே போற்றும் ஒரு மாமனிதரான பெரியாரை தங்கள் சுயநலத்திற்காக களங் கப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக் கிறோம்.

கடந்த செவ்வாயன்று ரஜினி பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டி ருந்தபோதே 'துக்ளக்' குரு மூர்த்தி ட்விட் டரில் அதுபற்றி அறிவித்து எல்லோரையும் அதைப் பார்க்கச் சொன்னதன் மர்மம் என்ன? தமிழக அரசியல் நிலவரம் குறித்து கடுகளவு தெரிந்து வைத்திருப்பவர்களுக் குக் கூட புரிந்திருக்குமே!

அய்ம்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பற்றி இப்போது கிளறியிருப்பது யாருடைய விஷமம்? அவரை ஆதரித்துப் பேசி வருபவர்கள் யார் யார் என்பதை கவனித்தாலே இது புரியும்.

பெரியாரையும் திராவிட இயக்கத் தையும் எதிர்த்து வந்த சோ ராமசாமி ஒரு செய்தியாளரிடம் கூறியது பற்றிய பத்திரிகைச் செய்தியைத்தான் ஆதார மாகக் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். 1971ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திமுக வின் வெற்றியைத் தடுக்கும் முயற்சியில் சோ இறங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு துருப்புச் சீட்டாக பயன்பட்டது. ஆனால் அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.

ராமனை வைத்து அரசியல் செய் தார்கள் அன்று. இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்று நடந்த போரில் வெற்றிவாகை சூடிக் கொண்டது நாங்கள். இன்றைய போரிலும் வெற்றிக்கனி எங்களுக்கே!

கேள்வி: ஏன் அடிக்கடி பெரியாருக்கு எதிராக ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்து வருகிறது?

பதில்: அவர் மீது இறைக்கப்படும் புழுதி எங்களைப் பொறுத்தவரை பெரியாரியம் எனும் பயிர் மேலும் மேலும் செழித்து வளர அவர்கள் வழங்கும் சிறந்த உரம்! பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கை களையும் விமரிசியுங்கள். ஏற்றுக் கொள் கிறோம். எதையும் திரித்துக் கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

உணர்வுகள் புண்படுவதாக புலம்பு கிறவர்கள் ஜாதிக் கொடுமைகளால் புண் படுகிறவர்களைப் பற்றி சிந்திப்பதுண்டா? ஜாதி ஒழிப்புக்குத் தடையாக உள்ள தீயசக்தி களைத் தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியதைத் தானே நாங்களும் செய்து வருகிறோம்! வர்ணாஸ்ரம தர்மம் நிலைக்க வேண்டும், ராமராஜ்யம் வர வேண்டும் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருப்ப வர்களால் தான் அடிக்கடி பெரியாரை வம்புக்கிழுப்பதால் ஏதாவது ஒரு தேவை யற்ற பிரச்சினை முளைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த அவல நிலையைப் போக்காமல் ஜாதிகளை எப்படி ஒழிப்பது?

கேள்வி: பெரியாரியத்தின் தாக்கம்.. வலிமை குறித்து தங்களின் விளக்கம்?

பதில்: பெரியாரியத்தின் வீரியம் ஒருநாளும் வலிமை இழக்காது. அதன் தாக்கம் இம்மியளவும் குறையாது. பெரி யாரியம் என்பதே கூர்மை குறையாத போர்வாள். அதற்கு மேலும் கூர்மைச் சேர்க்க வேண்டிய அவசி யமே இல்லை! மேல்நோக்கி எறியப்பட்ட பூமராங் எனும் சாதனம் மீண்டும் கீழே வருவதுபோல் பெரியாருக்கு எதிராக யார் செயல் பட்டாலும் உண்மை நிலை மாறாது; காலமே அவர்களைத் தண்டிக்கும்.

பெரியாரைப் பற்றி அவதூறாக பேசியவர் தன் செயலுக்காக வருந்த வில்லை. தான் பேசியது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தபின்னும் அதை ஒப்புக்கொள்ளும் துணிவு அவ ருக்கு இல்லை என்றால் அவரை ஆட்டு விக்கும் சக்தி எதுவென்று புரிகிறதல் லவா?  அதற்குப் பின்னர் ஓர் அதிகார மய்யம் இருப்பதைத்தான் அவரது செயல் காட்டுகிறது. அதிகார மய்யம் அவரைக் கட்டுப்படுத்தி ஆட்டுவிக்கிறது. ரஜினியைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியுள்ளது.  யாருக்கோ ஆயுதமாக ரஜினி இருந்து வருகிறார்.

பெரியார் என்றோ உலகமயமாகி விட்டவர். அவர் எல்லா காலத்திற்கும் தேவைப்படுகிறவர். மறைந்தது அவரு டைய உடல். வாழ்ந்து கொண்டிருப்பது அவருடைய உயர்ந்த கொள்கைகள். விமர்சனங்களைக் கண்டு பெரியார் ஒரு நாளும் அஞ்சியதில்லை. இன்று அவரது கொள்கைகள் நிலைத்து இருக்கின்றன. பெரியார் ஒரு தனி மனிதரல்ல. அவர் ஒரு சமுதாயச் சீர்திருத்த நிறுவனம்!

நன்றி: 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா'

ஜனவரி 23, 2020

- விடுதலை நாளேடு, 23.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக