வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஆசிரியர் வீரமணி ஒப்புக்கொண்டாரா?

மீண்டும் பாண்டேயின் மோசடி!

இன்று (21.1.2020) காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த காணொலி ‘புதிய தலைமுறை' தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டவுடன், அந்தத் தொலைக்காட்சியில் பேசிய கோலாகல சீனிவாசன் என்பவர், “பெரியார் ராமனைச் செருப்பால் அடித்தார் என்பதை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் ஓடிக் கொண் டிருக்கிறது” என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்படி சமூக ஊடகங்களில் ஒரு காணொலியை உலவ விட்டிருப்பது ‘தந்தி' தொலைக்காட்சியிலிருந்து துரத்தப்பட்ட ரங்கராஜ் பாண்டே என்பவர் நடத்தும் ‘சாணக்யா' என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள காணொலியாகும். ஆசிரியர் வீரமணி அவர்களை ‘தந்தி' தொலைக் காட்சி சார்பாக பேட்டி எடுக்கும்போது ரங்கராஜ் பாண்டே எடிட்டிங் மூலம் என்ன பித்தலாட்டம் செய்தாரோ, அதே போன்ற பித்தலாட்டத்தைத் தான் இந்தக் காணொ லியிலும் செய்திருக்கிறார் என்பது இப் போது அம்பலப்பட்டிருக்கிறது.

ரஜினி..பெரியார்.. திமுக.. | பாண்டே பார்வை (https://www.youtube.com/watch?v=VW2HyifDwis) என்ற அந்தக் காணொலியின் 7:54 ஆம் நிமிடத்தில் “பெரியார் ராமனைச் செருப்பால் அடிச் சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில! (கட்) அடிச் சதுக்கு முன்னால 138; அடிச்சதுக்குப் பிற்பாடு 183 அதுதான் மிக முக்கியம். இந்த ரிசல்ட் வந்தவுடன... அதுதான் திமுகவுக்கு அதிகபட்சம்...'' என்று அந்தக் காணொலி செல்கிறது.

இப்படி ஆசிரியர் கி.வீரமணி பேசியது உண்மையா?

இல்லை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுவதாக ‘சாணக்யா' யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்தக் காணொலி, பெரியார் வலைக்காட்சியின் காணொலியிலிருந்து எடுத்து வெட்டி வெட்டி சேர்க்கப்பட்ட ஒன்றாகும்.

அதன் மூலக் காணொலி எது?

பெரியார் திடலில் 27.3.2018 அன்று நடைபெற்ற  ‘‘இராமன் - இராமாயணம் - இராமராஜ்யம்” தொடர் சொற்பொழிவின் இரண்டாம் நிகழ்வில் பேசிய பேச்சை யூடியூப் வலைதளத்தில் 29.3.2018 அன்று  பெரியார் வலைக்காட்சி பதிவேற்றியுள்ளது. அந்தப் பேச்சின் முக்கிய பகுதிகள் “இராமனை செருப்பால் அடித்தாரா பெரியார்?” என்ற தலைப்பில் தனிக் காணொலியாக 2018 ஜூன் 22 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

அதில் சேலம் மாநாடு குறித்து, இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதையும், அதற்கு இந்திரா காந்தி அளித்த பதிலையும் குறித்து விளக்குகிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

https://www.youtube.com/watch?v=jfxs051c7r8 என்ற இணைப்பில் உள்ள அந்தக் காணொலியின் 7:09 ஆம் நிமிடத்திலிருந்து அந்தப் பகுதி வருகிறது. அதில்,  ‘‘பெரியார் ராமனைச் செருப்பால் அடிச் சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில... அதை அங்க பொறுத்துக்கிட்டு இருக்காங்க... ஒன்னுமே நடவடிக்கை எடுக்கல” என்று பத்திரிகை யாளர்கள் இந்திரா காந்தியிடம் கேட்டதாக வும், அதற்கு இந்திரா காந்தியின் பதிலையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச் சொல்கிறார். ஆனால், இதை வெட்டி, “பெரியார் ராமனைச் செருப்பால் அடிச்சாரு... செருப்பால அடிச்சாங்க... தேர்தல் நேரத்தில... தமிழ்நாட்டில! (கட்) அடிச்சதுக்கு முன்னால 138; அடிச்சதுக்குப் பிற்பாடு 183 அதுதான் மிக முக்கியம். இந்த ரிசல்ட் வந்தவுடன... அதுதான் திமுகவுக்கு அதிகபட்சம்...” என்று ஆசிரியர் கி.வீரமணி பெரியார் ராமனைச் செருப்பால் அடித்தார் என்று ஒப்புக் கொண்டதைப் போல எடிட் செய்து மோசடியாக ஒரு காணொலிப் பதிவை உலவ விட்டிருக்கிறார்கள்.

ரங்கராஜ் பாண்டே என்னும் மோசடிப் பேர்வழியின் இத்தகைய மோசடிகளை நாம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருந் தாலும், மீண்டும் மீண்டும் இத்தகைய ஊடக மோசடியைப் பரப்பி வருகிறது வெட்கங்கெட்ட ஆரியக் கும்பல். மோசடிக் காரர்களைத் தோலுரிப்போம். உண்மையை எடுத்துரைப்போம்!

- விடுதலை நாளேடு 21 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக