செவ்வாய், 3 மார்ச், 2020

தி.மு.க முற்றிலு மான ஒரு நாத்திக இயக்கம் அல்ல.

பிற இதழிலிருந்து...

‘தங்களது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாக நாட்டார் தெய்வ வழி பாட்டை தி.மு.க கையிலெடுக்கப் போகிறது’ என்ற தகவல், பல்வேறு தரப்பினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடவுள் மறுப்புக் கொள்கையை பிரதானமாகக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர்

கி.வீரமணியைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

“ 'பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜன், உயர்நீதிமன்ற நீதிபதி யாக ஆனதற்கு கருணாநிதிதான் காரணம்’ என்று குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதி, ‘அது, அரிஜனங்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை’ என்றார். அவரது பேச்சை பலரும் கண்டித்தார்கள். நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?’’

‘‘அவர் சொன்ன கருத்தில் தவறு இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தையில்தான் பிரச்சினை. உட னடியாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலையிட்டதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதற்குமேல் அது பற்றிப் பேச வேண்டியதில்லை.”

‘‘இதுவே ஹெச்.ராஜா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் எவராவது இப்படிப் பேசியிருந்தால் நீங்கள் அமைதியாக இருந்திருப்பீர்களா?’’

“ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை விமர்சித்து சர்ச்சையாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்தார். அதனால், நீதிமன்றம் அவரை விட்டுவிட்டது. அடுத்ததாக, பெரியார் குறித்து ஆட்சேபனைக்குரிய ஒரு கருத்து ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதற்கு கண்டனங்கள் எழுந்தன. ‘அதைப் பதிவிட்டது நான் அல்ல, என் அட்மின்’ என்று அவர் சொன்ன பிறகு, அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.”

“தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை தி.மு.க அமர்த்தியுள்ளது குறித்து?”

“தேர்தல் முறைகள் இன்றைக்கு நிறைய மாறியுள்ளன. தற்போது, தேர்தலில் தகவல் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதில் யார் கெட்டிக்காரரோ அவரை அழைத்து ஆலோசிக்கின் றனர். அதில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுப்பதற்கு மட்டுமே அவர் வந்துள்ளார்; தி.மு.க-வின் கொள்கை வகுப்பாளராக அல்ல.”

“ஆனால், அவரது வழிகாட்டலில் நாட்டார் தெய்வ வழிபாட்டை ஊக்கு விப்பதற்கான முயற்சிகளை தி.மு.க எடுத்து வருகிறது என்று சொல்லப் படுகிறது.   அதை நீங்கள் ஏற்கிறீர்களா?’’

‘‘அதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே என் னால் கருத்து சொல்ல முடியும். யூகங் களுக்கெல்லாம் பதில் சொல்ல முடி யாது. அடிப்படைக் கொள்கைகளில் அவர்கள் மாறுகிறார்கள் என்றால், அதுபற்றிப் பேசலாம். அவர்கள் எந்தக் காலத்திலும் அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவராலும் வளர்த்தெடுக்கப் பட்ட இயக்கம். மேலும், அவர்கள் செய்வது சரியா என்பதை வெளி யிலிருந்து நாங்கள் பார்த்துக் கொண் டிருக்கிறோம். திராவிட இயக்கம் ஒருபோதும் பாதை மாறாது... மாறவும் விட மாட்டோம்.”

“தி.மு.க-வின் பெருந்தலைவர்கள் பலர் பக்திமயமாக கோயில் கோயிலாகச் செல்கின்றனரே?”

“கடவுள் இல்லை’ என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களோ, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என் கிறார்கள். எனவே, தி.மு.க முற்றிலு மான ஒரு நாத்திக இயக்கம் அல்ல.”

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, நல்ல நேரம் பார்க் காமல் எதையும் செய்வதில்லை என்று சொல்லப்படுகிறது. பகுத் தறிவுப் பிரச்சாரம் ஊருக்கு மட்டும் தானா?”

‘‘குடும்பத்தினர் அனைவரும் பகுத்தறிவுக் கொள்கைக்குள் வர வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக யாரையும் நாங்கள் கட்டா யப்படுத்த முடியாது. ஜெயலலிதா, கடவுள் பக்தி கொண்டவராக இருந்தார். ஆனாலும், அவரின் சமூகநீதிக் கொள்கைக்காக அவரை நாங்கள் ஆதரித்தோம். அப்படித் தான் இதையும் பார்க்க வேண்டும். ஒருவருக்கு பகுத்தறிவுச் சிந்தனை வரவில்லையென்றால், அது அவர் களின் பலவீனம். காலம் வரும்போது அந்த பலவீனம் சரியாகும். உத்தரவு போட்டோ, கட்டாயப்படுத்தியோ யாருக்கும் பகுத்தறிவுச் சிந்தனை யைப் புகுத்த முடியாது.”

'சிறுதெய்வம்’ அல்ல... ‘நாட்டார் தெய்வம்’

‘கடந்த 26.2.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், `அடேங்கப்பா ஆன்மிக அரசியல் - எங்க ஊரு மாரியாத்தா! ஸ்டாலின் எடுக்கும் தாரை தப்பட்டை’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டி ருந்தோம். கட்டுரை முழுவதுமே ‘சிறுதெய்வ வழிபாடு’ என்றே குறிப் பிட்டிருந்தோம். கட்டுரை வெளி யானதுமே அறிவுத்தளங்களிலிருந்து கருத்து தெரிவித்த பலரும், “மக்கள் ஒருபோதும் ‘சிறுதெய்வம்’ என்ற பெயரைப் பயன்படுத்தியதில்லை. சிறுதெய்வம் என்ற சொல்லில் உள்ள ‘சிறு’ என்கிற முன்னொட்டு எந்தப் பொருளில் தொனிக்கிறது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் என் பதைப் பொறுத்து அதன் அரசியல் முற்றிலும் மாறிவிடுகிறது. தமிழின் முக்கியமான ஆய்வாளர்களான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணி யன், அ.கா.பெருமாள் போன்றோர் ‘சிறுதெய்வம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றே குறிப்பிடுகிறார்கள். ‘நாட்டார் தெய்வம்’, ‘மக்கள் தெய்வம்’, ‘கிராமிய தெய்வம்’, ‘மண்ணின் தெய்வம், ‘மண்ணின் சாமி’ போன்ற பல மாற்றுச் சொற்கள் இன்று வழங்கப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்கள். இனி, ‘சிறுதெய்வம்’ என்பதைத் தவிர்த்து, ‘நாட்டார் தெய்வம்’ என்கிற சொல் லையே விகடனிலும் பயன்படுத் துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி:  'ஜூனியர் விகடன்' 4.3.2020

-  விடுதலை நாளேடு 29.2. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக