சனி, 28 மார்ச், 2020

ரஜினி பூனைக்குட்டி வெளியில் வந்தது!

கலி.பூங்குன்றன்

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அளித்த பேட்டி 'இந்து தமிழ்' நாளேட்டில் (26.3.2020) வெளிவந்துள்ளது.

என்மீது காவிச் சாயம் பூச நினைக்காதீர்கள் என்று கூட அவர் சொன்னதுண்டு. அதே நேரத்தில் தாம் நடத்த இருப்பது "ஆன்மிக அரசியல்" என்று இன்னொரு பக்கத்தில் சொல்லிக் கொண்டும் வருகிறார்.

இதே ரஜினிகாந்த் 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளையொட்டி 12, 13 ஆகிய இரு நாள்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்?

கேள்வி: அரசியல் - ஆன்மிகம் ஒப்பிடுங்கள்?

ரஜினி பதில்: "ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் - கீரியும் மாதிரி. எதிர்த் திசையில் உள்ளவை"

என்றாரா இல்லையா?

அப்படி சொன்னவர்தான் இப்பொழுது 'ஆன்மிக அரசியல்' நடத்தப் போவதாகப் பேசியுள்ளார். அதாவது இவர் நடத்தப் போகும் அரசியல் என்பது பாம்பும் - கீரியுமாக, அசல் சண்டை அரசியலாக (சினிமாவில் சண்டைக் காட்சிதானே பிரமாதம்!) இருக்கும் - அப்படித்தானே!

ரஜினியை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்; அவ ரைப் பேச விட்டாலே போதும் - அவர் முகத்திரையை அவரே கிழித்துக் கொண்டு விடுவார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்தப் பயத்தில்தான் செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறாரோ!

சரி... 'டிஸ்கவரி' சேனல் பேட்டிக்கு வருவோம்.

1. இந்துக்களுக்கு ஒரு நாடு தான் உள்ளது. அது இந்தியா மட்டுமே என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் கூட்டமும், அவற்றின் அரசியல் வடிவமான பிஜேபியும் கூறி வரு வதைத்தான் அட்சரம் பிறழாமல் சொல்லுகிறார் ரஜினி.

இந்தியா 'இந்துக்களின் நாடு' என்று யார் சொன்னது என்பது முதற் கேள்வி. ஒரு மதம் என்று சொன்னால் அதனைத் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும், அதற்கென்று ஒரு மதநூலும் இருக்க வேண்டும்!

இந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும் இருக்க வேண்டும். வரையறைகள் இந்து மதத்துக்கு உண்டா?

இல்லை என்பது மட்டுமல்ல; முரண்பாடுகளின் மொத்த உருவமாக அல்லவா இந்து மதம் இருக்கிறது.

சங்கரர், மத்துவர், இராமானுஜர் என்பவர்கள் இந்து மத முன்னோடிகள் என்றால் இவர்களுக்குள் முரண் பாடுகள் ஏன்? (சங்கரர் என் கடவுளின் அவதாரங்கள் ஆயிற்றே!)

சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள்கிறாரா? ஜீயரை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?

ஜீயரின் வைணவத்தில் வடகலை-தென் கலைப் பிரிவுகள் ஏன்? அவர்களுக்குள் சண்டைகள் ஏன்? காஞ்சீபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரன் காலத்தில் இலண்டன் பிரிவி கவுன்சில் வரை போய் சந்தி சிரித்தது ஏன்?

"இந்து மதம் என்பது நாம் வைத்த பெயர் அல்லவே - வெள்ளைக்காரன் வைத்த பெயர்" என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறினாரே! இந்த இலட்சணத்தில் 'இந்து மதம்' எங்கே வந்து குதித்தது?

சரி... இந்து மதமே இருப்பதாக - வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சரி சமமாகத்தானே இருக்க வேண்டும்? இந்து மதத்தில் அப்படி இருக்கிறதா?

பிறப்பிலேயே பேதத்தை ஏற்படுத்தியவன் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகிய பிர்மா என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதே!

நான்கு வருணத்தையும் படைத்தவன் பிர்மா எனும் கடவுள் - பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணனைப் படைத்தான், பாதங்களிலிருந்து சூத்திரனைப் படைத் தான் என்று இந்து மதத்தின் முக்கிய நூல் என்று கூறப்படும் மனுதர்மம் கூறுகிறதே! (அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87).

சூத்திரன் என்றால் ஏழு வகைப்படுவான் என்று கூறி, அதில் ஒன்று விபசாரி மகன், இன்னொன்று பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் - என்று கூறப்பட்டுள்ளதே! (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415).

இதனை ஏற்றுக் கொள்கிறாரா ரஜினி? இந்த வருண வரிசையில் ரஜினிகாந்த் சூத்திரர் தானே.... அப்படி யென்றால்.... அவர் யார்?

இந்துக்களின் அய்ந்தாம் வேதம் என்று கீதையைச் சொல்லுகிறார்களே. அந்தக் கீதை 'பகவான்' கிருஷ் ணனால் அருளப்பட்டது என்றும் சொல்லுகிறார்களே... அந்தக் கீதை தான் என்ன சொல்லுகிறது?

"சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் - நான்கு வருணங் களையும் நானே படைத்தேன்" என்று 'பகவான்' கிருஷ் ணன் சொல்லுவதாகச் சொல்லவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32) என்று சொல்லுகிறதே!

இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இந்த இந்து மத நாடாகத்தான் இந்தியா ஆக வேண்டுமா? இந்த இந்துக்களுக்குத் தான் ஒரு நாடு இல்லை என்று ரஜினிகாந்த் கவலைப்படுகிறாரா?

ஜெகத் குரு என்று இந்து மதத்தில் கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி "தீண்டாமை க்ஷேமகரமானது" என்று கூறுகிறாரே! ("ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள்" இரண்டாம் பாகம்).

டிஸ்கவரி சேனலில் சகோதரத்துவத்தைப் பற்றி ரஜினி கூறியுள்ளாரே - தீண்டாமை க்ஷேமகரமானது என்பதுதான் சகோதரத்துவத்திற்கான அடையாளமா?

இந்தியா இந்துக்களின் நாடு என்று சொல்லுவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதம் என்பது ரஜினிக்குத் தெரியுமா?

முன்பு அப்படி இருந்தது - இப்பொழுது இந்து மதம் மாறிவிட்டது என்று சொல்லப் போகிறாரா? ஓர் இந்துக் கோயிலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அதற்குரிய பயிற்சியும், கல்வியும் பெற்றால் அர்ச்சகரா கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து சங்கராச்சாரியர்களும் ஜீயர்களும் உச்சநீதி மன்றம் செல்கிறாரார்களே - இது குறித்து ரஜினியின் கருத்து என்ன?

சூத்திரன் தொட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். சாமி செத்துப் போய விடும் என்று எங்களின் வைகனாச ஆகமம் சொல்லுகிறது என்று உச்சநீதிமன்றத்திலே ஆதாரம் காட்டிப் பேசினார்களே. இதுதான் இந்து மதத் தின் சகோதரத்துவம் என்பதற்கான அடையாளமா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது ஓதுவார் திருவாசகம் பாடினார் என்பதற் காகக் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைத்தனரே! (கல்கி, 4.6.2000).

இவற்றையெல்லாம் அறிந்துதான் ரஜினி - ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி கூறும் இந்து நாட்டைப் பற்றி டிஸ்கவரி சேனலில் பேட்டி கொடுத்தாரா?

திலகர் மறைந்தபோது, அவரது உடலைச் சுமக்க காந்தியார் சென்றபோது, 'ஒரு பிராமணன் உடலை ஒரு சூத்திரன் தொடக் கூடாது' என்று கூறி காந்தியாரையே அவமதித்த வரலாறு தெரியுமா ரஜினிக்கு?

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாருக்கே இந்து மதத்தில் இந்த நிலை என்பதை ரஜினிகாந்த் உணர்வாரா? திருந்துவாரா?

2. எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்கி றோம், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர் களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே என்று பேட்டி கொடுத்திருப்பது நியாயந்தானா?

450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த கூட்டம் தானே இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டு வருகிறது. இது நியாயம்தான் என்று கூறுகிறாரா திருவாளர் ரஜினி?

பூரிஜெகன்நாதர் கோயில் உண்மையில் புத்தர் கோயில்தான் என்று விவேகானந்தர் கூறியது குறித்து கருத்தென்ன?

பசுவதைத் தடை என்ற பெயராலே ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே அகில இந்திய காங்கிரசின் தலைவர் காமராசரை தீயிட் டுக் கொளுத்தியவர்கள் யார்? (தி.மு.க. தொண்டர் ஒருவரால் தப்பிப் பிழைத்தார்). இன்றைய பிஜேபியின் பழைய பெயரான ஜனசங்கத்தைச் சேர்ந்த வர்களும், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர் களும், நிர்வாண சாமியார்களும், சங்கராச் சாரியார் களும் தானே!

காமராசரைப் பற்றி பெருமையாகப் பேசும் திருவா ளர் ரஜினி - காமராசருக்கு ஏற்பட்ட இந்த நிலையைத் தெரிந்த பிறகும் இந்து மதத்தின் சகிப்புத் தன்மையை தலையில் தூக்கி வைத்து மெச்சப் போகிறாரா?

3. இந்தியாவின் கலாச்சாரம் குறித்தும் கருத்து சொல்லி இருக்கிறார். இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரம் இருக்கிறதா? பன்மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் தான் இந்தியா -  இந்தியா ஒரே நாடல்ல!

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வீடு வரை மாறுபாடு கொண்ட பல கோடி மக்கள் வாழும் துணைக் கண்டமே! துப்பாக்கி முனையில் வெள்ளைக்காரர்களால் நிர் வாக வசதிக்காக உண்டாக்கப்பட்டது தான் இந்தியா!

4. பொருளாதார ரீதியான சமத்துவம் பற்றியும் பேசு கிறாரே - ஒருவன் ஏழையாகவும், ஒருவன் பணக்கார னாகவும் இருப்பதற்குக் காரணம் 'கர்மப்பலன்' எனும் இந்து மதத் தத்துவத்தை ஏற்கிறாரா ரஜினி?

எல்லாம் புரிந்து கொண்டுதான் ரஜினிகாந்த் பேசுகிறாரா?

புரியாமல்தான் பேசுகிறார் என்றால் இப்பொழு தாவது புரிந்து கொள்ளட்டும்!

புரிந்து கொண்டுதான் பேசுகிறார் என்றால் - இவரை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 27.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக