வெள்ளி, 20 மார்ச், 2020

குற்றங்களைத் தாங்களே செய்துவிட்டு பிறர்மீது பழி சுமத்தும் இந்து முன்னணி வகையறாக்களின் வஞ்சக நாடகங்கள் எத்தனை! எத்தனை!!

திருப்பூர் - தென்காசி - சதுமுகை - கோபி என்று அடுக்கடுக்கான மோசடி நடவடிக்கைகளைப் பாரீர்!

‘இந்து' என்பதன் யோக்கியதை இதுதானா? இந்து ராஜ்ஜியம் வந்தால் எத்தகைய

அபாயம் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!

இந்து முன்னணியினர் குற்ற செயல்களை தாங்களே சோடனை செய்து அரங்கேற்றி, அவற்றை இஸ்லாமியர்கள்மீது பழி சுமத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி, ‘இந்து' மனப்பான்மை என்பது எத்தகைய குரூரமானது; அவர்கள் கூறும் இந்துராஜ்ஜியம் வந்தால் நாடு எத்தகைய அபாய நிலைக்கு ஆளாகும் என்பதையும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்து மதம் என்பது வேறு; இந்துத்துவா என்பது வேறு என்றெல்லாம் கதைப்பார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது - இந்துத்துவா ஒரு வாழ்க்கை முறை என்றெல்லாம் பசப்புவார்கள்.

‘இந்து' என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள்

‘இந்து' என்பதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல வக்கற்றவர்களின் பேச்சு இது.

இந்து ராஜ்ஜியத்தை (ராஷ்டிரா) உண் டாக்கப் போகிறோம் என்கிறார்கள் - இப்படி சொல்பவர்கள் - பல பெயர்களில் நடமாடவும் செய்கிறார்கள்.

இந்து முன்னணி, இந்து மகாசபா, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், பி.ஜே.பி. என்று பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். இவர்களிடையே உறுப்பினர் முறை என்பது கிடையாது; காரணம் குற்றப் பின்னணியும், குற்றச் செயல்களிலும் ஈடுபடும் போக்கையும் கொண்ட இவர்கள் தப்பித்துக் கொள்ள இப்படியொரு தந்திரமான வழியை, யுக்தி யைக் கையாளுகிறார்கள். காந்தியாரைச் சுட்டுக்கொன்றவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றால், இல்லை, இல்லை, அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று சாதிக்க முற்படுவ தில்லையா?

ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு...

இப்பொழுது பி.ஜே.பி. மத்தியிலும், சில மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் வந்த நிலையில், பி.ஜே.பி. அதன் சங் பரிவார் களிடையே, அமைப்புகளில், பொறுப்புகளை, பதவிகளைப் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர் - இலாபம் கருதி!

தங்கள் அமைப்புகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கும், பொதுமக்கள் மத்தியில் பிர பல்யம் அடைவதற்கும் சில தந்திரமான வேலைகளில் ஈடுபடுவது அம்பலத்துக்கு, வெளிச்சத்துக்கு அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்துவிட்டது.

திருப்பூரில் என்ன நடந்தது?

நேற்று (19.3.2020) வெளிவந்த ஒரு தகவல்:

1. திருப்பூரைச் சேர்ந்த - இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நந்து என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது எலக்ட்ரிக் கடையை மூடிவிட்டு வீடு திரும் பும்போது தம்மை இசுலாமியர்கள் தாக்கிய தாகவும், தாக்கியபோது, ‘அல்லாஹ் அக்பர்' என்று கோஷம் போட்டுத் தாக்கியதாகவும், தங்களை இந்து என்று ஏமாற்றிட அவர்கள் காவி வேட்டி கட்டியிருந்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியது காவல் துறை - இந்த ஆசாமி நடத்தியது, கபட நாடகம் என்பது அம்பலத்துக்கு வந்தது.

தாம் சேர்ந்த இந்து மக்கள் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்கக் கூறியதாகவும், அவ்வாறு தான் செய்ததாகவும் நந்துவின் ஓட்டுநர் இராமமூர்த்தி காவல்துறையிடம் உண்மை யைக் கக்கிவிட்டார்.

அதவத்தூரில் நடந்தது என்ன?

2. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன் றியம், அதவத்தூரில் ஒரு நாடகம்; அக்கிரா மத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டட ஒப்பந்தக்காரர் பணியிலும் ஈடுபட்டு வருபவர். ஆறு மாதங் களுக்குமுன் இந்து முன்னணி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மூன்று மாதங்களுக்குமுன் இந்து முன்ன ணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக வும் ஆனார்.

5.3.2020 இரவு 2 மணியளவில் அவர் திருச்சி - சோமரசம்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் வாகனத்திற்கு யாரோ சிலர் தீ வைத்துவிட்டனர் என்பதுதான் அந்தப் புகார். அப்படி தீ வைத்தவர்கள் இந்து மதத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகார் கொடுத்ததோடு சில இந்து முன் னணி நண்பர்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பார்த்தபோதுதான் குட்டு அம்பலமானது.

புகார் கொடுத்த சக்திவேல், அவரது கூட் டாளியான மற்றொரு சக்திவேல், முகேஷ் ஆகியோர் இணைந்தே பெட்ரோல் வாங்கி வந்து மோட்டார் பைக்கைக் கொளுத்தியது அம்பலத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் உள்பட மூவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய இழிவான, தந்திரமான செயல் பாடுகள் என்பது புதியன அல்ல; இது மாதிரி யான கபட நாடகங்களை இதற்கு முன்பும் அரங்கேற்றியும் உள்ளனர்.

சத்தியமங்கலத்தில் சதி!

3. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமியின் சிலை கீழே தள்ளப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, அதனைச் செய்தவர்கள் அவ்வூரைச் சேர்ந்த மஞ்சநாதன் (வயது 17), செல்வக்குமார் (வயது 23) ஆகியோர் என்றும், அவர்கள் இருவரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்; திராவி டர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழி யைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டு உடைபட்டது (‘தி இந்து', 18.2.2002).

தென்காசியில் ‘அரங்கேற்றம்!'

4. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அவலம் ஒன்று - அது நடந்தது 2006 ஜனவரி 24 ஆம் தேதி.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார் பாண்டியன் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அதன் பின்னணியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பும் நடந்தது. அது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களும் இந்து முன்னணியினரே!

குமார் பாண்டியன் கொலை செய்யப் பட்டபோது பெரிய அளவில் மதக் கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து, (இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு) அதன்மூலம் பெரிய அளவு கல வரத்தைத் தூண்டவேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட் டவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்களே!

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். கேரளா வில் கல்குவாரியில் பணி செய்தவர். பாறை களை உடைக்கப் பயன்படுத்தும் அமோனி யம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்ப தற்காக கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கோபி அருகே ஒரு ‘நாடகம்'

5. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒரு சம்பவம் - கணபதிபாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு (வயது 31) இந்து அதிரடிப்படை மாநிலப் பொதுச்செயலாளர்.

காவல்துறையில் புகார் ஒன்றைக் கொடுத் தார் அவர்.

1.10.2016 அன்று இரவு குல்லா அணிந்த நான்கு பேர் தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் துரத்தி வந்ததாக கோபி காவல் துறையிடம் பரபரப்பான புகாரைக் கொடுத் தார்.

காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது - அது ஒரு கபட நாடகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரே தனது ஸ்கூட்டருக்குத் தீ வைத்துக்கொண்ட கதை யும் தெரிய வந்தது - அதனைத் தொடர்ந்து ராஜகுரு கைது செய்யப்பட்டார். காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் சிவகுமார் கூறுகையில், சம்பவத்தன்று ஸ்கூட்டரை எரித்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த ஸ்கூட் டரை அவரே கைப்பேசியில் படம் பிடித் துள்ளார். அவரை மர்ம நபர்கள் துரத்திய போது, வாய்க்காலில் குதித்துத் தப்பி ஓடிய தாகக் கூறியிருந்தார். அவரது கைப் பேசியை சோதனை செய்தபோது, ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருந்ததை 20 நிமிடங்கள் வரை படம் பிடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தென்காசியில் இன்னொரு சம்பவம்!

6. தென்காசி குளத்தூரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இந்து முன்னணியின் முன்னாள் நிர்வாகி. பிறகு ‘பாரத் சேனா' என்ற இந்து அமைப்பின் தலைவர். 2017 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு தனது வீட்டின்முன் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ தீ வைத்துவிட்டனர் என்று புகார் கூறினார். நள்ளிரவில் பட்டாசு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாகவும் கூறினார். விசாரணை செய்தபோது, அந்த நபரே அதனை செய்தார் என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.

சோழபுரத்திலும் சோடனை!

7. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமான் சேனையின் மாநில செயலாளர். அவர் காரில் சென்றபோது, சோழபுரம் சுங்கச்சாவடி அருகே அடை யாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியது என்றும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத் துக்கும் தகவலும் தெரிவித்தார்.

விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், அவர் புகார் பொய்யானது, மோசடியானது, இட்டுக்கட்டப்பட்டது என்று கண்டறிந்து, காளிகுமார் உள்பட மூன்று பேரையும் கைது செய்தது.

மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துவது என்ன?

இதுதான் ‘இந்து' - ‘இந்துத்துவா!'

இந்து அமைப்புகள் - இஸ்லாமியர்கள்மீது அபாண்ட பழி சுமத்தி, கலவரங்களை உண்டாக்குவது என்பது ஒன்று; தாங்கள் பாதிக்கப்பட்டதாக நம்ப வைத்து கபட நாடகம் ஆடி, அதன்மூலம் அனுதாபத்தைத் தேடுவது, இரண்டு, அந்த அனுதாபத்தை முதலீடாக்கி அமைப்பில் பதவிகளை அபகரிப்பது மூன்றாவது.

இதைவிட நாம் முடிவுக்கு வரவேண்டியது ‘இந்து' மதத்தின்மீது பெரும் பிடிப்பு வைத்துள் ளவர்களின் மனநிலை என்பது எத்தகையதாக இருக்கிறது என்பதுதான் முக்கியதாகும்.

இந்துராஜ்ஜியம் வந்தால்.... எச்சரிக்கை!

மதத்தால் மாறுபட்டு இருந்தாலும், சக மனிதரிடத்தில் சகோதரத்துவமாகப் பழகக் கூடாது, வெறுக்கவேண்டும்; எதையும் மதப் பார்வையோடு பார்க்கவேண்டும் -  அதற்காக எந்த எல்லைக்கும் சென்று கபட நாடகம் ஆடுவது - பழியை பிறர்மேல் போடுவது - அந்த நாடகம்கூட ஒரே மாதிரியான சோடனை என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது. இவைதான் இந்து மதம் - இந்துராஜ்ஜியம் உண்டாக்க நினைப்போரின் இழிவான மனப்பான்மை.

திரேந்திர கே.ஜா. எழுதிய நூல் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

அதுமட்டுமா?

பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ரகசிய இயக்கமாக அவற்றை நடத்தியபோதே அதில் துப்பாக்கிப் பயிற்சி, இராணுவப் பயிற்சி பெற, இந்து மகா சபை அன்னாள் தலைவராக இருந்த மூஞ்சே, ஜெர் மனிக்குச் சென்று, இட்லரைச் சந்தித்து, இத்தாலியில் முசோலினியைச் சந்தித்து ஒரு இராணுவப் பயிற்சிப் பள்ளி தொடங்க மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் விளை வுதான் - ‘‘போன்சாலே மிலிட்டரி ஸ்கூல்'' என்ற இந்த இராணுவப் பயிற்சிப் பள்ளி;  (RSS - Run Institution). 2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டவர் ‘அபிநவ் பாரத்'  அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரக்யாசிங் தாகூர். இந்தக் குண்டுவெடிப்பில் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி மருந்து பயன்படுத்தப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.  பிரக்யாசிங் தாகூர் பிணையில் வந்து, எம்.பி.,யாகி காந்தியார் கொலையை நியாயப்படுத்தி, இந்திய நாடாளுமன்றத் திலேயே பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த கண்டனத்திற்கு ஆளான நிகழ்வு அண்மைக்கால வரலாறு அல்லவா!

(‘நிழற்சேனைகள்' என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவாவைப் பரப்ப எப்படி வன்முறையைக் கற்றுக் கொடுக்க அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்பதற்கு திரேந்திர கே.ஜா. என்பவர் எழுதியுள்ள ஆங்கில நூல் ஆதாரமாகும்).

வி.டி.சவார்க்காரின் ‘இந்துத்துவா' நூலில் கையாளும் சொற்றொடர், ‘‘Hinduize Military, Militarize Hindus'' ‘‘இராணுவத்தை இந்து மயமாக்கு - இந்துக்களை இராணுவ மயமாக்கு'' - அதுதானே இப்போது கூச்ச நாச்சமின்றி நடத்தப் பெறுகிறது. அதனால், பழைய கிரிமினல்கள் புதிய பாதுகாப்புத் தேடி இந்து அமைப்புகளில், பா.ஜ.க.வில் சேர்ந்து பதவி பெறுகிறார்கள்.

இவையெல்லாம் எத்தகைய அபாயகர மானது, மனிதப் பண்பாட்டுக்கு விரோதமானது என்பது தெரியவில்லையா? இவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் வந்தால், நாடு எந்தக் கதிக்கு ஆளாக நேரிடும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இவர்கள் நம்பும் இந்து மதம் ஒழுக்கத்தை வளர்க்கிறதா - குலைக்கிறதா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளட்டும்!

குறிப்பாக இளைஞர்கள் இந்தத் தீய இந்து மத சக்திகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது சமுதாய நலன் கருதி மிக அவசியமாகும் - எச்சரிக்கை!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.3.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக