சனி, 21 மார்ச், 2020

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை செய்யப்படாதது ஏன்?

நிர்பயா பாலியல் வன்கொலை: குற்றவாளிகளுக்குத் தூக்கு வரவேற்கத்தக்கதே!

பாபர் மசூதி குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவது எப்படி?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை செய்யப்படாதது ஏன்?

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாமீதான பாலியல் வன்கொலை குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது வரவேற்கத் தக்கது என்றும், தீர்ப்புகள் கால தாமதத்தோடு அளிக்கப்படுவதும்,  ராஜீவ் கொலை வழக்கில்

சம்பந்தப்படுத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்த தீர்ப்புக்குப் பிறகும் சிறையில் உழலுவதும் எப்படி? இத்தகு தாமதங்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்  என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை - கொலை  வழக்கில் குற்ற வாளிகள் நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, அது நேற்று (20.3.2020) விடியற்காலை 5.30 மணிக்கு நிறைவேற்ற வும்பட்டது.

தூக்குத் தண்டனைபற்றிய கருத்து

தூக்குத் தண்டனை கூடாது என்று ஒரு பக்கம் சர்ச்சை நடந்துகொண்டு இருந்தாலும், அந்தச் சட்டம் இருக்கும் வரைக்கும், அதனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே!

அதிலும் நிர்பயா மீது கேவலமான - அருவருப்பான - மனித சமூகம் வெட்கித் தலைகுனியத்தக்க செயல்களில் ஈடுபட்ட கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக் கப்பட்டதை வரவேற்கத்தான் வேண்டும்.

பெண் என்றால் போதைப் பொருளா?

பெண் என்றால் ஒரு போதைப் பொருள் - காமப் பதுமை என்று நினைக்கும் ஆண் ஆதிக்கத்துக்கும் - பெண்கள் படுக்கை யறைக்கு உரியவர்கள் என்று கூறும் மனுதர்மச் சிந்தனைக்கும்  கொடுக்கப்பட்ட மரண தண்டனையாகவே இதனைக் கருதவேண்டும்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்தத் தீர்ப்புக் கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன என்பது தான். தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே தவிர, செயல்பாட்டில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பாகவே இருந்து வருகிறது. இதற்கொரு முடிவு எட்டப்பட்டாக வேண்டும்.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்

ராஜ நடைபோட்டுத் திரிகிறார்களே!

ஒரு பட்டப்பகலில் பாபர் மசூதி இடிக் கப்பட்டு 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள். ஏன், மத்திய அமைச்சர்களாகவும்கூட அலங்காரமாக வாழும் அவலத்தை நினைத்தால், ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

‘‘ஒரு குலத்துக்கொரு நீதி'' என்னும் மனுநீதி மாறுவேடம் போட்டுத் திரிவதாகத்தான் கருதவேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கும் -

உண்மை நிலையும்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 28 ஆண்டு காலம் சிறையிலே உழலுகிறார்கள்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், ஓய்வுக்குப் பின் அந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளாரே!

‘இந்தத் தீர்ப்பு வழங்கப்படும்போது எங் களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது' என்று கூறினாரே!

விசாரணை அதிகாரியாக இருந்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், ‘‘பேரறிவாளன் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்தோம்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளாரே!

இரண்டு வகை தண்டனையா?

இதற்கு மேலும் உச்சநீதிமன்றமும் ஏழு பேர்கள் விடுவிக்கப்படலாம் என்று கூறிவிட்டது; தமிழ்நாடு அரசும் அமைச்சரவையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும், இன்னும் விடுதலை செய்யப் படவில்லை.

குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு இரு வகையான தண்டனையா? 28 ஆண்டு சிறை மற்றும் தூக்குத் தண்டனையா?

ஒரு பக்கத்தில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பு - இன்னொரு பக்கத்தில் தாமதிக்கப்பட்ட விடுதலையா? இதுதான் இந்திய நாட்டின் நான்குத் தூண்களுள் இரண்டு முக்கிய தூண்களின் நிலைப்பாடா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

குரல் கொடுக்கட்டும்!

நாடாளுமன்றத்தில் இதற்கொரு தீர்வு காண கட்சிக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் குரல் கொடுக்கட்டும். குற்றவாளிகள் தப்பக் கூடாது - அதேநேரத்தில் நிரபராதிகள் தண் டிக்கப்படவும் கூடாது - தீர்ப்புகளுக்கான கால வரையறையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.3.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக