வியாழன், 5 மார்ச், 2020

இதுதான் மன்னர் ஆட்சி. கோயிலில் கொள்ளை அடித்தபார்ப்பனர்களுக்குத் தண்டனை குறைவு


புதுடில்லி, மார்ச் 5-அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ எழுதிய   ’கல்வெட்டுக்களில் தேவதாசி’ எனும் வரலாற்று நூலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி டில்லியில் வெளியிட்டார். அப்போது அவர், அக்காலங்களில் கோயிலில் கொள்ளை அடித்த பார்ப்பனர்களுக்கு மன்னர்கள் குறைந்த தண்டனை அளித்ததை படித்து வியப் படைந்தார்.

இது குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: தேவதாசி எனும் வார்த்தை சில மாதங்களுக்கு முன் சிலரது மனங்களில் ஒரு கலவரத்தை உருவாக்கியது. பெரி யாரை புரிந்துகொள்ளாத மனங்களுக்கு அதில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் ஆர்வம் இருந்ததே தவிர, அதன் பின்னணியில் உள்ள வலியும், வரலாறும் புரியவில்லை.

தேவதாசிகள் பற்றி பொதுப்புத்தியில் இருக்கும் தவறானக் கருத்தை மாற்றி உண்மையை பொது மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேவரடியார்கள் அக்காலங்களில் எப்படி மதித்து, போற்றப்பட்டார்கள் என்பதை மய்யக் கருத்தாகக் கொண்டு எழுதியதாக ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் அவர், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் பெங்களுர் நாகரத்தினம்மாள் ஆகியோரின் வாழ்க்கையை பற்றியும் தந்திருக்கிறார். இதில் நாகரத்தினம்மாள் தான் ஈட்டிய சம்பாதனையில் தஞ்சையின் திருவையாற்றில் தியாகராஜருக்கு ஒரு கோயிலை கட்டி இருந்தார். ஆனால், அவரே அதில் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் நாம் அறிவது அவசியம்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியத் தகவலின்படி சிவனா? விஷ்ணுவா? எனப் பாகுபாடு இன்றி அங்கு அச்சகர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து கோயில் சொத்துக்களை கொள்ளை அடித்து வந்துள்ளனர். நாமெல்லாம் தவறு செய்தால் கிடைக்கும் தண்டணை வேறு. இதற்காக கழுத்தை வெட்டி இருப்பார்கள், யானைக் காலால் இடற வைத்து மிதித்திருப்பார்கள்.

ஆனால், அந்த பார்ப்பனர்கள் செய்த தவறுக ளுக்கு தண்டனை வேறாக இருந்துள் ளது. இவர்களுக்கு அதிகபட்சமான தண்டனையாக கோயிலுக்குள் அவர்கள் உள்ளே நுழையக் கூடாது எனவும், அவர்கள் சந்ததியினரும் இங்கு பணியாற்ற முடியாது என்றும் விதித்தாக நூலில் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு, தொடர்ந்து கொள்ளை அடித்தவர் களை அக்கோயிலில் நுழையக் கூடாது என அந் நாட்டு மன்னர்கள் குறைந்த தண்டனை அளித்து உள்ளனர். அதேசமயம், ஒருகோயிலை தன் செல வில் கட்டிய நாகரத்தினம்மாள் அதில் நுழைய முடியாமல் இருந்துள்ளது. இதுதான் நம் வளர்ந்த சமூகத்தில் இருந்த நியாயமும், தர்மமும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் தான் தேவதாசிகள் வைக்கப்பட்டிருந்தனர்.

அம்மையார்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலாம்மாள் போன்றவர்களை பற்றி நாம் பெரு மை யாக கூறலாம். எனினும், இவர்களை போன்ற ஓரிருவர் தான் அந்த சமூகத்தில் இருந்தும் வசதி யாக வாழ முடிந்ததுள்ளது. மற்ற தேவதாசிகள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக தனது வயதானக் காலங்களில் தேவதாசிகள் மிக வும் துன்ப வாழ்க்கைக்கு உள்ளாகினர். எனவே தான் இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ப திலே முத்துலட்சுமி ரெட்டி, தந்தை பெரியார் போன் றவர்கள் மிகத் தீவிரமாக நின்று போராடினார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு ஆதரவாக முத்துலட்சுமி ரெட்டி எழுந்து குரல் கொடுத்தார். அப்போது, காங்கிரஸ் தலைவ ராக இருந்த சத்தியமூர்த்தி எழுந்து, இது இறைவ னுக்கு நாம் செய்யக்கூடிய பணிவிடை எனவும், இதை குறைத் துப் பேசக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு முத்துலட்சுமி, ’இப்பணியை பல தலை முறையாக நாம் இறைவனுக்கு செய்து விட்டோம். இனி அப்பணியை செய்ய உங்கள் குடும்பத்து பெண்களை வரச்சொல்லுங்கள். நாம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம்.’ எனக் கூறி இருந்தார்.

இந்த சூழலுக்கு தள்ளப்பட்ட தேவதாசிகள் அன்றையக் காலக்கட்டத்திலே சொத்துரிமையுடன் சுகவாழ்க்கை வாழ்ந்ததாக ஆசிரியர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தேவதாசி முறையில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டிருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அன் றைக்கு நாம் தனித்து இருந்தோமா? இல்லையோ? என இன்றைக்கும் நாம் தனித்தே இருக்கிறோம். சுகவாசிகளாக நாம் வாழாமல் தெருவில் இறங்கி போராடும் வகையில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வருங்கால நம் சமூகம் சுகவாசிகளாக இருக்கும். ஏனெனில், அனைத்து பிரச்சினைகளையும் கொண்டுபோய் நம் குழந்தைகளின் தலையில் சுமத்தக் கூடாது. இவ்வாறு கனிமொழி பேசினார்.

இந்நூல், டில்லியின் சாகித்திய அகாடாமி அரங்கில் வெளியிடப்பட்டது. கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, டில்லி தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.ரெங்கநாதன்.அய்பி எஸ்(ஓய்வு) தலைமை வகித்தார். டில்லி காவல் துறையின் இணை ஆணையரான க.ஜெகதீசன், அய்பிஎஸ், முதல் பிரதியை கனிமொழியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, உத்திரப்பிரதேசக் காவல் துறையின் நொய்டா துணை ஆணையரான சு.ராஜேஷ், அய்பிஎஸ் மற்றும் மத்திய செய்தி தகவல் தொடர்புத்துறையின் துணை இயக்குநரான பி.அருண் குமார். அய் அய்எஸ் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

டில்லியின் தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநரான ஏ.அண்ணாமலை வாழ்த்துரை வழங்கினார். அதில் அவர் தேவதாசி முறையை ஒழிக்க காந்தியடிகள் எடுத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். டில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் தமிழ்ப்பேராசிரியரான இரா.அறவேந்தன் நூல் அறிமுக உரையாற்றினார். அதே பல்கலைகழகத்தின் தமிழாய்வு மாணவரான தமிழ் பாரதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக நூல் ஆசிரியரின் மகளான எஸ்.சபா அனைவரையும் வரவேற்றார்.

 - விடுதலை நாளேடு, 5.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக