செவ்வாய், 17 மார்ச், 2020

ஈரோட்டில் அன்னை நாகம்மையார் சிலை - வேலூரில் அன்னை மணியம்மையார் சிலை

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 17 ஈரோட்டில் அன்னை நாகம் மையார் சிலையும், வேலூரில் அன்னை மணியம் மையார் சிலையும் நிறுவப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

சென்னை பெரியார் திடலில் தொண்டறத்தாய் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா அவர்களின் நினைவு நாளில் (மார்ச் 16) திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா நிறைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

முக்கிய அவ்வுரையில் அவர் குறிப்பிட்டதாவது:

* நெருக்கடி காலத்தில் அன்னையார் பல்வேறு சவால்களைச் சந்தித்தார்.

* தணிக்கைக் குழுவினரின் கத்தரிக்கோலிலிருந்து ‘விடுதலை' ஏட்டை நாள்தோறும் காப்பாற்ற வேண் டிய நிலை இருந்தது, அதனையும் கடந்து வந்தார்.

* வருமான வரித் துறையின் தொல்லை மற்றொரு பக்கம். இயக்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களி லிருந்து கிடைக்கும் வருவாயை முடக்கி, பெரியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு முட்டுக்கட்டை - அதனையும் கடந்து வந்தார்.

அன்றைய எதிரிகளும் - இன்றைய எதிரிகளும்!

* அன்றைக்கு வெளிப்படையாக எதிரிகளைச் சந் திக்க முடிந்தது - அவர்களை அன்னையார் எதிர்கொண்டார். இன்று வஞ்சகமான எதிரிகளைச் சந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

* இவற்றை எப்படி சந்திப்பது - வெற்றி கொள்வது என்பதற்கு நமது தலைவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

* உயிரை இழந்துதான் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அதற்கும் தயாராவோம்!

* அன்னையார் நினைவிடத்தில் நாம் வைப்பது வெறும் மலர்வளையம் மட்டுமல்ல - செயல்களையே மலர்வளையமாக வைப்போம்!

பெண்களின் நிலை என்ன?

* மக்கள்தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன? அவர்களுக்குரிய உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டனவா?

* பெரும்பாலும் பெண்கள் உழைக்கக் கூடியவர்கள் - அவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுவிட்டனவா? அவர்களுக்குரிய பிரச்சினைகளை அவர்களால் வெளிப்படையாகக் கூற முடிகிறதா? உரிமைகளைப் பெற முடிகிறதா?

* அன்னையாரின் நூற்றாண்டில் பெண்கள் மத்தி யில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை. வீட்டுக்கு வீடு பெண்களைச் சந்தித்து எடுத்துக் கூறுங்கள்.

* என்ன கொடுமை என்றால், பெண்களின் உரி மைக்குப் பெண்களே எதிரிகளாக இருப்பதுதான் வேதனை.

* பெண்ணாகப் பிறப்பதற்குக்கூட உரிமை இல் லையே! கருவில் இருக்கும்போதே ஆணா, பெண்ணா என்று அறிந்து, பெண் என்றால், கருவிலேயே அழிக்கப்படும் கொடுமை நீடிக்கலாமா?

* தாய்ப்பால் கொடுத்தவர்களே கள்ளிப்பால் கொடுக்கும் கொடுமையை இனியும் அனுமதிக் கலாமா?

* இங்கே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள், திருமணமாகி, குடும்பமாக வசிக்கக் கூடிய அந்தப் பெண் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் காணப்படும் முன்னொட்டு - இனிஷியல் அய்யா - அம்மா பெயர்களின் முதல் எழுத்தான ஈ.வி.ஆர்.எம். என்ற அந்தப் பெருமை யைப் பெறுகிறார்கள்.

* அவர்கள் இந்த விழா மேடைக்கு வந்து, அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள பவுண்டேஷனுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

* அன்னையார் அவர்கள் அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்தார்கள். ஆனால், அவர்கள் 60 ஆண்டுகள் கூட வாழவில்லை.

* நான்கு ஆண்டுகள் தான் இயக்கத்திற்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றார்கள் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்துக் காட்டினார்கள்.

* தி.மு.க.வில் கலைஞர், நாவலர் இருவருக்குமிடையே பிணக்குகள் ஏற்பட்டபோது, அவர்கள் இருவரையும் சென்னை பெரியார் திடலுக்கு அழைத்து, அய்யா, அண்ணா இல்லாத இந்தக் காலகட்டத்தில், கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.

* தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ, அந்தக் கடமையை அன்னையார் செய்தார்கள். இந்தச் செய்தியை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது ‘‘நெஞ்சுக்கு நீதி'' நூலிலும் பதிவு செய்தும் இருக்கிறார்.

* அம்மா எவ்வளவோ தூற்றலுக்கெல்லாம் ஆளாகி இருந்தார்கள். அப்படி தூற்றியவர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதே அம்மாவைப் போற்றும் அளவுக்கு அம்மா வெற்றி பெற்றது சாதாரணமானதல்ல.

அய்யா - அம்மா பேணிய

மாபெரும் மனிதப் பண்பு

* ராஜாஜியின் ஆலோசனையைப் பெற்றுத்தான் பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை வேறுவிதமானது என்பதற்கு ஆதாரம் உண்டு - ஆவணமும் உண்டு.

* பெரியாரின் அந்த முடிவு தவறானது - சரிப்பட்டு வராது - பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை ஒரு பொடிப் பெண் நடத்துவது இயலாது என்றுதான் அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதினார்.

* நினைத்திருந்தால், அந்தக் கடிதத்தை தந்தை பெரியார் வெளியிட்டு இருக்கலாம். ஏன் வெளியிடவில்லை? அந்தக் கடிதத்தில் ராஜாஜி ‘‘அந்தரங்கம்'' என்று எழுதி இருந்ததுதான் அதற்குக் காரணம்.

* உயிரோடு இருந்தவரை தந்தை பெரியாரும் சரி, அன்னை மணியம்மையாரும் சரி அதை வெளியிடவில்லை. எத்தகைய உயர்ந்த பண்பாடு - அறிவு நாணயத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். வரலாற்றுக் காரணத்துக்காக அவர்கள் மறைவிற்குப் பிறகு நான் வெளியிட்டேன்! (இந்தத் தகவலை தலைவர் ஆசிரியர் கூறியபோது, மன்றத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் அமைதியின் ஆழத்திற்கே சென்றனர்).

* தலைவர்கள் என்போர் யார்? மக்கள் பின்னால் செல்லுவோர் தலைவர்கள் அல்ல - அரசியலுக்கு வேண்டுமானால் இது பொருத்தமானதாக இருக்கலாம்.

* ஆனால், மக்களைத் தன் பின்னால் அழைத்துச் செல்லுவோர்தான் உண்மையான தலைவர் - அதைத்தான் தந்தை பெரியாரும், அம்மாவும் செய்தார்கள்.

இருபெரும் தலைவர்களுக்கு சிலைகள்

* சுயமரியாதை இயக்கம் என்பது ஒரு மனிதநேய இயக்கம். அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தந்தை பெரியார். அவர்களின் தன்னிகரற்ற பணிக்குத் தோள் கொடுத்தவர் அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள்.

* ஈரோட்டில் அன்னை நாகம்மையார் சிலை திறக்கப்படும். அதற்கு நமது திராவிட இயக்க வீராங்கனை - மேனாள் மத்திய இணையமைச்சர் - தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலக்குமி ஜெகதீசன் முக்கிய பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, அன்னை மணியம்மையார் சிலை அவர்கள் பிறந்த வேலூரில் நிறுவப்படும் - அதற்கான செயல்பாட்டுக் குழுத் தலைவராக நமது வி.அய்.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் இருந்து செயல்படுத்துவார்.

விழாத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது நிறைவுரையில் எடுத்து வைத்த முக்கிய முத்துகள் இவை.

- விடுதலை நாளேடு 17 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக