மதவெறி- ஜாதிவெறியைத் தகர்ப்போம்!
திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!
எதிர்வரும் சவால்களை நமது தளபதி சந்திப்பார் - வெல்வார்!
இனமானப் பேராசிரியர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் சூளுரை
சென்னை, மார்ச் 15 மதவெறி, ஜாதிவெறிகளை வீழ்த்துவோம் - தன்மானத்தைவிட இனமானமே பெரிது என்ற உணர்வைக் கொள்வோம். இன மானப் பேராசிரியரின் பாடங்களைப் பின்பற்று வோம் - தளபதி மு.க.ஸ்டாலின் எதிர்வரும் சவால்களை சந்திப்பார் - வெற்றி கொள்வார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சங்கநாதம் செய்தார்.
நேற்று (14.3.2020) மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், இனமானப் பேராசிரியருமான க.அன்பழகன் அவர் களுடைய படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்
மிகுந்த சோகத்திற்கும், துன்பத்திற்கும் இடையில், இந்த வீர வணக்க நிகழ்ச்சி நாள். நம்முடைய இனமானப் பேராசிரியரை இறுதியாக வழி யனுப்பினாலும்,
என்றைக்கும் பேராசிரியர் மறையவில்லை, நம்மோடுதான் இருக்கிறார், நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார், நம் ரத்த நாளங்களில் உறைந் திருக்கின்றார், உணர்வை ஊட்டுகின்றார். எதைப் பாடமாக அவர்கள் சொல்லிக் கொடுத்தார்களோ, அந்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் நினை வூட்டுகிறோம் என்பதற்காக, இந்தப் படத்தைத் திறந்து வைத்து, எனக்குப் பிறகு ஒரு சிறந்த வீர வணக்க உரையை நிகழ்த்தவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் அன்பு சகோதரர், கலைஞரால், பேராசிரியரால் அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் விட்டப் பணிகளை நான் முடித்தே தீருவேன் என்று சூளுரைக்கக் கூடிய அருமை சகோதரர், அருமை தளபதி அவர்களே,
பேராசிரியரின் படத்திறப்பு நிகழ்விற்கு முன்னிலை ஏற்று சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் அருமை சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களே,
அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அருமைத் தோழர்களே, அவருடைய இழப்பால் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய அவருடைய குருதிக் குடும்பத்தவர்களே, கொள்கைக் குடும்பத்த வர்களாக இருக்கக்கூடிய அருமை சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு பேராசிரியர்களை
அடையாளம் காட்டினார்
பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தில் தளபதியாக இருந்த காலத்தில், இரண்டு பேராசிரியர் களை அடையாளம் காட்டினார்.
பல பேருக்கு இந்த வரலாறு நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு. தந்தை பெரியார் அவர்களையே, அண்ணா அவர்கள் முதலில் ‘‘பேராசிரியர்'' என்று குறிப்பிட்டார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று சொன்னார்கள். அந்த பேராசிரியரின் உரை மாலை நேர வகுப்புகளாகத்தான் தொடங்கும். மூன்று மணி நேரம், நான்கு மணிநேரம் பல ஊர்களிலே நடக்கும் என்று சொன்ன அண்ணா அவர்கள்,
அடுத்து அவரால் அடையாளம் காட்டப்பட்ட இன்னொரு பேராசிரியர்தான் இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கக்கூடிய நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.
பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்?
இளைஞர்களுக்குத் தெரியவேண்டும். சுருக்கமாக சொல்லுகிறேன். பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்? இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் இந்த அரங்கத்தைவிட்டுப் போகவேண்டும்.
அதுதான் அந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது நாம் நினைவூட்டிக் கொள்ளவேண்டிய பாடமும்கூட.
தந்தை பெரியார் சொன்னார், இந்த இயக்கம் தன்மான இயக்கம் - சுயமரியாதை இயக்கம்; தன்மானம் என்று சொல்லும்பொழுது, தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதுதான் தன்மானம். ஆனால், தன்மானத்தைவிடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் இனமானம்.
தன்மானம் தோற்கவேண்டும்;
இனமானம் வெற்றி பெறவேண்டும்
தன்மானத்திற்கும், இனமானத்திற்கும் போட்டி வருகின்ற நேரத்தில், தன்மானம் தோற்க வேண்டும்; இனமானம் வெற்றி பெறவேண்டும். அதற்காகத்தான் உழைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்த பாடத்தை, பேராசிரியர் சொல்லிக் கொடுக்கவில்லை; மாறாக வாழ்ந்து காட்டினார். அவர்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர்.
தன்னை விட மூத்தவர்கள், இளையவர்கள், தன்னைவிட அதிகமான சிறப்புப் பெற்றவர்கள் என்பதைப்பற்றி எல்லாம் அவருக்குக் கவலை யில்லை.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறள் முக்கியமானது.
கலைஞர் கட்சியின் தலைவர் என்று சொல் லுகின்ற நேரத்தில், கட்டுப்பாடோடு பின்பற்றி னாரே, அதனால்தான் அவர் இனமானப் பேராசிரி யர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பாடத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘‘கொள்கைகளைப் பேசா நாட்களெல்லாம்
பிறவா நாட்களே!''
அதுபோலவேதான், அவரைப் பொருத்தவரை யில், எந்தப் பதவியையும் அவர் தேடிப் பிடித்ததில்லை. எல்லாப் பதவிகளும் அவரைத் தேடிப் பிடித்தன. அதுதான் அந்த இனமானப் பேராசிரியருடைய தனித்தன்மை. கொள்கைகளைத்தான் எந்த மேடையிலும் சொல்வார். தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கையை, பகுத்தறிவுக் கொள்கையை, இனமானக் கொள்கையை அண்ணா அவர்கள் எப்படி விரிவாக விளக்கினார்களோ, அதற்கடுத்து, மிகத் தெளிவாக, கலைஞரும், பேரா சிரியரும், எல்லா மேடைகளிலும், இந்தக் கொள்கை களைப் ‘‘பேசா நாட்களெல்லாம் பிறவா நாட்களே'' என்று கருதியவர்கள் பேசியவர்கள்!
இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்; இந்த இயக்க வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நான்கு தலைமுறைகளைப் பேராசிரியர் கண்டிருக்கின்றார்.
எந்தக் கொம்பனாலும்
வீழ்த்திவிட முடியாது
கழகத்தின் தலைவராக, தளபதியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்; ஏற்றுக் கொண்டிருப்பது மட்டு மல்ல, தட்டிக் கொடுத்திருக்கிறார். உற்சாகப்படுத்தி யிருக்கிறார், இளைஞர்களை வரவேற்கக்கூடிய அந்த மனப்பான்மை இருக்கிறதே, அதுதான் இந்த இயக்கத்தினுடைய ரத்தவோட்டம் - அதுதான் ஜீவநாடி! இதை எந்தக் கொம்பனாலும் வீழ்த்திவிட முடியாது என்பதற்கு உத்தரவாதம்.
அண்ணா அவர்கள் இயக்கத்தில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இந்த மூன்றைக் கவசங்கள் போலத் தந்தார்கள்.
தந்தை பெரியாரின் விளக்கம்!
அண்ணா அவர்கள் மறைகின்ற நேரத்தில், பெரியார் ஒரு விளக்கத்தை சொன்னார்கள். அது என்ன தெரியுமா?
‘‘மூன்றும் முக்கியம்தான் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் முக்கியம்தான். கடமை என்பதற்கு ஒரு பொருள் சொல்லலாம்; இரண்டு பேர் மாறுபடலாம். கண்ணியம் என்பது ஒருவருக்குக் கண்ணியமாக இருப்பது, இன்னொருவருக்கு வேறு விதமாக தெரியலாம். அதற்கு இரண்டு அர்த்தங்கள், வியாக்கியானங்களை சொல்லலாம். ஆனால், கட்டுப்பாடு என்பதற்கு ஒரே பொருள்தான். எனவே, இந்த இயக்கம் தழைக்கவேண்டுமானால், திராவிட இயக்கம் என்றைக்கும் நிலைக்கவேண்டுமானால், கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு'' என்று சொன்னார்கள்.
கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கிறார்!
அந்தக் கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கின்ற நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.
இந்தப் பாடம் நமக்கு உறுதியாக இருக்கின்ற வரையில், எந்தக் கொம்பனும் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது; இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று கணக்குப் போட முடியாது.
எனவேதான், பெரியார் தந்த வழியிலே, அண்ணா காட்டிய முறையிலே, கலைஞர் உழைத்த உழைப் பிலே, இன்றைக்கு எல்லோரையும் சேர்த்து வைத்து, செதுக்கப்பட்டவர்தான் நமது தளபதி! எதிர் வருகின்ற சவாலை ஏற்கக்கூடிய எங்கள் தளபதி அவர்கள், சகோதரர் அவர்கள் துணிவாக, களத்திலே நின்று சந்திக்கக்கூடியவர்!
மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது
எனவே, இது வெறும் வீர வணக்க நாள் அல்ல நண்பர்களே, மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது.
‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?'' என்று கேட்கக்கூடிய அந்த உணர்வோடு நம்முடைய லட்சியத்தை நோக்கிப் போகின்றோம் என்பதைப் புதுப்பிக்கின்ற நாள் இந்த நாள் - இந்தப் படத்திறப்பு.
அதை செய்வதற்குரியவர்தான் அடுத்து இங்கே உரையாற்றவிருக்கிறார்கள்.
பேராசிரியர் பேசியதைப்பற்றி இங்கே துரை முருகன் அவர்கள் சொன்னார்கள். அதையே நான் வழிமொழிகிறேன்.
அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாக, பேராசிரிய ருடைய அந்த விளக்கம் இருக்கிறதே, எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்குத் தெளிவான பதிலை சொல்வார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன்.
இளைஞர்கள், புதிதாக தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்கள், அந்தத் திராவிடத்தை அழிப்போம் என்று சிலர் கனவு காண்கிறார்கள் அல்லவா - திராவிடத்தை நாங்கள் வீழ்த்திவிடுவோம் என்று இப்பொழுது யார் யாரெல்லாமோ வந்திருக் கிறார்கள் அல்லவா! சில பேரை ஏமாற்றுகின்ற வகையில், பேசுகிறார்கள். நாம் பக்குவப்படுத்தி இருக்கின்ற வயலில் இருக்கின்ற நாற்றங்காலை, வேறு வயலில் திருட்டுத்தனமானப் பிடுங்கி நடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களை அடை யாளம் காணவேண்டும்.
பேராசிரியர் பேசுகிறார் கேளுங்கள்:
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன் - பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்
‘‘எதற்காக தமிழ்நாட்டில், தமிழர்களாகிய நாம், திராவிடர் கழகம் என்று பெயர் வைக்கவேண்டும். தமிழர் என்ற பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்கள்.
அதற்குப் பதில் சொல்கிறார் பேராசிரியர்,
‘‘நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் பதில் இதுதான். பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன். பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்.''
எவ்வளவுத் தெளிவாக இருக்கிறது பாருங்கள். எனவே, இந்தத் தெளிவு இருக்குமேயானால், இந்த இயக்கத்தை ஆயிரமாண்டுகள் ஆனாலும், எந்த வடநாட்டுக் காற்றும், வாடைக் காற்றும் அசைத்துவிட முடியாது. மதவெறி இந்த இயக் கத்தை உலுக்கிவிட முடியாது.
அதைத் தெளிவாகச் சொன்னது மட்டுமல்ல,
தமிழர் என்று கூறிக்கொள்வதில் நான் பெரு மைப்படுகிறேன். திராவிடர் என்பதால், நான் உரிமை பெறுகிறேன். இதுதான் பேராசிரியர் அவர்களுடைய விளக்கம்.
திராவிடர் என்று சொன்னால்தான், உரிமை - மான உரிமை - ஆட்சி உரிமை - எல்லா உரிமை களும்.
எனவேதான் நண்பர்களே, இந்தப் பாடங்கள் என்றைக்கும் நிற்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது, அந்தப் பாடத்தை நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே, பேராசிரியர் அவர்களுடைய பாடங்கள், என்றைக்கும் நாம் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய பாடங்கள். என்றைக்கும் மறையக்கூடிய பாடம் அல்ல. ஏனென்றால், கொள்கைகளைக் கொண்டது. ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக.
ஆட்சிக்காக நாம் செய்யவேண்டியதில்லை. கொள்கைக்காக, கொள்கையை செய்வதற்காக, லட்சியத்தை அடைவதற்கான வழிமுறை அது.
பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது
எனவே, இந்த மேடை, இந்த வீர வணக்க நாள் - நம்முடைய தளபதி எல்லாவற்றையும் சேர்த்து, எல்லா ஆற்றலையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்.
அவரை உற்சாகத்தோடு, இத்தனைத் தோழர்கள் கூடி, லட்சியப் பயணத்தில், இந்தப் பந்தயக் குதிரை வெல்லும் என்று சொல்வதற்காகத்தான் இந்த மேடை.
பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது. சில குதிரைகளைக் கொண்டு வந்து காட்டினார்கள் - ஆனால், சில நாள்களுக்கு முன்பு அவை பொய்க்கால் குதிரைகள் என்று புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு வந்து விட்டது என்பதை நாடே தெரிந்துகொண்டிருக்கிறது.
நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம்!
எனவே, நாளையும் நமதே - நாளைய மறுநாளும் நமதே - நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம் - அதுவே பேராசிரியர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்ற பாடம்.
ஆட்சி என்பது இருக்கிறதே காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக - அதை செய்யக்கூடிய தளபதி இங்கே இருக்கிறார் - அவருடைய கரத்தைப் பலப்படுத்துவதற்கு அத்தனைப் பேரும் இங்கே இருக்கிறோம்.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மேடை இந்த மேடை
இவ்வளவுப் பேரும் மேலும் கூடுவார்களே தவிர, இது குறையாது - இது வளரும் - அதுதான் இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய மேடை இந்த மேடை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
மதவெறி வெல்லாது
ஜாதி வெறி வெல்லாது
இனப் பகை ஒழியும் என்பதில் அய்யமில்லை.
இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும்!
பாரம்பரிய விரோதிகள் இருக்கின்ற இடம் தெரியாமல் போவார்கள். எங்கள் இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும் - அதுதான் இந்தப் பேராசிரியருடைய புன்னகைக்குப் பொருள் என்று கூறி முடிக்கின்றேன்.
வாழ்க பேராசிரியர்! வெல்க திராவிடம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
- விடுதலை நாளேடு 15 3 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக