அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தியில், அன்னையார் வகுத்துத் தந்த பாடங்களை வழி காட்டியாகக் கொண்டு அவர் மேற்கொண்ட இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
இன்று நம் பாசமிகு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா!
நூறாண்டு நிறைவு என்ற வரலாற்றுப் புகழ் மிக்க பொன்னேட்டை திராவிட இயக்கச் சரித்திரத்தில் பதிக்கும் நாள் இன்று (10.3.2020)!
நம் அன்னையாரின் அருந்தொண்டு இன்று அகிலத்திற்கு வெளிச்சம் மட்டுமல்ல; பகுத்தறிய வேண்டிய பாடமும்கூட!
தொண்டறத் தூய உருவம்!
தன்னலம் மறுத்த தன்னேரில்லாத தொண்டறத்தின் தூய உருவம் நம் அன்னையார்!
வரவாக வந்த வசைகளையெல்லாம் துறவாகக் கருதி வாழ்ந்த அவரது வாழ்க்கையின் வெற்றிப் பயிர்களை விளைவிக்கப் பயன்பட்ட எருக்கூட்டமாக்கியவர் - அனைவரையும் தம் மவுனத்தால் வென்றவர்; துரோகத்தைக் கொன்றவர் - மக்களுக்குத் தனது செல்வத்தையெல்லாம் விட்டுச் சென்றவர்!
வீரமும், கருணையும்!
கைவிடப்பட்ட குழந்தைகளை கைகளில் ஏந்தி, பாசப் பால் ஊட்டி வளர்த்து ஆளாக்கி, அடுத்த தலைமுறையை அவர்கள் கண்டு மகிழும் ஏற்பாடு செய்திட்ட கருணைக் கடல்!
போராட்டக் களங்களில் போர்க் குணத்தோடு பொங்கி எழுந்த சிங்கம்!
குன்றிய உடல்நலம், குன்றா கொள்கைப் பிடிப்பு, சிறைச்சாலைகளை மட்டுமே தனது ஓய்வுக் கூடமாக்கி, ஓயாது உழைத்த உழைப்பின் உருவம் எம் அன்னை!
தூற்றியவர்களே போற்றினர்,
ஏகடியமும் ஏளனமும் எள்ளலும் உங்களை
வளர்பிறையாக்கிய பிறகு, அவை
உங்களிடம் பணிந்து வருத்தம் தெரிவித்த
அதிசய வரலாறு நீங்கள் அம்மா!
அம்மாவின் பாடங்கள் - எங்களுக்கு வழிகாட்டிகள்!
அய்யாவையும் வாழ வைத்து,
அவர் கண்ட இயக்கத்தையும் வலிவோடு காத்து,
வையப் புகழ் கொண்ட எங்கள் அன்னையே,
எங்களின் பெரியார் என்ற சுவாசத்திற்கான
இரத்த ஓட்டமே,
உங்கள் நூற்றாண்டில் உறுதியேற்கிறோம் -
உங்கள் திட்டங்கள்
எங்களின் செயல்பாடுகள்!
உங்களது பாடங்கள்
எங்களுக்கு என்றும் வழிகாட்டிகள்!
உங்களது தியாகம்,
எங்களுக்கு என்றும் முறையாகக் கற்கவேண்டிய கடமைகள்
என்று உணர்ந்து,
நீங்கள் - அய்யாவிட்ட பணியேற்று முடித்ததைப்போல,
நாங்கள் உங்கள் இலக்கை அடைய எந்தவித
சபலங்களுக்கும் இடந்தராது
சமர்க்களங்களை வென்றெடுத்து
வீரகாவியம் படைப்போம்
என உறுதி ஏற்கிறோம்!
இலட்சியப் பணியைத் தொடர்வோம்!
கழகத்தின் படி என்பது
எங்கள் தாயின் மடி
என்று உணர்ந்தே
லட்சியப் பணி முடிக்க
சூளுரைத்துப் பயணிக்கிறோம்!
அன்னையாருக்கு எமது வீர வணக்கம்!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.3.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக