வியாழன், 17 ஆகஸ்ட், 2023

‘நீட்’டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம்- இளைஞரணி ஆர்ப்பாட்டம்!


‘நீட்’டை தமிழ்நாடும், அரசும் எதிர்க்கிறது!
தமிழ்நாடு அரசு ‘நீட்’டுக்கு எதிராக நிறைவேற்றிய மசோதாவின் கதி என்ன?
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வு
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அடகு போன அவலம்!

1

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’டை எதிர்த்து சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் நடந்துகொண்டுள்ளது. ஆனாலும், ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், வரும் 22  ஆம் தேதி திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் தமிழ்நாடு  தழுவிய நிலையில் ‘நீட்’டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி, மருத்துவக் கல்வி படிப்பிற்கு அகில இந்தியா முழுவதற்கும் ஒரே தேர்வு - ‘நீட்’  (NEET) தேர்வு என்று ஆரியம் திட்டமிட்டே இதனைப் புகுத்திய கதை ஒரு நீண்ட பின்னணி உடையது - சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

‘நீட்’ செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

முதன்முதலில் இப்படி ஒரு தேர்வு கொண்டு வரப்படவேண்டும் என்ற முடிவை உள்ளே திணித்தது ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கம்.

இதனை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட நிலையில், அது தேவையில்லை என்று தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர், மற்றொரு நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர் தீர்ப்பு வழங்க, குஜராத்தைச் சேர்ந்த தவே என்ற (பார்ப்பன) நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை (‘நீட்’ தேர்வு தேவை)தந்தார்.

அந்தத் தலைமை நீதிபதி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர்  ஓய்வு பெற்ற நிலையில், மறுசீராய்வு என்ற போர்வையில் - மரபுக்கு மாறாக, முன்பு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஜஸ்டிஸ் தவே தலைமையில் ஓர் அமர்வு மீண்டும் ‘நீட்’ தேர்வு தேவை என்ற தீர்ப்பின்மூலமே ‘நீட்’ தேர்வு நுழைந்தது!

‘நீட்’டை தி.மு.க. ஆதரித்தது என்ற பொய்யான - புரட்டான பிரச்சாரம்!

தி.மு.க. அதை ஆதரித்தது என்ற ஓர் அப்பட்டமான புளுகுப் பிரச்சாரத்தினை அதன் அரசியல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போன்றவை கூறியபோது, அதனை எதிர்த்து தி.மு.க. வழக்கே போட்டது என்பதை பலமுறை நாம் விளக்கியிருக்கிறோம்.

ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’ தேர்வுக்கு (பா.ஜ.க. - மோடி அரசு) ஓராண்டு விலக்கும், தமிழ்நாட்டிற்கு - கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அ.தி.மு.க. ‘நீட்’ தேர்வை ஆதரிக்கவில்லை; எதிர்த்து அது கூடாது என்பதே அதன் நிலைப்பாடு என்ற நிலையில், அதே உறுதியை அவருக்குப் பின் ஆட்சியைத் தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இரட்டை வேடம் போட்டு, அரைகுறையான சட்ட வரைவை - விதிவிலக்குக் கோரி ஒன்றிய அரசுக்கு அனுப்பி, அதை ஏற்காமல் அவர்கள் (மோடி ஆட்சி) திருப்பி அனுப்பியதையும் வசதியாக சட்டமன்றத்திற்கே கூட அறிவிக்காமல் மறைத்து வைத்திருந்தனர். உயர்நீதிமன்றத்தில் ‘நீட்’ தேர்வுபற்றி வந்த ஒரு வழக்கின்மூலமே இந்தப் பூனைக்குட்டி வெளியே வந்தது.

அரியலூர்: அனிதாவின் தற்கொலை

தொடக்கத்திலிருந்து தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் ‘நீட்’ தேர்வை எதிர்த்து கடுமையான பிரச்சாரம், போராட்டங்களை நடத்தி வந்தோம். திராவிடர் கழகம் நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அரியலூர் அனிதா, ஓர் ஆதிதிராவிடத் தொழிலாளியின் மகள் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (1200-க்கு 1176 மதிப்பெண்கள்) வாங்கியும், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (86) பெறாமல், உச்சநீதிமன்றம் வரையில் போராடி, விரக்தி, வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் தனது மருத்துவக் கனவு நிறைவேறாததால்.

அனிதாவைத் தொடர்ந்தும் தற்கொலைகள்!

அனிதாவைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு தோல்வியால் ஏழை, எளிய, கிராம, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பலரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதியன்றுகூட குரோம்பேட்டை ஜெகதீசுவரன் தற்கொலை செய்துகொண்டார்;  மகன் இறந்த துக்கம் தாளாமல், மாணவனுடைய தந்தை செல்வசேகர் கடந்த 14 ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.  இப்படித் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 21 நபர்களை பலி கொண்டுள்ளது. (இந்திய அளவில் இன்னும் எத்தனை எத்தனையோ!).

இதற்கிடையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘நீட்’ தேர்வு ஒழிப்புக்குரிய ஏற்பாடுகளை சட்ட ரீதியாக உடனடியாக மேற்கொண்டு ஜஸ்டீஸ் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அது ஆராய்ந்து சிறப்பான ஓர் அறிக்கையை மூன்றே மாதங்களில் தந்தது.

அதன் பரிந்துரை அடிப்படையில் சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கான தனி மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்மூலம் அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக - முறைகேடாக ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டதை எதிர்த்து, பலத்த எதிர்ப்புக் குரல் (நாடு தழுவிய பிரச்சாரப் பயணம்)  எழுந்தது. அப்படியிருந்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மசோதாவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்தார்.

கார்ப்பரேட் முதலாளிகளைக் கொழுக்க வைக்க ஓர் ஏற்பாடு

முதலில் திருப்பி அனுப்பினார்; உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, விரும்பிய திருத்தங்களைச் செய்து ஆளுநர்மூலம் குடியரசுத் தலைவருக்கே அனுப்பிட, ஆளுநர் பிறகு அசைந்தார். அது குடியரசுத் தலைவரைச் சென்றடைந்து, அவரது பரிசீலனை என்ற அளவில் நிலுவையில் உள்ளது.

தி.மு.க. அரசு அதன் அதிகார எல்லைக்குள் எந்த அளவு விரைந்து செயல்பட முடியுமோ, அதைச் செய்து, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நமது முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து இடையறாது வற்புறுத்தியும் வரத் தவறவில்லை!

‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. அது உலக வர்த்தகச் சட்டத்தின்கீழ்தான் அதன் ஆணை வெளியிடப்பட்டது!

(அ) கார்ப்பரேட் முதலாளிகள் கோச்சிங் சென்டர்களை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தி, பல கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கிறார்கள் என்ற பரவிய செய்திபற்றி ஒன்றிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

‘நீட்’ தேர்வில் ஊழல் மற்றும் குறைபாடுகள்

(ஆ) ஊழலை ஒழிக்க வந்தோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் - ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வித் தாள்கள் குழப்பம் போன்று ஒவ்வொரு தேர்வின்போதும் குற்றம், குறைகள், ஊழல் நடைபெறாத ‘நீட்’ தேர்வே இல்லை என்பது உயர்நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த  பல வழக்குகள்மூலம் வெளிச்சத்திற்கு வந்தன!

(இ) அதிக பணம் கொடுத்து வெளிநாட்டுக் கோட்டா, காலி இடங்களை நிரப்ப வசதி என்பதன்மூலம் ஏராளமான பணத்தோட்டம் காய்ச்சித் தொங்கும் நிலை - யதார்த்தமாகும்.

இந்த நிலையில், என்ன செய்ய முடியுமோ, அதைத் தி.மு.க. அரசு செய்துகொண்டிருக்கிறது.

ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா?

இதற்கிடையில், சம்மன் இல்லாது ஆஜராவதைப் போல, தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோத ஆளுமை அவதாரமான ஆர்.என்.ரவி என்ற ஆர்.எஸ்.எஸ். சனாதன பிரச்சார ஆளுநர், ‘‘எனக்கு அதிகாரம் இருந்தால், நான் ‘நீட்’ தேர்வு ரத்து சட்டத்திற்குக் கையெழுத்துப் போடமாட்டேன்’’ என்று தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத நிலைப்பாட்டைக் கூறி, தமிழ்நாட்டு மக்களை, பெற்றோரை, தமிழ்நாடு அரசை நாளும் வீண் வம்புக்கு இழுக்கிறார்!

பி.ஜே.பி.யிடம் அடகுபோன அ.தி.மு.க.

‘நீட்’ தேர்வைப்பற்றி அ.தி.மு.க. எடப்பாடி அணியினர் கூறுவது உண்மையானால், இந்த ‘நீட்’ தேர்வை முறையற்ற முறையில் ஆதரித்து, தனது அரசமைப்புச் சட்டக் கடமைக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர்பற்றி என்றாவது ஒரு கண்டனவார்த்தையாவது கூறியது உண்டா?

காரணம், பா.ஜ.க.விடம் இவர்கள் கட்சியை அடகு வைத்துவிட்டனர் தங்கள் அ.தி.மு.க.வை! ‘‘மடியில் கனம் வழியில் பயம்‘’ - அதற்குக் கைமாறாகவோ என்னவோ, பழைய அமைச்சர்கள்மீதுள்ள வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், காலந்தாழ்த்துவது எதைக் காட்டுகிறது?

ஒரு பக்கம் ஊழல் ஒழிப்புப்பற்றி ஊருக்கு உபதேசம்; மறுபுறம் ஊழல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை; அதற்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்படும் கோப்புகள்.

அதற்கு கைமாறாக அ.தி.மு.க., ஆளுநரின் ‘நீட்’ தேர்வு ஆதரவினைக் கண்டித்து லேசாகக் கூட இதுவரை ஏதும் கூறவில்லை.

வரும் 22 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

இவற்றை மக்களுக்கு விளக்கிடவும், மருத்துவக் கல்வி உரிமையை நிலை நாட்டிடவும், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திடவும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் அல்லது முக்கிய நகரங்கள் - கிராமங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வருகிற 22 ஆம் தேதி நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்தில் திராவிட மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் நடத்தி, ‘நீட்’ தேர்வு ரத்து தேவை என்பதை வற்புறுத்துங்கள்!

கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்17.8.2023 சென்னை


 ‘நீட்' தேர்வு சாதித்தது என்ன?
மூன்று ஆண்டுகளில் 13,500 மருத்துவ இடங்கள் வீண்!

கடந்த ஜூலை 21, 2023 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ள பதில், ‘‘நீட் தேர்வால் பல்லாயிரம் மருத்துவக் கல்லூரி இடங்கள் வீணாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய மருத்துவக் கவுன்சில் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2019-2020 முதல் 2022-2023 ஆம் ஆண்டு வரையிலும் இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் 860 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 12,758 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி வீணடிக்கப்பட்டுள்ளன'' என்பது அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


கல்வி ஆண்டு       காலியாக உள்ள            காலியாக உள்ள

                                       இளநிலை                         முதுநிலை

                                       மருத்துவ இடங்கள்     மருத்துவ இடங்கள்

2019-2020                      273                                         4614

2021-2022                      326                                         3744

2022-2023                       261                                        4400


படிக்க மாணவர்கள் தயார், படிக்க மருத்துவ இடங்களும் தயார்; மருத்துவர்களின் தேவையோ நாடெங்கும் இருக்கிறது. ஆனால், நடுவில் தடைக் கதவாக ‘நீட்'!

அந்த ‘நீட்'டைத்தான் நிறுத்தமாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு!

நிறுத்த வைக்கவேண்டியது நமது கடமையா, இல்லையா?

------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக