வியாழன், 2 செப்டம்பர், 2021

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் "திராவிடன் ஸ்டடிஸ்" துறை தொடங்கப்பட வேண்டும்

பனாரஸ் பல்கலைக் கழகத்தின் வழியாக ஹிந்துத்துவா பி.ஏ. பட்டப் படிப்பாம்!

 தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் "திராவிடன் ஸ்டடிஸ்" துறை தொடங்கப்பட வேண்டும்

பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

நமது சிறப்பு செய்தியாளர்

சென்னை, செப்.1 பல்கலைக் கழகங்கள் மூலம் ஹிந்துத்துவா பட்டப் படிப்பைத் தொடங்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டுப் பல்கலைக்  கழகங்களில் 'திராவிடன் ஸ்டடிஸ்' துறை தொடங்கப்பட வேண்டும் என்றார் பகுத்தறி வாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் (31.8.2021 மாலை) காணொலி வழியாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் செறிவு.

பகுத்தறிவாளர் கழகத்திற்கு வந்துள்ள புதிய வரவுகளை முதற்கண் வருக வருக என்று வரவேற்கிறேன் - வாழ்த் துகிறேன்.

கழகத்திற்கு ஊடு பயிர்தான் பகுத்தறிவாளர் கழகத்தினர்.

பகுத்தறிவாளர் கழகம் ஒரு பயிற்சிக் களம். இன்றைய கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து வந்தவர்தான். கீழ்வேளூரில் அவர் பணி பகுத்தறிவாளர் கழகத்தில்தான் தொடங்கியது.

நமது நாட்டில் படிப்பு வேறு - பகுத்தறிவு வேறு. படிப்பு நமக்குச் சுமையாக இருக்கிறதே தவிர சுவையாக இல்லையே!

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அழகாக ஒன்றைச் சொன்னார்.

"உலகம் பழையவற்றைப் புறந்தள்ளி நவீனத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. உண்மைகளைத் தேடுகிறது, ஆனால் நம் நாட்டில் பழமைகளுக்கு புதிய விளக்கங்கள் கொடுத்து அவற்றை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறோம். இங்குள்ள மதம் உருவாக்கப்பட்டது, கட்டுக் கதைகளாலும், மூடநம்பிக்கைகளாலும் கட்டி எழுப்பப்பட்டது.

நமது கலாச்சாரம் ஒரு காலத்தில் ஜாதியற்ற மூடநம்பிக் கையற்ற அறிவார்ந்த சமூகமாக இருந்தது, பின்னால் இந்தச் சமூகத்தில் மூடநம்பிக்கை திணிக்கப்பட்டது, விதவிதமாக கற்பனைக் கதைகளைக் கூறி மக்களை சிந்திக்கவிடாமல் ஆக்கினார்கள். நாமும் உண்மைத் தன்மையை உணராமல் அதை அப்படியே பின்பற்றுகிறோம்."

"நூற்றாண்டுகளாக தொடர்ந்த இந்த மூடத்தனத்தின் பாதிப்புகளை மக்களுக்குக் கொண்டு செல்ல, மூடநம்பிக் கைகளை அழித்தொழிக்க நம்மிடையே பெரியார் ராமசாமி வந்தார்.  சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமாக நின்று விழிப்புணர்வை ஊட்டினார்.

எந்த ஒரு காரணத்தையும் பகுத்தறிவோடு அணுகுவது மற்றும் மூடநம்பிக்கை மரபு வழி பழக்கம் - வழக்கம் போன்றவற்றை  களைந்தெடுத்து உண்மையை உலகிற்கு உணர்த்தி இந்தச்சமூகத்தை சீரமைக்க தந்தை பெரியார் களமிறங்கினார்."

"சமூகத்தை சீர்திருத்தி, மூடப்பழக்கவழக்கங்களை ஒழித்து, மக்களை பகுத்தறிவாளர்களாக மாற்ற நீங்கள் துணிச் சலுடன் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும். காரணம் நமது சமூகத்தில் மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள் நூற்றாண்டுகளாக மக்களின் மூளையில் சேர்ந்து விட்டன. அதை நாம் அழித்தொழிக்கவேண்டும்."

"தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார். அவர் வகுப்புகள் மாலை நேரங்களில் மைதானங்களில் அமையும் மூன்று மணி நேரம் நடக்கும்" என்றார்.

அண்ணா எம்.ஏ., படித்தவர் - பெரியாரோ பள்ளிப் படிப்பு முறை அறியாதவர். ஆனால் அண்ணா ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பெரியார் தானே!

அரசு பணியாளர்கள் தாராளமாக பகுத்தறிவாளர் கழகத்தில் சேரலாம். கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருக்கும் போது அதிகாரபூர்வமாகவே ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஓர் அரசு அதிகாரி கோயிலுக்குச் செல்ல உரிமை உண்டு என்றால், ஓர் அரசு அதிகாரி தன்னைப் பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்ளவும், பெரியார் திடலுக்குச் செல்லவும்,  பகுத்தறிவாளர் கழகத்தில் சேரவும் உரிமை உண்டு என்றவர் நமது மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

(இந்திய அரசமைப்புச் சட்டம் 51A-h என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்ச்சியடையச் செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறவில்லையா?)

சனாதன கருத்துகளை, ஹிந்துத்துவாவைப் பரப்பிட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பனாரஸ் (காசி) பல்கலைக் கழகத்தின் சார்பில் ஹிந்துத்துவா பற்றி பி.ஏ. டிகிரி படிப்புக்கு வழி செய்துள்ளனர்.

ஹிந்துத்துவா என்றால் என்ன? அதன் கர்த்தாவான வி.டி. சர்வர்க்கார் என்ன சொல்லுகிறார்?

ஹிந்துக்களை இராணுவமயமாக்கு - இராணுவத்தை ஹிந்து மயமாக்கு என்று சொல்லவில்லையா?

இந்த வாரம் வெளிவந்துள்ள ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' என்ன எழுதுகிறது?

"காசி ஹிந்து பல்கலைக் கழகத்தின் தத்துவத்துறை வேதங்கள் உள்ளிட்ட தொன்மையான நூல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை சமஸ்கிருதத்துறை போதிக்கும் பி.ஏ. ஹிந்துயிசம் தொடங்குவதை அடுத்து எம்.ஏ., பி.எச்.டி. ஆகிய நிலைகளிலும் ஹிந்துயிசம் கற்பிக்கப்பட வேண்டும். தேசத்தின் எல்லா பல்கலைக் கழகங்களிலும் ஹிந்துத்துவா படிப்பு கட்டாயம் இடம் பெற வேண்டும். அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்றவற்றில் தொடக்க நிலையிலேயே ஹிந்துத்துவா படிப்பு இடம் பெற வேண்டும் ஆன் லைனிலும் படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ். இதழ் 'விஜயபாரதம்' (3.9.2021) தலையங்கம் தீட்டுகிறது.

அரவிந்தரின் 150ஆம் ஆண்டு என்று சொல்லி மிகப் பெரிய அளவில் ஹிந்துயிசத்தைப் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். இதழான 'ஆர்கனைசர்' குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் கூறும் ஹிந்துயிசம்  என்பது என்ன?

குருஜிகோல்வால்கர் கூறுவதுதான் என்ன?  (We or our Nation Hood Defined) (வரையறுக்கப்பட்ட தேசியம்) என்று கூறுகிறது.

"ஹிந்துஸ்தானிஸ் உள்ள ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அன்பு, தியாகங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக் கூடாது அல்லது இந்தத் தேசத்தை முழுமையாக ஆதரித்து வாழ வேண்டும். எதையும்  கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளதே!

(ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவராக வந்த கே.எஸ். சுதர்சன் என்ற பார்ப்பனர் கூறுகிறார்?

"ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணன் பகவான் ஆகியோ ருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' 10.10.2000) என்று கூறவில்லையா!)

நமது தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் 'திராவிடன் ஸ்டடிஸ்' என்ற துறையை உண்டாக்க வேண்டும் - உண்மை வரலாறுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தந்தை பெரியார் கருத்துக்களை உட்கொள்வது என்பது பெரியாருக்காக அல்ல; மருந்து சாப்பிடுவது டாக்டருக்காக அல்லவே! நோய்த் தீர்ப்பதற்குத்தான். தந்தை பெரியார் கொள்கையும் நமது மக்களின் அறியாமை நோயைப் போக்கிக் கொள்ளத்தான் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக