திங்கள், 6 செப்டம்பர், 2021

தந்தை பெரியார்பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு!


‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்''

என்றே இனி  முதலமைச்சரை அழைப்போம், அழைப்போம்!

 தமிழர் தலைவர் பாராட்டும் - நன்றியும்!

முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள    அறிக்கை வருமாறு:

காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புப் பெற்றுத் தரவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்வைத் தொடங்கி, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவத்திற்காகவே தனது வாழ்வையே அர்ப் பணித்தார்.

அவர்தம் ஒவ்வொரு பிறந்த நாளும் - சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வெற்றிக்கான ஒரு கூடுதல் மைல்கல். அதனை சூளுரைத்து மேற்கொள்ளும் நாளாக அறிவித்துள்ளார்.

நமது ஒப்பற்ற மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக் கேட்டு, பெரியார் தொண்டர்களாகிய நாம் அடையும் மகிழ்ச்சி ஊற்று வெள்ளம் பெருகி ஓடுகிறது!  உலகமெங்கும் உள்ள தமிழர்கள், பகுத்தறிவாளர்கள், மனித உரிமை நேயர்கள் உற்சாக வானில் பறப்பார்கள்!

வரலாற்றின் ஜீவநதியாம் தந்தை பெரியா ருக்குக் காணிக்கையாக்கப்பட்ட அண்ணாவின், கலைஞரின், திராவிட  ஆட்சி எப்படி நன்றி உணர்ச்சியின் நாயகமாகவும், மிளிர்கிறதோ, அதேபோல, தளபதி முதலமைச்சர் தலைமையில் அமைந்த  இந்த ஆட்சி மகுடம் - மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட ஒளிவீசும் மகுடமாக சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது.

இது காலம் காலமாக நின்று பேசும் வரலாற்றுக் கல்வெட்டாக, சிலாசாசனமாக ஒளிவீசப் போகிறது- போகிறது!

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனி என்றும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' என்றழைக்கப்பட வேண்டியது - வரலாற்றின், காலத்தின் கட்டளை!

நன்றி! நன்றி!! நன்றி மேல் நன்றி!!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

6.9.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக