வெள்ளி, 10 செப்டம்பர், 2021

தனிமைப்படுத்தப்பட்ட பார்ப்பனர்கள்


தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை "சமூக நீதி நாளாக" சமூகநீதி சரித்திர நாயகர் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 6ஆம் தேதி அறிவித்தாலும் அறிவித்தார், தமிழ்நாடே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்குகிறது.

குறிப்பாக திராவிடர் கழகத் தோழர்கள் தன்னிச்சையாக, தாங்களாகவே முன்வந்து மக்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்கள், சுவர் எழுத்துகளை எழுதி முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் - வண்ண வண்ண சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

காரணம் இல்லாமல் இல்லை. காலத்தின் ஓட்டத்தை மாற்றி அமைத்து, புதுவழி காட்டிய உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அவரின் கொள்கைகள் தான் தனி மனிதனையும் சமூகத் தையும் மாற்றி அமைக்கும் என்பதை உறுதியாக உணர்ந்து, அதற்கொரு உத்வேகம் கொடுப்பதுதான்  - சிந்தனையில் உரத்த முறையில் ஒரு மின் பாய்ச்சலை ஏற்படுத்துவதுதான் இந்த அறிவிப்பு.

இது தமிழ் நாட்டோடு முடிந்து விடக் கூடியதல்ல; திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லுகிறார்களே - அது என்ன என்பதை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள மாநிலங்கள் கவனமோடு திரும்பிப் பார்ப்பதற்கான திருப்பம் தரும் சொல் இது.

இதனைப்  புரிந்து கொண்ட நிலையில்தான் பார்ப்பனக் கூட்டம் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூடத் தெரியாமல் ஆத்திர நெருப்பாய் உருண்டு புரளுகிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு நேற்றைய பார்ப்பன இனமலரான 'தினமலரை' எடுத்துக் கொள்ளலாம்.

பெரியார் என்று தப்பித் தவறிகூட எழுதாது இந்த ஏடு. இவர்கள் எழுதாததால், தந்தை பெரியாரின் பெருமை குறைந்தா விடும்? இன்னொரு வகையில் இவர்கள் எத்தகை யவர்கள் என்று தந்தை பெரியார் எடுத்துக் கூறியதுதான் எட்டுணை உண்மை என்பதை - இதுவரை உணராதவர் களும்கூட உணரும் ஒரு நிலை ஏற்படும் - அந்த வகையில் இதுவும் நல்லதுதான்.

ஒரு நாள் செய்தியிலேயே இவ்வளவு நஞ்சைக் கொட்டித் தீர்க்கிறது தினமலர் என்றால் -  இது இவர்களின் உடலில் ஓடுவது எல்லாம் நஞ்சுதான் என்பதற்கான எடுத்துக்காட்டு.

சாமி கும்பிடுகிறீர்களோ, இல்லையோ, எனக்குக் கவலையில்லை - இனத்தைக் காக்க வேண்டும் - தமிழன் வலிமையோடு இருக்க ஈ.வெ.ரா. போட்ட (ஈ.வெ.ரா. என்றா துரைமுருகன் சொன்னார்?) அடித்தளமே காரணம் என்று அவை முன்னவர் துரைமுருகன் சொல்லி விட்டாராம்! அடேயப்பா 'தினமலருக்கு' எங்கேயோ தேள் கொட்டி விட்டது.

இப்போது அவரை வாழ்த்தும் அல்லது வாழ்த்திய திராவிடத் தலைவர்கள் பலர், அவர் உயிருடன் இருந்தபோது, கடுஞ்சொற்களால் ஏசினர் என்பதை வரலாறு மறக்காதாம் - எழுதுகிறது  தினமலர் - இருக்கட்டும் - ஏசியவர்கள் சிந்தனையில் மாற்றமே வரக் கூடாதா? ஓடு காலியாக சங்கர மடத்தை விட்டு ஓடிய ஒருவரை 'ஜெகத் குரு' என்று ஏற்றுக் கொண்ட  கூட்டமா இது பற்றிப் பேசுவது!

அதே போல் சமூக நீதி சரித்திர சாதனையாளர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

"சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன நலம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக ஈ.வெ.ரா. உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. எதிர்காலத்துக்கு பாதை அமைத்துத் தரப் போகிறது" என்று முதல் அமைச்சர் சொல்லி விட்டாராம். தினமலரின் பூணூல் ஏன் துடியாய்த் துடிக்க வேண்டும் - என்ன எழுதுகிறது?

நீங்கள் சொல்லும் பெரியவர் (அப்பாடா, இந்த இடத்தில் மட்டும் பெரியவர் என்று கை சுளுக்கி கொண்டு எழுதி விட்டது போலும்!) உயிருடன் இருந்த காலத்தில் 50-60 ஆண்டுகளாக இந்தக் கொள்கைகளுக்காகத் தான் போராடினார். அவர். இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் புகழைத்தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் பேசுகின்றன. இருந்தாலும் பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை, சமூகநீதி, இன உணர்வு இன்னும் வாய்க்கவில்லையோ என்ற டவுட் மக்களுக்கு வந்துள்ளது என்கிறது இனமலர்.

வாய்த்திருக்கிறது - இன்னும் வாய்க்க வேண்டியதும் உள்ளது - எந்த அளவுக்கு வாய்த்திருக்கிறது தெரியுமா? 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெயர் சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு பார்ப்பான் இல்லையே - அந்த ஆத்திரம்தான் தினமலர்க் கும்பல் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்கிறது.

பார்ப்பனர்களின் இத்தகு அழுக்காறு - ஆபாச புத்தி - அவர்களைத் தமிழ் மண்ணில் தனிமைப்படுத்தி விட்டதே! பா.ஜ.க.வுக்குள்கூட ஆரிய - திராவிடப் போராட்டம் தொடங்கி விட்டதே. தினமலர்க் கூட்டத்துக்கு அனுதாபங்கள் உரித்தாகுக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக