புதன், 1 செப்டம்பர், 2021

தமிழ் அர்ச்சனை - ஆகமத்தில் தடை உண்டா?


"கரோனா மூன்றாம் அலை பரவும் காலத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' செய்யும் வைபவத்தை, கும்பல் கூட்டி, கல்வெட்டு, விளம்பர பதாகை ஆகியவை வைத்து துவக்கி வைத்துள்ளார் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.

இன்னும் 47 பிரசித்தி பெற்ற ஆலயங்களில் விரைவில் அன்னைத் தமிழில் அர்ச்சனை துவங்கப்படுமாம். அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடக்கின்றனவாம்.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய துவங்கி இரண்டு மாமாங்கங்களுக்கு மேலாகிறது.'இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்ற 'போர்டு'களை இப்போதும் பல கோவில்களில் காணலாம்.

ஆனால் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் யாரும் அதை பொருட்படுத்துவதும் இல்லை; விரும்புவதும் இல்லை. பாரம்பரிய முறைப்படி சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதையே விரும்புவர்.என்னவோ இப்போது தான் புதிதாக அறிமுகப்படுத்துவதை போல, ஆர்ப்பாட்டம் செய்வதை என்னவென்று சொல்வது?

வீம்புக்கு வேண்டுமானால் கழகத்தினர் சிலர், தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லி வலியுறுத்தலாம்.தி.க.,வினர் கடவுள் மறுப்பு கொள்கை உடையோர், கோவில் கருவறைக்குள் நுழைய ஏன் விழைகின்றனர் என்பது புரியாத புதிர்.தி.க.,வில் இருந்து பிரிந்து வந்த தி.மு.க.,வினரும் கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் தான்.தேர்தல் வந்தால் மட்டும், தி.மு.க.,வினருக்கு பக்தி பீறிட்டு கிளம்பும் என்பது வேறு விஷயம்.

கடவுள் மறுப்பு கொள்கை உடைய தி.மு.க.,வினருக்கு, ஹிந்துக்கள் வணங்கும் கடவுள்களுக்கு அர்ச்சனை சமஸ்கிருதத்தில் செய்தால் என்ன? ஆங்கிலத்தில் செய்தால் என்ன?அதை ஒரு பிரச்சினையாக மாற்றி, அதற்கென ஒரு விழா நடத்தி, மக்கள் வரிப்பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்?

ரோமாபுரி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என சொல்வர்.அதுபோல, நாட்டில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக வரிசை கட்டி நிற்கும்போது, 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற விளம்பரம் எல்லாம் இப்போது தேவை தானா?"

'தினமலர்' 28.8.2021

பார்ப்பனர்களுக்குக் குருசேத்திரம் என்பது அவாளின் பத்திரிகை மட்டுமல்ல - ஆசிரியர் கடிதங்கள் தாம்.

அதுவும் தினமலர் ஏட்டில் ஆசிரியர் குழுவினரே எழுதி ஏதோ ஒரு பெயரில் வெளியிடுவார்கள்.

தினமலர் குழுமம் நடத்தும் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும் அதே கடிதம் இன்னொருவர் பெயரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'தினமலரில்' இடம் பெறும்.

இந்தமோசடியைக் கையும் களவுமாகப் பிடிப்பதுபோல ஆதாரப் பூர்வமாக 'விடுதலை' வெளியிட்டு அம்பலப்படுத்தியதுண்டு.

திமுக ஆட்சியில் தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நிலை ஏற்பட்டதுதான் தாமதம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். மண்ணை வாரி தூற்றுகிறார்கள் பார்ப்பனர்கள்.

கரோனா மூன்றாம் அலை பரவப் போகிறதாம் - அதில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற வேலைகளில் திமுக ஆட்சி ஈடுபடுகிறதாம்.

கரோனா காலம் என்பதால் கும்பமேளா நடக்காமல் இருக்கிறதா - ராமன் கோயில் கட்டும் வேலை நடக்காமல் இருக்கிறதா?

குட முழுக்குதான் நடக்காமல் இருக்கிறதா? இவை எல்லாம் செய்வதாலே கரோனாதான் பரவாமல் இருக்கிறதா?

இந்தியாவிலேயே கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு தான் முன் மாதிரி மாநிலமாக (மாடல் ஸ்டேட்) இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தி.மு.க. அரசாங்கத்தின் தீவிரமான செயல்பாடுகள் தான் என்பது நினைவில் இருக்கட்டும்!

தி.க.காரன் கொள்கை கடவுள் மறுப்புக் கொள்கைதான் தி.மு.க.வும் தி.க. வழி வந்தது தான். இதனை 'தினமலர்கள்' சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை.

அதற்காக தமிழை நீஷப்பாஷை என்று கொச்சைப்படுத்துவதும், தமிழன் கட்டிய தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனையால் கர்ப்பக் கிரகம் தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லுவதைப் பார்த்துக் கொண்டு மொழி மானம், இனமானமற்ற மரக்கட்டளைகளாக இருக்க வேண்டுமா? கொள்கைக்கும் உரிமைக் குரலுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திசை திருப்பும் யுக்திகளில் தினமலர்கள் பேனா பிடித்தால் அதனைக் கண்டு ஏமாறும் காலம் மலையேறிவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில் அர்ச்சனை செய்வதைப் பக்தர்கள் விரும்புவதில்லையாம் - சரடு விடுகிறது பூணூல் ஏடு.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா? அல்லது சமஸ்கிருதம் இருக்க வேண்டுமா? என்பதுபற்றி பக்தர்களின் விருப்பத்தை அறிவதற்காக, மதுரை, இராமேசுவரம், சிதம்பரம், பழனி, கன்னியாகுமரி, சென்னை, வடபழனி, திருவரங்கம், தஞ்சாவூர், கோவை ஆகிய ஊர்களில் 27.11.1998 அன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுண்டு. திரு. பழ. நெடுமாறன் அவர்களின் தமிழர் தேசிய இயக்க முன்னணி இந்த வாக்கெடுப்பை நடத்தியது. 18700 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழுக்கு ஆதரவாக 17695 பக்தர்களும் சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக 823 பக்தர்களும், இரு மொழிகளும் இருக்கலாம் என்று 182 பக்தர்களும் வாக்களித்தனரே!

("தென் ஆசிய செய்தி" - நாள்: 15.12.1998 பக்கம் 4).

அர்ச்சனை மொழி பற்றிப் பக்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கொக்கரிப்பவர்கள், தினமலர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தொட்டதற்கெல்லாம் நீதிமன்றம் சொல்லுகிறது நீதிமன்றம் சொல்லுகிறது என்று தொண தொணக்கும் இந்தக் கூட்டத்திற்கும் முக்கிய பதில் இருக்கிறது.

இந்துக் கோயில் பாதுகாப்புக் குழுத் தலைவர் வி.எஸ். சிவக்குமார் மற்றும் அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின்மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மராவ், கே. சந்துரு ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறிய தீர்ப்பு என்ன?

"தமிழில் அர்ச்சனை செய்வதை எந்த ஆகம விதியும் தடுக்கவில்லை!" என்று ஆணி அடித்ததுபோல தீர்ப்பு வழங்கினரே (தமிழ் இந்து நாள் 22.6.2021 பக்கம் 6) பார்ப்பன 'தினமலர்களே' ஓடாமல் ஒளியாமல் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக