ஆசிரியர் வீரமணியாரே
வாழ்க பல்லாண்டு!
சமூக இயல்களைப் புரிந்து கொள்ள ஒரு ராஜபாட்டை கிடையாது என்றார் அறிஞர் காரல் மார்க்ஸ்.(There is no royal road to Social sciences )
மானுடத்திற்கு மற்ற நாடுகளில் பல அறைகூவல்கள் இருந்தாலும், உள்ளிருந்தே கொல்லும் கொடிய ஜாதிய சனாதன நோய்கள் இந்திய சமூகத்தில் தொற்றிக் கொண் டதைப் போல வேறு எந்த நாட்டிலும், எந்த சமூகச் சூழலிலும் காண முடியாது.
ஆண்டாண்டு காலமாக ஆதிக்க ஜாதியினர் வாழ் விற்கும், வசதிக்கும் மட்டுமே இந்த சனாதனம் வடிவ மைக்கப்பட்டது.
இங்குள்ள ராஜபாட்டையிலும், புதுடில்லி அதிகார கோட்டையிலும் சனாதனமே இன்றும் பயணிக்கிறது.
(There is royal road only to the upper castes and Upper class Citizens of India )
இந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கம் காங்கிரஸ் இயக்கத்திலேயே மேலோங்கி இருந்தது என்பதை
1925-26 ஆம் ஆண்டில் கான்பூர் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு இங்கிலாந்து நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளர் அல்தஸ் அக்ஸ்லி(Aldous Huxley) சென்று, கண்டுள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்ட அறிஞர் அல்தஸ் அகஸ்லி அங்கு நடைபெற்ற சுதந்திரத் திற்கான வீர உரைகளையும் கேட்டுள்ளார்.
தனது பயண நூலில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை யான மக்கள் சுதந்திரம் அடைந்தால் தொடக்கத்தில் துன்பம் அடைவார்கள். காரணம், அங்குத் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மீதான உயர் நிலையில் உள்ள உயர்ந்த ஜாதியினரின் மேலாதிக்கம் என்பது மத தத்துவமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
*That the lower caste masses would suffer, at the beginning, in any case, from a return to Indian autonomy seems almost indutiabe. Where the superiority of the Upper castes to the lower is of religious dogma - (India After Gandhi- Ramachadra Guha - page 379)
இப்போது புரிகிறதா, ஏன் பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளி யேறினார் என்று?
இந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தையும், அதோடு பின்னிப் பிணைந்துள்ள வர்ணாசிரமத்தையும் காங்கிரசி லிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காந்தியோடு வாதிட்டார்.
இதன் தொடர்ச்சியாகத் தானே அளப்பரிய
மானுடப் பணியைத் தமிழ் மண்ணில்
பெரியார் மேற்கொண்டார். ஜாதியத்தைத் தகர்க்க தொய்வில்லாமல் களம் கண்டார்.
சமூக நீதி வெற்றி பெற தளம் அமைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் வட மாநிலங்களில்
களம் அமைத்துப் போராடினார்.
இன்று இதையெல்லாம் மறந்து, மறைத்து விட்டு பெரியார் பணியை ,தொண்டறத்தை வீழ்த்தி விடலாமா என்றல்லவா குள்ள நரிக் கூட்டம், அரசியல் ஓநாய் களுடன் கூடி கூச்சலிடுகின்றன.
அறிவியலும், தகவல் தொழில்நுட்ப பயனும் இணைந்து விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கை கோள்களைக் கைப்பேசியின் வழியாகக் காண முடிகிற இக்காலத்திலும் கூட அறிவியல் மாநாட்டில் யானைத் தலையை மனித உடலில் பொருத்தும் அறுவைச் சிகிச்சை முறை வேத புராணக் காலத்தில் இருந்தது என்று நாட்டின் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அறிவியல் பகுத்தறிவு உணர்வுகளை அவமதிக்கும் செயலை பிரதமரே செய்யலாமா? என உலகமே நகைக்கிறது.
வேதங்களையும், ஸ்மிருதிகளையும் கண்மூடிக் கொண்டு எவ்வித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் பின்பற்ற வேண்டும் என்ற மனுவின் விதி கட்டளை இடுகிறது என்பதை அண்ணல் அம்பேத்கர் “ஜாதியை அழித்தொழி” என்ற நூலில் அழகுறக் குறிப்பிடுகிறார்.
"பகுத்தறிவு நெறிகளின் படிவேதத்தையும், ஸ்மிருதி களையும் விளக்கம் கேட்பது முழுமையான கண்டனத் திற்கு உரியது என்று மனுவின் விதி கூறுகிறது" என்று அறிஞர் அம்பேத்கர் சுட்டியுள்ளார். (According to this rule, rationalism as a canon of interpreting the Vedas and Smritis, is absolutely condemned. - ‘Annihalation of Caste’- Dr.Babasaheb Ambedkar Writings and Speeches - vol 1 page 72)
இத்தகைய மிக மிகப் பிற்போக்கான கருத்துகளை இந்துத்துவா என்ற போர்வையில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பாடத் திட்டங்களில் திணிக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது.
ஜாதி, மத, மூடநம்பிக்கைளை, புராண சாத்திரங்களை திராவிட இயக்கம் தானே
எதிர்த்துக் களமாடியது.
இன்றும் களமாடுகிறது.
தந்தை பெரியாரின் தொடர் போராட்டங்கள் தமிழ் மண்ணில் சீர்திருத்தக் கருத்துகளை வேரூன்றச் செய்தன.
சனாதன வாலாட்டங்களை நறுக்கின.
சட்டங்களா - திட்டங்களா
சனாதனப் பக்கம் சாய்ந்ததால்
சாய்ப்போம் - மாய்ப்போம்
என அன்றும், இன்றும், என்றும் திராவிட இயக்கம் எதிர்க்கும் வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குகா "காந்திக்குப் பின் இந்தியா" என்ற நூலை முதல் பதிவாக 2008 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
2017 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட இந்த நூலில் ஒரு முதன்மையான கருத்து சுட்டப்பட்டுள்ளது.
குடியரசு இந்தியாவின் அன்றாட வாழ்வில் விடுதலைப் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் உயர் ஜாதி இந்து ஆண்கள் தங்கள் தகுதிக்கு அதிகமாக உரிமைகளை இன்றும் அபகரித்து வருகிறார்கள். (Seventy years after Independence, upper caste - Hindu males still command disproportionate privileges in the everyday life of the Republic - page 783 - India After Gandhi-Ramachandra Guha) என்று குகா குறிப்பிட்டுள்ளார்.
நீதி, நிர்வாக, சட்ட நாடாளுமன்ற அமைப்புகள் யார் கையில் உள்ளது என்பதைத் தான் குகா அடையாளம் காட்டுகிறார்.
யார் நம்மை ஆட்டிப் படைக்கிறார்கள் என நாம் உணர வேண்டாமா?
இந்த அநீதியை யார் தட்டிக் கேட்கிறார்?
இதற்காக யார் நாளும் உரை நிகழ்த்துகிறார்?
இதற்காக யார் கட்டுரை தீட்டுகிறார்?
இதற்காக யார் களம் அமைக்கிறார்?
இதற்காக யார் வழிகாட்டுகிறார்?
இவ்வித வினாக்களை நாம் எழுப்பினால் நம் முன் ஆசிரியர் வீரமணியார் முதலில் நிற்கிறார்,
வயது 87.
ஆனால், இளம் வயதினர் போன்ற
துள்ளல், துடிப்பு,
பெரியாரின் வார்ப்பு அல்லவா!
பகுத்தறிவு தேர்ப் பாகனாய்
ஊர் ஊராய் வலம் வருகிறார்.
அமெரிக்கா செல்கிறார்.
மனிதநேய விருதைப் பெறுகிறார்.
பெரியாருக்குப் பெருமை சேர்க்கிறார்.
மலேசியாவிற்கு விரைகிறார்.
நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறாதா?
ஏழை எளியோரின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறதா?
ஓயமாட்டேன்,
ஓய்வு எடுக்க மாட்டேன்,
உறங்க மாட்டேன்,
உறங்கவிடவும் மாட்டேன்,
என்கிறார் நம் ஆசிரியர்.
சுயமரியாதை முரசமே!
பெரியார் ஒளியே! ஒலியே!!
எங்கள் ஆசிரியர் வீரமணியாரே
வாழ்க!வாழ்க!!
வாழ்க பல்லாண்டு!!!
- விடுதலை நாளேடு 1 12 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக