சனி, 21 டிசம்பர், 2019

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பேரணியில் ஓரணியாய்த் திரள்வீர்!

மக்கள் விரோத - ஜனநாயக விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (23.12.2019) சென்னையில் நடைபெறும் பேரணியில் கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து ஓரணியாய்த் திரள்வீர்!

மக்கள் விரோத, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் காலை சென்னையில் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து ஓரணியில் திரள்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆழ்ந்த பரிசீலனை - பார்லிமெண்ட்ரி செலக்ட் கமிட்டி போன்றவைகளின் பரிசீலனைக்கூட இல்லாமல், தடாலடியாக தங்களுக்குள்ள பெரும்பான்மை என்ற ஒரே பலத்தினைப் பயன்படுத்தி, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் பிரதமர் மோடியும், அவரது நிழலாக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்.

அவர்களது கூட்டணிக் கட்சிகளும் நிர்ப்பந்தத் திற்குப் பயந்தும், வேறு சில ஆசாபாச காரணங்களாலும், இம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து, வரலாற்றில் நீங்காப் பழியைத் தேடிக் கொண்டு விட்டனர்.

அதிமுக - பா.ம.க.வின்

செயல்பாடு எத்தகையது?

அதிலும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற அ.இ.அ.தி.மு.க., பா.ம.க. (ஒரு உறுப்பினர்) மக்களவை  - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மகுடிக்கு மயங்கியவர்களாகி விட்டார்கள்! அதன்படி மாநில உரிமைக்குப் போராடிய அண்ணாவையே அதிமுகவினர் அவமானப்படுத்தி விட்டார்கள்!!

இப்போது நாடே எரிமலை சீற்றத்தைப் போல கொந்தளித்துக் கிளம்பியுள்ளது. வடபுலத்தில், கிழக்கில், மேற்கில், தெற்கில் எல்லாப் பகுதிகளிலும் நாட்டின் அமைதி குலைந்ததற்கு, ஆட்சியாளர்களின் அடாத செயலே காரணம்! மதத்தை வைத்து நாட்டுக் குடி மக்களைப் பிரித்து வேற்றுமைப்படுத்தி, மதச் சார்பின்மை என்ற அரசியல் கோட்பாட்டினையும், சம வாய்ப்பு, சம உரிமை என்பதையும் மறுத்து, அடிப்படை உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில், ஜனநாயக விரோதமான, மனிதநேயத்திற்கும் விரோதமான  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திணித்து விட்டனர். பின்னால் வருவதற்கு இது ஒரு முன்னோட்டம்.

ஆப்பை அசைத்துவிட்ட  கதை!

ஆப்பை அசைத்து விட்டுள்ளனர்; ஆட்சியா ளர்களே தீமூட்டி அதற்குள் விரலைவிட்டு அவதிக்கு ஆளான வெட்கக் கேடான நிலை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவில் தலையாயதான முஸ்லிம் ஒழிப்பு - வெறுப்பு என்பது தான் இச்சட்டத்தில் முஸ்லிம் அகதிகளை இடம் பெற முடியாதவாறு செய்ததின் நோக்கம் என்பது உலகறிந்த ரகசியம்.

நாளை மறுநாள் நடைபெறும்

பேரணியில் பங்கேற்பீர்!

எனவேதான் உரிமைக் குரல் ஓங்கி, ஒலிக்கத் துவங்கி விட்டது; பெருத்த மெஜாரிட்டி உறுப்பினர் என்பது எண்ணிக்கையானாலும், வாக்கு வங்கிக் கணக்குப்படி தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்கு வெறும் 37.6 சதவிகிதம்தான்; எஞ்சிய 63 சதம் அதற்கு எதிரானது என்ற சுவர் எழுத்தை ஏனோ படிக்கத் தவறுகின்றனர்? இதனை எதிர்க்கும் உரிமை ஜனநாயகத்தில்  நம்பிக்கையுள்ள அத்துணைப் பேருக்கும் உண்டு என்பதை உணர்த்தி, நாட்டை ஹிந்து  ராஷ்ட்டிரமாக்கும் தவறான அரசமைப்புச் சட்ட விரோத முயற்சியை முறியடிக்க, நாளை மறுநாள் காலை  (23.12.2019) திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் - பெருந்திரளாக - நாடாளுமன்றத்தில் வாக்களித்த வன்னெஞ்சர்களைத் தவிர அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காத்திடவும், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சீர்குலைவைத் தடுத்திடவும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப அனைவரும் வாரீர்! வாரீர்!

இதில்,

கட்சி இல்லை,

மதம் இல்லை,

ஜாதியில்லை,

பேதமில்லை,

மனிதாபிமானமே முதன்மையானது என்பதால்  கூட்டணியையும் தாண்டி பெருந்திரள் பேரணியாக வாரீர்! வாரீர்!!

ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து

பாசிசத்தை விரட்டுவோம்!

ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!!

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்,

சென்னை

21-12-2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக