புலவர்
பா.வீரமணி
'விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 2.12.2019 அன்று 87ஆம் அகவையைத் தொடங்குகிறார்; வாழ்கின்ற காலத்தில் பற்பல பணிகளைத் தொடர்ந்து ஆற்றியும், பல வற்றைத் தொடங்கியும் பணியாற்றி வருகிறார். எழுதுவது, பேசுவது ஆகியவற்றோடு நில்லாமல் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கலந்துரை யாடல்கள், களமாடல்கள், பயணங்கள் ஆகியனவும் தொய்வின்றித் தொடர்கின்றன. அவரது பணியும், பங்களிப்பும் பல வகையின; பல திறத்தின. கட்டுரை என்றால் அது, அரசியல், இலக் கியம், வரலாறு, சமுதாயம், பகுத் தறிவு, ஜாதி, சமயம், மூட நம்பிக்கை, இட ஒதுக்கீடு, பால் வேற்றுமை உலகத்தமிழர் நிலை, வாழ்வியல் போன்றவை பற்றி யெல்லாம் விரியும்; விளக்கும். அவரது பேச்சும் இவற்றோடு இன்னும் பலவற்றோடும் விரியும். இவ்வாறு விரிந்து கொண்டிருப் பதே அவரின் ஆளுமை. இவற் றில் மற்றொரு சிறப்பும் உண்டு. அதாவது பகுத்தறிவை ஏற்றி அவர் எழுதுகிறார் எனில், அது தமிழகம், இந்தியா எனும் எல் லையைத் தாண்டி உலகத்தையும் விளக்கும். இப்படி அவர் எழுத்து, நாட்டைத் தாண்டி உலகைக் காட்சிப்படுத்தும். இப்படி ஒருவர் தமிழகத்தில் இருப்பது நந்தமிழர் களின் நல்வாய்ப்பு. அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வதில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது. அதே நேரத்தில் அவர் அவ்வப்போது வேண்டிய ஓய்வை எடுத்துக்கொண்டு உடலைப் பேணுவது மிக முக்கியமானது. நாமும் அவருக்கு வேண்டிய ஓய்வு அளிக்க உதவ வேண்டும்; இப்பிறந்த நாளில் நாம் அளிக்கும் பரிசாக எது இருக்க வேண்டும். இருக்கட்டும்.
உலகத் தத்துவமேதை பெர்ட்ராண்டு ரசல், The function of teacher எனும் கட்டுரையில். பலவற்றை விளக்கிவிட்டுச் சிலவற்றை அழுத்தமாகக் கூறுகிறார். ஒரு உண்மையான ஆசிரியனுக்கு, ஆழ்ந்த ஆய்வு வன்மை, சமகால அறிவுத்தேடல், அதிகாரத்துக்கு அஞ்சாமை இருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு இருப்பவர்தான் நம் ஆசிரியர். மேற்கூறியவற்றுக்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனினும் இங்குச் சிலவற்றை நோக்குவது நம் கடமையாகும். அவர் எழுதிய கீதையின் மறுபக்கம் எனும் நூலைப் போல, பல நூல்கள் அவரின் ஆழ்ந்த ஆய்வு வன்மையைக் காட்டுவனவாகும். வாழ்வியல் சிந்தனைகள், இட ஒதுக்கீடு, பகுத்தறிவுப் பற்றிய நூல்கள் சமகால அறிவுத் தேடலைக் குறிப்பதாகும். 69 சதவீத ஒதுக்கீடு குறித்து வாகை சூடியதும், அருண்சோரி, சோ போன்ற இன எதிரிகளின் பொய் முகத்தைத் தோலுரித்துக் காட்டியதும், சங்கராச்சாரியாரைச் சிறையில் அடைக்க வலியுறுத்தியதும் அதிகாரத்தை, செல்வாக்கை எதிர்த்த போராட்டமாகும். இவை அவரது அஞ்சாமையை வெளிப்படுத்துவதாகும். பெர்ட்ராண்டு ரசல், ஆசிரியருக்கு இருக்கவேண்டிய மற்றொரு பண்பையும் கூறியுள்ளார். அதுதான் சாதாரணப் பண்பு. (Extraordinary character) அதாவது சிறந்த செயல்பாடு. இந்தச் சிறந்த செயல்பாட்டில் ஆசிரியர் உச்சத்தைத் தொட்டுள்ளார். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இருந்த கல்விக் கூடங்களையும், பிற சமுதாய மேம்பாட்டு நிலையங்களையும் தொடர்ந்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விரிவாக்கி மேலும் பலவற்றைக் கட்டமைத்து நடத்திவருகிறார். தந்தை பெரியாரைப் பற்றி புதுப்புது நூல்களையும் ஏனைய பகுத்தறிவு நூல்களையும் வெளியிடுவதுடன்
அவற்றுள் பலவற்றை ஆங்கில மொழி பெயர்ப்பு களாகவும் வெளியிட்டு வருகிறார் அவரை அகிலத் திற்கும் காட்ட முந்துகிறார்.
இவற்றுடன் நின்றாரா ஆசிரியர்; இல்லை. தந்தை பெரியார் சிந்தனை, தத்துவம், பகுத்தறிவு, அறிவியல் ஆகியன குறித்து வல்லுநர்களை அழைத்து ஆய்வரங்குகளை நிகழ்த்தி அறிவு வெளிச்சத்தை, எழுச்சியை ஏற்படுத்துகிறார். அவற்றை உடனுக்குடன் நூலாகவும் வெளியிடுகிறார். அறிவுத்துறைகளை மட்டுமன்றி, உடல்நலம், சுகாதாரம் போன்றவைக் குறித்தும் ஆசிரியர் எடுத்துவரும் முயற்சி எங்கும் காண முடியாத ஒன்று. மருத்துவர், குடலியல் நிபுணர் சந்திரசேகரன், மருத்துவர் சுரேந்திரன், மருத்துவர் மீனாம்பாள், இதய சிகிச்சை நிபுணர் கார்த்திகேசன் போன்றோரைக் கொண்டு ஒளிப்படங்களுடன் கூடிய பொழிவுகளை நிகழ்த்த துணைப் புரிந்துள்ளார். இப்பொழிவுகள் எத்துணைப் பயனுள்ளவையாக இருந்தன என்பதற்கு அவற்றைப் பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் தான் தெரியும். மேலும் அம்மருத்துவர்களைப் பாராட்டும் முறைகள் பாராட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தகுதியுடையவர் களை உரிய நேரத்தில் பாராட்டுவதை போல உன் னதம் வேறு ஏதும் இல்லை. இப்பணிகளை வேறு எந்த இயக்கமும் செய்வதில்லை. அப்படிப் பாராட் டுவது அவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் ஆய்வையும் பெருக்கச் செய்கிறது. அதனால் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படுகிறது. அதனால்தான்,
"தக்காரைப் போற்றுகின்ற நாடு
தகுதியினை வளர்க்கின்ற கழனி
ஆற்றல் மிக்கோரால் உயர்வதடா
மனிதம்"
என்றார் அறிவியல் அறிஞரான கவிஞர் குலோத்துங்கன். அவரே "பாராட்டைப் போல் பெரும் பரிசு பிறிதொன்றில்லை" என்றும் கூறியுள்ளார். இதனைத்தான் ஆசிரியர் செய்கிறார். மருத்துவத்திற்கு, சுகாதார நலத்திற்கு ஆசிரியரின் பங்களிப்பு ஒப்பற்றது. பெரியார் திடலிலேயே 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனை இருப்பது அதற்குச் சான்றாகும். இது திராவிடர் கழகத்தின் சார்பில் வேறு இடங்களிலும் உள்ளன. "சின்னாள் பல்பிணி கொண்ட சிற்றுயிர்க்கு" இப்பணி ஈடற்றது. தந்தை பெரியார் சிறுசிறு காசுகளாகச் சேர்த்ததையும், தம் முழுச்சொத்தையும் அறக்கட்டளையாக்கிச் சமுதாயத் தொண்டாற்ற வைத்திருப்பதும், எத்துணை சிறந்தது என்பது இதனால் புரிகிறது அன்றோ! அதனால்தான் தமிழர் களுக்கு ஏன் உலகத்தவர்க்கு அவர் தந்தை; வழி காட்டும் பெரியார். பகுத்தறிவை, இயங்கியலைப் போதித்த பண்டைய பவுத்தம் 'தேகவாதம்' என்ற மருத்துவப் பிரிவை உண்டாக்கி மனிதர்களை நோயிலிருந்து காக்க பணியாற்றியது, திராவிடர் கழகத்தின் மருத்துவப் பணியோடு நோக்கத்தக்கது. புத்தரும் தந்தை பெரியாரும் வெறும் பகுத்தறிவை, ஆன்மா மறுப்பை மட்டும் போதித்தவர்கள் அல்லர்; மனித உயிர்களைக் காக்க வந்தவர்களும் ஆவர். அந்த மனித உயிரும் அறிவு, மானம் ஆகியவற்றுடன் நல்வாழ்வு வாழவும் அறிவுறுத்தியவர்கள். அந்த அரும்பணியைத்தான் மானமிகு ஆசிரியர் மேலும் விரிவாக்கி வருகிறார்; தொடருகிறார்.
ஆசிரியர் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்ட தொலைநோக்குச் சிந்தனையாளர் என்ப தற்கு; பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனினும் இங்கு சில செய்திகளை நோக்குவது ஏற்றன. நம் ஆசிரியர் வெளிநாடுகளுக்குச் சென்றால் சென்ற தற்கான பணியை மட்டும் பார்க்காமல் புத்தகக் கடைகள், புத்தக நிலையங்கள், நூலகங்கள் ஆகியவற்றுக்குச் சென்று நூல்களைப் பார்ப்பது, படிப்பது, வாங்குவது அனைவருக்கும் தெரியும். புத்தகங்களுக்காக இந்தப் பெரிய இடங்களை மட்டுமல்லாமல், தெருவோரப் புத்தகக்கடை சென்றும் புத்தகங்களை வாங்குவார். இதில் அவர் தனி நாயகர். அண்மையில், அமெரிக்காவில் வாழ்நாள் சாதனை யாளர் விருதைப் பெற்றார். அவ்விருதைப் பெற்ற பின்னர், பல புத்தக நிலையங்களுக்குச் சென்று சில புது நூல்களையும், பழைய நூல்களின் புது வெளி யீடுகள், (புதுச் செய்திகள் உள்ளவை) கிடைக்காத அரிய நூல்கள் ஆகியவற்றையெல்லாம் வாங்கி யுள்ளார். இவற்றுள் தாமஸ் பெமரின் எழுதிய 'Common SENSE', ஆபிரகாம் லிங்கனின் Gettysburg Address போன்ற நூல்கள் அடக்கம். இவைபற்றி எல்லாம் விடுதலையில் எழுதியுள்ளார். லிங்கனின் நூல் அவர் பலமுறை படித்ததாகும். ஆனால், இப்போது வாங்கியய நூல் புதிய தரவுகள் அமைந்த நூல். அதற்காக வாங்கியுள்ளார். இதனால் புதிய செய்திகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது தெரியும். இந்தத் தேடலைத்தான் ரசல் Update knowledge என்கிறார். நம் ஆசிரியர் அதைத்தான் பின்பற்றுகிறார். நல்ல நூலகர்கள் வாசகர்களுக்குச் செய்யவேண்டிய பணியைப் பற்றிப் புரட்சிக்கவிஞர் கூறும்போது "மூலையிலொரு சிறு நூலும் புது நூலாயின் முடிதனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்" என்பார். இதனையொப்ப வாசகர்களும் புது நூலை மூளையில் பதிக்க வேண்டும். அப்படிப் பதிப்பவர்தான் ஆசிரியர். வள்ளுவப் பெருந்தகை சுருங்கக் கூறுவதைப் போன்று ஆசிரியர் "நூலாருள் நூல் வல்லான்" "கற்றாருள் கற்றார்" எனத் துணிந்து கூறலாம். அமெரிக்காவில் வேறொரு விமான நிலையத்திலிருந்து சிகாகோவுக்குப் புறப்படும்போது விமானம் கிளம்புவதற்குக் கூடுதல் நேரம் ஆகும் என அறிவிப்பு வந்தபோது, அந்நேரத்தை வீணாகக் கழிக்கக் கூடாது என்பதால்; பக்கத்தில் உள்ள புத்தகக் கடைக்குச் சென்று புத்தகங்களை நோட்டமிட்டு உள்ளார். அங்கு ஒரு மூலையில் கிடைக்காத ஒரு பழைய நூல் புத்தக இடுக்குகளில் மறைந்து சிறு பகுதியை மட்டும் வெளிக்காட்டிக்கொண்டு இருந்திருக்கிறது. அதனை யாரும் பார்க்கவில்லை. ஆசிரியரோ நுணுகிப் பார்த்து அந்நூலை எடுத்துள்ளார். என்ன ஆச்சரியம்? இதுவரை பார்த்திராத, அறிந்திராத ஒரு நூலாக இருந்துள்ளது. அந்நூல் தான் நெல்சன் மண்டேலாவின் PRISON LETTERS என்பதாகும். அஃது இந்தியாவில் கிடைக்கவில்லை. ஆனால், ஆசிரிய ருக்குச் சின்ன புத்தகக்கடையில் கிடைத்துள்ளது. தேடும் பருந்துக்கு தான் நல்ல இரை கிடைக்கும். அது போல தேடல் நாமிடம் உடையவருக் குத்தான் தேவையானது கிடைக்கும்.
"அரைநொடி நேரமும் பொற் காலம் ஆதல் கூடும்
ஆண்டுகள் பல இரவுகள் போன்று கழிதல் கூடும்"
என்றார் கவிஞர் குலோத்துங்கன். விமான நிலையத்தில் அந்த அரை நொடி நேரம்தான் ஆசிரியருக்குப் பொன்னான நூலைத் தந்துள்ளது. அந்நேரத்தில் ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்து இருப்பார். அம்மகிழ்ச்சியில் நாமும் திளைப்போமாக! ஆசிரி யரின் அறிவுப்பசிக்கு நல்விருந்து கிடைத்துள்ளது.
ஆசிரியர் இவ்வாறு பலதுறைகளில் பற்பல நூல்களை வாங்கி படிப்பது, ஆய்வது, பேசுவது மற்றும் விடுதலையில் எழுதுவது என்பது "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப பயனளிக்கத் தக்கது. நம்மை திருத்துவதும், அறிவு வெளிச்சத்தைப் பரப்புவதும் தானே ஆசிரியர் கடமை. அந்தக் கடமையைத் தான் ஆசிரியர் தொடர்ந்து செய்து வருகிறார். தந்தை பெரியார் அறக் கட்டளை சார்பில் கல்லூரிகளையும், பள்ளிகளையும், பல்கலைக்கழகத்தையும், வேறு சிலவற்றையும் நடத்தி அவற்றை கண்காணிக்கும் அவர் மேலும் பற்பல பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் விடுதலையில் தொடர்ந்து எழுதிவருகிறார். பல கூட்டங்களில் பலகாலம் பேசியும் வருகிறார். பற்பல பணிகளைக் கண்காணித்து வரும் ஓர் இயக்கத் தலைவர், அவற்றினூடே நாள்தோறும் எழுதுவது அரிதினும் அரிதாகும். எழுதிப் பார்த்தால்தான் அந்தக் கட்டம் தெரியும். இப்படி எழுதுவதுடன், இடையிடையே தம் நூல்களைப் புதுப்பிப்பதும், புது நூல்களை எழுது வதும், பிறர் நூல்களுக்கு அணிந்துரை அளிப்பதும் சாதாரண செயலன்று. அஃது அசாதாரணமானது. அந்த அசாதாரணத்தின் அருமையே ஆசிரியர். ஆசிரியருக்கு இவை எவ்வாறு முடிகிறது?
"With self discipline atmost anything
is possible" - Roosewelt
"சுயகட்டுப்பாடு ஒருவருக்கு இருந்தால் எந்தப் பொருளும் அவருக்குக் கை கூடும்" என்றார் அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட். நம் ஆசிரியருக்கு அந்த சுய கட்டுப்பாடு கைவந்த கலை. அவரது உழைப்பின் வெற்றியின் ரகசியம் அதுதான். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. அதாவது "ரவி புகாத இடமெல்லாம் கவி புகுவான்" என்பதாகும். ரவி என்றால் சூரியன் என்று பொருள். சூரிய ஒளி எல்லா இடங்களிலும் போகும் 'சிறு குறு துளைகளிலும் நுழையும். ஓலைக் குடிசையில் பகல் நேரத்தில் பார்த்தால் சூரிய ஒளி எல்லா சந்துகளிலும் ஒளிவீசும். இப்படிக் கவிஞன் எல்லாப் பொருள்களிலும் நுழைவான்; பாடுவான் என்கிறது அப்பழமொழி. கவிஞன் நுழைகிறானோ இல்லையோ தத்துவ ஆசிரியர் நுழைவர். அப்படிதான் நம் ஆசிரியரும். இத்தனை துறைகளிலும் ஓய்வு ஒழிவின்றி அவர் உழைப்பதும் சிறப்பதும் விந்தையானதே யாகும். வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்கிய சங்ககாலச் சேரமன்னனைக் கண்டு வியந்த ஒரு புலவர்
"யாங்கனும் மொழிகுவோம் ஓங்குவாள் கோதை"
என்று வியந்தார். நாமும் நம் ஆசிரியரைக் கண்டு
"யாங்கனும் மொழிகுவோம் ஓங்கு புகழ் ஆசிரியரை"
என்றே வியக்க வேண்டியிருக்கிறது. அவர் வாழும் காலம் வரை நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
Leaders don't create followers they create
leaders
- Tom peters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக