கேள்வி: சுவாமி விவேகானந்தரின் நல்லதொரு அமுத மொழி?
பதில்: பூக்களாக இருக்காதே... உதிர்ந்திடுவாய்... செடிகளாக இரு... பூத்துக்கொண்டே இருப்பாய்.
(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)
விவேகானந்தர் இதை மட்டுமா சொல்லி யிருக்கிறார்.
இதோ விவேகானந்தர்.
மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமை களும், கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகு மென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.
(மறைமலை அடிகளாரின் ‘தமிழர் மதம்‘, பக்கம் 24)
கேள்வி: கைலாஷ், மானசரோவர் யாத்திரை பற்றி?
பதில்: கைலாயம் என்பது இமய மலையில் உள்ளது. இதன் உயரம் 6638 மீட்டர். சிந்துநதி பிரமாண்டமான சட்லஜ் நதிகள் இங்குதான் உற்பத்தி யாகிறது. மானசரோவர் என்பது அங்குள்ள பிரமாண்டமான ஏரி. சீன எல்லை யைக் கடந்துதான் கைலாயம் செல்லவேண்டும்.
சிவன், பார்வதி தேவியுடன் உறையும் இடம், தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்துதான் கைலாஷ் யாத்திரைக்கு அதிகமான பேர் சென்று வரு கிறார்கள். ஏதோ ஈ.வெ.ரா. பிறந்த மண் என்பதெல்லாம் ஹம்பக்.
(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)
மானசரோவர் - அதாவது கைலாஷைப் பற்றி விஜயபாரதம் ‘ஆகா’ எப்படியெல்லாம் சிலாகித்து எழுதுகிறது. சிவன் பார்வதி உறையும் இடமாம்.
அந்த இடம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது? எந்த நாட்டின் கீழ் இருக்கிறது? அதுதான் முக்கியம். அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தால் ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் வண்டி வண்டியாக அள்ளி விடும். சிவ - பார்வதி உறையும் இடத்தில் வண்டவாளம் பல்லிளித்து விடும்.
வானதி பதிப்பகம் வெளியிட்ட - சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூலின் பக்கம் 145, 146 என்ன சொல்லுகிறது?
இதோ:
திருக்கைலயங்கிரி என்று தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம். இது திப்பெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்பட்ட எல்லைப் பிராந் தியம், ‘கைலாஸ் மானஸரோவர்’ எனும் இப்பிரதேசம்.
பாரதத்தின் கலை - கலாசார ஆன் மீகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம். இதற்குப் பாரதத்தில் வழங்கிய புராதனப் பெயர் ‘த்ரிவிஷ்டபம்‘ (தீப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில்தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது. பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப்பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன. ‘த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே, அதி வீஷ்ட பிச்ரிதா:--’’ என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.
‘‘மூன்று தைவ சக்திகள் - அக்னி இடிமின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை ‘த்ரவிஷ்டபம்‘ (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.
மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை ‘த்ரதவிஷ்டபம்‘ என்றே குறிப்பிட்டு, ஆரிய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார். கிம்புருஷ வர்ஷம், கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக் கிறார். கைலாஸ பர்வதத்தை ‘ஹேம் கூடம்‘’ என்று மகாபாரதமும் ‘கிரௌஞ்ச பர்வதம்‘ என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.
ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954 இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள். கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், 1962 இல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்கப் பின் கைலாஸ் மானஸரோவர் புனித யாத்திரை தடைப்பட்டுவிட்டது.
- திரு.சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூல், பக்கம் 145, 146, (வானதி பதிப்பக வெளியீடு)
பூலோக சொர்க்கம் என்று போற்றப்படு கின்ற இடம்!
சிவபெருமான் உறைவதாகக் கூறப்படு கின்ற இடம்!
மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.
இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிர மிக்க முடிந்தது? அவன் படை எடுத்து வந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்? திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக் கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று? உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?
இதற்கெல்லாம் ‘விஜயபாரதம்‘ விலா வாரியாக பதில் சொன்னால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது.
கேள்வி: திருவள்ளுவர் ஒரு ஹிந்துவா?
பதில்: சந்தேகமென்ன? அவர் ஹிந்துதான்.
அவருக்கு சென்னை மயிலாப் பூரில் கோவில் கட்டி ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகிறார்களே! அது சரி, எங்காவது ஒரு முஸ்லிமோ, கிறிஸ்துவரோ தன் வீட்டில் வள்ளுவர் படம் வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?
- ‘விஜயபாரதம்‘, 22.11.2019, பக்கம் 35
திருவள்ளுவர் காலம் என்ன? 2000 ஆண்டுகளுக்குமுன் ஹிந்து மதம் என்ற ஒன்று உண்டா?
உங்கள் லோகக் குரு மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாக்குமூலத்தைக் கொடுத்தால் அதை அப்படியே அட்சரம் பிறழாமல் ‘ஆம் என்க!’ என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா!
பெரியவாள் சொன்னால் அது தெய் வத்தின் குரலாயிற்றே! ஆம் இதுவும் வானதி பதிப்பகம் வெளியிட்டதுதான். மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருள்வாக்கை எல்லாம் தொகுத்து வெளியிடப்பட்டதுதான். ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 167 ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.
‘‘நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று மொழிப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோமோ அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பற்றியது’’ என்று “திருவாய்” மலர்ந்துள்ளாரே!
வெள்ளைக்காரன் இங்கு வந்தது எப்போது?
திருவள்ளுவர் வாழ்ந்தது எப்போது?
திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் கோவில் இருக்கிறதாம். அதை எப்பொழுது, யார் கட்டினார்கள்?
கோவிலை - அதுவும் ஹிந்து மதத்தில் கோவில் கட்டுவது என்பது மிகவும் மலி வான விடயமாயிற்றே. ஒருவனுடைய கொள் கையை ஒழிக்கவேண்டுமானால், அவனைக் கடவுளாக்கிட வேண்டும் என்பார்களே - அதுதான் திருவள்ளுவர் விடயத்திலும்.
சனாதன, வருண தருமத்தை ஒழிக்க வந்த கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்ன கூட்டம் எதைத்தான் செய்யாது?
பிள்ளையாரிலேயே தான் எத்தனை எத்தனைப் பிள்ளையார்? வேப்ப மரத்துக்குக் கீழிருந்தால், அது வேம்படி விநாயகர்; கடன்கார விநாயகர், ஒரு பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்திருந்தால், வல்லபைக் கணபதி - வெட்கக்கேடு.
கேள்வி: ‘கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது’ என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளாரே?
பதில்: காஞ்சிப் பெரியவர் போல ஃபேன் இல்லாமல், கார் இல்லாமல் கால்நடையாக ஊர் ஊராகப் போகிறவர்கள் கூடங்குளத் திட்டம் - ஏன் மின்சாரமே வேண்டாம் என்று கூறலாம். ஆனால், அவர்கூட, தனக்கு வேண்டாமென்றாலும், மற்றவர்களுக்கு மின்சாரம் தேவை என்பதால், கூடங்குளம் வேண்டாம் என்று கூறமாட்டார்.
‘துக்ளக்‘, 3.7.2019, பக்கம் 17
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஃபேன் இல் லாமல், கார் இல்லாமல் கால்நடையாகப் போனார் - இருக்கட்டும்.
சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருந்தபோது ஜூனியர் சங்கராச் சாரியாராகவும், அவர் மறைந்த பிறகு மூத்த சங்கராச்சாரியாராகவும் இருந்த ஜெயேந்திர சரஸ்வதி கால்நடையாகப் போகவில்லையே! காரிலும், விமானத்திலும்தானே பறந்தார். அவர்மீது ‘துக்ளக்‘குக்கு என்ன கோபம்?
கிண்டலா? கேலியா?
- விடுதலை ஞாயிறு மலர் 7 12 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக