தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் விழி திறந்த வித்தகர்
நம் இனத்தின் மான மீட்பர்
மூடநம்பிக்கை இருட்டிலிருந்து
பகுத்தறிவு வெளிச்சத்தினைப் பாய்ச்சி,
நம் மக்களுக்கு மானமும் அறிவும்
போதித்த, போதி மரம் தேடாத புத்தர்!
தனக்கென வாழாது, சமூகத்திற்கே
உழைத்து, பிறவி பேதம் அகற்றிட
பிறவிப் போர் வீரராக 95 ஆம் அகவையிலும்
களங்கண்ட கருஞ்சிங்கம்
எம் அறிவு ஆசான்!
உலகத்தை தனது மானுடப் பார்வையால் அளந்து
சுயமரியாதைச் சூரணம் தந்து
எழுச்சி பெறச் செய்த ஏந்தல்
பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை
தீர்த்தல் பெரும் பேதமை என்று
உணர்த்தி, பேதமிலாப் பெருவாழ்வு
அனைவர்க்கும் தேவையென்று
நிலை நிறுத்திட, பதவி நாடா பொதுத் தொண்டின்
இமயமாய், நன்றி பாராட்டாத தொண்டராய்
தூயவடிவமாய், பருவம் பாராது மக்களுக்கு
உழைத்து, பகுத்தறிவு ஒளிப் பாய்ச்சிய
பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியாரின்
46 ஆவது ஆண்டு நினைவு நாள் வரலாற்றுக்
குறிப்பு நாள் இந்நாள்! (24.12.2019)
நம் அறிவுக்கு விருந்தானவர்
அகிலத்திற்கும் இன்று மருந்தானார்!
உலகம் பெரியாரையே நோய் தீர்க்கும்
மாமருத்துவராகப் பார்க்கிறது - இன்று!
இந்தியாவின் வடபுலங்களில் உள்ள
இளைஞர்களின் வழிகாட்டும் நாயகராக
பெரியார் என்ற ஞானசூரியன்
ஒளியும், வெப்பமுமான இந்தப் பரிதி
கொடையாக மட்டுமல்ல; பாடமாகவும் திகழ்கிறது
இளைஞர்களுக்கு அவர் ஓர் அறிவாயுதம்;
போராட்டக் களத்தில் கிடைத்த
புதிய ஏவுகணை என்ற பெருமிதம் உள்ளது!
முனை மழுங்காத இந்த அறிவாயுதம் ஏந்துவோம்!
பெரியார் மறையவில்லை;
உறைந்துவிட்டார், எம் இளைஞர்களின்
இரத்த நாளங்களில் -
மக்கள் உள்ளங்களில் நிறைந்து விட்டார்!
பெரியார் வாழ்க!
பெரியார் வெல்க!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.12.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக