துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியார்பற்றிப் பேசிய பேச்சு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அல்லவா! அவர் அன்று பேசியது என்ன?
‘‘1971 இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு, ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை - அதை ‘சோ', ‘துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.''
ரஜினியின் இந்தப் பேச்சை மய்யப்படுத்திதான் கடந்த 6 வார காலமாக சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பின. விவாத - பிரதிவாதங்கள் நடந்தன.
‘துக்ளக்'கும் தன் பங்குக்குத் தனக்கே உரித் தான வக்கணையோடும், வில்லங்கத்துடனும் எழுதிக் குவித்தது.
இப்பொழுது இந்த வார ‘துக்ளக்'கில் (4.3.2020).
‘துக்ளக்' பொன் விழாவில் ரஜினி காந்த் பேச்சு என்று ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதோ அந்தப் பேச்சு:
‘‘1971 இல் சேலத்தில் பெரியார் அவர்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக் கொண்டு ஒரு ஊர்வலம் போனார்கள்'' (‘துக்ளக்', 4.3.2020, பக்கம் 13) என்று ரஜினி பேசியதாக ‘துக்ளக்' வெளியிட்டுள்ளது.
‘‘ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள்'' என்று ரஜினி காந்த் பேசியதை மாற்றி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள் என்று இவ்வார இதழில் ‘துக்ளக்' வெளியிடுவானேன்?
உடை இல்லாமல், செருப்பு மாலை போட்டு என்ற சொற்களை ‘துக்ளக்' மறைத்தது ஏன்?
ரஜினி பேசிய பேச்சுக்கு ஆதாரமாக வீடியோவே இருக்கும்பொழுது, ‘துக்ளக்' இந்தப் பித்தலாட்டம் செய்வானேன்?
உண்மையைச் சொல்லும்பொழுது, எப் பொழுது கேட்டாலும் அப்படியே முனை மழுங்காமல் அப்படியே சொல்ல முடியும்.
பொய்யைச் சொன்னால், அதைக் கடைசிவரை காப்பாற்றவே முடியாது. அந்த நிலையில்தான் ‘துக்ளக்'கும், குருமூர்த்தி அய்யர்வாளும் இப் பொழுது சிக்கியுள்ளார்கள். உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி நிலைதான் குரு மூர்த்திக்கு.
‘துக்ளக்' கின் துர்ப் போதனையைக் கேட்டு உளறிக் கொட்டிய ரஜினியை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இவாளை நம்பினால் என்னாகும் என்பதை இப்பொழுதாவது அவர் தெரிந்துகொள்வது நல்லது.
இதில் ரஜினி பொய்யரா அல்லது ‘துக்ளக்' குருமூர்த்தி பொய்யரா?
- விடுதலை நாளேடு, 26.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக