1) உணர்வுகளைத் தூண்டி யாருக்குப் பயன் என்று ‘தினமலர்’ தலையங்கம் தீட்டியுள்ளது (27.01.2020).
புத்த மார்க்கத்திற்கு எதிராக உணர்வுகளைத் தூண்டி பவுத்த மார்க்கத்தவர்களின் தலைகளைச் சீவியது யார்? என்று வரலாறு கூறும்.
வரலாற்றின் சக்கரங்களை வெகு தூரத்திற்குக் கூட சுழலச் செய்ய வேண்டாம். நடப்புக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக உணர்வுத் தீயை மூட்டி விடுவோர் யார் என்பது அன்றாட காட்சியே!
செத்துப் போன பசு மாட்டுத் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு தோழர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காவல் நிலையத்திற்குள் ஓடிப் பதுங்கிய நிலையில், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து வெளியில் இழுந்து வந்து அடித்து கொன்றதன் பின்னணியில் இருப்பது மத உணர்வுத் தூண்டல் என்பதல்லாமல் வேறு புதிய அகராதியை “தினமலர்” தயாரித்திருக்கிறதா என்று தெரியவில்லை.
தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்திருந் தார் என்பதற் காகவும், கோயில் திருவிழா ஒன்றைப் பார்த்தார் என்பதற்காகவும், குதிரை மீது ஏறி வந்தவர் என்பதற்காகவும் அடித்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் தூண்டப்பட்ட உணர்ச்சிக்கு என்ன நாம கரணமோ!
இன்னும் எத்தனை எத்தனையோ வினா வெடிகுண்டுகளை வீசிட நம்மால் முடியும். இத்துடன் விட்டு, “தினமலரின்” அடுத்த பகுதிக்குப் பயணிக்கலாம்.
(2) சினிமா வசனங்கள், பாடல்கள் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியும் எனக் காட்டியவர் அண்ணாதுரை.
(அண்ணா என்று எழுத இதுகளுக்கு மனம் வராது. ஆனால் ராஜகோபாலாச்சாரியாரை மட்டும் ராஜாஜி என்றுதான் எழுதுவார்கள்)
கொள்கை ஏதும் இல்லாமல் வெறும் சினிமாவால் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுவது திமுகவுக்குக் கொள்கை ஏதுமில்லை என்று காட்டுவதற்கே.
1957இல் 15, 1962இல் 50, 1967இல் 138 இடங்கள் பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது என்பது அரசியல் பாடம்!
ஆனால் “தினமலர்” கூட்டத்துக்கு திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் என்றாலே ஒரு வகையான “தீண்டாமை”தான்.
அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தீரர்களின் உரைகள், எழுத்துகள், நடத்திய இதழ்கள், எழுதிய நூல்கள் - பிரச்சாரம், போராட்டங்கள், மக்களிடையே நெருக்கம் - திராவிட இலட்சியக் கொள்கைகள் இவையெல்லாம் திமுகவின் மக்கள் தொடர்பு சாதனங்கள் இல்லை என்கிறதோ தினமலர்?
(3) ஈ.வெ.ரா.வின் பாதையில் இருந்து சட்டசபை நெறிமுறைகளுக்கு அண்ணா மாறினார்.
சட்டமன்றம் சென்றது உண்மைதான். சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக ஒரே ஒரு பார்ப்பனருக்குக் கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.
பெரியார் பாதையிலிருந்து மாறினார் என்பது எதை வைத்து? வழிமுறைகளில் மாற்றம் ஒரு கட்சிக்குள்ளே கூட அவ்வப்பொழுது நிகழக் கூடியதுதான்.
நோக்கு - இலக்கு என்ன என்பதுதான் முக்கியம்.
அரசு அலுவலகங்களிலிருந்து எல்லாவித மதக் கடவுள் படங்களை அகற்றுக என்பது முதல் அமைச்சர் அண்ணாவின் முதல் ஆணை.
சென்னை மாநிலத்துக்கு “தமிழ்நாடு” என்ற பெயர் மாற்றம் முதல் சட்டம்.
சுயமரியாதைத் திருமணங்களை சட்ட வடிவம் - இரண்டாவது சட்டம்.
இந்திக்கு இடமில்லை, தமிழும், ஆங்கிலமுமே தமிழ்நாட்டில் என்பது மூன்றாவது சட்டம்.
இவை எல்லாம் பெரியார் பாதையை விட்டு அண்ணா விலகினார் என்பதற்கான அடையாளமா என்பதை “தினமலர்”தான் கூற வேண்டும்.
திமுக சட்டப் பேரவை உறுப்பினர் திரு.முனுஆதி அவர்கள் தந்தை பெரியாருக்கு தியாகி பட்டம் கொடுக்கப்படுமா? என்று சட்டப் பேரவையில் வினா எழுப்பிய போது - முதல் அமைச்சர் அண்ணா “இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு காணிக்கை” என்று சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினாரே - இதுதான் அண்ணாவிடமிருக்கும் பெரியார்!
இவையெல்லாம் பாதை மாறினார் என்பதற்காக பதவுரை - பொழிப்புரை செய்யுமோ “தினமலர்” வகையறாக்கள்?
(4) திமுகவை நடத்திய கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆர். வளர்த்த புதிய இயக்கம் துளிர்ந்தது - இதுவும் “தினமலர்” தலையங்கத்தின் வரிதான்.
என்ன கருத்து வேறுபாடு, மாறுபாடு?
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற நிலையில் கட்சியின் பொருளாளராக எம்.ஜி.ஆரை உயர்த்தியவர் கலைஞர்.
ஈரோடு திமுக மாநாட்டில் மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைச் சந்திப்பேன் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அத்தகையவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்ன, அது எங்கிருந்து வந்தது? என்பது அரசியலை அறிந்தவர்க்கு “அ” “ஆ” பாடம்.
எம்.ஜி.ஆரை அழைத்து தந்தை பெரியார் தான் கேட்டார், “கட்சியின் பொருளாளராக இருக்கும் நீங்கள் கட்சியின் கணக்கைக் கேட்க வேண்டிய இடம் பொதுக்கூட்ட மேடையல்ல” என்று நேருக்கு நேர் கேட்கவில்லையா? அந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆரால் நேர்மையான பதில் கூற முடிந்ததா? - கண்ணீரைத் தவிர!
(5) எம்.ஜி.ஆர். அரசியல் பிரவேசத்திற்குப் பின் கடவுள் வழிபாட்டை ஏற்கும் திராவிடர் கழக பின்னணி கொண்ட தலைவர்கள் அதிகரித்தனர் என்பது தினமலரின் கூற்று.
அண்ணா தீட்டிய வேலைக்காரி திரைப்படத்தின் இறுதியில் - வழக்கமாக “சுபம்“ என்று போடுவார்களே, அதற்குப் பதிலாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வரியை இடம்பெறச் செய்தது என்பது உண்மைதான்.
அதே நேரத்தில் திமுகவின் அய்ம்பெரும் தலைவர்கள் என்று கூறப்பட்டவர்கள் எவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் பேசிய எம்.ஜி.ஆர். கடவுள் பக்தியால், மந்திரத்தால் நோய் தீர்க்க முடியுமா என்று கேட்டவர்தானே? (1979). சென்னை ஆஸ்திக சமாஜத்திற்குச் சென்று தன்னை நாத்திகன் என்று எம்.ஜி.ஆர். பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லையா? (1976). பின்னர் சூழ்நிலையின் கைதியானார் என்பதுதான் உண்மை.
(6) தவிரவும் இலக்கியத் தமிழ், வழக்குத்தமிழ், மேடைத் தமிழ் என்று தமிழ் மாற்றம் கண்டது. இதில் அடுக்கு மொழியில் பேசும் முறையை இன்றளவிலும் கொண்டு வந்ததோடு மட்டுமின்றி சிறுக சிறுக பாடப் புத்தகங்களில் “பக்தி இலக்கியத்தை” அழித்தனர்.
சொன்னாலும் சொல்ல விட்டாலும் திராவிட இயக்கம் தமிழர் மறுமலர்ச்சி கண்டது கண்ணுக்குத் தெரிந்த இமாலய உண்மை.
இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு - இந்தியத் துணைக் கண்டத்திலேயே நங்கூரம் பாய்ச்சி நார்நாராகக் கிழித்தது திராவிடர் இயக்கமே!
வடமொழியிலிருந்து தமிழர்களின் பெயர்கள் எல்லாம் தமிழில் மாற்றம் ஏற்பட்டது யாரால்? பேச்சுத் தமிழில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததற்கு யார் மார்தட்ட முடியும்?
மாணவர்கள் நாராயணசாமி, இராமையன், சோமசுந்தரம், கோதண்டபாணி என்பவர்கள் எல்லாம் முறையே, நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், தில்லை வில்லாளன் என்று மாற்றம் என்ற மணம் கமழ்ந்ததற்கு காரணம் திராவிடர் இயக்கம் தானே.
நமஸ்காரம் - வணக்கம் ஆனதும், அக்கிராசனர் தலைவர் ஆனதும், உபந்நியாசர் - சொற்பொழிவாளரானதும், வந்தனோ பசாரம் - நன்றி என்று நறுமணம் வீசியதும், யார் யாரால்? எந்த இயக்கத்தால்? இயம்புமா “தினமலர்”கள்?
(7) பக்தி இலக்கியத்தை அழித்தது திராவிட ஆட்சி என்று குற்றப்பத்திரிகை படிக்கிறது தினமலர் - வரவேற்கிறோம்.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் “பித்தா பிறைசூடி பெருமானே!” (சந்திரனைத் தலையில் சுமந்து கொண்டிருக்கும் சிவனே!) என்று அறிவியலுக்கு விரோதமான புராணக் குப்பைகளைக் கொட்டும் தொட்டிகளா குழந்தைகளின் மூளைகள்?
“மண்ண கத்திலும் வானிலுமெங்குமாய்த்
திண்ண கத்திரு வாலவா யருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. “
திருஞானசம்பந்தனின் இந்தப் பக்தி சொட்டும்(?) பாடல்களைப் பிள்ளைகளின் நெஞ்சில் ஊன்ற வேண்டுமா?
பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க, மதுரை வாழ் சிவனே அருள்புரிவாயாக என்று சிறுவனாக இருந்த திருஞானசம்பந்தரின் இந்தப் பக்திப் பாடலிலும் பக்தி இலக்கியத்திலும் “தேன் சொட்டு”தான் என்று தினவெடுத்த மையினால் எழுதுகிறதா, தினமலர்?
(8) ஒரு காலத்தில் காங்கிரஸ் காரராக, வைக்கம் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ரா. தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்ற போது, அதை எதிர்த்த சிலர் அரசியல் செல்வாக்கு இல்லா பின்புலம் கொண்டவர்கள் என்பதே உண்மை.
தமிழை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது உண்மையே. பகுத்தறிவுப் பகலவனாகிய அவர் - பொத்தாம் பொதுவாகக் கூறி செல்வோர் அல்லர்.
புராணங்களும், இதிகாசங்களும் தமிழை அரித்துத் தின்னவில்லையா? தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கும் மோட்சம் என்னும் திருவிளையாடல் புராணப் பாடலை எந்தக் கணக்கில் வரவு வைப்பது.
அதனால் தான் - தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார்.
தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவரும் அவரே! திருக்குறளை மலிவுப் பதிப்பாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த கோமானும் பெரியாரே!
இவற்றையெல்லாம் மறைத்து விட்டு எந்த நோக்கத்தில் எந்த நல்லெண்ணத்தில் அது சொல்லப்பட்டது என்பதைப் பூணூல் திரை போட்டு மறைப்பது ஏன்?
இப்படி சொல்பவர்கள் யார்? ஜெகத்குரு என்று தலையில் தூக்கி வைத்துக் கரகாட்டம் போடுகிறார்களே அந்த சங்கராச்சாரி- தமிழை நீஷ மொழி என்று சொல்லவில்லையா?
தீக்குறளை சென்றோதோம் என்ற ஆண்டாளின் திருப்பாவை பாடலுக்கு தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று விளக்கம் சொல்லவில்லையா?
இன்றைக்குத் தடி எடுத்துப் புறப்பட்டு இருக்கும் இதே தினமலரின் பார்வைதான் என்ன?
கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
தினமலர் பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் - ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும் - ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் - வாரமலர் 13.8.2004)
தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம்:
தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும், மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும். கருநாடக அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் விடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து விட்டோம்.
டவுட் தனபால்:
அதனால என்னங்க... பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமே இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?
(தினமலர், 18.8.2009)
தினமலர் கூடாரத்தின் இன்னொரு பிள்ளையான “துக்ளக்“ (23.6.2010) தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட்டோம் என்று எழுதவில்லையா?
தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களையும் - கருத்துகளையும் கூறும் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் இந்த “தினமலர்” கூறியவைதான் இவை.
தமிழ் செம்மொழியானால் மட்டன் பிரியாணி கிடைத்து விடுமா? என்று கூறுவதெல்லாம் அவர்களின் வயிற்றெரிச்சலைக் காட்டவில்லையா?
அதே நேரத்தில் சமஸ்கிருதம் என்றால் தெய்வ பாஷை என்று எப்படியெல்லாம் பசப்புகிறார்கள்.
(9) தமிழுக்குக் குரல் கொடுக்கும் தலைவர்கள் பலர் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல; அத்துடன் பலரது குடும்ப வாரிசுகள் மதமும் மாறி வாழ்கின்றனர். ஈ.வெ.ரா.வின் தாய்மொழி கன்னடம் என்பதை அனைவரும் அறிவர் - என்பது தினமலர் தலையங்கத்தின் மற்றொரு பகுதி.
அப்படிச் சுற்றி இப்படி சுற்றி கடைசியில் எங்கு வந்து நிற்கிறார்கள், பார்த்தீர்களா?
பெரியாரைக் கன்னடர் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டும் என்பது அவாளின் பூடகம்.
கன்னடம் என்றாலும் அது திராவிடம்தான். தலையங்கம் தீட்டும் தினமலர்க் காரர்கள் இந்த இரண்டுக்குள்ளும் வரமாட்டார்களே.
கன்னடக்காரர் என்று அடையாளம் காட்டும் தினமலரே, அந்த கன்னடர்தான் தமிழன் மீது படிந்த பிறவி இழிவை ஒழிக்க பாடுபட்டவர்; கல்வி உரிமைக்காகவும், உத்தியோக வாய்ப்புக்காகவும், சுயமரியாதைக்காகவும், தமிழகத்தில் குடி கொண்டிருந்த மூடநம்பிக்கைகளை ஒழித்துக் கட்டவும், தம் 95ஆம் வயதிலும் தளர்வின்றி உழைத்தவர்.
தந்தை பெரியாரை கன்னடர் என்று கூறி தனிமைப்படுத்தும் தினமலர் வட்டாரம் எந்த இனத்தை சேர்ந்தது என்பதைத் தெரிவித்தால் நல்லது.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மல்லிகார்ஜூனே கார்கே, நாக்கை பிடுங்குமாறு நாடாளுமன்றத்திலேயே போட்டு உடைத்தாரே நினைவிருக்கிறதா?
மதச்சார்பின்மை தொடர்பான விவாதத்தின் போது உள்துறை அமைச்சருக்கு பதிலளித்த மல்லிக்கார்ஜுன கார்கே கூறியதாவது (25.11.2015):
“அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில் - மதச் சார்பின்மை” என்ற வார்த்தையைச் சேர்க்க எவ் வளவோ முயற்சி செய்தார். ஆனால், நாடாளு மன்றத்தில் இருந்த பார்ப்பனர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். முதலிலேயே அந்த இரு வார்த்தைகளையும் சேர்க்கத்தான் அம்பேத்கர் விரும்பினார். ஆனால் அப்பொழுது இருந்த தலைவர்கள் அவரை அனுமதிக்கவில்லை. அம்பேத்கர் இந்த மண்ணின் மைந்தர். ஆரியர்களைப் போல நாட்டுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல; அம்பேத்கரும், நாங்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள்! ஆரியக் கூட் டமே ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கு வந்தது. எங்களுக்குத்தான் இந்த மண்ணின் உரிமை உள்ளது. ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியர்களின் கொடுமைகளைச் சகித்து வந்தோம்!” என்று தனது உரையில் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றம் இடிய முழங்கினாரே!
தந்தை பெரியாரை கன்னடர் என்று தெரிவிக்கும் கூட்டம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பிழைக்க வந்த கூட்டம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
(10) “தஞ்சை பெரியகோவிலில் ஆகம அடிப்படையில் குடமுழுக்கு நடத்த எதிர்ப்பும் வந்து விட்டது. அக்கோயிலை, தன் சொந்த சொத்து போல கருதி வளர்த்த ராஜராஜ சோழ மன்னன் இன்று இல்லை. தவிரவும் அது இந்திய கலாச்சார கேந்திரம். இறைவன் பெருவுடையார் என்ற பெயர் தாங்கியலர் தவிரவும், ஆகம வழிபாடு என்பது வேதத்தின் பாற்பட்டதல்ல, அது தனி நெறி, நால்வர் பாடிய பாடல்கள், திருமுறை இல்லாத வழிபாடு மிகப்பெரிய கோவில்களில் கிடையாது. தவிரவும் வேதம் கற்றவர் கருவறையில் நுழைய அனுமதியும் கிடையாது.
இவை எல்லாம் ஏற்கெனவே உள்ள நடைமுறை என்பதை உணர்த்தி, வழிபாடு என்பதை அற இயக்கமாக மாற்ற வேண்டிய நிலையில் இதுவும் அரசியலானது, நம் தமிழகத்தின் தனித்தன்மைக்கு ஓர் அடையாளம். தங்கள் சிறப்புமிகுந்த வரலாற்றை தனியாக உணர்ந்து செயல்பட்டால் ஒழிய பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வராது”
- இது “தினமலர்” தலையங்கத்தின் தலைகனப் பகுதி.
இதில்தான் எத்தனை, எத்தனை ஆரிய நரித்தந்திரம்.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிரகதீஸ்வரர் என்று ஆனது எப்படி? ஆரிய ஊடுருவல் தானே.’
அருண்மொழி தேவன் எனும் தமிழ்ப்பெயரை ராஜராஜன் என்று வடமொழியில் மாற்றிக் கொண்டது ஏன்? பார்ப்பன சமஸ்கிருத படுகுழியில் வீழ்ந்தானே வீரமிக்க அந்த வேந்தன்.
மூன்று வேதங்கள் கற்ற பார்ப்பானுக்கு திரிவேதி மங்கலம் என்றும், நான்கு வேதம் கற்ற பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்றும், பிரம்மதேயம் என்றும் நிலங்களை எல்லாம் தாரை வார்த்துக் கொடுத்தது தானே தினமலர் - போற்றி துதிக்கும் ராஜராஜன்.
கோயில் வழிபாடு ஏற்கெனவே இருந்து வருவதாம். அதில் மாற்றம் கொண்டு வந்தால் அறநிலை பாதிக்கப்படுமாம்.
ஏற்கெனவே இருந்த நடைமுறையாம். அந்த நடைமுறையை உருவாக்கியவர் யார்? தெய்வத்தமிழ் என்று சொல்லுவது எல்லாம் போலியானது தானா?
பழனி கோயில் யாருடையது, யாரால் உருவாக்கப்பட்டது? பார்ப்பனர் அல்லாதார் கையில், பண்டாரத்தார் கையில் இருந்து பார்ப்பனரின் கைக்கு மாறியது எப்படி? பார்ப்பனர் கைவசம் வந்து விட்டால் ஏற்கெனவே இருந்து வந்த ஏற்பாடுகள் எல்லாம் வசதியாக, நினைவிற்கு வராதோ!.
மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி கண்டது இதுதான்.
ஒரு தலையங்கத்துக்குள் “தினமலர்” எப்படி தன் மனுதர்ம நஞ்சையெல்லாம் புகுத்துகிறது பார்த்தீர்களா?
- விடுதலை ஞாயிறு மலர், 1.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக