சனி, 8 பிப்ரவரி, 2020

தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.8 திரிபுராவில் லெனின் சிலை அகற்றப் பட்டது போல், தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகள் இடிபடும் என்று பா.ஜ.க.வின் எச்.ராஜா சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்து மதவெறி தலைக் கேறிய ஒருவன் கடந்த 17.9.2018 அன்று தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தி, செல்பி எடுத்து தமிழகத்தில்  கலவரத்தை உருவாக்க முயற்சி செய்தான். பின் விசாரணைக்குப் பின் அவன் கந்தசாமி (கவுண்டர்) மகன் நவீன்குமார் என்று அறியப்பட்டு, அவன் மீது குற்ற எண் 454 ஷீயீ 2018 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, மற்றும் 506 (2)  பிரிவுகளின் கீழ் தாராபுரம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின்  பிணை மனு கடந்த 23.10.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்,  நீதிபதி வி.தண்டபாணி முன்பு மருத்துவர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து மேற்படி நவீன் குமாருக்கு மன நோய்க்காக சிகிச்சை அவசியமாகிறது என்றும், அவரால் யாரையும் அடை யாளம் காண முடியவில்லை என்றும், உடனே பிணை கொடுக்க வேண்டும் என்றும் அவரது வழக்குரைஞர்  வாதிட்டும், அரசு வழக்குரைஞர் மருத்துவர் சான்றிதழ் கொடுத்துப் பேசினார்.

நீதிபதி அந்தக் கடிதங்களை என்னிடம் கொடுத்து ஒரு மனநோயாளியை இன்னும் சிறையில் வைத்திருக்க வேண்டுமா என்று என்னிடம் கேட்க, நான் அவர் மனநோயாளி அல்ல என்றும், தாராபுரம் நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைக்காமல், மாவட்ட அமர்வு நீதிமன் றத்திலும், இங்கும்தான் வாதிடுகிறார்கள் என்றேன்.

மேலும் 17.9.2018 ஆம் தேதிக்குப் பின் சென்னை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை என்று முக்கிய ஊர்களில் பெரியார் சிலை சேதப்படுத்த நவீன்குமாரே காரணம். சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய ஜெகதீசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். இதற்குக் காரணமான நவீன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும், திருப்பூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. நவீன்குமார் பெரியார் பிறந்த நாளன்று தெரிந்தே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார். தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இன்று வரை எழுத்து மூலமான எதிர்ப்பினை ஏன் பதிவு செய்யவில்லை என்றும், பிணை மனு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  விசாரணையின் போது நவீன் குமார் தந்தை கந்தசாமியும் (கவுண்டர்) உடனிருந்தார்.

இறுதியில் நீதிபதி நவீன் குமாருக்கு மனநோயாளிக் கான சிகிச்சை அவசியமாகிறது என்றும், அதனால் பிணை வழங்குவதாகக் கூறி கீழ்க்காணும் நிபந்தனை களை விதித்தார்.

1. நவீன் குமாரால் சேதப்படுத்தப்பட்ட தாராபுரம் பெரியார் சிலையை அவர் குடும்பத்தினர் சீர் செய்து சரிப்படுத்த (ரிப்பேர்) வேண்டும்.

2. மன நோய்க்கான சிகிச்சையை நவீன்குமார் உடனடியாக எடுக்க வேண்டும்.

3. மன நோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு வாரங்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

4. மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் உயர்நீதிமன்றம் அளித்த பிணை உத்தரவு தானாகக் காலாவதியாகிவிடும். அவரைக் காவல்துறை அதிகாரி கள் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இவை அநேகமாக மறந்திருக்கலாம்.

மேற்படி வழக்கில் தாராபுரம்காவல்துறையினரால் குற்றப்பத்திரிக்கை இன்று வரை தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை செய்து இறுதி அறிக்கையினைத் தாக்கல் செய்ய தாராபுரம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார்தாரரும் தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான க.சண்முகம்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இம்மனுவின் விசாரணை நேற்று (7.2.2020) நீதிபதி பி.இராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. இன்னும் புலன் விசாரணை முடியவில்லை என்று அரசு வழக்குரைஞர் கூறினார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு களாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக் கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டார்.

- தகவல்: வழக்குரைஞர் சு.குமாரதேவன்

- விடுதலை நாளேடு, 8. 2. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக