புதன், 19 பிப்ரவரி, 2020

சமூகநீதி செயல்பாட்டாளர்களுக்கு ‘பெரியார் விருது' மத்திய அமைச்சரிடம் செந்தில்குமார் எம்.பி. கோரிக்கை

தருமபுரி, பிப்.19 சமூகநீதி செயல்பாடுகளில் ஈடுபடு வோருக்கு மத்திய அரசு ‘பெரியார் விருது' அளிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார்  எழுத்துமூலம் கோரிக்கை வைத் துள்ளார்.

அக்கோரிக்கை வருமாறு:

என்னுடைய தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரூர், கொளத்தூர், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அங்கே பிற்படுத்தப்பட்ட, பழங் குடிப் பிரிவு மக்களுக்காக மாணவர் விடுதிகள் தேவைப்படுகின்றன.

அதேபோல, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடிய வேலையை ஒழித்து, சமூக ரீதியாக அவர்களை மேம்படுத்த எஸ்.ஆர்.எம். எனப்படும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நபர்களுக்கான சுய உதவித் திட்டம் மற்றும் புனரமைப்பை செய்யவேண்டும், மேலும் அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டும்.

சமூகநீதி நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சமூகநீதித் தலைவரான தந்தை பெரியாரின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருதை வழங்க ஒரு குழுவை அமைக்கவேண்டும் என  அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலட் அவர்களை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சந்தித்து இக்கோரிக்கை மனுவை அளித்தார்.

- விடுதலை நாளேடு, 19.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக